Wednesday 27 February 2019

வெற்றிலை

வெற்று + இலைதானே! பூக்காது, காய்க்காது என்பதனால் இதனை வெற்றிலைக் கொடி என்கிறார்களாம்.

 ஆனால் அதன் சுவையே தனிதான்.
எங்களை வளர்த்த "மம்மா" (போர்த்துக்கேய வம்சாவளியினர்) வெற்றிலை போடுவார். அவருக்காக எங்கள் வீட்டில் ஒரு இரும்பு உரலும் உலக்கையும் இருக்கும். பிற்பாடு அவர் வராது நின்றதும் அது எம் சமையலறையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அப்போதெல்லாம் மின்சார இயந்திரங்கள் இல்லை. இஞ்சி உள்ளி தட்ட... ரசத்துக்கு இடிக்கவென்று ராக்கையில் வைத்திருந்தோம். பிறகு ஊருக்குய்ப் போயிருந்த போது மச்சாள் வீட்டில் பார்த்தேன். எடுத்து வர விருப்பமாக இருந்தது. அவர்கள் பொருளாகிப் போனதன் பின் எத்தனையைத் தான் கேட்பது! இருந்தாலும்... எனக்கும் அதற்குமான‌ உணர்வுப் பிணைப்பு அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்போது கூட‌ அது வெளியேற்றப்பட்டிருக்கலாம்.

எம் வாழ்வும் ஒரு வகையில் வெற்றிலை தான். உணர்வு இருக்கும் வரை, வேறு இணைப்புகளுடன் சேர்கையில் அதன் சிறப்பு தனிதான்.
இது அதிராவுக்கு நூறாவது இடுகைக்கு மொய் எழுதின வெற்றிலை. ;-)

Tuesday 26 February 2019

கண்ணான கண்ணே!

அப்பாவை கண் பரிசோதனைக்காக அழைத்துப் போன ஒரு சந்தர்ப்பத்தில் என் கண்ணில் பட்டது அங்கிருந்த இந்தக் கடதாசி. மறுபக்கத்தில் இருந்த
விபரங்கள் சுவாரசியமாக இருந்தன. இங்கே சேமித்து வைக்கப் போகிறேன்.

1. புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் அழும் போது கண்ணீர் சுரப்பதில்லை.

2. மனிதக் கண்கள் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட அசையக் கூடிய பகுதிகளால் ஆனது.

3. மனிதர் சிலர் பிறக்கும் போதே இரு வேறு நிறக் கண்களுடன் பிறக்கிறார்கள்.

4.  ஐன்ஸ்டைனின் கண்கள் நியூயோர்க் நகரில் ஓர் பத்திரமான இடத்தில் பெட்டி ஒன்றுள் சேமிக்கப்பட்டிருக்கிறது.

5. தங்கமீன்களுக்கு இமைகள் இல்லை.

6. ராட்சதக் கணவாய்களுக்கு கால்பந்து அளவு பெரிதாகக் கண்கள் வளருமாம்.

7. டொல்ஃபின்கள் ஒற்றைக் கண்ணைத் திறந்தபடி உறங்குமாம்.

8. பெரிய வெள்ளைச் சுறாக்கள் தம் இரைகளைத் தாக்கும் போது கண்களை பின்புறமாக தலைக்குள் உருட்டி வைத்துக் கொள்ளுமாம்.

9. சில பறவைகளால் அவற்றின் கண்கள் வழியே காந்தப் புலங்களைக் காண முடியுமாம்.

10. தீக்கோழியின் கண் அதன் மூளையை விடப் பெரிதாக இருக்குமாம்.

11. ஜாக்சன்ஸ் பச்சோந்திகள் தம் கண்களிரண்டையும் ஒரே சமயத்தில் வெவ்வேறு திசைகளில் அசைக்கக் கூடியனவாம்.

12. தேனீக்களுக்கு ஐந்து கண்கள் இருக்குமாம்.

தட்டி முடித்ததும் கடதாசியைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன். அதனால் இது, 'குப்பைத் தொட்டி' என்னும் பிரிவின் கீழ் தெரியும். ;-)

ஒற்றைக் காதானும் அறுந்து போன சங்கிலியும்

ஒற்றைக் காதான் தொலைந்து போயிற்று. 
மற்றதை வீச மனமில்லை. 
 இந்தச் சங்கிலியில் ஒரு சிப்பி வளையம் இருந்தது. அதைக் காணோம். இதையும் வீச மனதில்லை. என் மருமகள் இதே போல் ஒன்று வைத்திருக்கிறார். வித்தியாசம் தெரிவதற்காக முன்பு ஒரு கறுப்புக் கண்ணாடி வளையலை சிப்பியைச் சுற்றி வரும் விதமாக மாட்டி வைத்திருந்தேன். வளையல் உடைந்து போயிற்று; சிப்பி தொலைந்து போயிற்று.
மீதி இருந்தவற்றைச் சேர்த்து...
அழகாக ஓர் மாலை.
இது போல் இன்னொருவரிடம் இராது. ;)