இந்த நொடி... என் சிந்தனையில் ஒலிக்கிறது சித்ராவின் இனிய குரலில், "ஐஸ் க்ரீம் கடையில் செரிப்பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடா!" என்கிற வரிகள்.
வாழ்க்கை கூட அப்படித்தான். ஒரு நொடி அழகு; மறு நொடி அழுகை.
இந்த வருடம் ஆரம்பம் முதல் இதுவரை, இந்தத் தத்துவம் சுத்தியலால் ஒவ்வொரு அடி வாங்கும் போதும் ஆணி சற்று ஆளமாக உள்ளே இறங்குமே, அப்படி இறங்கிக் கொண்டே இருக்கிறது.
செபா மருத்துவமனையிலிருந்த சமயம், காலை வரை பிரயாசையுடன் என்றாலும் நடந்து குளியலறை வரை சென்ற வயதான பெண்மணி பதினொரு மணியளவில் வந்து குழுமிய உறவினர் கூட்டத்துடன் பேசியபடி அமைதியாகக் கண் மூடினார். எதிர்க் கட்டிலிலிருந்து மெதுவே நிகழ்வுகளைக் கவனித்தபடி இருந்தோம் நாம். மெதுவே உறவுகள் கலைந்து போய் அனுமதிக்க, வைத்தியசாலை ஊழியர்கள் அவரை அறையிலிருந்து வெளியே எடுத்துப் போனார்கள். படுக்கை சுத்தம் செய்யப்பட்டு அடுத்த நோயாளியை ஏற்கத் தயாராகிற்று.
என் பெற்றோர்களுக்காக ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கான பத்திரங்களை நிரப்பிய வண்ணம் இருந்த சமயம், அந்த அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நீங்கள் உள்ளேயே இருங்கள். ஒருவரை வெளியே எடுத்துப் போகப் போவதாகத் தெரிகிறது," என்றார் அலுவலர். இம்முறை அவரது அறை - ஓரிரண்டு நாட்களில் இன்னொருவரை அனுமதிக்கத் தயாராகி இருக்கும் என்னும் நினைப்பு வந்தது.
ஐப்பசி 18ம் தேதி - அம்மா பிரிந்ததும் அவரை பார்லருக்கு எடுத்துப் போயாயிற்று. குளிர் அறையில் அவர் அமைதியாகத் துயில் கொள்ள, நாம் பிரிவுபசார வேலைகளில் மும்முரமானோம். பத்தொன்பது... இருபது... கிட்டத்தட்ட இருபது பேர், அந்த இல்லத்தில் இணைய அறைகளுக்காகக் காத்திருப்பது நினைவை உறுத்தியது. அட்டைப் பெட்டிகள் எடுத்துப் போய் உடமைகள் எல்லாவற்றையும் அடுக்கி, அறையைக் காலி செய்து கொடுத்தோம். மருத்துவமனையால் இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்த குளியல் நாற்காலி, நடை வண்டி, ஒட்சிசன் இயந்திரம் எல்லாவற்றையும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு திருப்பியாயிற்று. (இவை இன்னொருவர் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுவிடும்.) ஒரு வாரம் கழித்து இறுதிச் சடங்குகள் முடிந்து போய்ப் பார்க்க, அந்த அறை அடுத்தவரை வரவேற்கத் தயாராக இருந்தது. இபோது இன்னொரு பெண்மணி அங்கு குடியிருக்கிறார். இந்த அறைக்கு வரும் எவரும் குணமாகி வீடு திரும்புவது கிடையாது என்பது கசப்பான உண்மை.
முப்பத்தோராம் நாள் காரியம் ஆகி மெதுவே மனது வேலைகளில் ஈடுபட முனைகையில் ஊரில் குடும்பத்தினர் இல்லத்தில் சடுதியாக ஒன்றன்பின் ஒன்றாக இரு இழப்புகள்.
விடுமுறையைத் தனியாக வீட்டில் கழிக்க இயலுமென்கிற தைரியம் இருக்கவில்லை. ஒரு சிறு பயணம் கிளம்பினோம். தோட்டமொன்றில் பழம் பிடுங்கப் போனோம். அங்கும் செரிப்பழங்கள் -
கொத்துக் கொத்தாக சிவப்பும் கருஞ்சிவப்புமாக செரிப்பழங்கள் - நாம் பறித்தவற்றுக்கு அரை நாள் தான் வாழ்க்கை. :-) இந்தப் படத்திற்கு இங்கு சில நாட்கள் தான் வாழ்க்கை. பிறகு காணாமல் போய் விடும். :-)
மார்கழி 26 வந்தால் சுனாமி எண்ணங்கள் வராது இராது. எம் உறவுகள் எழுவரை இழந்த தினம்.
பூவுலகை விட்டுப் பிரிந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும் என் பிரார்த்தனைகள்.