Saturday 24 July 2010

மை தீர்ந்த பேனாக்கள்

காகிதத்தில் கவிதை பேசும்
உயிருள்ள பேனைகள்,
என் காதோடும் கதை பேசும்
மை தீர்ந்த பின்னே.

Tuesday 20 July 2010

இன்று வந்ததோர் மின்னஞ்சலில்

//அன்பு இமா... உங்க ப்ளாக்கில் சில நாட்களாக பதிவிடாமல் இருந்த காரணம் தெரியுமா??? உங்களுக்கு ஏற்ற ஒரு விருதோடு வரத்தான். இப்போ பிடிச்சுட்டேன்.... இது உங்க ப்ளாகுக்கும், உங்களுக்கும். :) உங்கள் படங்களில் நான் பட்டாம்பூச்சிகளை காணவில்லை... உங்கள் பாசத்தையே காண்கிறேன். உங்க புகைப்படம் ஒவ்வோன்றும் 1000 கதை சொல்லும்... அத்தனை அழகு.... அதை நான் ரசிக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லவே இந்த விருது!!!
உங்கள் அன்பு,
--------- //
என்று இருந்தது.

 நமக்கெல்லாம் இந்த மாதிரி யோசனை எதுவும் தோன்றவே தோன்றாது. மிக்க நன்றி சகோதரி. ;)
~~~~~~~~~~~~~~~~
இதே சகோதரி முன்னர் 30 மார்ச் அன்றும் ஒரு மெய்ல் அனுப்பி இருந்தார். அதில் 
//இது என் அன்பு பரிசு... உங்களுடைய திறமைகள் மென்மேலும் வளர, வெளி உலகுக்கு ப்ளாக் மூலம் இமா தெரியவர எனது வாழ்த்துக்கள். உங்க ப்ளாக் இன்னும் இன்னும் சிறப்பா வளரனும்ணு இறைவனை பிராத்திக்கிறேன்.
அப்படியே கிரௌன் ஐ தலைல வெச்சு ஒரு போட்டோ அனுப்பிடுங்கோ.... ;) // என்று எழுதி இந்தக் கிரீடத்தையும் அனுப்பி இருந்தார்.
 அப்போதே அவர்கள் வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டு விட்டது. கரும்பு தின்ன இமாவுக்குக் கசக்குமா என்ன! ;) 
எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, அதனால் இப்படி. ;)))

குட்டித் தேவதைகளின் குட்டித் திறமைகள்

விடுமுறையில் ஓர் நாள் எங்கள் குட்டித் தோழி வீட்டுக்குப் போயிருந்தோம். தனது ஓவியம் ஒன்று கண்காட்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பு வைத்தார்.  

நேற்றுப் பாடசாலை முடிந்து நேரே கண்காட்சிக்குப் போயிருந்தோம். அங்கிருந்த பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று எடுத்தவை இந்தப் படங்கள்.
அழகழகாய் எத்தனை சித்திரங்கள்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு, வரைந்த மழலைகளின் மனம் போல.

Sunday 11 July 2010

பட்டாம்பூச்சி

திருகோணமலையில் இருந்தவரை வண்ணத்துப் பூச்சிக் கூட்டுப்புழுவை ஒரே ஒருமுறை தான் கண்டு இருக்கிறேன். இங்கு செஞ்சிலுவைச் சங்க op shop ல் தொண்டராக வேலை பார்க்கும் நாட்களில் அங்குள்ள தோட்டத்தில் வினோதமான ஓர் செடியை அவதானித்தேன். நெடு நெடுவென்று குச்சியாக வளர்ந்து நின்ற செடியில் ஒரு நாள் இலைகள் எதனையும் காணோம். எல்லாம் புழுக்களாக மாறி இருந்தது. அவர்களிடம் கேட்டால் அது swan plant என்றார்கள். வேறு தகவல் கிடைக்கவில்லை.
அந்த நாட்களில் ஞாயிறு தவிர வாரம் மூன்று நாட்கள் இந்தக் கடையிலும் மூன்று நாட்கள் இப்போது வேலை பார்க்கும் பாடசாலையிலும் உத்தியோகம். தொடர்ந்து வந்த நாட்களில் பாடசாலையில் இன்னொரு செடியில் இதே புழுக்களை அவதானித்தேன். 

பிற்பாடு பல விடயங்கள் தெரிய வந்தது. செடியில் விளையும் காய்களை நீரில் போட்டால் அன்னம் போல் மிதக்கின்ற காரணத்தால் அது 'ஸ்வான் ப்ளாண்ட்'. இரண்டு வகைகள் உண்டு. இரண்டாவது வகை நெருப்பு வர்ணப் பூக்களை உடையது. இவற்றில் அன்னங்கள் உருவாவதில்லை. இரண்டிலும் எருக்கலை வித்துகள் போல் குஞ்சமுள்ள வித்துக்கள் உற்பத்தியாகும். 

இந்தத் தாவரத்தில் ராஜவண்ணத்துப்பூச்சிகள் முட்டை இடும். அவை குடம்பி நிலையில் இதன் இலையை உணவாகக் கொள்ளும்.
சொந்தமாக வீடு வாங்கியதும், பாடசாலையிலும் கடையிலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு நானும் செடி ஒன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். முதல் வருடம் விபரம் தெரியாமல் உருவான அனைத்துப் புழுக்களையும் வளர விட அனைத்து இலைகளையும் தின்று தீர்த்து விட்டு தீடீரென்று ஓர் நாள் அனைவரும் இறங்கி புற்தரை முழுக்க ஓடித் திரிந்தார்கள். செபா அம்மா பார்த்து "என்ன இவங்கள்? சுனாமிக்குப் பயந்து ஓடுற மாதிரி ஓடுறாங்க?" என்றார்.

ரூத், இப்படியான சமயங்களில் பூசணிக்காய் ஒரு துண்டு வாங்கிக் குடலோடு கொடுக்கச் சொன்னார். புழுக்கள் விரும்பியதாகத் தெரியவில்லை. 'moth plant' (இது கொடியாக வளரும் ஓர் களை.) மேல் கொண்டு போய் விடுவேன். அதில் பால் இருக்கும். பிடிக்காவிட்டாலும் சாப்பிடுவார்கள். 

வேறு எங்காவது புழுக்கள் இல்லாமல் ஸ்வான் செடிகள் இருப்பதாகத் தெரிந்தால் அந்த வீடுகளுக்குச் சிலரைத் தத்துக் கொடுத்து விடுவதும் உண்டு. 

ஒரு நாள் வீட்டுக்கு வந்த மூத்தவரது தோழர் "இமா, இவை  குளவிகளைக் கவரும், பத்திரம்," என்று எச்சரித்தார். அவை கும்பிடுபூச்சிகளையும் கவர்ந்தன. புழுக்களின் எண்ணிக்கை குறைந்தமை என் கவனத்தைக் கவர்ந்தது. ;( இறுதியாக க்றிஸ்ஸும் நானுமாக ஆலோசனை செய்து சுற்றிலும் ப்ளாஸ்டிக் வலை அடித்து ஒளி ஊடுருவக் கூடிய வகைக் கூரை எல்லாம் அடித்து ஒரு பெரிய கூடு அடித்து எடுத்தோம். கிட்டத்தட்டப் ஒரு அலமாரி போல இருந்தது. இரண்டு கதவுகள், உள்ளே ஒரு தட்டு, தூங்கும் (நித்திரை கொள்ளாது.) உணவுத்தட்டு, ஸ்வான் செடிகள், பூஞ்செடிகள் என்று அழகாக அமைந்தது வீடு.

பிறகு எல்லாம் நலமாய்ப் போய்க் கொண்டிருந்தது. இந்த வருடம் ஆரம்பத்தில் ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் உருவாயின. பகலில் அவை தோட்டத்தில் இருந்த நாவல் நிறப் பூச்செடியில் தேனருந்துவதும் பட படவெனக் குறுக்கும் நெடுக்கும் பறப்பதும் அழகுக் காட்சிகள்.அவற்றின் நிழலும் பறக்கும். 

நினைவு இருக்கிறதா? ஒரு முறை சொன்னேனே, சிலர் உணவு போதாமல் இறந்தமை பற்றி. இப்போதான் அறிந்து கொண்டேன். காரணம் அதுவல்லவாம். 
 Ophryocystis elektroskirrha (Eo)என்கிற வகை ஒட்டுண்ணித் தாக்கம்தான் காரணம் என்பதைத் தற்செயலாக அறிந்தேன். 

இந்த வருட ஆரம்பத்தில் இணைந்த புதிய ஆசிரியை ஒருவர் 'butterfly tagging' என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார். 

எங்கள் பாடசாலையில் reciprocal reading என்று ஒரு செயற்திட்டம் அமுலில் உண்டு. அதற்காக ஒரு வகுபிற்குத் தெரிவு செய்யப்பட்ட கட்டுரை இது பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தது. இதில் மிகவும் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், அந்தப் படங்களில் கொடுக்கப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிக் கூடுகள் நாங்கள் தயாரித்தது போலவே இருந்தன. அதே வலைகள், நிறம் கூட ஒன்றுதான். 

ஒரு படத்தில் இருந்த வண்ணத்துப் பூச்சியின் உடலில் தெரிந்த ஸ்டிக்கரில் ஓர் வலைத்தள விலாசம் தெரிந்தது, குறித்து வந்தேன். மேலும் புதிய பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.
நானும் 'டாகிங் ' திட்டத்தில் இணையலாம் என்று இருக்கிறேன். 

அதற்கு முன்... கூட்டைத் தொற்று நீக்க வேண்டும். புதிய தாவரங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே செய்த தப்புக்களை மீண்டும் செய்யக் கூடாது. நானே பரப்பும் காரணியாக இருக்கக் கூடாது. சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

நிறையச் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. பிடித்தால் கொடுத்துள்ள தொடர்புகளில் நுழைந்து மேலதிக விபரங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பார்வைக்காக, இன்று பிகாசா ஆல்பத்தில் மேலும் சில படங்களை இணைத்திருக்கிறேன்.

Friday 9 July 2010

எண்ணித் துணிக கருமம்

டாஷ் போர்ட் சொல்கிறது....

User Stats

On Blogger Since October 2009
Profile Views (approximate) 1647

என்பதாக.

தரவு, சென்ற அக்டோபர் முதல் வலையுலகில் இருப்பதாகச் சொன்னாலும் முதல் மூன்று மாதங்களும் நான் தினமும் செய்தது ட்யூடோரியல் பார்த்தது மட்டுமே. ;) 

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு நாள் கண்டுபிடித்து இடுகை தயாராக்கிக் கொண்டு பார்த்தால் ஏற்கனவே என் பெயரில் எல்லாம் தயாராக இருக்கிறது. ;) பிறகு என்ன! களத்தில் இறங்கி விட்டேன்.
'வாற வேகத்தை விடப் போற வேகம்' அதிகமாக இருந்தாலும் இன்னமும் வலையுலகில் இருக்கிறேன். ;)

பல முறை எண்ணித் துணிந்த கருமம் இது. என் வலை 'உலகிற்கு' வருவோர் பலர் 'அறுசுவை' உறவுகள். மீதிப் பேர்... அவர்களின் உறவுகள். 

ஆனால்... அது என்ன எண்ணிக்கை!! அண்ணளவாக 1647 என்றால் உண்மை எண்ணிக்கை அதற்கும் மேல் இருக்குமோ!!

இதைப் பார்த்து என்ன செய்வா(வீ)ர்கள்!!!!! 

பாவமே என்று மேலும் சில தகவல்கள் சேர்த்து விட்டிருக்கிறேன். ;) ஆயினும்... எண்ணித்தான் எழுதி இருக்கிறேன். ;))

பிரிவு புரியாதவர்க்கோர் பிரிவுபசாரம்

இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பிக்க இரண்டே நாட்கள் இருந்தன.

ஓர் பிரிவுபசாரம் - பிரிந்து போகிறவருக்குப் பிரிவு புரிகிறதா என்றே புரியவில்லை. இருந்தும் எங்கள் மன ஆறுதலுக்காக ஒரு நிகழ்வு என்று வையுங்களேன். 

என் பெரிய, குட்டி மாணவர் (15 வயது) வேறு பாடசாலைக்கு மாறிப் போகிறார். இவர் Autism குறைபாடுள்ள பிள்ளை. சிறப்புப் பாடசாலைக்கு அனுப்புவதாக வீட்டார் தீர்மானித்து விட்டார்கள். 

இரண்டு வாரங்கள் முன்பு புதிய பாடசாலைக்குச் சென்று ஓர் நாள்  செலவளித்து விட்டு வந்தார். 'பாடசாலை பிடித்து இருக்கிறதா?' என்றால் 'தெரியவில்லை' என்றார். 'எந்தப் பாடசாலை பிடித்து இருக்கிறது?' என்றால் 'பாலர் பாடசாலை,' என்றார்.

சரி, ஒரு பிரிவுபசாரம் என்று வைத்தாலாவது புரியுமா என்றால், ம்ஹூம். எதுவும் ஆகவில்லை. 

குட்டியருக்கு தோழர் இருவர் சின்னச் சின்னதாகப் பரிசுகள் கொடுத்தார்கள். கண்கள் விரியச் சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். 

அவருக்குப் பிடித்த சாக்லேட் சேர்த்த 'கப் கேக்', சோளப் பொரி, பிடித்த வகை கார பிஸ்கட் (தட்டில் இருந்த துகள்கள் கூட விட்டு வைக்கவில்லை.), தோடம்பழச் சாறு. கூடி இருந்தோர்... என்னோடு, அதிபர், வகுப்பாசிரியர், விசேட பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் இருவர், அந்தச் சமயம் வகுப்பு இல்லாது வேறு பொறுப்புகளில் இருந்த ஆசிரியர் ஒருவர் மற்றும் குட்டியரின் இரு தோழர்கள். இவர்கள் தோழர்கள் என்பது பெயருக்குத் தான். ஒரு குட்டித் தம்பியைக் கவனித்துக் கொள்வது போலக் கரிசனமாகக் கவனித்துக் கொள்வார்கள். பொறுப்பான பிள்ளைகள்.

எல்லோரும் வந்து சேர்ந்ததும் சிறப்புப் பிரிவுக்குப் (special needs) பொறுப்பான பெண்மணி, மாணவர்களிடம் எதற்காக ஒன்றுகூடி இருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறினார். குட்டியர் எல்லாவற்றுக்கும் தலையாட்டினார். 

பிறகு மேசைக்குப் போனதும் கண்கள் விரிந்தன. தன் நண்பர்களிடம் ஏதோ காட்டூன் பற்றிப் பேசிக் கொண்டே ரசித்துச் சாப்பிட்டார். 

நடுவே என்னை ஓர் பார்வை. 'என்ன, கேக் போதுமா?' 
வார்த்தை கோர்வையாக வராது. சொற்களாக வரும். நாம் கோர்த்துக் கொள்ள வேண்டும். சம்பத்தப்பட்டவர்களுக்குப் புரியும். 'ஐஸிங் சுவை பிடிக்கவில்லை,' என்று புரிய வைக்கிறார். 'அதை விட்டு விட்டுச் சாப்பிடலாம்,' என்கிற அனுமதி கிடைக்காவிட்டால் பிடிக்காவிட்டாலும் சாப்பிடுவார். அனுமதி கிடைத்ததும் ஒதுக்கி விட்டு மீதியைச் சாப்பிட்டார். நான் சொல்லும் வரை மீதி உணவுகளைத் தொடவில்லை. 

இறுதியாக தயார் செய்து வைத்திருந்த பேச்சை ஒப்பித்தார். நான்கு வரியாயினும் அதுவே பெரிய விடயம். அப்படி இருக்க எதிர்பாராது இணைந்து கொண்ட ஆசிரியர்களை நான் சுட்டிக் காட்டியதும் அவர்கள் பெயர்களையும் பொருத்தமாகச் சேர்த்துக் கொண்டார்.
இந்த இரண்டரை வருடங்களில் நிறைய மனவளர்ச்சி அடைந்திருக்கிறார்.
அதிபர், என் ஓவிய ஆசிரியை ரூத், வகுப்புத் தோழர்கள் எல்லோருக்குமே இவர் வளர்ச்சியில் பங்கு உண்டு. இப்போது தயங்காமல் உரையாடுகிறார். (புரிந்து கொள்வது எங்கள் சாமர்த்தியம்.) முகம் பார்த்துப் பேசப் பழகி இருக்கிறார்.

ஆயினும், ஓர் பெரிய மாற்றத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இனிமேல் என்ன ஆனாலும் எனக்குத் தெரிய வராது.

நான் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பைக் கச்சிதமாக முடித்து விட்டேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது. இனி மீதி குட்டியரைப் பொறுப்பேற்கும் புதிய பாடசாலை நிர்வாகத்தைப் பொறுத்தது.

இதோ, இப்போ தவணை விடுமுறை நடுவே அதிபரிடம் இருந்து ஓர் தபால் வந்திருக்கிறது. அலுவலகத்தைச் சுத்தம் செய்கையில் குட்டியர் தன் கைப்படச் செய்து கொடுத்த 'தாங்க்யூ கார்ட்' கண்ணில் பட்டதாம்.  'toothy card' என்று குறிப்பிட்டு இருந்தார். ;) குட்டியர் அழகாகச் சிரிப்பார். அவர் வரையும் படங்களும் வாய் நிறையச் சிரிக்கும்.

மொத்தப் பாடசாலைக்கும் ஓர் குழந்தையாக இருந்தார். எனக்கு அதற்கும் மேலே. பிரிவு சிரமமாக இருக்கிறது.

Wednesday 7 July 2010

ஐ! நெப்போலியன்

வடையோடு வந்தேன்.ஆனால் இன்று வடை நன்றாக இல்லை. ;( கஷ்டப்பட்டு எடிட் பண்ணி இப்படி வந்து இருக்கிறது. 

மீதியெல்லாம் சாப்பிடலாம். பெயர்... நீங்களே கண்டு பிடியுங்கள். இரண்டாவது மட்டும் நான்வெஜ். ஜீனோவுக்காக இந்தத் தகவல். 

இந்த வடைக்கு, யார் 'ஐ! வட' என்று வரப்போகிறார்கள் பார்க்கலாம். ;)))

Tuesday 6 July 2010

மீண்டும் காணாமல் போகிறேன்

நான் கொடுக்கும் பின்னூட்டங்கள் & எனக்கு வரும் பின்னூட்டங்கள் காணாமற் போவதால் நானும் தற்காலிகமாகக் காணாமல் போகிறேன். ;(

குக்கீஸ், சர்வர் என்று என்னவோ சொல்கிறது.

நானும் 'சர்வ்' பண்ண வேண்டியது நிறைய இருக்கிறது. ;) எல்லாம் 'சர்வ்' பண்ணி முடித்து விட்டு வருகிறேன். முடிந்தால் (முடியாவிட்டால்) வடையோடு. ;))

மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வடை பெறுவது - இமா

Monday 5 July 2010

அப்பா செய்த மேடையில்

அப்பா செய்த மேடையில் இமா பாடிய பாடல் இது. ;)

எங்கே போறே எங்கே போறே
வண்ணாத்திப்பூச்சி?
பூங்கா தேடிப் பறந்து போறேன்
ஆடிப் பாடவே.

தூங்குகின்ற பூவை ஏனோ 
தொட்டுப் பார்க்கிறே?
தேங்கும் தேனைக் குடித்து வயிற்றை 
நிரப்பிக் கொள்ளவே.

அழகு வண்ண இறக்கை தன்னை
யாரே தந்தது?
பழக இனிக்கும் இறைவன் அன்பாய்ப்
பரிசாய்த் தந்தது.

உழவர் பயிரை உண்டு செல்லல்
உனக்கு நீதியோ?
அழகாய்ப் பலனைத் தந்து செல்வேன்
அதற்கு நானுமே.    
^^^^^^^^^^^^^^^^^^^^ 
ஒரு 'புகைப்' படம் கூட இருந்தது. ஊரில் விட்டு விட்டு வந்து விட்டேன் போல. காணோம் இங்கு. இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவுகள் மட்டும் புகை படியாது இருக்கின்றன. அழகான ரோஜா வண்ணச் சட்டை, ஒரு செட்டை... ;)

இதில் இமா வண்ணத்துப்பூச்சி. பாடலைக் கற்றுக் கொடுத்த என் பிரியமான ஆசிரியை திருமதி. சௌந்தரலிங்கம் அவர்கள் மூன்று வருடங்கள் முன்பு கொழும்பில் காலமானார். ;( அவரது பிள்ளைகளோடு என் தாயாருக்கு இன்னமும் தொலைபேசித் தொடர்பு இருக்கிறது.

குட்டிப் பையனும் பென்சில் ஹோல்டரும்


இவை பாடசாலையில் என் மாணவர்கள் செய்தவற்றில் சில.

பிரதி செவ்வாயும் இரண்டு பாடவேளைகள் தொடர்ந்து 'ஸ்போர்ட்ஸ்' இருக்கும். அதில் ஓர் பாடம் மட்டும் க்ராஃப்ட் கற்றுக் கொள்ளவென்று சிலர் வருவார்கள்.

இந்தக் கைவேலை பார்ப்பதற்குச் சுலபமாகத் தெரிந்தாலும் குழந்தைகள் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள்.
சில குச்சிகள் மெதுவே வளைந்து இருந்தன. சிலர் தாராளமாக க்ளூ பூசிவிட்டு 'வழுக்குகிறதே மிஸ்' என்றார்கள். ;) சமயங்களில் விரலில் ஒட்டிக் கொள்ளும் மீதமான பசையோடு குச்சியும் எதிர்பாராமல் தொற்றிக் கொண்டு வந்தது.

ஒரு போட்டி இருந்தால் அரட்டையைக் குறைக்கலாம் என்று எண்ணி 'மணி அடிக்கிற சமயம் உயரமாகவும் சீராகவும் முடிக்கப்பட்டு இருக்கும் கைவேலைக்கு ஒரு சாக்லட் பரிசு' என்று அறிவித்தேன்.

அதைப் பற்றிக் கவலைப் படாமல் பூஸையும் பப்பியையும் போல் 'கிக் கிக்' 'வவ் வவ்' என்று இருவர் அரட்டைதான் வகுப்பே என்று இருந்தார்கள். இரண்டு வரிகளுக்கு மேல் தாண்டவில்லை இவர்கள். 'இதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றதும் தயங்காமல் 'செடி வைப்போம்,' என்றார்கள். ;)
சிலர் அரட்டையும் வேலையும் என்று கலந்து நடத்திக் கொண்டு இருந்தார்கள். எல்லோருடய வேலைகளும் ஓரளவு நன்றாகவே வந்து இருந்தது.
ஒரு மாணவி மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். எல்லோருமே ஏகமனதாக அவருக்குத் தான் சாக்லட் என்று விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
 ஒருவர் மட்டும் நான் செய்தது சரியில்லை என்பதாக 'நோ, நோ, நோ,' என்று தலையை ஆட்டிக் கொண்டு என்னைச் சுற்றி வந்தார். சிரித்துக் கொண்டே 'Do you have any more chocolates?' என்று என் கைப்பையை எட்டிப் பார்த்தார். முன்பே எச்சரித்திருக்கிறேன், 'என் கைப்பை என் உடமை. அதைத் தொட யாருக்கும் உரிமை இல்லை,' என்று. ;) உணவுக்கு முன்செபம் சொல்லி வகுப்பைச் சுத்தம் செய்து விட்டு எல்லோரும் சாப்பிடக் கிளம்பிய பின்னரும் குட்டியர் குட்டிச் சிரிப்போடு நின்றார்.
அவருக்கு என்று தனியாக ஒரு சாக்லேட் முன்பே எடுத்து வைத்திருந்தேன்.செய்திருந்த வேலைக்கு நிச்சயம் கொடுக்கத்தான் வேண்டும்.
~~~~~~~~~~~
பின்னிணைப்பு
வகுப்பின் போது என் குட்டி மாணவர் தன் உலகில் இருந்தார். தனித்து, தனக்குத் தானே 'ஸ்பஞ் பாப்' போலப் பேசிக் கொண்டு இருப்பது போல் தோன்றினாலும் வேலையில் மும்முரமாக இருந்தார். இவர்தான் அதிகம் முறைகள் என்னிடம் வந்து 'குச்சி தீர்ந்து விட்டது,' 'சொத்திக் குச்சி எல்லாம் தந்து இருக்கிறீர்கள்,' 'இது கலர் நன்றாக இல்லை,' 'இன்னும் கொஞ்சம் க்ளூ தருகிறீர்களா,' என்று நின்றவர். நடுவே தன் வேலையை மற்றவர்கள் வேலையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறவில்லை.
இறுதியில் மிக உயரமாக இருந்ததும் இவரது பென்சில் ஹோல்டர்தான். இங்கு படத்தில் இல்லை. அவர் அதைப் பிரிய விரும்பவில்லை. எனக்குப் படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. ;) அழகாக இருந்தது. நேராக இல்லாமல் சிறிது சரிவாக அமைந்திருந்தாலும் அதிலும் ஓர் நேர்த்தி இருந்தது. பார்த்த ஆசியர்கள் அப்படிச் சரிவாக அமைப்பது நேராக அமைப்பதை விடக் கஷ்டமான விடயம் என்று கருத்துச் சொன்னார்கள்.
அதிபரும் வந்து பார்த்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டுச் சென்றார். பாடசாலை முடிந்து வெளியேறும் சமயம் பத்திரமாக அந்தப் பென்சில் ஹோல்டரை ஓர் பையில் போட்டுக் கொண்டு பெருமையாக ஓர் நடை நடந்து போனார், அது இன்னும் என் கண்களில் நிற்கிறது.

இந்த மாணவர் பற்றி அடுத்ததற்கு அடுத்த பதிவில்...

Saturday 3 July 2010

விருதுகள் - உங்கள் பார்வைக்கு

முன்கதைச் சுருக்கம்

மனோ சாமிநாதன் said...
அன்புள்ள இமா! சிறப்பாக உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதி வரும் உங்களுக்கு- இதோ இந்த அன்பு விருதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!! http://muthusidharal.blogspot.com/2010/05/blog-post_30.html  29 May 2010 7:25 
 
இது சகோதரர் ஜெய்லானியிடமிருந்து கிடைத்த விருது. மிக்க மகிழ்ச்சி சகோதரரே.