Saturday 28 May 2011

;(


சகோதரி ஜலீலாவின் அன்புத் தந்தையார் மறைவையிட்டு அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
விரைவில் அவர்கள் மனக்காயம் ஆறி இயல்பு நிலைக்குத் திரும்ப இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

- இமா

Wednesday 18 May 2011

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்

மு.கு:-
எந்தக் காலத்துக் கதையோ (Friday, 13 August 2010)
இப்ப கை வலியில வெளியில வருது. ;)

சௌசௌ

சௌசௌ பிரட்டல் 
தேவையானவை:-
   சௌசௌ – 1
   பெரிய வெங்காயம் – ஒரு பாதி
   கூனிக்கருவாடு – 1 மே.க
                      (சுத்தம் செய்து வைக்கவும்)
   யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் – ½ தே.க
   தக்காளி பேஸ்ட் – 3 தே.க
   புளி பேஸ்ட் – ¼ தே.க
   உப்பு அளவுக்கு

   தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:-
   # கடுகு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும். 
   # வெங்காயம் வதங்கியதும் கூனிக்கருவாடு சேர்த்து வதக்கவும்.
   # வெட்டிய சௌசௌ சேர்த்து மிளகாய்த்தூள், புளி, அளவுக்கு உப்பு சேர்த்து 1 ½ கோப்பை நீர் சேர்த்துக் கிளறி, மூடி வைத்து அவிய விடவும்.
   # காய் அவிந்து நீர் வற்றியதும் தக்காளி பேஸ்ட் சேர்த்துப் புரட்டி இறக்கினால் போது(மா)ம். ;))))

க்றிஸ் சமைச்சுப் போட்டுக் கண்ணுக்கு முன்னால கொண்டு வந்து காட்டவும்...
வடிவா இருக்குது, சாப்பிட்டுப் பார்ப்போம் எண்டு ஒரு கிள்ளுக்  கிள்ளி சாப்பிட்டிட்டன். சுப்பர். பிறகு வாய் கட்ட ஏலாமல் போச்சுது. பாணோட கொஞ்சம், கொஞ்சம் எண்டு நிறையவே சாப்பிட்டாச்சுது.

நடுவில உங்கள் எல்லார்டயும் நினைவு வரவும் படம் எடுத்து குறிப்பும் கேட்டு எழுதி இருக்கிறன். என்ட உலகத்தில முதல் சமையல் குறிப்பு இதாகத்தான் இருக்கும் போல. 

திருகோணமலையில இருக்கேக்க இந்த சௌசௌ 'ப்ரிசேவ்' மட்டும் கேள்விப்பட்டு இருந்தன். ரிச் கேக்குக்குப் போடுவம். இங்க அது கிடைக்காது. ஆனால் காய் தாராளமாகக்  கிடைக்குது. அங்கங்க வேலிகளில கொடி படர்ந்து இருக்கும். வெள்ளைப் பூ பூக்கும். கீரையும் விக்கிறாங்கள். 

ஒரு நாள் செபா வீட்டில கனக்க இருக்குதெண்டு தரவும் அறுசுவை பார்த்து ஒரு கூட்டு வச்சன். நல்லா இருந்துது. பிறகு அடிக்கடி சௌசௌ சமைக்கிறம்.

இன்னொரு நாள் செபா, "சௌசௌ காயில இருந்து வேர் வரும்," எண்டு சொல்லவும் ஆர்வம் வந்து பிறகு செபாவின்ட நண்பர்கள்ட்ட இருந்து ஒரு காய் வாங்கி வச்சன். அது முளை விடுற விதம் வினோதமாக இருந்துது.
நட்டு இருக்கிறன். நாலு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு கொடி போதும் எண்டு இணையத்தில பார்த்தன். நட்டது நல்லா வளருது. இப்ப வெளிய இருட்டா இருக்கு. பிறகு படம் எடுத்துப் போடுறன். 

இந்த முறை க்றிஸ், தான் பருப்பு சேர்க்காமல் சமைச்சுப் பார்க்கப் போறன் எண்டு இப்பிடி நடத்தி இருந்தார். ரொட்டிக்கும் கோதுமைமாப் பிட்டுக்கும் இடியப்பத்துக்கும் கூட நல்லா இருக்கும்.

நல்லா ருசியாகச் சாப்பிட்டாச்சுது. தக்காளியும் கூனியும் இருந்துது எண்டு இப்ப ஒரு ‘அன்டிஹிஸ்டமைன்’ போட்டுட்டு வந்து டைப் பண்ணுறன். ;))

யாருக்காவது ‘சௌசௌ பிரிசேவ்’ செய்யிற விதம் தெரிஞ்சால் சொல்லுங்கோ.

Monday 16 May 2011

முன் கதையின்...

பின் கதைச் சுருக்கம்

!!!
 
+ H2
=
¦
\¦/
- kitchen flooring
+ 'imma'gination (tkz Narmatha)
=
¦
\¦/
+ ;-)

Sunday 15 May 2011

என் சமையலறையில்

ஈஸ்டர் – உயிர்ப்பின் திருநாள். 
அந்த வார இறுதி, முன்னால் பெரியவெள்ளியும் தொடர்ந்து ஈஸ்டர் திங்களுமாகச் சேர்ந்து நீளமாக வந்தது. (இவ்வருடம் திங்களன்றே அன்சாக் தினமும் சேர்ந்து வந்திருந்ததால் ஒரு விடுமுறைநாள் குறைந்து விட்டிருக்கிறது.)
  
வீடு வாங்கும்போது இப்படி இருந்த சமையலறைத் தரை...
 
ஒரு சிறிய விபத்தின் பின் இப்படி ஆகி விட்டிருந்தது.

விடுமுறையில் தரைக்கு 'டைல்ஸ்'  பதிக்கலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. அந்தச் சமயம் பார்த்து ‘பன்னிங்ஸ் வேர்ஹவுஸில்’ மலிவு விற்பனை அறிவித்திருந்தார்கள். 
க்றிஸ் கணக்குப் பார்த்து 50 டைல்ஸ் தேவை என்று சொல்லிக் கொண்டிருந்தார். மலிவு விலை, கூடவே ஒவ்வொரு 100$ கொள்முதலுக்கும் 20% விலைக்கழிவு வேறு கிடைக்கும் என்றார்கள். தேவையானதை வாங்கிக் கொண்டோம்.
 டைல்கள் வெட்டுவதற்கான இயந்திரம் மற்றும் சில சிறு உபகரணங்கள் ஏஞ்சல் அப்பாவிடம் இருந்தன.

பெரிய வெள்ளி காலையே அன்றைய நாளுக்கான சமையலை முடித்தாயிற்று. வேலை முடிகிறவரை சமையலறை பாவிக்க முடியாது. ஒரு குட்டிச் சுற்றுலாவுக்கு ஆயத்தமாவது போல் 4 தட்டு, கத்தி, கரண்டி, கேத்தல், கோப்பி, சீனி , உப்பு, புளி, அரிசி இத்யாதிகள் சாப்பாட்டு மேசைக்கு இடம்பெயர்ந்தன.
 
தற்காலிக சமையலறை இது. 
ஃப்ரிஜ், ஸ்டவ், மைக்ரோவேவ் எல்லாம் நகர்த்தப்பட்டன. சோறு வழக்கம் போல் மைக்ரோவேவில் போட்டு விட்டேன். ஒரு எலெக்ட்ரிக் குக்கிங் பானில் மீதச் சமையல் ஆகிற்று. அழுக்குப் பாத்திரங்கள் மட்டும் ஒரு ப்ளாஸ்டிக் வாளியில் போட்டு ‘பாலத்தின்’ மேலாக குளியலறைக்கு எடுத்துப் போய்க் கழுவி வர வேண்டி இருந்தது. ;))

க்றிஸ்ஸும் அலனுமாக லைனோவை உரிக்க ஆரம்பித்தார்கள். 
 
(செபா வீட்டுப் பக்கம் குப்பைத்திருவிழா ;) ஜூன் ஆரம்பத்தில் வரும், அப்போது லைனோவை எறிந்துவிடலாம் என்பதாக எண்ணம்.)

இம்முறை க்றிஸ் உதவியாளர் நிலைக்குப் பதவி இறக்கம் செய்யப் பட்டிருந்தார். இவர்கள் சேர்ந்து வேலை செய்வது பார்க்க அழகாக இருக்கும். பேசும் போது தோழர்கள் போல் பேசிக்கொள்வார்கள். வேலை நடுவே கருத்து வேறுபாடுகள் வரும் போது அலன் குரலை உயர்த்தி ஒரு மேலாளருக்குரிய அதட்டலோடு உறுதியான குரலில் பேசுவார். தன் பக்கத்து நியாங்களை விடாமல் காரணங்களோடு எடுத்துச் சொல்லி க்றிஸ்ஸை சம்மதிக்க வைத்துவிடுவார். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்... இருவரில் யார் தந்தை யார் மகன் என்று சந்தேகம் வரும் எனக்கு.
  
லைனோ உரித்ததும் இப்படி ஆகிற்று தரை, ஆனால் பிசுபிசுவென்று ஒட்டியது.
 
இப்படி வைக்கலாமா!!
 
சனி காலை... டைல்களைப் பார்த்துப் பார்த்து வெட்டிக் கொண்டார்கள். இயந்திரத்தின் தட்டின் உள்ளே நீர் விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இயந்திரம் வேலை செய்கிற போது நீர் சிதறிக் கொண்டிருந்தது. 
 ஓடுகளின் நடுவே ப்ளாஸ்டிக் துண்டங்களை வைத்து அடுக்கி வைத்துப் பார்த்தார்கள்.
எல்லாம் திருப்தியாக அமைந்தது. மதியபோசனத்தின் பின் வாங்கிவைத்திருந்த சீமெந்தைக் குழைத்துக் கொண்டார்கள். 
 
 முன்பே வாசனை பற்றி ஏஞ்சல் பெற்றோர் எச்சரிக்கை செய்திருந்ததால் எனக்கு அந்தப் பக்கம் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
 தரை ஓடுகள் வரிசை மாறாதிருக்க அடையாளமிடப்பட்டன.
 
பிறகு அவற்றில் சிலதை நீக்கிவிட்டு ஒருவர் சீமெந்தைக் கொட்ட மற்றவர் பரபரவென்று இழுத்துக் கொண்டே போனார். 
 
மெதுவே மீளவும் ஒழுங்கின்படி அடுக்கி...

ஈரத்துணியால் மேலதிக சீமெந்தைத் துடைத்து...
நீர்மட்டம் பார்த்து...

இப்படியே தொடர்ந்த வேலை மூன்றரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
பிறகு 24 மணிநேரம் (curing time) அப்படியே விடவேண்டி இருந்தது. 
அந்தச் சமயம் அறையையும் மீதி இடத்தையும் இணைத்த பாலம். ;))

உயிர்த்த ஞாயிறன்று வேலை எதுவும் செய்யவில்லை. பூசைக்குப் பிறகு காலை ஆகாரம் செபா வீட்டில். அதன் பின் வேறு வேலை செய்ய வழி இல்லாததால் படம் பார்த்தோம். பேச வேண்டி இருந்த உறவினர்களோடு தொலைபேசியில் உரையாடினோம்.

இரவு, க்ரவ்ட் வைத்து இடைவெளிகளை நிரப்பி நிரப்பி ஈரமான ஸ்பஞ்சால் துடைத்துக் கொண்டே போனார் மகன்.

ஸ்டவ்வுக்கான இடம்

பொல்லாத மனிதர்கள், என் அனுமதி பெறாமல் சமையலறையில் இருந்து இதையெல்லாம் கடத்தி இருக்கிறார்கள். ;((( வெகு நேரம் கழித்துத் தான் பார்த்தேன். ;(((

மீண்டும் ஒரு முறை துடைத்து 24 மணிநேரம் காய விட்டோம். இரண்டு வாரங்களுக்கு ஈரம் தொட்டுச் சுத்தம் செய்யலாகாதாம்.
 
கடைசியாக, தரை ஓடுகள் வேறு அறைகளோடு பொருந்தும் இடங்களில்...

பீடிங் வைத்தோம்.

மொத்தச் செலவு (NZ $ 270.88)
52 tiles – $85.28
grout – $33.96 (அரைப் பாக்கட் மீதி இருக்கிறது)
adhesive – $121.64
beading - $25.00
spacers - $5.00

அப்போ வரவு!! 

செலவு குறைந்த ஒரு அழகான சமையலறை, நாங்களே செய்தோம் என்கிற சந்தோஷம் + அனுபவங்கள், வீட்டினுள்ளேயே ஒரு சுவாரசியமான விடுமுறை.