Tuesday 28 April 2020

மெது...வடை

சமையற்குறிப்பு கொடுக்கப் போகிறேன் என்று நினைத்து ஏமாற வேண்டாம். :-)

கடைசியாக இந்தியா சென்றிருந்த சமயம் - எங்கோ துணி வாங்கிய போது அன்பளிப்பாகக் கிடைத்தது இந்த உபகரணம். ஒரு தரம் பயன்படுத்தினேன். பலன் கிடைக்கவில்லை. எப்போதாவது டோநட் செய்யும் போது பயன்படுத்தலாம் என்று வைத்துவிட்டு மறந்து போனேன்.

கடைக்குப் போவதைத் தவிர்க்க வேண்டி... பேக்கிங் சோடா, ஈஸ்ட் மேலதிகமாக எங்காவது இருக்கிறதா என்று தேடி சமையலறையைக் குடைந்தேன். இது கண்ணில் பட, வடை செய்யும் முனைப்பில் இறங்கினேன்.

முன்பு பிழைத்ததற்கான காரணம், வடையில் சேர்த்திருந்த உளுந்து தவிர்த்த மீதிப் பொருட்கள் என்பதாக நினைவில் இருந்தது. வேலையை ஆரம்பிக்கும் முன் யூட்யூபில் ஒரு குட்டித் தேடல் - தண்ணீர் குறைவாக இருந்தால் ஒழுங்காகப் பிரிந்து வராது, அதிகமாகவும் இருக்கக் கூடாது என்று புரிந்தது.

இம்முறை தனி உளுந்தை அளவாக நீர் தெளித்து அரைத்து உப்பும், முழு மிளகும் வெகு சிறிதாக அரிந்த கறிவேப்பிலையும் மட்டும் சேர்த்த்துக் குழைத்தேன்.

வேலை வெகு சுலபமாக இருந்தது. கிண்ணத்தில் மாவை நிரப்பி, அதை மேசையில் வைப்பதைத் தவிர்க்க இன்னொரு குட்டிக் கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். எண்ணெயைக் காய வைத்து பிழிந்து விட கிட்டத்தட்ட ஒரே அளவான வடைகள் கிடைத்தன. ம்... இது பிழிபவரது கையில் இருக்கிறது. ஒரே அளவு அழுத்தம் கொடுக்க வேண்டும். இன்னொரு விடயம் - எண்ணெய் மட்டத்திற்குச் சற்று மேலே உபகரணத்தைப் பிடித்து (கொதிக்கும் எண்ணெயில் பட்டால் ப்ளாத்திக்கு உருகி விடும் அபாயம் இருக்கிறது. அதிக உயரமாகப் பிடித்தாலும் எண்ணெய் கையில் தெறிக்கலாம்.) முழுவதாக அழுத்தி, தேவையான அளவு வரும் வரை பொறுத்து, சட்டென்று அழுத்தியை விலக்க... நடுவில் துளையுடன் வடைமா எண்ணெயில் விழுகிறது. கை, கரண்டி என்று எங்கும் மாப்பசை இல்லாமல் சுத்தமாக சுலபமாகப் பொரித்து எடுக்க முடிந்தது.

9 comments:

  1. எங்கள் வீட்டிலும் இருக்கிறது - ஓரிரு முறை பயன்படுத்தியதோடு சரி! கையில் தட்டுவது போல இல்லை என்று சொல்லி விட்டார் இல்லத்தரசி!

    ReplyDelete
    Replies
    1. சித்திரமும் கைப்பழக்கம்... இல்லையா! :-) முன்பு சரிவரவில்லைதான். இப்போது... பயன்படுத்தியவர்களது வீடியோக்களில் அவதானித்த அவர்களது பிழைகள் தான் சரியாகச் செய்ய எனக்கு வழி காட்டின. எனக்கு இது வெகு சுலபமாகத் தெரிகிறது.

      Delete
  2. என் ப்ரெண்ட் வைத்திருக்கா. அவர் வீட்டுக்கு போனபோது நான் கரண்டியில் எண்ணெய் பூசி அதில் விழுத்தி,பின் எண்ணெயில் போட்டேன். வடை டோனட் மாதிரி இருக்கு. கையில் தட்டுவது போல வராது.

    ReplyDelete
    Replies
    1. :-) மேலே சொன்ன பதில்தான் உங்களுக்கும். :-) எனக்கு அடுப்பு உயரம், கையைச் சுடாமல் வடையை உள்ளே போடுவது பிரயத்தனமான வேலை. இது பிடித்திருக்கிறது ப்ரியா.

      சிலவற்றில் கீழே இருக்கும் தட்டின் வடிவம் வித்தியாசமாகத் தெரிகிறது. அதனாலும் சிரமம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

      எப்படியும், வெண்காயம், கீரை என்று சேர்த்துச் செய்யும் போது இதைப் பயன்படுத்த முடியாது. அதற்குக் கைதான் வேண்டும்.

      Delete
  3. என்னதான் இதுபோல் ஒன்றை வாங்கிக் கொடுத்தாலும்...

    என்ன இருந்தாலும் கையில் செய்வது போல் வருவதில்லை...

    குறிப்பு : செய்வது அடியேனும்...!

    ReplyDelete
    Replies
    1. :-) வழக்கமாக நான் தட்டிப் போட க்றிஸ் திருப்பிப் போட்டு வடித்து எடுப்பார். இம்முறை உதவிக்கு அழைக்கத் தேவை வரவில்லை. :-)

      Delete
  4. அருமை ...
    https://www.youtube.com/channel/UCu7dpeKUcinhPVJ1mg3nAJQ
    நிறைய ரசிப்பி வீடியோக்கள் இங்கு இருக்கு , பாருங்கள்

    ReplyDelete
  5. வடை ரெசிபி காணோமே!

    ReplyDelete
  6. நல்ல வேளை நான் இந்தியா போனபோது இப்படிச்சட்டிகிடைக்கவில்லை![[ வடை வேண்டாம்![[ உழுந்து விலை கூடிப்போச்சு இப்போது![[[

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா