Tuesday 11 September 2012

என் முதிர்தோழி

ஒரு பத்திரத்தை நிரப்பிக் கையெழுத்திடும்போது நினவு வந்தது, இன்று செப்டெம்பர் பதினொன்று; என் தோழியின் பிறந்தநாள்.

மூன்று வருடங்கள் முன்பாக, இதே நாளில் இதேபோல் நினைவுவர... வேலை முடிந்ததும் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே தொலைபேசியில் எண்களை அழுத்தினேன். சுலபமான எண் அவரது, அறுபத்து மூன்று... எழுபத்துமூன்று... அறுபத்துமூன்று... ஏழு... மறுமுனையில் அடித்துக் கொண்டே இருந்தது. துண்டித்துவிடலாமென எண்ணிய தருணம் "ஹலோ!" என்று மூச்சு வாங்கினார்.

"ஹாய் இட்ஸ் ரோஸி ஹியர்."

"நான் ஜேஜே" "எப்படி இருக்கிறீர்கள்?" எனவும், 'ஹூப்!' என்று பெருமூச்சு விட்டார்.

அவர் தனி ஆள்; தோட்டத்தில் வேலையாக இருந்திருக்கிறார்.  சட்டென்று எடுக்க வசதியாக தொலைபேசியை ஜன்னல் ஓரம் வைத்து விட்டு வெளியே போவார். அன்று மறந்திருக்கிறார். சுற்றி உள்ளே வர நேரமாகிவிட்டதாம். மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஸி." "ஓ!" அந்த 'ஓ' வெளிப்படுத்திய தொனி... புரிந்துகொள்ள இயலவில்லை.

"வேலை முடிந்து போகும் வழியில் வரட்டுமா? பார்க்கவேண்டும் உங்களை"
"சரி, எத்தனை மணிக்கு?"
"மூன்று நாப்பத்தைந்தளவில்!!"

வேலை முடிந்ததும் வழியில் நிறுத்தி ஒரு கார்ட் வாங்கி வாழ்த்தெழுதி உறையிலிட்டேன். அவருக்குப் பிடித்த 'மில்கஃபே' மற்றும் சாக்லேட்டுகள் வாங்கினேன். வாகனத்தில் எப்பொழுதும் தயாராக புதிய பைகள் ஒன்றிரண்டு இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக உள்ளே வைத்து மடித்துக் கொண்டேன்.

வாசல் மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். முடியெல்லாம் சுருட்டி க்ளிப் மாட்டிய தலையோடு வந்தார். சிரித்த முகமாக அழைத்துப் போனார். வழியில், "இது என் அறை," "இது விருந்தினர்க்கு," "இதுதான் ப்ரூஸ் இருந்த அறை," "இது குளியலறை," எல்லாமே எனக்கு முன்பு தெரியும். எத்தனை தடவை போயிருக்கிறேன். அவர் கணவர் ப்ரூஸ் காலமாகி 20 ஆண்டுகளாகின்றன. மகள், பேரக்குழந்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் சென்ற பிறந்தநாளன்று. ஏன் இப்போ மீண்டும்!

வரவேற்பறையில் சென்று அமர்ந்தோம். அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார். பேசினோம். குடும்பத்தார் பற்றி விசாரித்தார். முன்பு ஒன்றாக வேலை செய்த இடம் பற்றிய கதைகள் பரிமாறிக் கொண்டோம். ப்ரூஸ் தன்னைத் தனியே தவிக்க விட்டுப் போனாரே என்று புலம்பினார். பாவம்.

அன்பளிப்பைத் திறந்து பார்த்து தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினார். அறைகளுள் அழைத்துச் சென்று காட்டினார். புகைப்படங்கள், ப்ரூஸ் செய்த கைவேலை (ப்ரூஸ் ஒரு turner. lathe வைத்திருந்தார். அவரது கடைச்சல் வேலைகள் அழகாக இருக்கும்.) பிள்ளைகளது புகைப்படங்கள், தனது சிறு வயதுப் படம் என்று எல்லாம் காட்டினார். எதுவும் எனக்குப் புதிதல்ல.

கிளம்பினோம். வாசல்வரை வந்து வழி அனுப்பினார்.
இந்தப் 'பென் ஸ்டாண்ட்' (நியூஸிலாந்து செர்ரி மரத்தில் கடைந்தது. அடியில் விபரமும் ப்ரூஸ் பெயரின் முதலெழுத்தான Bயும் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.) பன்னிரண்டு வருடம் முன்பு ரோஸி எனக்குக் கொடுத்த நத்தார்ப் பரிசு. பச்சைக் கடதாசியில் அழகாக நத்தார் மரம் போல சுற்றிக் கொடுத்திருந்தார்.

என்னவோ சங்கடமாக உணர்ந்தேன். ரோஸியில் என்னவோ மாற்றம் தெரிகிறதே! அவர் சரியாக இல்லை.

வழக்கமாக நான் போனால் தேநீர் மேசையில் புது விரிப்பு விரித்து உள்ளே இருந்து அழகான கோப்பைகள், பொருத்தமான தட்டுகள் எடுத்து வந்து வைப்பார். தேநீர் தயாரிப்பது நான்தான். தானே பேக் செய்த பிஸ்கட்டுகள் கொடுத்து உபசரிப்பார். கிளம்புமுன் நானே எல்லாம் ஒதுங்க வைத்து சுத்தம் செய்து வைத்து விட்டுக் கிளம்புவேன்.

இன்று எதுவும் இல்லை. தேநீர் கொடுக்க முயற்சிக்கவில்லை. இயலாமை என்று நினைத்தேன். ஆனால்... இயலாது என்று உட்காராதவராயிற்றே என் தோழி!

வீடு வந்து சேர்ந்த மறு நிமிடம் தொலைபேசி அழைத்தது. ரோஸிதான் மறுமுனையில்.
"ஹாய்! இது ரோஸி. திருமதி க்றிஸ் வீடா அது?"
குழம்பினேன் நான். "ஆமாம்."
"நீங்கள் திருமதி க்றிஸ்தானா?"
மேலும் குழப்பம் எனக்கு. நிச்சயம் அது ரோஸியின் குரல்தான். 'ஜேஜே' என்னாமல் இது என்ன புதுவிதமாக!!
"ஆமாம், அது நான்தான்"
"நீங்கள் எனக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து தபாலில் வந்து சேர்ந்தது, நினைவு வைத்திருந்து அனுப்பியமைக்கு நன்றி,"

நான் !!!!!!!!! "You are welcome!"
வேறென்ன சொல்வது!! கையிலல்லவா கொடுத்தேன்!!!

"பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?" "வேலை எப்படிப் போகிறது?"

பத்து நிமிடம் முன்புதானே எல்லாம் பேசினோம்!!

மறந்துவிட்டார். எல்லாவற்றையும் மறந்து விட்டார். என்னையும் கூடத்தான். ;(

யாரென்று தெரியாமல், அதைக் காட்டிக் கொள்ளாமல் பொதுவாகப் பேசிச் சமாளித்திருக்கிறார். பிறகு கார்ட் கண்ணில் பட்டிருக்கிறது. மீண்டும் மறதி. அது தபாலில் வந்ததாகப் பாவித்து... தொலைபேசி எண்கள் எழுதி வைக்கும் குறிப்புப் புத்தகத்திலிருந்து இலக்கம் தேடிப் பேசி இருப்பார் போல.

பின்பும் பலமுறை அவரது எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறேன். இன்று வரை இயலவில்லை.

ஒரு நாள் அவர் வீட்டைக் கடந்து வாகனத்தை ஓட்டிச் சென்றோம். தோட்டம் மாறி இருக்கிறது. செடிகள் வேறு; திரைச்சீலை வேறு.

இரண்டு விடயங்கள் சாத்தியம். ஒன்று... என் எண்பத்தொன்பது வயதான தோழி எங்கோ வயோதிபர் இல்லத்தில் நல்ல கைகளின் பராமரிப்பில் இருக்கிறார். அல்லது... !! ;(

ஒவ்வொரு வருடம் கூகுள் நாட்காட்டி மட்டும் மறவாமல் ரோஸியின் பிறந்தநாளை எனக்கு நினைவு படுத்துகிறது. ;( மாற்ற விரும்பவில்லை நான்.
                                                                              - இமா
11/09/2012

Monday 10 September 2012

மாமா, யமி, பாட்டி & இமா

இவர் எங்கள் யமி.

அறுசுவையில் அடிக்கடி 'அமானுஷ்யம்' இழை முகப்பில் வருகிறது. எனக்கு யமி நினைப்பு வந்தது. படத்தைத் தேடிப்பிடித்தேன். கூடவே செபாவின் ஒரே தம்பியின் நினைப்பும் வந்தது. ;(

'இமாவின் பாட்டி கண்ட 'அது' என்னும் தலைப்பில் ஒரு பேய்க்கதை ;) எழுதினேன். 1997 செப்டெம்பர் 13 - 15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியின் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் அது.

15வது வருட நிறைவையிட்டு அனுபவங்கள் இரைமீட்கப்படுகின்றன.
பாட்டி இறந்து பதின்மூன்று வருடங்கள் நிறைவாகிவிட்டது. யமி இறந்தும் பத்து வருங்களாகிவிட்டது.

விரும்பினால் படிக்கலாம். ;) எச்சரிக்கை - கதை சிறியதுதான் ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலும் தொடர்ச்சி இருக்கும்.

Saturday 8 September 2012

பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி

;) _()_

பூ வைக்க இந்தப் பூவைக்குக் கொள்ளை ஆசை, அதிலும் சரம் வைக்க. ஆனால் ஊசி நூல் கொண்டு கோர்க்க மட்டும் வரும்.

எப்போதோ பக்கத்து வீட்டுக் கலியாணத்திற்கு அவர்கள் சொன்னது போல் கட்டிக் கொடுத்துவிட்டு மறந்து போனேன். பிறகு ஒரு இந்தியத் தோழி (Aunty) காட்டிக் கொடுத்தார்கள். திரும்பவும் மறந்தேன். டச் விட்டுப் போச். பூ இருந்தால்தானே டச்.

சமீபத்தில் ஒரு இணையத்தோழி உதவ.... செய்முறை கிடைத்தது. ஆனால் பூ!! இருந்த மல்லிகையை வெட்டியாயிற்றே!! காலை செபா வீட்டுக்குப் போய் வெளியே வருகையில் கண்ணில் பட்டது இந்த மல்லிகையின் சக்களத்தி. ;))

பிடுங்கி வந்தேன். வீட்டில் இறங்கும் போது ஒருமாதிரி மயக்கமாக இருந்தது, அவ்வளவு வாசனை.

இரவெல்லாம் மழை. பூக்கள் நிறையவே நீரை உறிஞ்சிவைத்திருந்தன. காம்பும் சின்னது. எப்படியோ மல்லுக்கட்டி.... சரம் கட்டி...

கூந்தலில் சூடினால் படம் பிடிக்க ஆள்!!! க்றிஸ் உதவிக்கு வந்தார். ஏதோ கலியாண ஃபோட்டோ ஷூட் போல அரைமணி நேரம் சுட்டு மீந்தது இந்த இரண்டும்தான். அதற்குள் பாதிப் பூக்களுக்கு பாதிப்பு வந்து கொட்டிப் போய் விட்டது.

ஒரு ஆன்டிஹிஸ்டமைன் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.... தங்கள் கனிவான கருத்துக்களை எதிர்பார்த்து. ;)))))

நன்றி _()_