Sunday 28 April 2013

பின்னூட்ட ஆலு மேத்தி

நேற்றுக்காலை இலங்கைக் கடைக்குப் போக... கடை திறக்கவில்லை. அப்படியே அருகே இருக்கும் ஃபீஜியன் கடைக்குப் போனோம். ஒரு பிடி மேத்தி வாங்கி வந்தேன்.

இன்று மதியம் மகியின் 'ஆலு மேத்தி' யமி யமி யம்... ;P
(ஆனால் கிழங்கு என்பதால் இதையே பிரதான மதிய உணவாக்கிவிட்டேன். கூட ஒரு சலட் & 2 சொசேஜ். )

சுவைத்துப் பார்த்த க்றிஸ் "நன்றாக இருக்கிறது," என்றார். "பெயர்... ஆலு மேத்தி" என்றேன். "கடைக்காரர் பெயரா?" என்கிறார். ;)))

~~~~~~~~~~~~~~
தட்டின் அருகே இருப்பது தக்காளி. கூட இருக்கும் இலை என்ன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Wednesday 24 April 2013

ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள்

இந்த 'என் பொருள்தான் எனக்கு மட்டும்தான்' தொடர்பதிவில் தாக்கமோ அல்லது வேறு ஏதாவது மனதைத் தூண்டியதோ தெரியவில்லை... தேடிப் பிடித்தேன் என் சில பழம்பெரும் பொக்கிஷங்களை.
வாழ்க்கை ஒரு புத்தகம். அதில் ஒரு பக்கத்தின் சில பக்கங்கள் இவை.
"ஹாய்!"
இருபத்தேழு வருடங்கள் என்னோடு இருந்திருக்கிறது இந்தப் புத்தகம். இனியும் இருக்கும். 
Scrapbooking / Baby Book என்பது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை அப்போது. கடதாசிகளை அடுக்கித் துளை செய்து கையால் ஊசி நூல் கொண்டு கட்டி இருக்கிறேன். என் கண்ணில் பட்ட குழந்தைப் படங்கள், குழந்தை வளர்ப்பு தொடர்பான விபரங்கள், என் சின்னவர்கள் பற்றிய விபரங்கள் இப்படி சில விடயங்களின் தொகுப்பு இதில் பதிவாகியுள்ளன.

இணையத்தளம் இல்லாத காலம் அது - மங்கை, ஃபெமினா இதழ்களில் கிடைத்த சில கட்டுரைகள்
பெண் குழந்தை கிடைக்கவேயில்லை. ;))
செப்டெம்பர் 86 - Woman of China இதழின் அட்டையிலிருந்த இந்தக் குழந்தை அச்சாக அப்போது ஐந்து மாதங்களாக இருந்த அலனைப் போலவே இருந்தது. அலன் சைனீஸ்குட்டி போலவே இருப்பார். க்றிஸ் அப்போது 7 Islads Hotel ல் முக்கியமான பதவியிலிருந்தார். பிரச்சினைக் காலம். ஒரு பகுதியில் Army இருந்ததால் பாதுகாப்புக் கருதி வெளிநாட்டவரை உள்ளே அனுமதிக்கத் தடை விதித்திருந்தார்கள். ஒரு முறை இராணுவ வீரர் ஒருவர் க்றிஸ்ஸிடம் போய் "சொன்னால் கேட்க மாட்டீர்களா? எதற்காக வெளிநாட்டாரை உள்ளே எடுக்கிறீர்கள்?" என்று மிரட்டி இருக்கிறார். அப்போ அங்கு யாரும் இருக்கவில்லை என்று இவர் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. "அப்போ வாசலில் சைனீஸ் குழந்தை எப்படி நிற்கும்?" என்றிருக்கிறார்கள்.  ;)

நான் தூக்கி வைத்திருக்கும் போது யாராவது சைனீஸ் என்றுவிட்டால் போதும், என் முடியைப் பிடித்துப் பிய்த்துவிடுவார். ;D
புத்தக அட்டையில் மேரிமாதா படம்

தடுப்பு மருந்து விபரம் கீழே...
இது... ;)
இது போல அலனது படம் கூட எங்கோ இருக்கிறது.
அவருக்குத் தைத்த சட்டைக்கு வெட்டிய கழுத்துப்பட்டி. இருந்த இடம் பழுப்பாகி இருக்கிறது. ;)
அலனுக்காகக் கிடைத்த அன்பளிப்புப் பொதியிலிருந்த துண்டொன்று
"ஹாவ்வ்! நித்திரை வருது"
(Woman's Weekly இலிருந்து)

படத்திற்கு எங்கே போவது. அப்போ எல்லாமே கிடைப்பது அருமையாகத்தான் இருந்திருக்கிறது. குமுதம்... வெளி அட்டைகள் & மாருதியின் ஓவியமொன்று
உள் அட்டை விளம்பரங்களிலிருந்து சில படங்கள்
ஒரு குட்டி கிருஷ்ணரும் இருக்கிறார்.
அலனது பால்புட்டி வந்த அட்டைப் பெட்டியிலிருந்து
மேலே இருக்கும் குட்டி Baby Book சின்னவரது குறிப்புகள் கொண்டது.

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. சின்னவர்களைப் பற்றி சின்னச் சின்னதாக எத்தனை விபரங்கள் குறித்து வைத்திருக்கிறேன்! எப்போ முதல் உதை, எப்போ முதல் எட்டு என்று பலதும் குறிப்பாகி இருக்கிறது. (எல்லாப் பக்கங்களையும் / விபரங்களையும் பார்வைக்கு விடவில்லை.) ;)
மூத்த குழந்தைக்காக வாங்கிவைத்த பொம்மையின் அட்டைப்பெட்டி.

மேலும் சில முக்கியமற்ற படங்கள் ;)
இன்னும் இரண்டு புத்தகங்கள் இருந்ததாக நினைவு. ஊரை விட்டு வரப் பிரியமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டது போல இருக்கிறது. ;)

Saturday 20 April 2013

இசைத்தேன்!

என்னிடம் இருக்கும், என்னை விட்டு பிரியாத பொருட்களைப் பட்டியலிட வானதி அழைத்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பார்த்திருக்கிறேன்.

சிறிய வயதில் அப்பா mouth organ வாசிப்பதைக் கேட்டிருக்கிறேன். அகலமான சிறிய Butterfly மௌத் ஆர்கன் ஒன்று அவரிடம் இருந்தது. யாரையும் தொட விடமாட்டார். தான் வாசித்து முடிந்ததும் அதற்கென உள்ள வெல்வெட் துணியில் பொதிந்து பெட்டியில் பத்திரப்படுத்துவார். இதனால்... "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்," என்றிருந்துவிட்டேன் போல.

எங்கள் வீடு இருந்த இடம் அப்போது காட்டுப்புறம். அயல் என்று இரண்டே இரண்டு வீடுகள்; ஒன்றில் ஒரு ஐயா மட்டும் தனியே இருந்தார் - அருமையாகப் புல்லாங்குழல் வாசிப்பார். 'வெசாக்கில வாங்கிற புல்லாங்குழல் எங்களுக்கெல்லாம் 'கீக்..பீக்..ஃபீ..ஃப்ஃப்ஃப்' என்று காதை அறுக்கிற மாதிரி கத்த, இவருக்கு மட்டும் எப்பிடி வடிவா ஊதுது!'என்று எனக்கு வியப்பாக இருக்கும். "பொழுதுபடுற நேரம் புல்லாங்குழல் வாசிச்சால் பாம்பு வரும்," என்பார் செபா. வாசிக்காவிட்டாலும் அது வரும். உண்மையில் அவற்றின் குடியிருப்புக்குள் நாம் வந்து குடியமர்ந்திருந்தோம். 

ஒரு தடவை நானும் தம்பியும் (ஐந்து வயதும் ஏழு வயதும்) தனியே இருந்தபோது பக்கத்து வீட்டு ஐயா,  அப்பாவின் மௌத் ஆர்கனை இரவல் வாங்கினார். அழகாக வாசித்தும் காட்டினார். முதல் முறை வாசிப்பவரால் எப்படி இப்படி என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா வந்ததும் சொல்ல வெடித்தது பூகம்பம். ;) "வாயில் வைத்து வாசிப்பதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்கலாம்!" நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டேன்.

மௌத் ஆர்கனுக்கு கொதிநீர்க்குளியல் நடந்தது; அது தன் நிறமிழந்து மெருகிழந்து போயிற்று. பிறகு அப்பா அதை அதிகம் தொட்டதாக நினைவில்லை.

பிறகு.... 'மூன்று முடிச்சு' வந்தது. படம் பார்த்து மறுநாள் எடுத்து ஊதிப்பார்த்தேன். முதல்முயற்சியிலேயே சரியாக I.. LOVE... U... ஊத வந்தது. மனதுக்குள் மத்தாப்பூ; பெருமை பிடிபடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதையே 'ஞா.. ஞா... ஞா' என்று ஊத ஆரம்பித்தேன்.

அப்போது எங்கள் வீட்டில் என் வயதொத்த (15) தோழி ஒருவர் தங்கிப் படித்துவந்தார். அவரிடம் மெலோடிக்கா ஒன்றிருந்தது. சனி ஞாயிறு மதியபோசனத்தின் பின் நாங்கள் கச்சேரி ஆரம்பிப்போம். நான் கமல், அவர்... முதலில் ஸ்ரீதேவியாக ஆரம்பித்து மெதுவே Y. விஜயாவாக மாறுவார். ;)) ஒரு அரைமணிநேரமாவது அமர்க்களமாகக் கச்சேரி நடக்கும். ;) செபா எப்படித்தான் எல்லாம் பொறுத்தார்களோ! பாவம். கிடைக்கும் இரண்டுநாள் விடுமுறையும் கூட சப்தத்தோடுதான் கடக்கும் அவருக்கு.

பிறகு... நானாகவே school band ல் வாசிக்கும் பாடல்களை மெதுவே வாசிக்க ஆரம்பித்தேன். செவி இசைக்குப் பழகிற்று. கையும் மூச்சும் இசைந்து கொடுத்தது. ஆஸ்மாவுக்கும் நல்ல மூச்சுப் பயிற்சி என்று தோன்றிற்று, தொடர்ந்தேன்.

1979 - ஓரளவு நன்றாக வாசித்திருக்க வேண்டும் நான்.  அப்பா தானாகவே எனக்குப் புதிகாக ஒன்று வாங்கிக்கொடுக்கத் தேடினார். அவரிடமிருந்ததை விட நீளமாக பளபளவென்று ஒரு Hero.
முதல் முறை விலை கேட்க 160 ரூபா சொன்னார்கள். (மூன்று நாள் கல்விச்சுற்றுலாவுக்கு இருபத்தைந்து ரூபா கட்டணம் இருந்த காலம் அது.) "வேண்டாம்," என்றேன். ஒவ்வொரு தடவை அந்தக் கடையைக் கடக்கும் போதும் விலை விசாரிப்பேன். வாங்க மட்டும் மாட்டேன். ஆறுமாதம் கழித்து, எனது ஏழாவது விசாரிப்பில் அறுபத்தைந்து ரூபாவாக இறங்கிவந்திருந்தார்கள். இதற்குமேல் குறையாது என்று நிச்சயம் தெரிந்து, சந்தர்ப்பத்தை விடவேண்டாம் என்று அப்பா வாங்கிக் கொடுத்த அன்று தேதி - 04 செப்டெம்பர் 1979. (மறுநாள் எனது மாமனார் காலமானார். அதனாற்தான் தேதி நினைவிலிருக்கிறது.)

எங்கு போனாலும், ஒரேயொரு நாள் பயணமானாலும் கூட என்னோடு கூடவே வரும் என் மௌத் ஆர்கன். என் தோழியின் தந்தையார் அப்போது சவூதியிலிருந்தார். ஒரு தடவை விடுமுறையில் வரும்போது ப்ளாஸ்டிக் நாடாக்களில் பெயர் அடிக்கக்கூடிய சிறிய உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்தார். எனக்கும் பெயர் அடித்துக் கொடுத்தார்.
இணையத்தில் யார் படத்தை யார் சுடுவார்கள் என்பது தெரியாது. ஒரு எச்சரிக்கையுணர்ச்சியில்... ;) பெயரை மறைத்துவிட்டேன். படிப்போர் / பார்ப்போர் மன்னித்தருள்க. ;)
என் இரண்டாவது புத்திரனுக்கு ஏழு வயதாக இருக்கையில் அவருக்கும் இசையில் நாட்டம் ஏற்பட்டது. கீபோர்ட், ட்ரம்ஸ் வாசிப்பார். அவருக்கு சுலபமாகவே மௌத் ஆர்கன் வாசிக்க வந்தது. கேட்டார். "புதிது வாங்கித் தருகிறேனே!," என்றேன். என்னுடையதுதான் வேண்டுமென்றார். அவரே என்னுடையவர்தானே, கொடுத்துவிட்டேன்.

இருவர் கையாலும் பலமுறை விழுந்திருக்கிறது. ஆனாலும் பின்னாளில் க்றிஸ் எனக்கு வாங்கித் தந்த...
 
இந்த Big Valley யை விட வலிமையானது. இன்னமும் இனிமைக்குக் குறைவில்லை; பிசிறில்லாமல் வாசிக்கிறது.
~~~~~~~
Today's special... 'நெஞ்சுக்குள்ளே' ஆரம்ப இசை. கேட்கத் தயாரா! ;)
 
இங்கு வந்த முதல் வருடம் Atwaters ல் மலிவு விற்பனையில் இந்தப் புத்தகத்தையும் ஒலிநாடாவையும் கூடவே ஒரு குட்டி மௌத் ஆர்கனையும் (மூன்றும் ஒன்றாகத்தான் விற்பனைக்கு இருந்தது.) கண்டு, மகனுக்கு வாங்கிக் கொடுத்தேன். பழகினார், பிறகு அந்த குட்டி மௌத்ஆர்கனை மட்டும் தனியாக தன் நெருக்கிய தோழருக்குக் கொடுத்துவிட்டார்.

Friday 19 April 2013

சாடிப்பூமி!

~~~~~~~~~~~~~
தவணை இறுதி, வழக்கமான வேலைகளை விட எதிர்பாராத விதமாக பாடசாலைக் குடும்பத்தில் ஒரு சங்கடம். எங்கள் பாடசாலை உண்மையில் ஒரு குடும்பம்.
ம்.. அந்தக் கதையை இன்னொரு சமயம் பார்க்கலாம்.

கடைசிநாள், விட்டால் இன்னும் இரண்டு வாரம் காத்திருக்க வேண்டும். ஒருபடியாக மதியம் பூசை முடிந்து என் சாப்பாடு மைக்ரோவேவில் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அவசரமாக ஓடிப் போய்... மகிக்காக
ஒரு க்ளிக்!

இன்னொரு க்ளிக்!
விஞ்ஞான அறையின் ஒரு மூலையில் இவை இருக்கின்றன. இன்னும் இரண்டு சற்றுப் பெரிய சாடிகள் இருந்தன. காமரா "பாட்டரி போதாது; எடுக்க மாட்டேன்," என்றுவிட்டார். ;(
ஒரு மீன் தொட்டி கூட (மீன்கள் இல்லாமல், சில குட்டி நத்தைகளோடு) இருக்கிறது. அதன் சரித்திரம் என்னவென்று விசாரிக்கவேண்டும்.

காக்கை நிறத்தொரு பூனை!

ஸ்கூல் விட்டு வரேக்க, ட்ரைவ்வேயில கார் திரும்ப ஒவ்வொருவரா தலையைத் தூக்கிப் பார்ப்பினம். எப்பவும் ஒரு நாலு ஐஞ்சு பூனைகள் எங்கட வாசல்ல இருப்பினம்.

நாங்கள் இறங்கவும் பஞ்சிப்பட்டுக் கொண்டு ஒவ்வொருவராக எழும்பிப் போவினம். ஒருவர் காலை நீட்டிச் சோம்பல் முறிச்சுப் போட்டு வேலியில பாய்வார். இன்னொருவர்... கருப்பு குண்டர் -  பொரியல் களவெடுத்த மாதிரி ஒரு பார்வையோட பேஸ்மண்ட்டுக்குக் கீழ போயிருவார். எனக்கு இன்னும் விழங்க இல்ல எப்பிடி உள்ள போவார் என்று. அந்த இடத்தில பலகைகளுக்கு நடுவில நீக்கல் எதுவும் பெருசாக இல்லை. பூனை மட்டும் பெரு...சாக இருக்கும். எப்பிடி!!
மற்றவர் கடகடவென்று பின்பக்கம் ஓடுவார். இப்பிடி ஆள் ஆளுக்கு ஒரு திசையில கலைஞ்சு ஓடீருவாங்கள்.

பேஸ்மண்ட்டுக்குக் கீழ பலகைகள் கொஞ்சம் கிடக்குது - அவசரத்துக்கு என்று க்றிஸ் வைச்சு இருக்கிறதுகள். அதை எடுக்க நான்தான் போகவேணும். காரணம் கேட்கப் படாது யாரும். ம். ;)

"அகலமாக ஒரு பலகை எடுத்துத் தாறீங்களோ!" என்று க்றிஸ் கேட்டார். ஒரு சனிக்கிழமை மத்தியானம் (அப்ப போனால்தான் வெளிச்சமாக இருக்கும் அங்க,) ஹூடி எல்லாம் மாட்டிக் கொண்டு உள்ள போனன் - தலையில தூசு படப்படாதெல்லோ!

பலகையை இழுக்கேக்க... 'பளிச்' என்று சின்ன்..னதா ஒரு லைட் அடிச்சுது. தலைக்குள்ளயும் லைட் அடிச்சுது. பாம்போ!! ம்.. இங்கதான் பாம்பே இல்லையே! possom!! திரும்பவும் பார்த்தன். ரெண்டு சின்ன பளிச். என்னெவென்று தெரியேல்ல. ;(
"ச்சூ!" என்கிறேன்; எனக்குப் பழக்கமான மாதிர் "கர்ர்ர்" என்கிறேன். லைட் அசையவே இல்லை. கண் கொஞ்சம் இருட்டுக்குப் பழகினபிறகு தெரிஞ்சுது... அது பூஸ். நல்ல கருப்பாக இருப்பாரென்று சொன்னேனே... குண்டர், அவர். அசையாமல் சிலையாக அமர்ந்திருந்தார். பயமே இல்லை!
இது அவர் இல்லை. இப்ப இருக்கிற பக்கத்துவீட்டுக்காரர். மாடியில இருந்து மரத்துக்கு மேலால சுட்டனான்.

நான் நல்லாப் பூனை மாதிரிக் கத்துவன். சிரிக்காதைங்கோ, உண்மையாவே நல்லாக் கத்துவன். பூனைகள் நம்பீரும். கடைசி ஆயுதமாக அதை எடுக்க லைட் சின்னதாக அசைஞ்சுது. ;) பிறகு பலகையை ஆட்டி ஆளைத் திரத்திப் போட்டு வேலையை முடிச்சு வெளிய வந்து குளிக்கப் போய்ட்டன்.

இந்த பேஸ்மண்ட்டுக்க, பிப்ஸ்க்விக் இருந்த காலத்தில பறவைகள்ட உயிர்ச்சுவடுகள் எல்லாம் கிடைக்கும். போகேக்க ஒரு ப்ளாஸ்டிக் பை & ஒரு தோண்டி (தோட்டக்கரண்டி) கொண்டு போனால் எல்லாம் சேர்த்துவந்து திராட்சைக்கடியில புதைச்சு மேல ஒரு கல்லைப் பாரம் வைப்பன். இப்ப உயிர்ச்சுவடுகள் எதையும் காணேல்ல.

திங்கள்க்கிழமை பள்ளியால வரேக்க அவர் வேலிக்கு மேல இருந்தார். எனக்குத் தெரியாமலிருக்க நாவல்ப்பூ மரத்துக்குப் பின்னால ஒழிச்சு இருந்தார்.

நேற்று வந்து பார்க்க படிக்குக் கீழ்ப்பக்கம் என்னவோ ஒரு நாற்றம் வந்துது. இவர் ஒழிச்சு வைச்ச எலியோ பறவையோ கிடக்குது என்று தேடினேன். காணேல்ல. கீழ யார் போறது இப்ப! சனிக்கிழமை பார்ப்போம் விட்டாச்சுது.

காலைல சலட் கீரை போதேல்ல. கூடையோட தோட்டத்தில போய் கொஞ்சம் நேட்டிவ் ஸ்பினாச் துளிர், கொஞ்சம் Nasturtium துளிர், சில்வர் பீட் கொஞ்சம் பிடுங்கிப் போட்டு வல்லாரை பிடுங்கப் போனேன். கருப்பு குண்டர் அந்தப் பாத்தியில படுத்து இருந்தார். கூப்பிட்டாலும் அசையேல்ல. க்றிஸ் திராட்சைக் கொடியை வெட்டிப் போட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நீளக் குச்சியால தட்டினேன். ம்ஹும்!

நான் நினைச்ச எலி / பறவை அதுதான். ;((

குளிக்கப் போயிருந்த க்றிஸை அவசரமாக மறிச்சு வெளிய கூட்டிவந்து க்ளவ் போட்டு இறுதிக் கடன்களை முடிச்சு தலை முழுகியாச்சுது. லீவு வரேக்கதான் ஆள் இல்லாதது பெருசாத் தெரியும்.

கழுத்தில ஓனர் ஃபோன் நம்பர் இருந்தது தெரியும். ஆனால் அவர் இருந்த நிலமையில எங்களால பார்க்க முடியேல்ல. சொந்தக்காரர் வந்து விசாரிச்சால் இல்லாட்டி எங்கயாவது லைட்போஸ்ட்ல நோட்டிஸ் ஒட்டினால் போன் பண்ணிச் சொல்லுவம்.

பசளை என்று, கருவேப்பிலைக்கடியில தாட்டு இருக்கிறன். வல்லாரைதான் எடுக்க விருப்பமில்லாமல் போச்சுது. வேற இடத்தில இருந்து மண் வெட்டிக் கொண்டுவந்து போட்டு மூடியாச்சு. புதுசாக வேற இடத்தில நட்டும் ஆச்சுது.

'மாற்றம் ஒன்றே மாறாதது.' கவலைப்படுறதுக்கு ஒண்டும் இல்லை. கெதியா இன்னொரு குண்டர் வருவார்.

Thursday 18 April 2013

வளருமா ட்ராகன் பழக் கள்ளி!

முன்கதைச் சுருக்கம் - 'சுவைத்தேன்'
~~~~~~~~~~
'யூ ட்யூப்' உபயத்தால் முளைக்க வைக்கும் ஆர்வம் ஏற்பட்டது. வழக்கமாக தக்காளி, ஸ்ட்ராபெரி முளைக்க வைப்பதுபோல...
வித்துக்களை
kitchen towel ல் பூசி...
நீர் தெளித்து, snap lock bag ல் வைத்து...
தினமும் அவதானித்தேன்.
 
இன்று....
தனியாகப் பிரித்து முளையோடு ஒற்றைக் கடதாசியை மட்டும் உரித்து எடுத்து...
சிறிய தொட்டியில் வைத்திருக்கிறேன்.
 
அன்றே மண்ணில் புதைத்தவை இன்று.

இங்கு குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து வளர்கிறதா பார்க்கலாம்.

Wednesday 17 April 2013

ரோஜாக்கூட்டம்!

 
என் தோட்டத்து ஒற்றைச் செடியில் பூத்த ஒரு கூடை வெள்ளை ரோஜாக்கள்
காம்பின் அளவைப் பொறுத்து அலங்கரித்தேன். ;)
இரண்டாவது - ஒரு 'சுவனியர் க்ளாஸ்'
நான்காவது - எப்போதோ Arpico Showroom இல் வாங்கிய மூன்றங்குல உயரமான சாடிகளிரண்டில் ஒன்று.
ஐந்தாவது - salt pot (மூடி துரு ஏறிப் போனதான் வீசிவிட்டேன்.)




மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday 13 April 2013

Kia ora!

வலையுலக உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

230 = 100

இன்று முதல்... என் நாணயச் சேகரிப்புகளிற் சில உங்கள் பார்வைக்கு.

எப்போ, எப்படி இந்தப் பொழுதுபோக்கினை ஆரம்பித்தேன் என்பதை ஏற்கனவே அறுசுவையில் சொல்லியாயிற்று. அதே வரிகள் மீண்டும் இணையத்தில் வேண்டாம். இழைக்கான தொடர்பினை இணைத்திருக்கிறேன். ஆர்வமிருந்தால் பார்வையிடலாம்.

நாற்பது வருடங்கள்... ஒரு ஆர்வம்... தீவிர ஆர்வமிருந்தாலும் ஓரளவுக்குமேல் பணத்தை இதில் முதலீடு செய்ய விருப்பமில்லை. என் நேரத்தை மட்டும் செலவளிக்கிறேன். சேகரிப்பில் பெரும்பான்மை தோழமைகளிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் கிடைத்தவை.

சாதாரணமாக நாணயங்கள் சேகரிப்பதை Coin Collection என்கிறோம்.  Numismatics என்றும் ஒரு வார்த்தை இருக்கிறது - அது தீவிரமாக நாணயங்களை ஆராய்பவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. இமாவுக்கு இது பொழுதுபோக்கு மட்டுமே.
~~~~~~~

திருகோணமலையில் ஒரு ஆசிரியத்தோழியின் கணவர்... வங்கியில் வேலை பார்ப்பவர், இந்த நாணயம் அங்கு உத்தியோகத்தருக்காக பிரத்தியேகமாக அனுப்பப்பட்டதாகவும் தனக்குரியதைத் திருப்பி அனுப்பிவிட இருப்பதாகவும் தேவையானால் என்னை வாங்கிக் கொள்ளுமாறும் சொன்னார்.
230 இலங்கை ரூபாய்களுக்கு வாங்கியதாக நினைவு. அன்றைய காலத்திற்கு எனக்கு கொஞ்சம் பெரிய தொகைதான். இருந்தாலும் முதல் முதல் இப்படி அபூர்வமாகக் கிடைத்த பொருளை விட்டுவிட மனது ஒப்பவில்லை. வாங்கி வைத்துக் கொண்டேன். இன்றும் அதன் முதலாவது சொந்தக்காரர் பெயர் அவரது கையெழுத்தில் வெளியேயுள்ள அட்டைப் பெட்டியில் இருக்கிறது.
நாணயத்தின் ஒரு புறம்...
 மறுபுறம்....
நாணயம் பற்றிய விபரங்கள்
தொடரும்...