நாக்கு இனிமைக்கு ஏங்கிற்று. சேமிப்பில் எதையும் காணோம். நேரம் அதிகம் செலவளிக்காமல், பாத்திரங்கள் கழுவுவதற்கும் இல்லாமல்.... என்ன செய்யலாம்!!!
ஏற்கனவே நான் அறுசுவையில் கொடுத்திருந்த மைக்ரோவேவ் ப்ரௌணி குறிப்பைத் தேடிப் பிடித்தேன்.
சீனி 250 ml!! சற்று அதிகம். ;( ஒவ்வொரு 1/8 பங்குத் துண்டிலும் 1/8 கோப்பை சீனியா! மாற்றலாம் அளவை - அரைக் கோப்பை பழுப்புச் சீனி + அரைக் கோப்பை ஈக்வல் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு 1/8 துண்டு மட்டும் சாப்பிடலாம். கொக்கோ பௌடர் வீட்டில் இல்லை, ஆனால் 'ட்ரிங்கிங் சாக்லேட்' இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.
ஈரமான பொருட்களுடன் சீனி & ஈக்வல் சேத்து அடித்துக் கொண்டேன். மீதிப் பொருட்களை ஒன்றாகச் சலித்து எடுத்து, ஈரக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்முன் தெரிந்த கண்ணாடிப் பாத்திரத்திலிட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் செய்யப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கழித்துப் பார்க்க கேக் முழுவதாகப் பொங்கி கிட்டத்தட்ட வழியும் நிலைக்கு வந்திருந்தது. சட்டென்று திறந்து ஒரு பீங்கானை கண்ணாடிப் பாத்திரத்தின் கீழ் தள்ளிவிட்டேன். ஐந்து நிமிடங்கள் கழித்து....
கேக் தயார். அலங்காரத்துக்காக மேலே சாக்லெட் ட்ராப்ஸ் வைத்துவிட்டேன். இம்முறை வழக்கமாக வருவதைப் போல் அல்லாமல் மிகவும் மெத்த்த்... மறுநாள் கூட மென்மை அதிகம் குறையவில்லை.
விருந்தாளி வரும் போது முன்பே அடித்து, கிண்ணத்தில் ஊற்றிவைத்துவிட்டால், அவர்கள் இருக்கும் போதே மைக்ரோவே செய்து சூடாகப் பரிமாறலாம்.
எந்த எலி மாட்டுகிறது என்று பார்க்கலாம்! :-)




