தலைமுடியை வளர்க்க அம்மா அனுமதி கொடுத்தது எப்போது என்பது நினைவில் இல்லை, ஏழாம் வகுப்பின் பின் இருக்கலாம். எனக்குப் பின்னுவதற்கு வராது. குட்டையாக இருக்கும் போதும் அடர்த்தி அதிகமாக இருக்கும். கையைச் சற்றுத் தளர்த்தினால் சட்டென்று பின்னல் பிரிந்துவிடும்.
நானாகப் பின்ன நேர்ந்தது... 1976ல். கூட்டுச் சேரா நாடுகள் மகாநாடு இலங்கையில் நடந்த சமயம் முதல் நாள் நிகழ்வுகளுக்காக நாட்டின் பல பாடசாலைகளிலுமிருந்து அவற்றின் வாத்தியக் குழுக்கள் (school bands) அழைத்துச் செல்லப்படிருந்தோம். முழங்கால் வரை நீண்டிருந்த கூந்தலைப் பின்னி எடுப்பது பெரும் பியத்தனமாக இருந்தது எனக்கு. மேல்ப்பாதியைப் பின்னிவிட்டுப் பார்த்தால், அதன் கீழ் உள்ள முடி சிக்கிக் கிடக்கும். திரும்ப அதைச் சிக்கெடுத்து மீதியைப் பின்னி... ;( அதற்குள் எங்களை பயிற்சிக்கு அழைத்துப் போக பேருந்து வந்துவிட்டிருக்கும். மஹரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம். அங்கிருந்து மகாநாடு நடந்த பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்திற்கு மூன்றுநான்கு நாட்கள் தினமும் பயிற்சிக்காக எங்களை அழைத்துப் போனார்கள். பாதிக் கூந்தலைப் பின்னிக் கொண்டு வண்டியில் ஏறிவிடுவேன். மீதியைப் பயணத்தின் போது எப்படியாவது பின்னி மடித்துக் கட்டிக் கொள்வேன்.
பிறகு ஒரு சமயம்... 1979 என்பதாக நினைவு - அம்மா நன்கு குட்டையாக வெட்டிவிட்டார். அது சில மாதங்கள்தான் குட்டையாக இருந்தது. கிடுகிடுவென்று வளர்ந்து முன்பை விட நீண்டு போனது. இம்முறை முடி அடர்த்தி முன்பை விடச் சிறிது குறைந்தும் தன்மையில் மென்மையாகவும் சுருளாகவும் மாறி வளர்ந்தது.
பிறகு மூத்தவர் பிறந்த சமயம் அதிக இரத்த இழப்போடு நிறைய முடி கொட்டிப் போயிற்று; ஆனாலும் நீளம் குறையவில்லை.
எனக்கு 35 வயதில் உச்சந்தலையிலும் பிடரியிலும் ஒரு ரூபாய் அளவுக்கு நரை இருந்தது. அதை மறைக்க, வகிடு எடுக்காமல் தலை வார ஆரம்பித்தேன்.
இங்கு வந்த பின் ஒரேஒரு முறை, அதுவும் நான் அறிந்து கொண்டால் பிறகு நானே நரையை மறைக்கும் வேலையைச் செய்யலாம், நேரமும் பணமும் மீதம் என்று நினைத்து தலையை ஒருவருவரிடம் காட்டி வைத்தேன். உண்மைக் காரணம் வேறு இருந்தது. எனக்கு என் வேலைகளை இன்னொருவரிடம் கொடுத்துச் செய்ய வைத்துப் பழக்கமில்லை; நானே செய்தால் தவிர திருப்தி கிடைப்பதில்லை. தலையைக் கொடுத்தேன். அரை மணி நேரம் பூசிய மையின் மேல் glade wrap சுற்றி உட்கார வைத்தார் அந்தப் பெண்மணி. காதோரம் ஏதோ ஊர்ந்தது. கையை வைக்காமல் பொறுமையில்லாமல், பொறுமையாக அமர்ந்திருந்தேன். அழைத்துச் சொல்ல, வந்து பார்த்தவர், 'அது வியர்வை' என்று விட்டுப் போய்விட்டார். அரைமணி கழித்து, கூந்தலைக் கழுவிவிட்ட பிறகு பார்த்தால் காதோரம் தடிப்பாக கோலம் போட்டிருந்தது. கர்ர்ர்ர்ர் என்று ஆகிவிட்டது எனக்கு. நான் கேட்ட நிறம் தன்னிடம் இல்லை என்று என்னைக் கொண்டே வாங்க வைத்திருந்த அந்த சிகையலங்கார 'நிபுணர்', மீதியை என்னையே எடுத்துச் சென்று, மறு முறை வரும் போது கொண்டுவரச் சொல்லி இருந்தார். பிறகு நான் போகவே இல்லை.
பல வருடங்கள் கழித்து உச்சி நரை சற்று அசிங்கமாகச் தெரிய ஆரம்பித்த போது, க்றிஸ்ஸைத் துணைக்கு வைத்துக் கொண்டு நானே மை பூச ஆரம்பித்தேன். பாடசாலை விடுமுறை காலங்களில் இயல்பாக விட்டுவிடுவேன். பாடசாலைக் காலங்களில் கூட மூன்று நான்கு கிழமைகளுக்கு ஒரு முறைதான் வேலை. இடையில் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால் தவிர, அலங்காரமாகச் சீவி மறைத்து விடுவேன். சிறிய வாசனையானாலும் சட்டென்று வேலையைக் காட்டும் என் நுரையீரலின் செயற்பாடு காரணமாக, நம்பிக்கை & தேவை இருந்தால் தவிர மையைத் தொடுவதில்லை. க்றிஸ்ஸின் வேலை, எங்காவது தவறிச் சிதறி விட்டால் உடனுக்குடனே துடைத்து விடுவது.
மருமகளைப் பார்க்கக் கனடா சென்றிருந்த சமயம் அவர் ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அழைத்துப் போனார். நான் கேட்ட விதம் ஒன்று, அது சரிவராது என்று அவர்கள் சொன்ன காரணம் நியாயம் என்று அரை மனதாக ஒப்புக் கொண்டு தலையைக் கொடுத்தேன். முடிவு... பரவாயில்லை என்று தோன்றிற்றே தவிர முழுத் திருப்தி கிடைக்கவில்லை. அன்றே தீர்மானித்தேன், இனி என்ன ஆனாலும் இன்னொருவரிடம் தலையைக் கொடுக்க மாட்டேன் என்று.
குழந்தைகள் வளர்ந்து விட, மூன்று கிளைக் குடும்பங்களாக என் குடும்பம் பெருகி இருந்தது. அம்மாவின் உடல்நிலை, அவர் தொடர் சிகிச்சைக்காக ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டது, அதற்காக தயார் செய்தல், அவர் வீட்டை ஒழித்து மீண்டும் வீட்டு உரிமையாளரிடம் கையழித்தது, அதே சமயம் சின்னவரது திருமணம் என்று வேலைப் பழு அதிகமாகிப் போன சமயம் தோன்றிற்று... முடியை வெட்டலாம், நேரம் மிச்சமாகும், சுலபமாக உலரும், இழுப்பு இருக்கும் நாட்களிலும் பயமில்லாமல் முழுகலாம். க்றிஸ்ஸிடம் கேட்டேன். "சேலைக்குக் குட்டை முடி அழகாக இருக்குமா?" என்றார். அவர் பிரச்சினை அது அல்ல, என்னை அப்படிப் பார்த்து அவர் கண்களுக்குப் பழக்கமில்லை. என்னால் சேலைக்கு ஏற்றபடி & முன்னிருந்து பார்த்தால் முடியை வெட்டியதே தெரியாதபடி வெட்ட முடியும் என்றேன். நீண்ட முடியோடு கடைசி நாள் என்று முழுகி தலையை ரசித்து வாரி நீளமாக விரித்து உலரவிட்டுக் கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனேன். அறைக்குப் போகும் வழி நெடுக, கண்ட பெண்கள் என் கூந்தல் அழகைச் சிலாகித்துப் பேசக் கேட்டு மனம் மாறிற்று. வெட்டவில்லை அன்று.
இப்படியே மூன்று முறை ஆயிற்று. இதற்குள் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது - என் கூந்தல் என் பெருமை ஆயிற்றே! வெட்டுவதா!! நீளமாக இருந்தால் அழகழகாகக் கட்டி அழகுபார்க்கலாமே!
அம்மா இறுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாம் நாள், தன் முடியைக் குட்டையாக வெட்டி விடச் சொன்னார். அவருக்கும் என்னைப் போல் மற்றவர்கள் அவர் தலையைத் தொடுவது இஷ்டமில்லை. சின்னவரது திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் இருந்தது. பின்னிப் பிடித்து, முன்பிருந்து பார்த்தால் முடி குறைந்திருப்பது தெரியாத விதமாக வெட்டி விட்டேன். அந்தக் கற்றை அப்படியே என்னிடம் பத்திரமாக இருக்கிறது இன்னும். எண்பத்தொரு வயதானாலும் கன்னங்கரேலென்ற கருத்த சுருண்ட முடி. மரணித்த சமயம் மீண்டும் அதே நீளத்திற்கு வளர்ந்திருந்தது.
உடற்பயிற்சி செய்யும் சமயம் குறுக்கே பாம்பு போல் தொங்கி பார்வையை மறைக்கும் போது சற்று அலுப்பாக இருக்கும். வெட்டிவிடும் எண்ணம் மீண்டும் தலைதூக்கியது. இலங்கைக்குப் போகும் சமயம் என் பெறாமகளைக் கொண்டு வெட்டலாமா! அழகுக்கலை நிபுணர் அவர். அவரது ரசனை எனக்குப் பிடிக்கும் என்பதால்... தயங்காமல் தலையைக் கொடுக்கலாம்.
அதற்குள்... கொரானா வந்தது. நானே வெட்டிக் கொள்ள முடிவு செய்தேன். உதவிக்கு இருக்கவே இருக்கிறது
யூட்யூப். இந்தக் காணொளியில் சொல்லப்பட்டிருக்கும் முறை சரிவரும் என்று மனம் சொன்னது.
முன்பொருமுறை வெகு மலிவாக எங்கோ கண்ணில் பட,
இந்த இரண்டு உபகரணங்களையும் வாங்கி வைத்திருந்தேன். இரண்டிலும் அசையக் கூடிய நீர்மட்டங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. உள்ளே கூந்தலைப் பற்றிப் பிடித்துக் கொள்ள சின்னச் சின்னப் பற்கள் இருக்கின்றன.
சிறியதை மட்டும் எடுத்துக் கொண்டேன். க்றிஸ்ஸின் முடி திருத்தும் கத்தரிக்கோலை (அவருக்கு நான் தான் வெட்டிவிடுவேன்.) எடுத்துக் கொண்டேன். இன்னொரு ரப்பர் பட்டியும் சுத்தமான கடதாசி ஒன்றையும் எடுத்து வைத்தேன். முடியைக் கழுவி, கண்டிஷனர் போட்டு அலம்பி, வீடியோவில் சொன்னபடி முன்பக்கமாக நீளமாக, சீராக வாரிக் கட்டிக் கொண்டேன். பிறகு அந்த உபகரணத்தை சரியான இடத்தில் மாட்டிவிட்டு க்றிஸ்ஸைக் கொண்டு நீர்மட்டம் சரிபார்க்க வைத்தேன். அதன் பின் கவனமாக, சற்றுச் சரிவாக, நறுக்! நறுக்!
விளைவு இதோ!
(இது உண்மையில் ஆறு வாரங்கள் கழித்து எடுத்த புகைப்படம்.)
நறுக்கியவற்றை ஒன்றாகப் பிடித்து ரப்பர்பட்டியை மாட்டி, கடதாசியில் உலரும் வரை வைத்திருந்து எடுத்து வைத்திருக்கிறேன். என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்துவைத்திருக்கிறேன். தேவையான உபகரணங்களும் நேரமும் கிடைத்ததும் செயலில் இறங்க வேண்டும்.