எச்சரிக்கை! வழமைக்கு மாறாக இது நீ.....ண்ட இடுகையாக இருக்கப் போகிறதோ! :-)
'உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்' - இது... தொடரை ஆரம்பிக்க, 'அவர்கள் உண்மைகள்' மதுரைத்தமிழன் பயன்படுத்தியிருந்த தலைப்பு. தொடர்புள்ளிகளுடன் அப்படியே கொடுத்திருக்கிறேன். அவரது அழைப்பை ஏற்று எழுதிய
அதிராவைத் தொடர்ந்த
இளமதி, தொடருமாறு எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அவரிடம் தனியாக சற்றுத் தாமதமாகத்தான் எழுதக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.
என் சிறுவயதுத் தோழியின் தாயார் சொல்லிய ஒரு வார்த்தை, நான் நினைவில் வைத்திருக்க வேண்டிய, ஆனால் நினைவில் வைத்திராத விடயம் ஒன்றுண்டு. (1) 'ஆறிய கஞ்சி பழங்கஞ்சி!' அறுசுவையில் சில இடுகைகள் நான் தாமதித்த காரணத்தால் எழுதப்படாமலே போயின. சிலருக்கு உணவுக் குறிப்புகள் அனுப்பவும் இருக்கிறது. இந்தத் தொடரை இப்பொது விட்டுவிட்டால் பிறகு சுட்டியைத் தேடிப் பிடிப்பது சிரமம். (2) 'அலை எப்போது ஓய்வது; தலை எப்போது மூழ்குவது!' (இது நடிகர் நாகேஷ் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் நான் முதன்முதலில் கேட்டது.) அலை அடிக்கும் போதே தலை மூழ்குகிறேன். :)
ஆலோசனை / அறிவுரை / அட்வைஸ்!! இந்தச் சொற்கள் பற்றி எனக்குச் சரியான விளக்கம் கிடையாது.
கடைசியிலுள்ள ஆங்கிலச் சொல் பற்றி... அது பொருளாகவும் வரும்; வினையாகவும் வரும். சிறு வயது முதலே எனக்கு ஒரே மாதிரி இரண்டு சொற்கள் / விடயங்கள் இருந்தால், எது என்ன என்பதை நினைவு வைத்திருப்பதில் சிரமம் இருந்தது. (3) எதையாவது குறியீடாக நினைத்து வைத்தாலன்றி தவறாகவே எழுதுவேன். உ+ம் அஜி, சுஜி என்று இரு சகோதரர்களிருந்தால், 'அ முதலெழுத்து அல்ல.' என்று நினைவு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் மனதினுள் குறியீட்டு வசனத்தைச் சொல்லிப் பார்த்தே பேசுவேன். (அதிராவுக்காக... கதைப்பேன்.) ;) பெயர்ச் சொல் - advice, வினைச் சொல் - advise. 'If you see a 'C', it's the noun.' S!!! ஸ்ஸப்பா! என்று உணர்வுகளுடன் விளையாடும் சொல் வினை.
சிறு வயதில் தனித்து வாழ்ந்த காலம் அதிகம். உறவுகளிடமிருந்து தொலைவிலிருந்தது எங்கள் வீடு. சுற்றாடலில் ஒரேயொரு வீடுதான் இருந்தது. பேசாமடந்தையாக வளர்ந்த காரணத்தால் இன்றும் நானாகப் போய் யாரிடமும் அட்வைஸ் கேட்பது குறைவு. என் மனதைக் கேட்பேன். நல்ல நட்பாக அமைதியாக அது என்னுடன் பேசும். தைரியமான என் தவறுகளைச் சுட்டிக்காட்ட வல்ல நட்பு அது. அதற்கு மேல்... க்றிஸ் நான் கேளாமலே ஏதாவது சொல்வது உண்டு. நாங்கள் வெகு பிரியமான சோடி, நல்ல நண்பர்கள் என்பதால் எம் சிந்தனைகள் ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பது இல்லை அல்லவா? நிறைய விடயங்களில் எதிர்மாறுதான். குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே நான் சற்று முற்போக்குச் சிந்தனை கொண்டவளாக இருந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களோடு பொருந்திப் போக இயலாமல் மன உழைச்சலுக்கு ஆளானது உண்டு. மணமான போது இருபது வயதாகி இருந்தாலும் என் தோற்றம் என்னைச் சின்னப் பெண்ணாகக் காட்டியது எல்லா வகையிலும் எனக்குப் பாதகமாகவே இருந்திருக்கிறது. பிடிக்காதவற்றைப் பின்பற்றவும் இயலாமல் சொல்லவும் மாட்டாமல் தவிக்கும் தருணங்களில் விட்டுக் கொடுக்கச் சொல்லும் க்றிஸ் மேல் தான் என் கோபம் திரும்பும். பாவம் அவர். :) குறைந்தது மூன்று நாட்களாவது பேச மாட்டேன். (அது பெரிய பிரச்சினை இல்லை. ஆள் அதிகாலை நான்கு மணிக்கு வேலைக்குப் போனால் வர இரவு பன்னிரண்டைக் கடந்துவிடும். கண்ணை இறுக மூடிக் கொண்டு இருந்தால் வாய்க்கு வேலை ஏது!) பிறகு மெதுவே ஒரு மாற்றம். என்னிலில்லை, க்றிஸ்ஸில். என் பல எண்ணங்கள் அவரிடம் புகுந்திருந்தது. சிலது என் மாமிக்கும் மாறியிருந்தது. பெருமையோடு மெதுவே அவதானிக்க... வார்த்தையால் அறிவுரை சொல்வதை விட.... (4) நான் நானாக இருப்பதே மற்றவர்களுக்கு பெரிய அறிவுரையாக இருக்கிறது என்று தோன்றிற்று.
என் பிள்ளைகள் எனக்குப் பல விடயங்களில் உதவியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவுரைகள் கிடைப்பதில்லை. என்னுடனான ஆரோக்கியமான உரையாடல்கள் - (5) கனிவான ஒரு பக்கம் சார்ந்திராத உரையாடல்கள் அவை. என் சரியான எண்ணங்களைச் சிலாகிப்பார்கள்: தவறானவற்றை நாசூக்காகப் புரிய வைப்பார்கள். அவர்கள் சொல்லாமலே என் மனது சரியானதை எடுத்துக் கொள்ளும். வந்து இணைந்த மருமக்களும் இப்படியே தான் அமைந்திருக்கிறார்கள். ஆலோசனைக்கு உகந்தவர்களாக, சிந்திக்க இயலாத தருணங்களில் 'என்' சிந்தனாசக்தியாக இவர்கள் நால்வரையும் காண்கிறேன். சென்ற ஞாயிறன்று என் மனதில் உதித்த எண்ணம்... க்றிஸ் உயிருடன் இருந்தாலும், அவருக்கு முன் எனக்கு இயலாமை தோன்றினால் என் பிள்ளைகளையே என் பாதுகாவலர்களாக நியமிக்குமாறு உயில் போன்று எங்காவது குறித்து வைக்க வேண்டும் என்பது. க்றிஸ்ஸுக்கு வெகு மென்மையான மனம். மற்றவர்கள் மனம் நோக நடக்கக் கூடாது என்பதை மட்டுமே நினைப்பார். அவரைப் பொறுத்த வரை, நோயாளிக்கு / வயோதிபருக்கு இன்னின்னது ஆகாது என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அவர்களது சந்தோஷத்திற்குத் தான் முதலிடம் கொடுப்பார் என்பதை என் பெற்றோர் விடயத்திலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன். என் நான்கு பிள்ளைகளும் 'எனக்கு' எது நல்லது என்பதை ஆராய்ந்து, எதற்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து நடப்பார்கள். இதிலிருந்து யாருக்காவது அறிவுரை (5) கிடைக்குமானால்... எடுத்துக் கொள்ளுங்கள். :)
அப்பா... வாழ்ந்து மட்டும் காட்டியவர். அவரிடமிருந்து எப்படி நடக்க வேண்டும் என்பதையும் சில சமயங்களில் எப்படி நடக்கக் கூடாது என்பதையும் அனுபவ அறிவாகப் பெற்றேன்.
அம்மா... சொன்ன பாரதூரமான அறிவுரைகள் இரண்டு. (6) 'சாகிற மாடு கண்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறது இல்லை.' அ+து உன் வாழ்க்கை உன் கையில். நீயே அதற்குப் பொறுப்பு. 'யாரையும்' எதிர்பார்க்காதே. (இங்கு மாடு - 'பசு' மட்டும் தான்எ ன்பதை மனது குறித்துக் கொண்டது.) (7) தனக்கு ஏதாவது ஆனால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி கார்மேல் சபைக் கன்னியர்களுடன் போய் வசிக்கச் சொன்னார். (என் வீட்டில் அப்பாவும் என் தம்பியும் மட்டும் இருந்திருப்பார்கள். வீட்டிற்கு வருவோரும் பெரும்பாலும் ஆண்களாக மட்டும் இருந்திருப்பார்கள்.) இதென்ன இப்படிப் பேசுகிறேன் என்று நினைப்பீர்கள்.
இந்தக் கதையைப் படியுங்கள், புரியும். அது அம்மா தன் சொந்த அனுபவத்திலிருந்து சொன்ன அறிவுரை. அவரது தாயார் அவருக்குச் சொல்லியிருந்த அறிவுரை. முதலில் தந்தையாரும் தொடர்ந்து தாயாரும் இறந்த பிறகு அம்மா பிரான்சிஸ்கன் கன்னியர் மடத்தில் தான் வளர்ந்தார்.
அம்மாவின் இன்னொரு அறிவுரை! / விருப்பம்! - வாழ்க்கையில் என்ன ஆனாலும் என் தம்பியை அரவணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது. (அவர் தம்பியின் வாழ்க்கை நன்றாக அமையவில்லை. சரிசெய்து கொடுக்கவோ அவருக்கு ஆறுதலாக இருக்கவோ அப்பாவை மீறி எதுவும் செய்ய இயலாத நிலை. அது அவரை வாட்டியிருக்க வேண்டும்.) இதன் வழியே நான் புரிந்துகொண்டது... (8) 'தேவைப்படும் போது.... நிமிர்ந்து நில்; கோழையாக இராதே!' என்பது.
என் மூத்தவர் சிரித்துக் கொண்டே அழகாக, ஆளமாகப் பேசும் திறன் வாய்ந்தவர். சொல்வதை நச்சென்று சுருக்கமாக சொல்வார். ஓட்டிப் பழகும் சமயம் மோட்டர் வண்டியை... அதை வண்டு என்றும் சொல்லலாம், ஒரு பள்ளத்தில் இறக்கினேன். வீட்டிற்கு வந்ததும் சிரித்தபடி சொன்னார், "நானும் டடாவும் எத்தனை அக்சிடண்ட் பட்டிருக்கிறம். இது ஒரு இன்சிடண்ட் மட்டும் தான். லைசன்ஸ் கிடைச்ச பிறகு நிறைய அடிபடுவீங்கள். (9) டோன்ட் கிவ் அப்" அதோடு நினைவுக்கு வந்த வாசகம்... அறுசுவையில் இலா வைத்திருந்த விருப்ப வாசகம்... (10) "10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"
நான் நானாக - அறுசுவையில் ஆரம்பத்தில் 'நன்றாக இருக்கிறது' என்றும் 'நன்றி' என்றும் மட்டும் தட்டியிருப்பேன். அதற்கே பல நிமிடங்கள் செலவாகும். பிழையில்லாமல் செய்ய வேண்டும் அல்லவா? இன்று நிலை வேறு. அங்கு பலருக்கும் அட்வைஸ்... :)) சொல்கிறேன். சில சமயம் தோன்றும்.... இதற்கு இன்னொரு பெயர்... 'ஆவலாதி' அல்லவா! மற்றவர்களது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைக்கிறோமோ! இல்லையில்லை! அவர்கள் கேட்பதால்தானே என் மனதில் படுவதைச் சொல்கிறேன்! 'இது உதவிதான்; ஆவலாதித்தனம் அல்ல,' என்று மனம் சமாதானம் சொல்லும். சில சமயங்களில், 'கொஞ்சம் கடுமையாக விமர்சிக்கிறோமோ!' என்றும் தோன்றும். அதற்கும் மனம் ஒரு சமாதானம் தயாராக வைத்திருக்கும் - 'என் பதில் தவறாகவும் இருக்கலாம். அவர்கள் எங்கே முழு விபரத்தையும் கொடுத்திருக்கப் போகிறார்கள்! எனக்கு கிடைத்த தகவலைக் கொண்டு அவர்களை நான் சிந்திக்க வைக்கிறேன், அவ்வளவுதான். முடிவு அவர்கள் கையில்தான் இருக்கிறது,' யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நியாயத்தை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பது அவரவர் பொறுப்பு அல்லவா!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
அதிகாரம் - அறிவுடைமை
குறள் - 423
~~~~~~~~~~~~
வேறு ஒரு காரியத்தில் முழுமூச்சாய் ஈடுபட்டிருக்கிறேன். தூக்கக் கலக்கத்தில் தினமும் சிறிது சிறிதாகத் தட்டிய இடுகை இது. எங்காகியினும் எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டால் சுட்டிக் காட்டுங்கள், திருத்தி விடுகிறேன். இப்போதே நன்றி.