Thursday 4 January 2018

பவன‌ அமுக்கம்!

என் குஜராத்தி சம்பந்தி, 2017 நத்தாரை முன்னிட்ட‌ அவர்களது மகளிர் சங்கத்தினரின் மதியபோசனத்திற்கு அழைத்திருந்தார். இவர்கள் மத்தியில் இருக்கையில் எனக்கு உள்ள‌ பெரும் பிரச்சினை மொழி. அறிமுகமில்லாதோர் என் தோல் நிறம் கண்டு தம்மவர் என்று எண்ணி அன்பாக‌ உரையாட வருகையில்... நான், 'ஙே!!'

ஆனால் சொற்களைப் புரிந்து கொள்ள‌ என் சிங்களப் புலமை ;‍) உதவுகிறது என்பதை இங்கு பெருமையாகக் கூறிக் கொள்ள‌ விரும்புகிறேன். சோளக் கதிரைக் கையில் வாங்காமல் பரிமாறியவருக்கு ஒருவர் சொன்ன காரணத்தை, அவருக்கு கடிப்பதில் பிரச்சினை என்பதைச் சுலபமாகப் புரிந்துகொண்டேன். பல்லுக்கு சிங்களத்திலும் 'தத்' என்பார்கள்.

அந்த‌ மகளிர் சங்கத் தலைவியின் பெயர் புஸ்பாவாம். ஆனால் யாரும் சரியாக‌ உச்சரிப்பது கிடையாது என்றார். சிலர் புஷ்பா என்பார்களாம், திருத்திச் சொல்லிக் காட்டினால் Bushba என்பார்களாம் என்று தன்னை அறிமுகப்படுத்துகையில் குறிப்பிட்டார்.

பிறகு ஒருவர் எங்களை மகிழ்விக்க‌ பாடுவதற்காக‌ எழுந்தார். அவர் இந்த‌ புஸ்பாவின் கதையை மீள‌ நினைவுபடுத்தி அதற்கேற்ப‌ ஓர் இந்திப் பாடலைப் பாடினார். எனக்கும் அந்தப் பாடலின் சில‌ வரிகள் ஏற்கனவே அறிமுகமாக‌ இருந்தது. 'சாவன் கா மஹினா, பவனு கரே சோரு...' என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல்.
பாட‌லைக் கேட்ட‌ தருணம் சட்டென்று நினைவுக்கு வந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'அசலும் நகலும்' பாடல் நிகழ்ச்சி. அட‌! தமிழில், 'பவனம்' என்றால் காற்று. 'சந்தனத்தில் நல்ல‌ வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து!' இரண்டு பாடல்களையும் இங்கே சேமிக்கிறேன்.
இன்றிரவு இங்கு தென்னங்காத்து இல்லை; பேய்க்காற்று. மழையில் நனைந்து நனைந்து குப்பைத் தொட்டியைத் தெருவில் வைத்து, திரும்ப‌ எடுத்து வந்தார் க்றிஸ்.

முயல்கள் நேற்று முழுவதும் கூட்டினுள் அடைந்து கிடந்தார்கள். அவர்களைக் கவனித்ததும் மழையில் நனைந்தபடியே.'

சிறிய‌ சத்தம் கேட்டாலே உறக்கம் கெடும் எனக்கு, தூக்கமே பிடிக்கவில்லை. அந்தக் கோபத்தில் ;‍) பிறந்தது இந்த‌ இடுகை. 

7 comments:

 1. சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து... என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து... தன்னங்காத்து... சூப்பர் பாடல்... இலங்கை ரேடியோ முன்பு எங்களுக்குப் பாடல்களை நாம் கேட்காமலேயே பாடமாக்கித்தரும்:).. இப்போ அந்தப் பாக்கியம் இல்லை.. அத்தோடு இப்போ சத்தமாகப் பாட்டுப் போட்டுக் கேட்கவும் முடிவதில்லை:).. இப்போ அங்கின சமர் எல்லோ இமா.. இப்போ எதுக்கு மழையைக் கூப்பிட்டீங்க கர்:)

  பாவம் கிரிஸ் அங்கிள்.. நீங்களும் சேர்ந்து போய் வச்சிருக்கலாமெல்லோ:) ஸ்டைலா வீட்டிலிருந்து போஸ்ட் எழுதியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு பேரும் போய் நனைய‌ வேணுமோ! 'அற‌ நனைஞ்சவருக்கு குளிர் என்ன‌ கூதல் என்ன‌!' என்று மீ சைலன்ஸ். :‍)

   இங்க‌ எங்கட‌ ஊர் அப்பிடித்தான் அதிரா. ஒரே நாளில‌ நாலு சீசனும் வரும் என்பினம்.

   Delete
 2. இங்கேயும் அப்படிதான் :) பார்வீன் என்ற பேரை பாவீ பாவீ னு கூப்பிடுவாங்க சுனிதா சனிட்டா
  சோனியா ஸன்யா :) இதுக்குபயந்தே இப்போ எல்லாரும் ஷார்ட்டா பேரை pam சாம் த்ரிஷ் tanish அப்படின்னு வைக்காரம்பிச்சாச்சு .
  பாட்டு இப்படி நிறைய அசல் நகல்ஸ் இருக்கும் யார் யாரை காப்பியடிச்சாங்கன்னு தெரியாது :)
  எங் ஊர்ல மூணு நாள் முன்னாடி இடிமின்னல் மழை கல்மழை

  ReplyDelete
  Replies
  1. இங்க நரேன் நரியனாகவும் பாஸ்கரன் பஸ்காரனாகவும். ;)

   Delete
 3. தூக்கம் தடைப்படத் தோன்றிய பதிவும் அருமை!
  பாடல்களை ரசித்தேன் மீண்டும்..:)

  ReplyDelete
 4. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் என் நன்றிகள். :-)

   Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா