Friday 1 March 2019

குப்பைத் தொட்டியில் குட்டி நிலவுகள்

அந்தி சாயும் போது நகம் வெட்டக் கூடாது என்பார்கள். அரையிருட்டில் பார்வை சரியாகத் தெரியாமல் ஆளமாக வெட்டிக் கொள்ளாமல் இருக்கட்டும் என்பதால் இப்படிச் சொல்வார்களோ!!

நகம் வெட்டும் போது சில சமயம், 'நீ வெட்டி வெட்டிப் போடும் நகத்திலெல்லாம், குட்டிக் குட்டி நிலவு தெரியுதடி,' என்கிற வரிகள் காதில் ஒலிக்கும். பிறகு அந்தக் குட்டிக் குட்டி நிலவுகளை வீச மனம் வருவது இல்லை. சின்னதாக எப்போதோ ஓர் கலியாண வீட்டில் கிடைத்த கேக் பெட்டியுள் போட்டு வைப்பேன்.

என்ன செய்வேன் என்கிற சிந்தனை எதுவும் இருந்ததில்லை. முட்டாள்தனமாக இதையெல்லாம் சேர்த்து வைக்கிறேன் என்று மனம் சிரித்தது. குட்டி நிலவுகளோடு கூட செயற்கை நகங்கள் சிலது.... சின்னவரது திருமணம் நடந்த காலத்தில்தான் அம்மா சுகவீனமாக இருந்தார்கள். என் வசதிக்காக நகங்களை அளவுக்கு வெட்டிப் பூசி வைத்திருந்தேன். தேவையான சமயம் ஒட்டிக் கொள்வேன். பிறகு சிலது தானாக விழுந்து தொலைந்துவிடும். சிலது எப்படி முயற்சி செய்தாலும் வராது. தொலையாமல் கழன்றவற்றையும் குட்டி நிலவுகளோடு போட்டு வைப்பேன்.

இன்று எல்லாவற்றையும் வீசப் போகிறேன். அதற்கு முன்...
நெய்ல் ஆர்ட்!!!
இறால்! சில காரணங்களால் படத்தைச் சரியாகத் திருப்பிப் போட முடியவில்லை.

இனி சந்தோஷமாக வீசலாம். ;-)

டைல் கோஸ்டர்கள்

2017 நத்தாருக்காக நான் தயார் செய்த அன்பளிப்புப் பொருட்கள் சிலவற்றின் தயாரிப்பு முறையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையானவை

அளவான சதுர டைல்கள்
க்ளாஸ் & செரமிக் பெய்ன்ட் (பச்சை, சிவப்பு, மஞ்சல், கறுப்பு)
ப்ரஷ்கள்
மெதைலேட்டட் ஸ்பிரிட்
பஞ்சு விடாத துணி / டிஷ்யூ
சதுர‌ ஃபோம் துண்டுகள்

செய்முறை சுருக்கமாக‌...

டைல்களை கழுவி உலரவிட‌ வேண்டும்.
பெய்ன்ட் செய்யும் முன் ஒரு முறை பஞ்சு விடாத‌ துணி / கடதாசியால் மெதைலேட்டட் ஸ்ப்ரிட் தொட்டு பெய்ன்ட் செய்யப் போகும் மேற்பரப்பைத் துடைத்துக் கொள்ள‌ வேண்டும்.
விரும்பியதை வரைந்து கொண்டு, பெய்ன்ட் தயாரிப்பாளர் அறிவுறுத்தலின் படி உலர‌ விட‌ வேண்டும். (நான் பயன்படுத்தும் க்ளாஸ் & டைல் பெய்ன்ட் 48 மணி நேரம் கழித்து பேக் செய்து எடுக்கும் வகை.)
அவனிலேயே ஆற‌ விட்டு, நன்கு ஆறிய‌ பின், கோஸ்டரின் பின்பக்கம் நான்கு மூலைகளிலும் (மேசையில் உராய்வு ஏற்படுவதைத் தவிர்க்க‌) ரப்பர் /  ஃபோம் தக்கைகளை ஒட்டிவிட‌ வேண்டும். (அல்லது முழுவதாக ரப்பர் அல்லது ஃபோம் ஷீட் ஒட்டி அளவுக்கு வெட்டிவிடலாம்.)

சூடான‌ கிண்ணங்களை வைப்பதால், நடுவில் வரைந்தால், கிண்ணங்களைத் திரும்பத் தூக்கும் போது பெரும்பாலும் கோஸ்ட்டரும் சேர்ந்து மேலே வரும். (அனுபவம்) விபத்துகளைத் தவிர்க்க‌ நடுவில் எதுவும் வரையாமலிருப்பது நல்லது. நான் கிண்ணத்தின் அளவில் ஒரு கடதாசி வட்டம் வெட்டி வைத்திருக்கிறேன். இது பெய்ன்ட் வகைகளோடு அதே பெட்டியில் சேமிப்பில் இருக்கும். அதை டைலின் மத்தியில் ஒட்டி (செலோடேப்பின் ஒட்டும் பக்கத்தை மேலே வைத்து விரலில் சுற்றி ஒரு வளையம் போல் செய்து எடுக்க வேண்டும். அதை வட்டக் கடதாசியின் பின்பக்கம் ஒட்டி, டைலின் மத்தியில் ஒட்டிக் கொண்டால் வேலை முடிந்ததும் பிரித்து எடுப்பது சுலபம். அதே வட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.) வைத்து, மீதி இடத்தில் மட்டும் பெய்ன்ட் செய்தேன். பேக் செய்யும் முன் நினைவாக‌ செலோடேப் ஒட்டியிருந்த இடத்தை மெதைலேட்டட் ஸ்ப்ரிட் தொட்டுத் துடைத்தேன். அல்லாவிட்டால் புகைத்து நிறம் மாறிப் போயிருக்கும்.

பொதி செய்வதற்கு பபிள் ராப் பொருத்தமாக‌ இருக்கும். டிஷ்யூ பயன்படுத்துவதானால், கசக்கி வைத்துப் பொதி செய்வது நல்லது.
நடுவில் உள்ளது - சும்மா ஒரு முதல் முயற்சி. ஓர் பழைய நத்தார் வாழ்த்திதழை எடுத்தேன். டைலின் மேற்பகுதியில் mod podge பூசி சீராக படத்தை ஒட்டினேன். நன்கு உலர்ந்த பின், தலைக்கீழாக ஒரு கட்டிங் மாட்டில் வைத்து மேலதிகமான அட்டைத் துண்டுகளை க்ராஃப்ட் நைஃப் கொண்டு வெட்டி நீக்கினேன். திருப்பிப் போட்டு, படத்தின் மேல் இரண்டு தடவை mod podge பூசிக் காயவிட்டேன். உலர்ந்த பின் மீண்டும் திருப்பிப் போட்டு ஃபோம் ஷீட் ஒட்டி, அதைச் சரியான அளவில் வெட்டி, பபிள் ராப் சுற்றி வைத்து...

வெள்ளை டைல்களை இரண்டிரண்டாகப் பொதி செய்யத் தக்கதாக முன்பு முட்கரண்டிகள் வாங்கியபோது கிடைத்த வெற்றுப் பெட்டிகளிரண்டு கிடத்தன. அழகாகப் பொதி செய்து அனுப்பிவைத்த இடம்... க்றிஸ் வேலைத்தளம்.