Thursday 25 November 2010

இன்றைய அறுவடை


இமாவின் உலகில் இறுதியாக (62வதாக) இணைந்துகொண்ட குறிஞ்சிக்காகவும், எனக்கே தெரியாமல் என்னைப் பின்தொடரும் அனைவருக்காகவும் என் உலகத்து ஸ்ட்ராபெரிச்செண்டு. 

மலர்களே! மலர்களே!


இங்கு அனைவரும் காண என் உலகைப் பின்தொடரும் அறுபத்தொருவருக்காகவும் இன்று பறித்த என் தோட்டத்து மலர்கள்.

ஒரு மீற்றர் உயரம் வளரும் என்று செடியில் தொங்கிய சிட்டை சொல்லிற்று. செடியோ கொடியாகிப் படர்கிறது. மூன்று வருடங்களாக எங்கள்  வீட்டு 'ட்ரைவ் வேயில்' பூத்துச் சிலிர்க்கின்ற இந்த ரோஜாவிலிருந்து பதியன்கள் வைத்து வேறு இடத்தில் நட்டிருக்கிறேன்.

'ரோஜா' வண்ணத்தில் அழகிய பெரிய பூக்கள்; அதைவிட மென்மையான வண்ணத்தோடு குட்டிக் குட்டியான பூக்கள்; இடை இடையே மொட்டுக்கள்; சிவப்பாய்த் துளிரிலைகள், கொஞ்சம் பெரிய மென்பச்சை இலைகள்; கடும்பச்சையாக பளபளவென்று முதிர்ந்த இலைகள்; தளதளவென்று எறியும் சிவந்த மொத்தக் கிளைகள்; மெல்லிய பச்சைக் கிளைகள்; முதிர்ந்து வயதானதால் பசுமையற்றுப் போன கிளைகள்; எப்போதும் பூக்களுக்காகச் செடியைச் சுற்றிச் சுற்றி வரும் வண்டுகள்; சென்ற வருடத்து வசந்தத்தின் அடையாளமாக மீந்து போன காய்கள் என்று வாழ்க்கையின் பல படிகளையும் ஒருங்கே கொண்ட இது... ஒரு செடி மட்டும் அல்ல. என் தோழி.

தினமும் காலையில் வேலைக்குப் புறப்படும் சமயம் முதலில் ரோஜாத் தரிசனம், மிகச் சிறிதே ஆனாலும் அழகான நொடிகள் அவை. மெத்தென்றும் சட்டென்று விதம் விதமாய்த் தலையசைத்து காலைவணக்கம் சொல்லும் என் ரோஜாக்கூட்டம். அந்த நொடிச் சந்தோஷம் நாளை அருமையாக ஆரம்பித்து வைக்கும். (சமீபகாலமாக பாடசாலையில் இருக்கும் மேரிமாதாவுக்காக தினமும் சில பூக்கள் கொண்டு செல்லும் வழக்கம் தொற்றி இருக்கிறது.)
மீண்டும் வீடு திரும்புகையில் பூக்களைப் பார்த்ததும் களைப்புக் காணாது போய்விடும்.கொஞ்ச நேரம் செடியோடு பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் உள்ளே போவேன்.

செடியிலிருந்து உதிர்ந்த இதழ்கள் எப்பொழுதும் 'ட்ரைவ் வே' முழுக்கக் கோலம் போட்டிருக்கும். அது ஒரு அழகு.

தோட்டத்தில் பூக்கள் போதிய அளவு கிடைக்கிறது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் என்று எங்கு சென்றாலும் செபா அறுசுவையில் செய்துகாட்டிய பூச்செண்டு போல் ஒன்று கொண்டு செல்கிறேன். பெறுபவர் சந்தோஷம் என்னை மேலும் சந்தோஷப் படுத்துகிறது.

ஒரு வீட்டுக்கு மறுமுறை சென்றபோது அந்த வீட்டு ஆன்டி கொட்டிப் போன பூக்களை எடுத்துவிட்டு நான் மீண்டும் பாவிக்கட்டும் என்று மீதி அமைப்பைப் பாதுகாத்து வைத்திருந்து எடுத்துக் கொடுத்தார். எங்கள் அதிபர் பிறந்தநாளுக்குக் கொடுத்தது பாடசாலையில் இருக்கும் பெரிய மேரிமாதா பாதத்தின் அருகே இருக்கிறது. பதினெட்டாம் அறை ஆசிரியர் மேசையில் அவர் பிறந்தநாளுக்குக் கொடுத்தது இருக்கிறது. இரண்டிலும் தினமும் பூக்களைப் புதுப்பிக்கிறேன்.

இன்று இது உங்களுக்காக.

Wednesday 10 November 2010

விடைபெறுவது...


"ஹாய்!"

"வீடு மாறிப் போறன். அதுதான் இந்த சோகம். ;("

"போற இடத்தில ஒழுங்கா நல்ல பிள்ளையா இருக்க வேணும்." - இது இமா

"எல்லாரும் சந்தோஷமா இருங்க. நான் போய்ட்டு வாறன். ஒருவரும் என்னை மறக்கப்படாது. சீயா மீயா. ;("

இப்படிக்கு 

அன்புடன் 
பிப் ஸ்க்விக்

Sunday 7 November 2010

நியூசிலாந்துத் தீபாவளி

இமா எப்படித் தீபாவளி கொண்டாடினேன்?

யாரோ ;) கேட்டிருந்தார்கள்.

 

சின்ன வயதில் ஊரில் டைக் வீதியில் வசிக்கையில் தெருவில் அனேகமான வீடுகளில் அழகழகாய்த் தீப ஆவளி பார்த்திருக்கிறேன்.

வாசற்கதவைத் திறந்தால் தெரு, அப்படித்தான் எல்லா வீடுகளும் இருக்கும் அங்கு. படிக்கட்டில் அமர்ந்து பார்த்தால் தெரு முழுவதும் தெரியும். கார்த்திகைதீபம் பார்க்கப் பிடிக்கும். அத் தெருவுக்குக் காவடி வரும், கார்த்திகைப் பூச்சி ஊர்வலம் வரும்.

எல்லாம் சில வருடங்கள் தான்.

அந்த வீட்டை விட்டு எங்களுக்கே உரிய நிலத்திற்கு இடம் பெயர்ந்தோம். அத்தோடு இந்த மாதிரியான காட்சிகள் காண எங்காவது புறப்பட்டுப் போக வேண்டும் என்று ஆகி விட்டது. அயல் என்று ஆரம்பத்தில் தந்தையாரின் நண்பர் ஒருவரும் ஒரு சிங்களக் குடும்பமும் மட்டும் தான் இருந்தார்கள். பின்னால் ஒழுங்கையில் வீடு கட்டி வந்தவர்கள் தந்தையாரோடு கூடக் கற்பித்த ஆசிரியர்கள். அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆதலால் தீபாவளி கிடையாது.

ஆனாலும் ஒரு 'அங்கிள்' எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று வாழை வெட்டி வைத்துத் தீபம் ஏற்றிக்காட்டினார். ;) சந்திரகிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று பந்துகள் கொண்டு விளக்கம் கொடுத்தார். அப்போ  எங்கள் பகுதிக்கு மின்சார இணைப்புக் கிடையாது. சிமிளி விளக்கை வைத்து... ;)

ஊருக்குப் போனால் எல்லோரையும் பார்க்க வேண்டும்.

பொறுமையாக நிறைய விஞ்ஞான விளக்கங்கள் தருவார் அங்கிள். அவர்கள் வீடு சோலை போல் இருக்கும், அத்தனை மரங்கள். தொட்டி தொட்டியாக மீன்கள், ஆடு, மாடுகள். ஒரு தொட்டியில் 'மீன்களுக்குத் தீன்' என்பதாகப் புழுக்கள் கூட வளர்த்தார்.

இங்கு தீபாவளி... சென்ற வருடம் கடையில் ஒரு சிட்டி விளக்கைக் கண்டு பிடித்து வாங்கி வந்து 'கனோலா' எண்ணெயில் தீபமேற்றி அணையும் வரை வாசலில் வைத்திருந்தேன். பிள்ளைகள் இருவரும் என்னை வினோதமாகப் பார்த்தார்கள். (அந்தத் தீபத்தைத்தான் படம் எடுத்து வாழ்த்துப் போட்டேன்.)

இம்முறை இங்கு ஒரு 'அங்கிள்' வீட்டுக்குப் போனோம். அன்று அவர்களுக்குத் திருமணநாள். எனவே இரட்டைக் கொண்டாட்டம் - கேக், உளுந்துவடை, பருப்புவடை, ரோல் & பச்சைச் சம்பலோடு. செபாம்மாவும் கூட வந்தார்கள்.  'அன்ரி' போடும் கோப்பி சுவையாக இருக்கும்.

இம்முறை தீபாவளி அன்றுதானே Guy Fawks Day.

மறுநாள் ஏஞ்சல் வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு, 'வாண வெடிகள் வாங்கி இருக்கிறோம். வெடிக்க வருகிறீர்களா?' என்று. இது தீபாவளிக்காக அல்ல. Guy Fawks வெடிகள். இந்த வாரம் மட்டும் வாண வெடிகளுக்கு அனுமதி உண்டு.

இங்குள்ள வீடுகளில் அதிகமானவை பலகை வீடுகள்.எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்ற வாரம் எல்லா வகுப்புகளிலும் Fireworks safty தொடர்பான வகுப்புகள் எடுக்கப்பட்டன.

ஏஞ்சலில் அழைப்பை ஏற்று நானும் க்றிஸும் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்குப் போனோம். இங்கு இப்போ அஸ்தமனம் தாமதமாவதால் பேச்சு, ஒரு கோப்பி & உலர் பழங்கள் என்று பொழுது போக்கிவிட்டு இருள ஆரம்பித்ததும் வெளியே இறங்கினோம். 

படங்கள் தெளிவாக இல்லை, பொறுத்தருள்க. ;))

Thursday 4 November 2010

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இமாவின் உலகுக்கு வருகைதரும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் இமா

Monday 1 November 2010

கார்த்திகை பூத்தது

பெண்களின் விரல்களைக் காந்தள் மலருக்கு ஒப்பிடுவார்கள்.

திருகோணமலையில், என் வீட்டுத் தோட்டத்தில் நின்றது ஒரு கார்த்திகைச்செடி; அழகாக நெருப்பு வர்ணங்களில் பூக்கும்.

அது எப்படி என் தோட்டத்திற்கு வந்தது!

சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தால்...
ஒரு தினம் உப்புவெளியில் இருக்கும் என் பெரியதந்தையார் வீடு சென்று திரும்புகையில் பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது, வேலியோரத்தில் காடாய் முளைத்துப் பூத்துக் கிடந்த காந்தள்மலர்கள் மனத்தைக் கவரவும், கடத்தி இருந்தேன் கிழங்குகளை. ;)

இங்கும் கிழங்குகளை ஓர் கடையில் கண்டேன். ஆசையில் வாங்கிவந்தேன்.
வாங்கி வந்த இரண்டு கிழங்குகளில் ஒன்று மட்டும் செடியானது. 
மொட்டு விட்டது. பூக்க ஆரம்பித்ததும் தான் இது வேறு நிறம் என்பது தெரிந்தது.
 
இங்குள்ள எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு வேறுபாடு தெரிகிறது. ;)
ஆயினும் அழகு அழகுதான்.
அதில் மாற்றம் இல்லை.
அதுபோல் அவை இங்கு கார்த்திகையில் பூக்கவும் இல்லை.

முதல் முறையாகக் காய்த்ததை அவதானித்தேன்.
நீளமாக, பார்க்க ஓகிட் செடியில் வளரும் காய் போல் இருந்தது. எதிர்பார்த்ததற்கும் முன்பாக முதிர்ந்து காய்ந்தது. முத்து முத்தாய் விதைகள், சோளமுத்துக்கள் போல்.
முளைவிடுமா, நடுகைக்கு ஏற்ற காலம் எது என்பது போன்ற அறிவு எனக்கு இல்லை. செடி உள்ள அதே சட்டியில் புதைத்து விடலாம். முளை விட்டால் இதுதான் என்று தெரிந்து கொள்வேன். பார்க்கலாம்.
~~~~~~~~~~~~
காந்தள்மலர் கண்ணில் படும் போதெல்லாம் சுவாமி விபுலானந்தரின் 'ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று' தவறாமல் நினைவு வரும். இப்போதும் வருகிறது.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
~~~~~~~~~
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
~~~~
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.