Friday 9 July 2010

பிரிவு புரியாதவர்க்கோர் பிரிவுபசாரம்

இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பிக்க இரண்டே நாட்கள் இருந்தன.

ஓர் பிரிவுபசாரம் - பிரிந்து போகிறவருக்குப் பிரிவு புரிகிறதா என்றே புரியவில்லை. இருந்தும் எங்கள் மன ஆறுதலுக்காக ஒரு நிகழ்வு என்று வையுங்களேன். 

என் பெரிய, குட்டி மாணவர் (15 வயது) வேறு பாடசாலைக்கு மாறிப் போகிறார். இவர் Autism குறைபாடுள்ள பிள்ளை. சிறப்புப் பாடசாலைக்கு அனுப்புவதாக வீட்டார் தீர்மானித்து விட்டார்கள். 

இரண்டு வாரங்கள் முன்பு புதிய பாடசாலைக்குச் சென்று ஓர் நாள்  செலவளித்து விட்டு வந்தார். 'பாடசாலை பிடித்து இருக்கிறதா?' என்றால் 'தெரியவில்லை' என்றார். 'எந்தப் பாடசாலை பிடித்து இருக்கிறது?' என்றால் 'பாலர் பாடசாலை,' என்றார்.

சரி, ஒரு பிரிவுபசாரம் என்று வைத்தாலாவது புரியுமா என்றால், ம்ஹூம். எதுவும் ஆகவில்லை. 

குட்டியருக்கு தோழர் இருவர் சின்னச் சின்னதாகப் பரிசுகள் கொடுத்தார்கள். கண்கள் விரியச் சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். 

அவருக்குப் பிடித்த சாக்லேட் சேர்த்த 'கப் கேக்', சோளப் பொரி, பிடித்த வகை கார பிஸ்கட் (தட்டில் இருந்த துகள்கள் கூட விட்டு வைக்கவில்லை.), தோடம்பழச் சாறு. கூடி இருந்தோர்... என்னோடு, அதிபர், வகுப்பாசிரியர், விசேட பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் இருவர், அந்தச் சமயம் வகுப்பு இல்லாது வேறு பொறுப்புகளில் இருந்த ஆசிரியர் ஒருவர் மற்றும் குட்டியரின் இரு தோழர்கள். இவர்கள் தோழர்கள் என்பது பெயருக்குத் தான். ஒரு குட்டித் தம்பியைக் கவனித்துக் கொள்வது போலக் கரிசனமாகக் கவனித்துக் கொள்வார்கள். பொறுப்பான பிள்ளைகள்.

எல்லோரும் வந்து சேர்ந்ததும் சிறப்புப் பிரிவுக்குப் (special needs) பொறுப்பான பெண்மணி, மாணவர்களிடம் எதற்காக ஒன்றுகூடி இருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறினார். குட்டியர் எல்லாவற்றுக்கும் தலையாட்டினார். 

பிறகு மேசைக்குப் போனதும் கண்கள் விரிந்தன. தன் நண்பர்களிடம் ஏதோ காட்டூன் பற்றிப் பேசிக் கொண்டே ரசித்துச் சாப்பிட்டார். 

நடுவே என்னை ஓர் பார்வை. 'என்ன, கேக் போதுமா?' 
வார்த்தை கோர்வையாக வராது. சொற்களாக வரும். நாம் கோர்த்துக் கொள்ள வேண்டும். சம்பத்தப்பட்டவர்களுக்குப் புரியும். 'ஐஸிங் சுவை பிடிக்கவில்லை,' என்று புரிய வைக்கிறார். 'அதை விட்டு விட்டுச் சாப்பிடலாம்,' என்கிற அனுமதி கிடைக்காவிட்டால் பிடிக்காவிட்டாலும் சாப்பிடுவார். அனுமதி கிடைத்ததும் ஒதுக்கி விட்டு மீதியைச் சாப்பிட்டார். நான் சொல்லும் வரை மீதி உணவுகளைத் தொடவில்லை. 

இறுதியாக தயார் செய்து வைத்திருந்த பேச்சை ஒப்பித்தார். நான்கு வரியாயினும் அதுவே பெரிய விடயம். அப்படி இருக்க எதிர்பாராது இணைந்து கொண்ட ஆசிரியர்களை நான் சுட்டிக் காட்டியதும் அவர்கள் பெயர்களையும் பொருத்தமாகச் சேர்த்துக் கொண்டார்.
இந்த இரண்டரை வருடங்களில் நிறைய மனவளர்ச்சி அடைந்திருக்கிறார்.
அதிபர், என் ஓவிய ஆசிரியை ரூத், வகுப்புத் தோழர்கள் எல்லோருக்குமே இவர் வளர்ச்சியில் பங்கு உண்டு. இப்போது தயங்காமல் உரையாடுகிறார். (புரிந்து கொள்வது எங்கள் சாமர்த்தியம்.) முகம் பார்த்துப் பேசப் பழகி இருக்கிறார்.

ஆயினும், ஓர் பெரிய மாற்றத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இனிமேல் என்ன ஆனாலும் எனக்குத் தெரிய வராது.

நான் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பைக் கச்சிதமாக முடித்து விட்டேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது. இனி மீதி குட்டியரைப் பொறுப்பேற்கும் புதிய பாடசாலை நிர்வாகத்தைப் பொறுத்தது.

இதோ, இப்போ தவணை விடுமுறை நடுவே அதிபரிடம் இருந்து ஓர் தபால் வந்திருக்கிறது. அலுவலகத்தைச் சுத்தம் செய்கையில் குட்டியர் தன் கைப்படச் செய்து கொடுத்த 'தாங்க்யூ கார்ட்' கண்ணில் பட்டதாம்.  'toothy card' என்று குறிப்பிட்டு இருந்தார். ;) குட்டியர் அழகாகச் சிரிப்பார். அவர் வரையும் படங்களும் வாய் நிறையச் சிரிக்கும்.

மொத்தப் பாடசாலைக்கும் ஓர் குழந்தையாக இருந்தார். எனக்கு அதற்கும் மேலே. பிரிவு சிரமமாக இருக்கிறது.

12 comments:

  1. இமா, எனக்கே படிக்க கண்கள் கலங்கி விட்டன. பாவம் குட்டியர். இங்கும் இப்படிபட்ட குழந்தைகளைப் பார்த்தால் அன்று முழுவதும் ஒரே கவலையாக இருக்கும்.

    ReplyDelete
  2. ஆ... வட இல்லாமல் போச்சே.... முழுக்க படிச்சிட்டு வாறேன் இமா...

    ReplyDelete
  3. ம்ம்.. சிறப்பான பிரிவு உபசாரம்.. அது அவருக்கு புரியவில்லை என்றாலும்.. பார்ப்போம்... அங்கு போனதும் அவரும் உங்களை எல்லாம் கண்டிப்பாக மிஸ் பண்ணுவார்.. அதுவும் சிறப்பு பாடசாலை என்ற பட்சத்தில், அங்குள்ள சூழலுக்கு மெதுவாக மாறுவார் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  4. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு இமா!!! இதுக்கு தான் டிஸ்யூ கேக்கறது... உங்கள் மாணவர் எங்கு சென்றாலும் நல்லவிதமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  5. உங்களை நினைத்து மிக பெருமையாக இருக்கிறது இமா.
    என்ன ஒரு அர்தமுள்ள ஆசிரியர் பணி.
    அந்த குழந்தைகள் எங்கு சென்றாலும் இறைவன் அவர்களுக்கு துணை இருப்பார்.

    ReplyDelete
  6. அன்பு வாணி,
    என்ன செய்வது! இப்படி எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. சுற்றி இருக்கிறவர்கள் ஆதரவுதான் அவர்களுக்குத் தேவை.

    ~~~~~~~~~

    யாரங்கே! பூஸுக்கு எலி ஷேப்ல ஒரு வடை ப்ளீஸ். ;)

    ~~~~~~~~~

    நிச்சயம் மிஸ் பண்ணுவார் சந்தனா. ஆனாலும் எல்லாம் பழகத் தானே வேண்டும் அவர். இரண்டு நாளைக்கு வேண்டுமானால் அழுவார். பிறகு மெதுவே மாறிவிடுவார், மாறத்தான் வேண்டும். ;)

    ReplyDelete
  7. இலா //இதுக்கு தான் டிஸ்யூ கேக்கறது.// ம். ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌம்யா. ;)

    நாங்களும் குட்டியருக்கு எல்லாம் நல்லபடி அமைய வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

    மிக்க நன்றி இலா.

    ReplyDelete
  8. இதை படிக்கும் போதே மனசு கஷ்டமா இருக்கு. ஆனா கூடவே இருக்கும் நீங்க ...கிரேட் ..ஹிந்தியில் 'ABBA' படம் பார்த்ததிலிருந்து சொல்ல முடியாத வலி .. உலகத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறர்கள் பாவம் ...

    ReplyDelete
  9. அவங்க பெற்றோரும் தமக்கை தம்பியும் தான் க்ரேட் என்பேன் ஜெய்லானி. உண்மையில் பாவம் அவங்கதான். இப்போ விடுமுறை வேறு.

    குட்டியர் பெரும்பாலான பொழுது ஜாலியாக இருப்பார். இந்த மாதிரி குழந்தைகள் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. இவர் ஒரு சந்தோஷ சாகரம்.

    ReplyDelete
  10. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா