Tuesday 26 May 2020

அனைத்தும் சுழலும்


காலச்சக்கரம் சுழலும்; மாதங்கள் மீண்டும் மீண்டும் வரும். ஒவ்வொரு பிறந்தநாளும் மாறிய ரசனைகள் கொண்டனவாக வந்து போகும். வாழ்த்திதழ்கள் வரும். சேகரித்துப் பத்திரப்படுத்தி அடிக்கடி எடுத்துப் பார்த்து இரைமீட்கலாம். 

என்னிடம் உள்ள வாழ்த்திதழ் ஒன்றில் எழுதப் பயன்படுத்தப்பட்ட மை என்ன காரணத்தாலோ மெதுவே மங்கிக் கொண்டு வருகிறது. அந்த வாழ்த்திதழின் வயது - குறைந்தது முப்பதாக ஆவது இருக்க வேண்டும். ஒரு திருமண அழைப்பிதழ் வைத்திருக்கிறேன். அதன் வயது பத்துப் பண்ணிரண்டு இருக்கலாம். கையில் கிடைத்த சமயம் அதன் அமைப்பை அத்தனை வியந்திருக்கிறேன். அதனால்தான் பத்திரப்படுத்தினேன் என்று கூடச் சொல்லலாம். கையால் தயாரித்த காகிதத்தில் அழகுப் பொன் நிற மையில் அழைப்பு அச்சிடப்பட்டிருந்தது. சமீபத்தில் எடுத்துப் பார்க்க, பெரும்பாலான விபரங்கள் மறைந்துவிட்டிருக்கின்றன. தேதி, மணமக்கள் பெயர் எதுவும் தெரியவில்லை. 

ஔவை பணத்தைப் புதைத்து வைப்பது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. கூடுவிட்டு ஆவி போன பின் யாரே அனுபவிப்பார், பாவிகாள் என் சேகரிப்புகள்!! :-) 

இன்று பாடசாலையில் இருவருக்குப் பிறந்தநாள். அவர்கள் அனுபவிக்கட்டும் என்று உரு மாற்றினேன் இரண்டை. பெறுபவர்கள் மட்டுமல்லாமல், காண்பவர்களும் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறேன். 

பழைய வாழ்த்திதழின் முகப்பை வெட்டி: சட்டத்தோடு, சட்டத்தினுள் பூக்கள் இலைகள் இல்லாத இடங்களையும் வெட்டி நீக்கினேன். (இரவு நேரம் எடுத்த காரணத்தால் படத்தில் விபரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.) இந்த அமைப்பை 3D ஸ்டிக்கர்கள் கொண்டு புதிய அழைப்பிதழின் முகப்பில் ஒட்டினேன். மணிகளைச் சேர்ப்பதை, சமீப காலத்தில் என் அனைத்து வாழ்த்திதழிலும் செய்துவருகிறேன். விரைவில் வேறு முறைக்கு மாற வேண்டும். :-)
இது மம்மிக்கு அவரது தோழி இலங்கையிலிருந்து அனுப்பிய வாழ்த்திதழிலிருந்து வெட்டி எடுத்தது. பூக்களின் நடுவில் வழமை போல், மணிகள். பூச்சாடியும் பூக்களும் 3D ஸ்டிக்கர்கள் உதவியோடு உயர்த்தி ஒட்டப்பட்டிருக்கின்றன.

Sunday 24 May 2020

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

சிவப்பு நிற 'லெதர் க்ரெய்ன்' அட்டையினாலான வாழ்த்திதழ் இது.

முன்பக்கம் மட்டும் printed parchment பேப்பர் இணைத்திருக்கிறேன். பாச்மண்ட் பேப்பரை க்ளூ போட்டு ஒட்டினால், அது காய்ந்ததும் அசிங்கமாகத் தெரியும். வீசிவிடுவதைத் தவிர வேறு வழி இராது. பரிசோதனை செய்து நிறைய வீணாக்கி இருக்கிறேன்லிப்போது டபிள் சைடட் டேப், மேலே அலங்கார வேலைகள் வரும் இடமாகப் பார்த்து ஒட்டிவிடுகிறேன். ரிபனும் போவும் அப்படியாக இணைக்கப்பட்டவையே. அட்டையைத் திறந்து வைத்து, ஓகன்சா ரிபனை முன்பக்க அட்டையில் மத்தியில் ஒட்டி, அத்தையைச் சுற்றி... ஆஹா!! எழுத்துப் பிழை இப்படி ஒரு அர்த்தத்தில் வந்துருக்கிறதே!! ;) ம்... அட்டையைச் சுற்றி உட்பக்கமாகக் கொண்டு போய் மீண்டும் முன்னால் கொண்டுவந்து... - டபிள் சைடட் டேப் - பச்சக். என்னைப் பொறுத்தவரை, பாச்மண்ட் பேப்பருக்கு க்ளூவை விட இதுதான் பொருத்தம். போவை தனியாகச் செய்து மேலே ஒட்டிக் கொண்டேன்.

சிறிதும் பெரிதுமாக பரவலாக பூக்கள். ஒரேயொரு கம்பளிப் பூவை 3D sticky dot வைத்து உயர்த்தி ஒட்டினேன். சிறிய பூக்கள் மத்தியில் ஒற்றை மணிகள் - சிலது வெள்ளை நிறம்; சிலது கண்ணாடி மணிகள் - ஒட்டினேன். ஒட்டுவதற்குச் சுலபமான வழி, கூர் மூக்கு கொண்ட க்ளூ போத்தலின் உதவியால் தேவையான இடத்தில் சின்னதாக ஒரு பொட்டு வைத்துவிட்டு, இடுக்கியினால் மணியை எடுத்து அந்த இடத்தில் வைப்பது. சற்றுக் காயவிட்டு மேலே விரலை வைத்து அழுத்தி விட்டால் போதும். சற்றுப் பெரிய பூக்கள் மத்தியில் மூன்று மணிகள், ஒற்றைக் கம்பளிப் பூவின் மத்தியில் மட்டும் குவியலாக மணிகளை ஒட்டிக்கொண்டேன்.

உள்ளே... confetti, Happy Birthday ஒன்றை, மத்தியில் ஒட்டினேன். சமீபமாக பிறந்தநாள் வாழ்த்திதழ்களில் கலண்டர் வெட்டி ஒட்டும் எண்ணம் வந்திருக்கிறது. பொதுவாக எந்த மாதத்துக்கான பக்கத்திலும் அந்த மாதம் பெரிதாகவும் கடந்து போன மாதம் ஒரு பக்கமும் அடுத்து வரும் மாதம் மறு பக்கமும் இருக்குமல்லவா! அப்படி, ஏப்ரல் மாதத்துக்கான பக்கத்தில் இருந்து மேயை நறுக்கி, தேதியை வட்டமிட்டுக் காட்டி அதையும் ஒட்டிவைத்தேன். இம்முறை வருடமும் தெரிந்தது.

இதைப் பெறப் போகிறவர் என் வகுப்புத் தோழி & சகலை. அவர் பிறந்தது அவரது தந்தையாரின் பிறந்தநாள் அன்று. அவரது பெறாமகன் பிறததும் அதே தேதியில்தான். இருக்கும் இருவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்; இல்லாதவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.
<3 br="">பி.கு
வரவர எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கிறது. ;( காரணம் இல்லாமல் காரியங்கள் ஆவதில்லை அல்லவா!  கண்ணுக்கு வயதாகுகிறது, கொஞ்சம் பக்கிள். ;( இமாவின் உலகம் நான் என் மனதை இலகுவாக வைக்க நினைக்கும் சமயம் சுற்றுவது. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மாக்ஸிமம் பயன்பெற விரும்புவேன், வேறு விதத்தில் சொல்வதானால்... மல்டிடாஸ்க்கிங்  - மாமியார் தலையில கையும் வேலிக்குப் புறத்தால கண்ணும் மாதிரி, இமாவின் உலகில் கையும் டீவீ ஸ்க்ரீனில கண்ணுமாக இருப்பேன்.  இரவில் கடைசி வேலையாக நடப்பதுவும் ஒரு காரணம்.

மனம்கனிந்து... பிழைகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்திவிடுவேன். இந்தக் குறிப்பை கமண்ட் பாக்ஸின் மேலே வருவது மாதிரிப் போடலாம் என்றால், எப்படிச் செய்வது என்பது மறந்துவிட்டிருக்கிறது. ;( வலையுலகோர் முடிந்தால் உதவ வேண்டும்.

நன்றி
_()_

ஒரு பித்தான், ஒரு ரப்பர் வளையம்!

 தலைப்பில் சொல்லியிருப்பவற்றை, மேலே உள்ள படத்தில் காண்பீர்கள்.
ரப்பர் வளையத்தை மடித்து பித்தான் கொக்கியூடாக மாட்டி மறுபக்கம் எடுத்து...
ஒரு பக்கத்தை வளைத்து சுருக்குப் போட்டு....
 இழுத்து இறுக்க வேண்டும்.
கூந்தலில் மாட்டுவதற்காகத் தான் செய்தேன்; ஆனால் எனக்காக அல்ல. அதனால், என் பின்னலில் மாட்டி புகைப்படம் எடுக்க விடும்பவில்லை.

இந்த பித்தான் ரப்பர் வளையத்திற்கு இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. லொக்டௌனில் நன்றாகச் சாப்பிட்டு, ஓய்வு எடுத்துவிட்டு வேலைக்குக் கிளம்பும் சமயம் skirt / trousers பித்தான் மாட்டுவது சிரமமாக இருந்தால், ஆடையில் ஏற்கனவே இருக்கும் பித்தான் அளவில் இன்னொன்றை எடுத்து சாதாரண ரப்பர் பட்டி ஒன்று - மிகவும் சிறியதாக இருப்பது அவசியம் - இப்படி மாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடையில் உள்ள பித்தான்கண் வழியே புதிய! பித்தானை மாட்ட வேண்டும்; ரப்பர் வளையத்தை ஆடையில் உள்ள பித்தானில் மாட்ட வேண்டும்.
வேலையைச் சரியாகச் செய்திருக்கிறேனா! :)
புரியாவிட்டால் கடைசிக்கு மேலே உள்ள படத்தைப் பார்த்துக் கொண்டே.... இந்தப் பந்தியை மீண்டும் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஒருவேளை....  2 / 3 / 4 துளைகள் கொண்ட பித்தான்தான் கிடைத்தது என்றால், ஏதாவது ஒரு துளை வளியே ரப்பர் வளையத்தை மாட்டி, இன்னொரு துளை வழியே மறுபக்கம் இழுத்துப் பார்க்க இரண்டாவது படத்தில் இருப்பது போல் தெரியும். பிறகு மீதிப் படிமுறைகளைப் பின்பற்றுவது சுலபமாக இருக்கும்.

Friday 15 May 2020

முள்ளெலி

Hog தமிழில் பன்றிதான் என்றாலும் headgehog முள்ளம்பன்றி அல்ல - முள்ளெலி.

இடைக்கிடை எப்போதாவது சீசன் சமயம் ஒருவர் தோட்டத்தில் நடமாடுவார். தொட்டால் பந்து போல் சுருண்டுகொள்வார். கொஞ்ச நேரம் கழித்து நேராகி ஓடிவிடுவார்.

அம்மா வீட்டருகே ஆரோக்கியமானவர்களைக் கண்டிருக்கிறேன். நான் இருக்கும் வீட்டுப் பக்கம் வருபவர்கள் எப்போதும் ஏதோ நோய் தக்கியவர்களாகத் தெரிகிறார்கள், திரிகிறார்கள்.

சென்ற வருடம் ஒருநாள் இவர் வந்தார். நெருங்கி ஆராய்ச்சி செய்யலாம் என்று பெட்டியொன்றைத் தேடிப் பிடித்து ஆளை அமுக்கிப் பிடித்தேன். நத்தைகள் சுலபமாகத் தோட்டத்தில் கிடைத்தன. செய்ய வேண்டி இருந்தது, தொட்டிகளைத் திருப்பிப் பார்ப்பது மட்டும்தான். உடைத்து உள்ளானை மட்டும் உண்பார் என்ற என் எண்ணத்தைத் தவறாக்கியபடி, நொருக்மொருக் என்று கோது நொருங்கும் சப்தம் கேட்க முழுவதையும் ரசித்துச் சாப்பிட்டார் தோழர்.

அப்போது ட்ரிக்ஸி இருந்தார். இரவு, ட்ரிக்ஸியைக் கூட்டில் அடைத்த பின், இவரை வெளியே விட்டேன். டெக்கைச் சுற்றி வேலி இருக்கிறது. தப்ப இயலாது. மறுநாள் வெள்ளி - இரண்டு பாடவேளைகள் மட்டுமே வேலை. பிறகு வந்து இவருக்கு ஏதாவது மருத்துவம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.

காலை எழுந்து தேடினால்... ஆளைக் காணோம். பாடசாலை விட்டு வந்து மறுபடியும் (டடா, எங்கிருந்து இந்த மறுபடியைப் பிடித்திருப்பார்! ம்... மங்களூரில் 7 வருடங்கள் இருந்திருக்கிறார். இந்தியர்கலிடமிருந்து பிடித்திருக்கிறார். 'மறுகா' என்பாரே அடிக்கடி!! அது... வெள்ளைமணலிலிருந்த சமயம் பிடித்திருப்பார் போல.) தேடினேன். ஆளைக் காணோம். ஆனால், டெக் வேலியில் ஓரிடத்தில் பலகை விலகி இருந்தது. அந்த வழியேதான் தப்பி இருக்க வேண்டும். விட்டுவிட்டேன்.

லொக்டௌன் ஆரம்பித்தது, தோட்டத்தைத் துப்புரவு செய்ய ஆரம்பித்தோம். ஒரு இடிபாடான இடத்தில் வினோதமான வடிவத்தில் தாடை எலும்பு ஒன்று கிடைத்தது. என்ன பிராணியாக இருக்கும்!! சிந்தித்துக் கைவிட்ட சமயம்... பளிச்!! இது ஏன் முள்லெலியினதாக இருக்கக் கூடாது! அளவுகள் சரியாகத் தெரிந்தன. எத்தனை அழகான பற்கள்! எத்தனை அமைப்பான கால்கள்! இந்தப் படம் இருந்தது நினைவு இல்லை, இன்று காணும்வரை. நினைவில் இருந்திருந்தால் ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பேன். பற்களை வைத்து ஒரு ஸ்தூபி, எலும்புகளை வைத்து ஒரு ஸ்தூபி கட்டி... Wisteria கொடி ஒன்றையும் நட்டிருக்கலாம்.  :-)  அதன் கீழ் தானே முள்ளெலியார் மறுவுருவானார். :-)

என்னிடம் இருந்து தப்பியதாக நினைத்துப் பலகையை நெம்பி வெளியேறியிருக்கிறார். நோய் முற்றியிருந்திருக்கும் போல. விழுந்த இடத்திலேயே மரணித்திருக்கிறார். எப்படி வாசனைகள் காட்டிக் கொடுக்காமல் போயிற்று என்று தெரியவில்லை.

உண்ணக் கூடிய முள்ளெலிகள் - செய்வது எப்படி! இங்கே சொடுக்குக. :-) இதே முறையைப் பயன்படுத்தி bun, பேஸ்ட்ரி என்று எதை வேண்டுமானாலும் தயார் செய்யலாம்.

Monday 11 May 2020

கெட்டுப்போன நுணல்!

சென்ற வருடம் கார்த்திகை மாதம், ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இவரைச் செய்தேன்.
முதுகில் தெரியும் பிறை, என் பெருவிரல் நகம் பட்ட தழும்பு. நுணலாரின் நகங்களுக்கு edible gold paint பயன்படுத்தினேன். கண்ணின் மத்திக்கு சின்னச் சின்ன வெள்ளை மிட்டாய்கள் வைத்தேன்.

சந்தோஷமாக உலர வைத்துவிட்டு தூங்கப் போனேன். காலையில் கையில் எடுக்க இரண்டு விரல்களும் மேலும் ஒரு நகமும் உடைந்து வந்தது.
பாடம் - நுணுக்கமான சிறிய வடிவங்கள் உலரும் போது உடைந்துதான் போகும். தேவைப்படும் வடிவத்தை ஒன்றுக்கு இரண்டாகச் செய்து வைக்க வேண்டும்.

இது என் தேவைக்குச் சற்றுப் பெரிதாக இருக்கும் என்று புத்தி சொன்னது. ஆனாலும்,  நுணலை என் வாயால் கெடுக்க விரும்பவில்லை. நான்கைந்து தேக்கரண்டி சீனிக்கு மேல் இருக்கும்; நிறம் வேறு கடுமையாக இருந்தது. என் வாயால் என் ஆரோக்கியத்தைக் கெடுப்பானேன்! எறும்புகளுக்குத் தீனியாக, தோட்டச் செடிகளின் கீழ் வைத்துவிட்டேன்.

ஒரு கேக்குக்காகச் செய்த நுணல் இது. 

Saturday 9 May 2020

குட்டிச் சட்டை


எங்கள் வீட்டுக் குட்டிப்பெண்ணிற்கு முதலாவது பிறந்தநாள் முடிந்து ஐந்து மாதங்கள் ஆனதன் பின்பு இந்த இடுகையைத் தட்டுகிறேன்.

மருமகள் கர்ப்பமாக இருக்கும் சமயம், பிறப்பது பெண்ணானால், தன் திருமண ஆடை தைத்து மீந்த துணியில் சட்டை ஒன்று தைத்துக் கொடுக்க இயலுமா என்று கேட்டிருந்தார்.

குட்டிப்பெண் வளர்த்தி பன்னிரண்டாம் மாதம் எப்படி இருக்கும் என்பதை எப்படி ஊகித்து அளவு எடுப்பது! ஐந்து கிழமைகள் முன்பாக, அவர்கள் வசிக்கும் ஊருக்குக் கிளம்பிப் போனேன். பொதுவாக மாதம் இருமுறை செல்வது வழக்கம். இந்தத் தடவை செல்லும் முன் கண் மதிப்புக்கு ஒரு துணியில் மேற்சட்டையைத் தனியாகவும் பாவாடைப் பகுதியைத் தனியாகவும் தைத்து எடுத்துப் போனேன்; கூடவே என் தையல் இயந்திரமும் வந்தது. 

சின்னப் பெண் உண்ணாமல், தூங்காமல் இருக்கும் சமயம் அவரை விளையாட்டுக் காட்டியபடி அளவு பார்த்துக் கொண்டேன். 

வீட்டுக்கு வந்து மறுநாளே சட்டை தயார். :-) மேல் உடம்பு - எம்போஸ்ட் துணி, பாவாடை - சாட்டின், கை, கழுத்திற்கு, மருமகள் கொடுத்திருந்ததிலிருந்து லைனிங் துணியைப் பயன்படுத்தினேன். 

கை கழுத்து எல்லாம் வெட்டியது வெட்டியபடியே இருந்தது. மீண்டும் பயணம்; அளவு பார்த்தல். மேற்சட்டைப் பகுதி சரியாகத் தான் இருந்தது. கை முன்பகுதியைக் கொஞ்சம் குழிவாக வெட்ட நேர்ந்தது. இடுப்பு... நெஞ்சு, இடுப்பு, வயிறு எல்லாம் ஒரே சுற்றளவில் இருந்தாலும் டயப்பர் அளவைச் சேர்த்துப் பார்க்க வேண்டாமா! இடுப்பை சற்றுப் பெரிதாக்க வேண்டும். 



சுருக்கமெல்லாம் உருவி மீண்டும் தைப்பது என்னால் ஆகாது. ;( சாட்டின் துணி, நூல் பிரிந்து சுருக்கி அழகைக் கெடுக்கும். ஒரே நிறத் துணியும் நூலும் - கண் ஒத்துழைக்காது - எப்படிப் பிரித்துத் தைப்பது! 

வட்டக் கழுத்தானாலும் முதுகுப் பக்கம் V வடிவில் வெட்டியிருந்தேன். நட்டநடுப் பகுதியில் மட்டும் சற்றுப் பிரித்து பைப்பிங் கொடுத்துத் தைத்தேன். பெரிதாக ஒரு 'போ' சாட்டினில் செய்து ஒரு பக்கம் பொருத்தினேன். அதிலேயே கொக்கி வைத்து, மறு பக்கம் வளையம் தைத்து முடித்தேன்.                                                                                
வெகு எளிமையாக இருப்பதாகத் தோன்றிற்று. இன்னும் சற்று மெருகேற்ற வேண்டுமே! அகலமாக, நீளமாக ஒரு பட்டி அடித்து இரண்டாக மடித்து இடைப்பகுதியில் பொருத்தினேன். லைனிங் துணியில் ஏழெட்டு வட்டங்கள் வெட்டி, மெழுகுவர்த்திச் சுடரில் காட்டி உருக்கி சில செயற்கை மகரந்தங்களையும் சேர்த்துப் பூவொன்று தைத்துக் கொண்டேன். இரண்டு இலைகளைத் தைத்த பின்பும் திருப்தி வரவில்லை. முத்துக் கோர்வை ஒன்றிலிருந்து சிறு துண்டு வெட்டிப் பொருத்தினேன். 

பிறந்தநாள் அன்று அணிந்து பார்க்க, சின்னப்பெண்ணுக்கு அழவாக, அழகாக இருந்தது.

எதை அணிந்தாலும் அவர் அழகாகத்தான் இருப்பார். :-)

Friday 8 May 2020

நைஸ்! நைஸ்!

இலங்கையில் தெருவில் மணி அடித்துக்கொண்டு ஒருவர், தோளில் ஒரு பக்கம் கண்ணாடியாலான உயர்ந்த தகரப் பெட்டியைத் தூக்கி வருவார். அதன் உள்ளே தும்பு மிட்டாயும் அதே நிறத்தில் நைஸும் இருக்கும்.

நைஸ்... நினைத்தாலே வாயூறும் எனக்கு. பெரிய வட்டமாக, இறுக்கிப் பிடித்தால் பொடியாகும் அளவு மென்மையாக ஆனால் மொரமொரப்பாக இருக்கும். ஈர உதட்டில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்ளும். சுவை... இனிமை இருந்தும் இல்லாமலும் இருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் அலுக்காது அத்தனை எடை குறைந்த தின்பண்டம். இலங்கைக்குப் போகும் சமயம் கூட மணிச்சத்தம் கேட்டதும் வெளியே போய்ப் பார்ப்பேன். வாங்கிச் சாப்பிடாமல் விடுவது இல்லை.

அத்தனை அருமையானதொன்றை நினைத்த போதெல்லாம் சாப்பிடக் கிடைத்தால்!

ப்ரின்சியின் சமையலறையில் கண்டேன் செய்முறையை.  மிக்க நன்றி ப்ரின்ஸி. உங்கள் உதவியால் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் அருமையான நைஸ் சாப்பிடக் கிடைத்தது.

ரொட்டி மேக்கர் இருந்தால் மட்டும்தான் நைஸ் செய்யலாம். பெரிய நைஸை எப்படிச் செய்திருப்பார்கள்!! இரண்டு தோசைக்கற்களை பிணைச்சல் போட்டு இணைத்து வைத்திருப்பார்களோ!! :-)


இங்கே குறித்து வைத்தால் காணொளி காணாமற் போனாலும் பிறிதொரு சமயம் தேடி எடுக்கச் சுலபமாக இருக்கும்.

தேவையாக இருந்தவை
மா - 165 கி
சீனி -2 மே.க
நீர் - 360 மி.லீ
கலரிங்

சுவை சேர்க்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. விரும்பினால் சேர்க்கலாம்.

ப்ரின்ஸி சொல்லியிருந்த முக்கியமான விடயங்களை மட்டும் குறித்து வைக்கிறேன்.
கரைசலை வடிகட்டவேண்டும்.
நிறம் கடுமையாக இருக்க வேண்டும்.
ரொட்டி கிங் நடுத்தர சூட்டில் இருக்க வேண்டும்.
2 - 2 1/2 மேசைக்கரண்டி கலவை போதும்.
மூடி, 30 செக்கன்களுக்கு அழுத்தியும் 45 செக்கன்கள் மெல்லிதாகவும் பிடித்தால் போதும்.
திறக்கும் போது சிரமப்படுத்தித் திறக்கக் கூடாது. தானாக வந்தால்தான் சரியாக வரும்.
திருப்பிப் போட்டு 10 செக்கன்கள் விட்டு எடுக்க வேண்டும்.

சுருக்கமாகவே குறித்து வைத்திருக்கிறேன். இதைப் படித்தால் மீதி விபரங்கள் எனக்குத் தானாகவே நினைவுக்கு வந்துவிடும்.

இந்த இடுகை என்றாவது.... தொடரும்.

Tuesday 5 May 2020

புல்டோ டொஃபி

எனக்கு இந்த மிட்டாய் மேல் அப்படி ஒரு விருப்பம். சின்ன வயதில் சாப்பிட்ட பிறகு சாப்பிடக் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதை விட... வேறு விடயங்கள் ஈடுபாடு... கடமைகள் என்று மூழ்கிப் போனதில் தேடிச் சாப்பிடத் தோன்றவில்லை.

அறுசுவைக்குப் போக ஆரம்பித்து... 'மறந்து போன உணவுகள்' என்று இழையொன்று கண்ணில் பட்டு மீண்டும் ஆசையைத் தூண்டி விட்டது. அங்கு கேள்வியை வைக்க... இலங்கையர் சிலர் இணைந்தார்கள். இலங்கை வானொலி இந்தியர்களுக்கும் புல்டோவை அறிமுகப்படுத்தி இருந்தது. எல்லோருமாக கல்கோனா, கமர்கட், கட்டாமிட்டாய் முதல் புளூட்டோக் கிரகம் வரை அலசி ஆரய்ந்துவிட்டு களைத்துப் போய் பனைவெல்லம், கருப்பட்டி ஆராய்ச்சியோடு முடித்துக் கொண்டோம்.

நான் விடுவதாக இல்லை. இலங்கைக்குப் போனால் இதே எண்ணம். இங்கு எங்கே சிங்களவரைக் கண்டாலும், 'புல்டோ செய்யத் தெரியுமா?' என்று பிடித்துக் கொள்வேன். ஒரு கட்டதில் நான் சிங்களம் பேசும் யாரிடமாவது புதிதாக அறிமுகம் ஆகும் சமயம் க்றிஸ் அருகே நின்றால் தானாகவே, 'புல்டோ தலைப்பு வரப் போகிறது,' என்று சிரிக்க ஆரம்பித்தார்.

பதினொரு வருடங்கள் இவ்வாறே இனிது கழிந்தன.

சென்ற வருடம் சில மாத இடைவெளிகளில் சுரேஜினியும் உமாவும் நினைவாக யூட்யூப் குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அத்தனை ஆசை இருந்தும் வேறு வேலைகளில் இன்று நாளை என்று கடத்திக் கொண்டே போய்விட்டேன்.

சில வாரங்கள் முன்பாக மீண்டும் நினைவுக்கு வந்தது புல்டோ. பேக்கிங் கடதாசியை ஒரு கணக்கிற்கு வெட்டி வைத்தேன். பிறகு அப்படியே விட்டுவிட்டேன். தேங்காய் துருவிப் பிழிந்தால் கணக்கு சரியாக வரும்; கோரானா காலம் - தகரத்தில் அடைத்த தேங்காய்ப்பால்தான் இருக்கிறது. அது 400 ம்.லீ தகரம். அளவைக் குறைப்பதா கூட்டுவதா? பரிசோதனை முயற்சிதானே! குறிப்பில் சொன்னபடி 350 மி.லீ தேங்காய்ப்பாலும் 200 கிராம் சீனியும் பயன்படுத்தி... முன்பே க்றிஸ்ஸை எடுபிடி வேலைக்கு வரத் தயாராக இருக்கச் சொல்லி புக் செய்துவைத்துவிட்டு ஆரம்பித்தேன் வேலையை.

முதல் உதவி - பாலைப் பதமான சீனிப் பாகில் கொட்டுவது, இரண்டாவது உதவி - உருட்டிப் போடுபவற்றைப் பொதிந்து வைப்பது.

காணொளியில் சொன்னதை நம்பாமல் வாழையிலையின் உதவியை நாடியிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டேன். பேக்கிங் பேப்பரில் கொட்டினேன். ஆரம்பத்தில் சரியாக இருந்தது மெதுவே இறுகியதும் பேப்பரோடு ஒட்டிக் கொண்டது. 'மைக்ரோவேவ் செய்தால் இளகாதா?' க்றிஸ்ஸின் யோசனை நன்றாகத் தான் தெரிந்தது. சிறிய துண்டுகளாக உடைத்து இளக வைத்தால் மீண்டும் உருட்டும் பதம் கிடைத்தது. ஆனாலும் என் பொறுமையின்மையால் கடதாசியை அங்கங்கே மடித்து பிரித்து எடுப்பதற்குச் சிரமமாக ஆக்கிக்கொண்டேன். அதற்கென்ன! போஸ்டர் சாப்பிடும் பசுவின் பாலைக் குடிக்கலாமென்றால் பேப்பரோடு புல்டோ சாப்பிடுதல் மட்டும் ஆகாததா!  பாக்குவெட்டியால் நறுக்கி டப்பாவில் போட்டு வைத்தேன். வாயில் போட்டுச் சுவைத்து முடிய, கடதாசி வாயில் தங்கிற்று. அப்படியே சாப்பிட்டு முடிக்கலாம்.
  
இருபத்தைந்து மிட்டாய்களை ஒழுங்காகச் சுற்றி எடுத்தோம். மீதியைக் கெடுக்காமல் எடுத்திருந்தால் முப்பந்தைந்து மிட்டாய்கள் வரை தேறி இருக்கும்.

செய்முறை வேண்டுமானால், மேலே போய் சுட்டியில் அழுத்தி வீடியோவைப் பாருங்கள்.

Sunday 3 May 2020

மைக்ரோவேவ் சாக்லெட் கேக்

நாக்கு இனிமைக்கு ஏங்கிற்று. சேமிப்பில் எதையும் காணோம். நேரம் அதிகம் செலவளிக்காமல், பாத்திரங்கள் கழுவுவதற்கும் இல்லாமல்.... என்ன செய்யலாம்!!!

ஏற்கனவே நான் அறுசுவையில் கொடுத்திருந்த மைக்ரோவேவ் ப்ரௌணி குறிப்பைத் தேடிப் பிடித்தேன். 

சீனி 250 ml!! சற்று அதிகம். ;( ஒவ்வொரு 1/8 பங்குத் துண்டிலும் 1/8 கோப்பை சீனியா! மாற்றலாம் அளவை - அரைக் கோப்பை பழுப்புச் சீனி + அரைக் கோப்பை ஈக்வல் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு 1/8 துண்டு மட்டும் சாப்பிடலாம். கொக்கோ பௌடர் வீட்டில் இல்லை, ஆனால் 'ட்ரிங்கிங் சாக்லேட்' இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.  

ஈரமான பொருட்களுடன் சீனி & ஈக்வல் சேத்து அடித்துக் கொண்டேன். மீதிப் பொருட்களை ஒன்றாகச் சலித்து எடுத்து, ஈரக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்முன் தெரிந்த கண்ணாடிப் பாத்திரத்திலிட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் செய்யப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கழித்துப் பார்க்க கேக் முழுவதாகப் பொங்கி கிட்டத்தட்ட வழியும் நிலைக்கு வந்திருந்தது. சட்டென்று திறந்து ஒரு பீங்கானை கண்ணாடிப் பாத்திரத்தின் கீழ் தள்ளிவிட்டேன். ஐந்து நிமிடங்கள் கழித்து....

கேக் தயார். அலங்காரத்துக்காக மேலே சாக்லெட் ட்ராப்ஸ் வைத்துவிட்டேன். இம்முறை வழக்கமாக வருவதைப் போல் அல்லாமல் மிகவும் மெத்த்த்... மறுநாள் கூட மென்மை அதிகம் குறையவில்லை.

விருந்தாளி வரும் போது முன்பே அடித்து, கிண்ணத்தில் ஊற்றிவைத்துவிட்டால், அவர்கள் இருக்கும் போதே மைக்ரோவே செய்து சூடாகப் பரிமாறலாம்.

எந்த எலி மாட்டுகிறது என்று பார்க்கலாம்! :-)

Friday 1 May 2020

சின்னச் சின்ன அணிகலன்கள்

பேத்திக்காக, அவரது பிறந்தநாளுக்காகச் செய்தவை இவை. சட்டைகளையும் நானே தைத்தேன். அவற்றைப் பற்றி வேறொரு இடுகையில் பார்க்கலாம்.)

கைவினைப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும் சமயம் வாங்கிச் சேர்த்து வைப்பேன். எது எப்போது தேவைப்படும் என்பதைச் சொல்ல முடியாது. ஒரு பாக்கெட்டில் வந்த பூக்களைக் கொண்டு, நேற்றைய இடுகையிலுள்ள வாழ்த்திதழ் உட்பட மூன்று வாழ்த்திதழ்களாவது செய்திருப்பேன்.


செய்முறை என்று எழுதுவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

தேவையாக இருந்தவை...
தடிமனான, மினுக்கமான வண்ணக் கயிறுகள்
பொருத்தமான நிறத்தில் பூக்கள்
மகரந்தம்
செயற்கை இலைகள்
மாலைகள் செய்வதற்கான வளையங்களும் கொக்கிகளும் (Lobster clasps)

இவற்றோடு....

கத்தரிக்கோல்
குறடு
மெழுகுவர்த்தி
க்ளிப்புகள்
ஊசி & பொருத்தமான நிறங்களில் நூல்

 • கழுத்து அளவிற்கு ஏற்றபடி நாடாவை வெட்ட வேண்டும்.
 • நுனிகளை மெழுகுவர்த்தியில் காட்டி உருக்கிக் கொள்ள வேண்டும்.
 • ஒரு முனையில் வளையத்தையும் மறுமுனையில் கொக்கியையும் மாட்டி இறுக்கிக்கொள்ள வேண்டும்.
 • பாதியாக மடித்து நடுவில் அடையாளம் செய்து எடுத்து, பூக்கைளையும் இலைகளையும் மகரந்தங்களையும் சரிவர வைத்துத் தைக்க வேண்டும். 
 • க்ளிப்பிலும் விருப்பம் போல் பூக்களை வைத்துத் தைத்துவிடவேண்டும்.
 • நூல் பிரிந்துவிடாமல் இருக்க தையலை முடித்த இடத்தில் நிறமற்ற நெய்ல் பொலிஷ் வைத்துவிட்டால் நல்லது. 
இவை ரிபன் ரோஜாக்கள் - வாங்கியவைதான். சில சமயங்களில் விலையைப் பார்க்கும் போது ரிபன் வாங்கி, செய்யச் செலவளிக்கும் நேரத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது... எப்படி இவர்களால் இந்த விலைக்கு விற்று லாபம் காண முடிகிறது என்று வியப்பாக இருக்கும். கண்ணில் படும் போது வாங்கிவிடுவது எனக்கு லாபம்.

எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இவ்வளவோடு நிறுத்திவிட்டேன். பேத்தி வளரும் போது தேவை மாறலாம். :-)

கொரோனா காலத்துப் பிறந்தநாள்!


தோழி ஒருவரது பிறந்தநாள் இன்று. அருகில் உள்ள தபால் நிலையம் மூடி இருக்கிறது; தூரப் பயணத்திற்கு அனுமதி இல்லை; தபால்தலை வாங்க இயலாது. என்னிடம் ஏற்கனவே கட்டணம் செலுத்திய தபாலுறைகள் இருந்தன. அவற்றிலொன்றில் அடங்கக் கூடியதாக வாழ்த்திதழை அமைத்தேன். தினமும் இல்லையென்றாலும் தபால்சேவை இயங்குவது தெரிகிறது. நேரத்திற்கே தபாலில் சேர்த்தாயிற்று. கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

பயன்படுத்தியவை & செய்முறை சுருக்கமாக:-

 • வெள்ளை அட்டையை அளவாக வெட்டி...
 • அதன் முன் பகுதியில் மட்டும் சாட்டின் கடதாசி ஒட்டினேன்.
 • சாட்டின் பூக்களை 3D sticky dots கொண்டு உயர்த்தி ஒட்டினேன்.
 • அணிய இயலாதிருந்த காதணிகள் இரண்டின் ஒற்றைகள் (குறட்டினால் தண்டுப் பகுதியை வெட்டி நீக்கினேன்.) இவற்றையும் உயர்த்தி ஒட்டியிருக்கிறேன்.
 • சிறிய வெள்ளை மணிகள். அட்டையில் பசையினால் பொட்டுகள் வைத்து, மணிகளை இடுக்கியின் உதவியால் எடுத்து அதன் மேல் வைத்துவிட்டால் ஒட்டிக் கொள்ளும்.
 • இறுதியாக மூலைகள் இரண்டையும் அலங்காரமாக வெட்டி விட்டேன்.

  தோழி தமிழர் அல்ல, இதைப் பார்க்க மாட்டார். இருந்தாலும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.