குடும்பத்தில் சின்னதாய்ப் புதுவரவொன்று என்பது எவ்வளவு அற்புதமான விடயம்.
பால்வடியக் குறுநகை, பிஞ்சுக் கால்களால் தத்தித் தடுமாறி நடை, தப்புத்தப்பாய் உச்சரிக்கும் வார்த்தைகள்... அவற்றைப் புரிந்துகொள்ள நெருங்கியவர்களால் மட்டுமே முடியும்.
மனித வாழ்வின் அழகான ஆரம்ப நிலை இது. நாள் முழுக்க, ஏன் ஆயுள் முழுக்க ரசித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.
ஆனால் உண்மையில் இது தொடர்ந்தால்!!! ரசிக்க இயலுமா!!??
என் ஒரு மாணவருக்கு பாடசாலை முடியும் நேரம் அழைத்துப் போவதற்காக ‘டாக்ஸி’ வரும். தினமும் பாடசாலை மணி அடிக்கப் பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிடும். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றியதில்ல; எனக்கே அது நல்லதென்று தெரியும். பன்னிரண்டு வயதான இந்தச் சின்னவர் அளவில் சின்..னவர்; அறிவில் இன்னும் சின்னவர்.
நானும் முயற்சிக்கிறேன்; இன்னமும் விலாசம், வீட்டுத் தொலைபேசி எண் எதுவும் மனனம் செய்யவைக்க இயலவில்லை. யாராவது கூடப் போய் ஏற்றிவிடுவது அவருக்குப் பாதுகாப்பு; எங்களுக்கும் நிம்மதி என்கிற நிலை.
இன்று புதிதாக ஒரு சாரதி வந்திருந்தார். அவர் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தி இருந்தார். நாங்கள் எங்கள் இடத்தில் அமர்ந்திருந்தோம். இப்படிக் காத்திருக்கும் நிமிடங்களை நான் வாய்மூலக் கல்வி & மீட்டல் வேலைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம்.
அவ்வேளை என் முன்னாள் மாணவி ஒருவர் எம்மோடு வந்து அமர்ந்து கொண்டார். இவர் இந்தியர். “ஹாய் மிஸிஸ். க்றிஸ்!” என்று சிரிப்போடு மெதுவே வந்து முதுகுச்சுமையை வாங்கில் இறக்கிவிட்டு அமர்ந்தார்.
“பகலில் ‘moon boot’ அணியக் கூடாது,” என்றேன்.
நிமிர்ந்து பார்த்தார். “sun boot’ தான் அணிய வேண்டும். மூன் பூட் இரவில் அணிய வேண்டியது இல்லையா!” என்றேன். சிரித்தார்.
“எப்படி இருக்கிறீர்கள்?”
“குட்” “முப்பதாம் தேதி சத்திரசிகிச்சை முடிந்தது. (இரண்டு நாட்கள் முன்புதான்) இன்னும் ஒரு மாதம் கழித்து ஆதாரங்களை எல்லாம் நீக்கி விடுவார்கள். உடனே பிஸியோதெரபி ஆரம்பிக்க வேண்டும். என் தசைகளுக்கு பயிற்சியில்லாமல் போய் மாதக் கணக்காகிறது இல்லையா?”
ஆமாம்! இவர் Cerebral palsy பிரச்சினையுள்ளவர். மூன்று வருடங்களுக்கு முன்பு சில காலம் இந்தக் குழந்தைக்கு உதவியிருக்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகம்; கெட்டிக்காரி. கூட இருந்தால் அந்த சந்தோஷம் யாரையும் தொற்றிக் கொள்ளும். இடது கைதான் எழுதும்; சமயத்தில் புத்தகத்தை அழுத்திப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்பார். கோடுகள் வரைகையில் அடிமட்டத்தை ஒருவர் கட்டாயம் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அது நகர்ந்து கோடு சரிந்து போகும். இப்போ உச்சரிப்புத் திருந்தி இருக்கிறது.
கால்!!!
எப்போதாவதுதான் சந்திக்க முடிகிறதென்பதால் விபரம் அதிகம் தெரியவில்லை. பிறப்பிலிருந்தே சிறிதாகவும் பலமில்லாதும் இருந்த ஒரு காலைத் திருத்தும் முயற்சி நடக்கிறது. எப்பொழுதும் சரிந்து சரிந்து மட்டும் நடப்பவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக walker உதவியோடு நடந்து திரிந்தார். அப்போது ஒருநாள் விசாரித்த போது வெகு சாதாரணமாகச் சொன்னார் “எலும்பை உடைத்து விட்டு தகடு பொருத்தி இருக்கிறார்கள்,” என்று. மீண்டும் அடிக்கடி சத்திரசிகிச்சைகள்; இப்போ நடைவண்டி இல்லாமல்; ‘மூன்பூட்’ அணிந்து; சரியாமல் நேர்நடை நடக்கிறார். விரைவில் குறைதெரியாத அளவு மாற்றிவிடுவார்கள் மருத்துவர்கள். விஞ்ஞான வளர்ச்சி... மருத்துவ வளர்ச்சி... எதையும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கிறது.
இவர் இன்னும் சின்னவர். இந்த வருட ஆரம்பத்தில்தான் எங்கள் பாடசாலைக்கு வந்து சேர்ந்தார். ஏழாம் ஆண்டு மாணவர். ஒரு நாள் காலை தொலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல, மறுமுனையில் தந்தை பேசினார், “இன்று சத்திரசிகிச்சை என்று அறை பதினெட்டு ஆசிரியருக்குத் தெரிவித்து விடுகிறீர்களா?” தொலைபேசி அருகே நாடாவில் தொங்கும் சிறிய குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து விபரத்தைக் குறித்துவிட்டு வகுப்பாசிரியையிடம் போய்ச் சொன்னேன். “என்ன!!!” என்று புதிராகப் பார்த்தார் அவர். சின்னவர் மூன்று நாட்கள்தான் பாடசாலைக்கு வரவில்லையாம். அதன்பின் கற்கவென்று இன்று வரை வரவில்லை.
அவரைச் சந்தோஷப்படுத்தவென்று, பெற்றோரைச் சொல்லி அழைத்துவர வைத்தோம். இரு முறைகள் கைத்தடிகளோடும் இரு முறை சக்கர நாற்காலியிலும் வந்தார், தலையில் முடியில்லாமல். ஆமாம், கால் எலும்பில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது. சிகிச்சைகள் நடக்கின்றன. இன்று முக்கிய சத்திரசிகிச்சை; எலும்பை முழுதாக எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்துகிறார்கள்.
இந்த அழகுக் குழந்தை குணமாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்; எல்லாக் குழந்தைகளையும் போல இனிமையாக தன் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும்.
சிரித்துச் சிரித்தே எல்லோரையும் சிறையிலிடும் என் செல்லக்குட்டி ஒருவர் இருக்கிறார். இவருக்கும் Cerebral Palsy தான். கடகடவென்று உயர்ந்து வருகிறார். (இவர் தந்தை அசாதாரண உயரமாக இருப்பார்.) சின்னவர் இப்போதே என்னைவிட உயரம். என்னால் தொடர்ந்து உதவ இயலுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இவரை அன்பாகக் கவனித்துக் கொள்ள சின்னவருக்குப் பிடித்தவராக யாராவது ஒருவர் அமைய வேண்டும்.
சிலருக்குத் தன்னம்பிக்கை ஆதாரம்; சிலருக்கு மலர்ந்த முகம் ஆதாரம். தங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தி சுற்றி உள்ளவர்களைக் கவர்ந்து அவர்கள் ஆதரவையும் பெற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் கிடைப்பவற்றைப் பற்றிக் கொண்டு மெதுவே படரும், படரத் துடிக்கும் இந்த இளம் கொடிகளுக்காக உங்கள் பிரார்த்தனைகளை வேண்டி நிற்கிறேன்.
நம்பிக்கையுள்ளோர் இந்தச் சின்னப் பாதங்களுக்காகவும் இவர்கள் போல் பிறந்து வளரும் அனைத்துப் பாதங்களுக்காகவும் ஒரு நொடி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.
- இமா