Saturday 28 August 2010

முறவியத்தும்! ,,மேற்கோட்குறியும்"

'முறவியத்' - இது Maori சொல் என்று நினைக்க வேண்டாம், ஒரு மிருகத்தின் ரஷ்யன் பெயர்.

நான் வேலை செய்வது ஒரு தனியார் பாடசாலையில், அவ்வப்போது வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவார்கள். சிலர் ஒரு வருடம், இரண்டு வருடம் படித்து விட்டுப் போவார்கள். யாராவது ஓர் உறவினர்  வீட்டில் தங்கி இருப்பார்கள். சிலர் 'ஹோம் ஸ்டே'யோடு தங்கி இருப்பார்கள்.

முன்பெல்லாம் அதிகம் கொரிய மாணவர்கள் வருவர். சில சீன மாணவர்களையும் கற்பித்து இருக்கிறேன். நடுவே பாலமாக எந்த மொழியும் இல்லாமல் மொழி தெரியாதவர்களுக்குக் கற்பிப்பது சுவாரசியமான விடயம். சில விடயங்கள் தன்னால் புரியும். சிலது புரிய வைப்பது கஷ்டம். இங்கு 'விஷுவல் எய்ட்ஸ்' நிறைய உதவும்.

கையில் எதுவும் கிடைக்காவிட்டால் படம் வரைந்து காட்டிப் புரிய வைப்பேன். எல்லாம் கற்றுக் கொண்டது தான். நான் சிங்களம் அதிகம் கற்றுக் கொண்டது தமிழோ ஆங்கிலமோ தெரியாத திரு. ஃப்ரான்ஸிஸ் பெர்ணாந்து என்கிற சிங்கள ஆசிரியரிடம். நீர்கொழும்பைச் சேர்ந்தவர். ரசனை மிக்க மனிதர். அழகாகப் பாடுவார். நன்றாக வரைவார். எதையும் வரைந்து புரியவைத்து விடுவார்.

இலங்கையில் எனக்கு அமைந்த மாணவர்கள் மத்தியில் சிங்கள மாணவர்களும் ஒரு கொரியனும் இருந்தார்கள்.

இங்கு... இரண்டு வருடங்கள் முன்னால் சொன்யா என்று ஒரு குட்டி மாணவி வந்து சேர்ந்தார். ரஷ்யன்... என் ரஷ்யத் தோழி மூலம் எங்கள் பாடசாலை பற்றி அறிந்து பெற்றோர் அனுப்பி வைத்திருந்தனர். அவர்கள் நாட்டில் விடுமுறைக் காலமானால் இங்கு வந்து விடுவார். சுட்டிப்பெண் நன்றாகப் பிடித்துக் கொள்ளுவார்.

சென்ற வருடம் கூட இன்னொரு குட்டிப் பெண்ணை (டெய்ரா) அழைத்து வந்தார். இவரும் ஓரளவு கற்றுக் கொண்டு திரும்பினார்.

இந்தத் தவணை பாடசாலைக்குச் சென்ற போது என்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்கள் இரண்டு டெய்ராக்கள். அதே பழைய டெய்ரா... கூட தன் வகுப்புத் தோழியான மற்றுமொரு டெய்ராவை அழைத்து வந்திருக்கிறார். இருவரும் பாடசாலைக்குச் சமீபமாக ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

இவர்களிடம் சில விடயங்கள் கற்றுக் கொண்டேன். மேற்கோட்குறி வினோதமாக இருக்கும். நாங்கள் "sixty six & ninety nine" என்று சொல்லிக் கொடுப்போம். இவர்களிருவரும் பேச்சு ஆரம்பிக்கும் இடத்தில் ,, போட்டு வைக்கிறார்கள். முடிகையில் ". ஒரு வசனக்கணக்கு கொடுத்து அதைக் கணித வடிவில் கொடுக்கச் சொன்னால்
6 ; 3 = 2
3 · 2 = 6
என்று எல்லாம் எழுதி வைக்கிறார்கள். திருத்த முயன்று தோற்றுப் போனேன்.

குடும்பப் பெயர்கள் இருவருக்குமே 'வா' உச்சரிப்பில் முடிந்திருந்தது. இவர்களுக்கான ஓர் படிவத்தினை நிரப்புகையில் 'ஹோம்ஸ்டே'  இவர்களது தந்தையர் பெயர்களைத் தவறாக எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். எனக்குச் சரியாகத் தெரிந்தது. குடும்பப் பெயர் பெண்களுக்கு 'வா' என்று முடிந்தால் ஆண்களுக்கு 'வ்' என்று முடிய வேண்டுமாம்.

நடுவே ரூத் எதையோ சுத்தம் செய்கையில் அகப்பட்டதென்று ஒரு பென்சில்கேஸ் கொணர்ந்து தந்தார். "Have fun," என்று வாழ்த்தி விட்டுப் போனார். அதைக் கொட்டி ஒவ்வொன்றாய் உள்ளே இருந்த ப்ளாத்திக்குப் பொம்மைகளுக்குப் பெயர் சொல்லி விளையாடினோம். ஒன்று வினோதமாக இருந்தது. என்ன பிராணி என்று புரியவில்லை. இலங்கையிலும் கண்டதில்லை, இங்கும் இல்லை.
சாம்பல் நிறமாக இருந்த அந்தப் பொம்மையை டெய்ரா-B கையில் எடுத்துச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். இருவரில் இவர்தான் குறும்புப் பெண். ,,எனக்குத் தெரியும். இது முறவியத்" என்றார். ,,முறவியத், முறவியத்" என்று குதித்தார். அவரோடு கண்களும் சிரித்தது. என்னவென்று கேட்டால் புரிய வைக்கத் தெரியவில்லை. படம் வரைந்து காட்டினார்.

,,ஈ!"
,,இல்லை"
,,தேனீயா!!"
,,அதுவும் இல்லை"
,,!!கண்டு பிடித்துவிட்டேன். எறும்பு,"
,,இல்லைய்ய்ய்" ,,இது அதைத்தான் சாப்பிடும்,"
,,ஓகே"  ;((  ,,என்னால் முடியாது,"

இந்த விளையாட்டுக்கு அப்போதைக்கு ஒரு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்து விட்டு அடுத்த வேலைக்குத் தாவினோம்.

இரண்டு நாள் கழித்து வில்ஸ் ,,டெய்ராக்கள் எப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்கவும் எனக்கு ,,முறவியத்" நினைவு வந்தது. பொம்மையைக் காட்டிக் கேட்டேன். அவருக்கு என்னவென்றே புரியவில்லை. பொம்மையை அப்படி அமைத்து இருந்தார்கள் தயாரிப்பாளர்கள். ,,ரைனோ!!!" ஆளாளுக்குப் பொம்மை கை மாறிற்று. டைனோசர், நீர்யானை என்று அனைத்தும் முயன்ற பின் ஒருவர் ,,ஆன்ட்ஈட்டர்" என்றார். அனைவரும் ஆமோதித்தனர். எனக்கோ சந்தேகம், நான் அவர்கள் வரைந்த படத்தை எறும்பு என்றபோது இல்லையென மறுத்தார்களே!! கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

எறும்புதின்னி சாப்பிடுவது கறையானையாம்.

"ஓ! கறையானைத் தான் 'முறவியா' என்பீர்களா?" (சின்ன வயதில் 'ஹாவா, மூவா, அளியா, கொட்டியா, சிங்ஹயா, நறியா' என்று வரிசையாக மிருகங்களின் பெயர்களை மனனம் செய்து வைத்திருந்ததன் விளைவு.)
விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ,,அது முறவி, முறவியா அல்ல.''

இன்னும் 2 கிழமைகள் மட்டுமே இங்கு இருப்பார்கள் சிறுமிகள்.
"வில் யூ மிஸ் அஸ்!!" கேட்டார்கள் ஒரு நாள்.
,,வில் யூ!!"
,,ஆமாம், நிச்சயமாக."
,,ஏனென்றால்... நீங்கள் எனக்கு நிறையப் புது விடயங்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள். கூடவே முறவியத்துக்கு ஆங்கிலத்தில் என்னவென்பதையும் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள்." குறும்பு கொப்பளித்தது முகத்தில். ;))


முறவியத்தைச் சிலர் செல்லப் பிராணிகளாகக் கூட வளர்க்கிறார்கள் போல் இருக்கிறது. ;)

பி.கு
'நெப்போலியன்' குறிப்பு வேண்டுபவர்களுக்காக தயாரிப்பு முறை கொடுத்திருக்கிறேன். அதற்கான கருத்துக்கள் குறிப்பின் கீழ் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

Friday 20 August 2010

பல்லுப் போனால்!

ஸ்கூல்ல ஒரு ஃப்ரெண்ட் இருக்கிறார். அவர் வர இல்ல. வருஷா வருஷம் வருகிற 'வின்டர் திருவிழா' வந்து (ஃப்ளூதான்) ஒரு கிழமையாகப் பள்ளிக்குக் கள்ளம் அடிச்சு இருக்கிறார்.

வராமல் இருக்கிறது எவ்வளவோ நல்லம். எங்களுக்கு வந்தாலும் கஷ்டம் தானே! அதுக்கு அவர்ட வேலைகளைப் பங்கு போட்டுச் செய்யிறது எவ்வளவோ மேல்.

என்ன பேர் எண்டு கேட்டு வைப்பீங்களோ! வி..வி.. விநயன். ;)) (நம்பாதைங்கோ)

ஆள் ரிகவர் ஆகிற காலத்தில ரிலீவரா வந்தது என்ட பழைய பொஸ் வில்ஸ்.

ஸ்கூலுக்குப் பக்கத்தில தான் வீடு. அது போக இங்கயே வேலை செய்ததால எங்கட ஒழுங்கு முறைகள் எல்லாம் அத்துப்படி. ரிலீவர் எண்டு குட்டியாக்கள் விளையாட்டு விட ஏலாது. மற்ற ரிலீவர்கள் மாதிரி இல்ல இவர். 'சைல்ட் மைண்டிங்' செய்யாமல் ஒழுங்கா சிலபஸில அடுத்ததா என்ன பகுதி படிப்பிக்க இருக்கோ அதை எடுத்துக் கொண்டு போவார். லீவால வந்த காய்ச்சல்காரருக்கு பிரச்சினை இல்லாமல் நிம்மதியா இருக்கும். பத்தாததுக்கு யாருக்கு ரிலீவ் பண்ணுறாரோ அவர்ட டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக் டியூட்டி எல்லாம் செய்வார். அதால எங்கட ஜூனியர் ஸ்கூல் ஆஸ்தான ரிலீவராக எழுதப்படாத நியமனம் இவருக்கு உண்டு. நல்ல சமையல்காரர். இவர்ட 'விஸ்கி & வோல்நட் கேக்' எங்கட வட்டாரத்தில பிரபலம்.

இப்ப கதை அது இல்ல. ஒன்றரைக் கிழமையா பள்ளிக்கு வந்தவர் நேற்று ரூத்தைக் கண்டதும் கேட்டார் 'ஹேய்! கூட்டைக் கொண்டு வந்திருக்கிறன், தரட்டா?" (இங்லிஷ்லதான் கேட்டவர். நான் சும்மா இப்பிடி மொழி மாற்றி வச்சிருக்கிறன். கண்டு கொள்ளாதைங்கோ.) 

அவ ஒரு சிரிப்புச் சிரிச்சா. "என்னவாம் பொம்பிள?"

"இருக்கிறா. இன்னும் வீக்கம் வத்த இல்ல. இன்னொரு ஊசி அடிக்க வேணும் போல இருக்கு."

"அப்ப  இப்ப என்ன அவசரம்? நான் கேட்டனா? "

"இல்ல, உங்களுக்குத் தேவைப் பட்டால்..."
"நான் வேணுமெண்டால் வந்து எடுக்கிறன். நீங்க கொண்டு போங்க."
"இங்க கொண்டு வந்து தரட்டா?"

"கொமன் ரூம் மேசைல வைங்க. நான் போகேக்குள்ள எடுக்கிறன்."

இதுக்குள்ள 'ஃபோட்டோ கொப்பியர்' தேவைப்பட்ட பதினைஞ்சு 'வேட் (வர்ட்) ஃபைன்டையும் ப்ரிண்ட் பண்ணி முடிச்சு இருக்க அதையும்  தான்  ஃபீட் பண்ணின கடுதாசியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

ரூத் இன்னம் 'கரண்ட் இவென்ட்ஸ்' ஒட்டி வச்சிருந்த கலர் A3 மட்டைகளை லமினேட்டர்ல விட்டுக் கொண்டு இருந்தா.

எனக்குப் போய்க் கேட்க வேணும் போல இருந்துது. பாதிக் கதை... விளங்காமல் மண்டைக்குள்ள குறு குறு எண்டு இருந்துது. ஆஃப்டனூன் டீ டைம் கேப்பம் எண்டு இருந்தன்.

அதுக்குத் தேவை இருக்க இல்ல. ஃபிரிஜ்ல இருந்து சலட்டையும் (சாலட்) ;) கரண்டியையும் எடுத்துக் கொண்டு மேசைக்குப் போனால்... கூடு. வில்ஸ் லவ்பேட்ஸ் வளக்கிறாரா!! சொல்லவே இல்லை!!

நினைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளயே வில்ஸ் வந்தார், தன்ட பெரிய லஞ்ச் பொக்ஸோட. அதுக்குள்ள இருக்கிறது எல்லாம் இலைகுழைகளும் பழங்களும் மட்டுமே. 57 வயசாச்சுது. ஆனால் என்ட வயசுதான் மதிக்கலாம்.

நான் கேட்கலாம் என்று நினைக்கேக்குள்ள இலைகளை பாணுக்குள்ள செட் பண்ணிக் கொண்டு இருந்தவர் விளங்கின மாதிரி சொல்லுறார் "இது ரூத்ட கூடு."
"ஓ!" - கண்ணால சொன்னேன். மிச்சம் அவரே சொல்லுவார், தெரியும்.
"எங்கட வீட்டுப் பொம்பிள.."
இந்த இடத்தில வந்திட்டா ரூத். கண்ணில அப்பிடி ஒரு சிரிப்பு. அது நக்கலா, நையாண்டியா, வேற என்னவோ ஒன்றா!!!!!

பிஸ்கட் ஒன்று எடுத்துக் கொண்டு முன் கதிரைய இழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தா. எனக்கு வேண்டியது கிடைச்சுது.

"தெரியுமா பகிடி! மிஸ்டர். வில்ஸிட பூனைக்குட்டிக்குக் கால் பூனைக்குட்டி போல வீங்கிக் கிடந்துது. நான் போய்ப் பார்த்தன்." பிஸ்கட்டை டீயில தோய்ச்சுக் கொண்டு "தொட்டுப் பார்க்க ஒன்றும் தெரிய இல்ல." (இப்ப வாய்க்குள்ல பிஸ்கட்.) இவ கதை சொல்லுற விதமே தனி.

இன்னும் சிரிப்பு முடியேல்ல "கூட்டைக் குடுத்தன், வெட்டிட்டக் (vet) கொண்டு போகச் சொல்லி..." (லவ் பேட் கூட்டையா!!! )
கோப்பைய வலக்கையால உருட்டிப் பார்த்துக் கொண்டு ஒரு 'ஹிக் ஹிக்' சிரிச்சார். பிறகு பேச்சு வர இல்ல. தனக்குள்ள, தன்ட சிரிப்புக்குள்ள அப்பிடியே அமிழ்ந்து போனா.

கொஞ்ச நேரம் கழிச்சு பொறுக்க ஏலாமல் வில்ஸ் தொடர்ந்தார். "வெட் காலைத் தடவித் தடவிப் பார்த்தும் ஒண்டும் தெரியாமல் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க... Guess what!"

போச்சுடா! இவரும் சஸ்பென்ஸ் வைக்கப் போறாரா என்று இதுக்குள்ள சாப்பிடக் கூடி இருந்த ஆறு பேருக்கும் டென்ஷன்.

"காலுக்குள்ள ஒரு பூனைப்பல் இருந்துது. யாரோடயோ சண்டைக்குப் போய் கடி வாங்கி... ஒரு பல்லுப் புதைஞ்சிருந்துது." அவருக்கே சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்துது.

சிரிக்கத் துவங்கினால் எங்கட கூட்டம் நிறுத்தாது. போன நாலு பிள்ளைகள் நின்று ஆச்சரியமாய்த் திரும்பிப் பார்த்தாங்கள். ;)

ரூத் முடிச்சா " பிறகு என்ன! ஒப்பிரேஷன் தான். இப்ப ஷேவ் பண்ணின காலும் பந்தமுமா இருக்கிறா அம்மையார்."

"பாவம் பல்லுப் போன பூனை."

இப்ப இதுதான் சூடான தலைப்பு இங்க. ;)

இங்க இருக்கிறது....
    .....எங்கட பக்கத்து வீட்டு பிப்ஸ்க்விக் தான், படம் போட வேணுமே!

Saturday 14 August 2010

'கார்' காலம்!!

 
23/07/2010 - 'டோட்டல் டாமேஜ்' ஆன வண்டி!! ;)  
ஆமைக்குட்டி மாதிரி இருக்கிறது இல்லையா? அதனாலேயே எனக்கு இவரைப் பிடிக்கும்.

வண்டிக்குப் பிறந்தநாளா!! ;)

29/07/2010 - காரோட்டப் பந்தயத்தில் ஈடுபாடு உள்ள நண்பர் ஒருவருக்காகத் தயாரித்த வாழ்த்திதழ்
படங்கள் நான் எதிர்பார்த்த அளவு திருப்தியாக வரவில்லை.  பகற்பொழுதில் எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ என்னவோ. அதற்குப் பொழுது போதவில்லை. ;)
 06/08/2010 - செம்மஞ்சள் நிறத்தில் கார் விரும்பிய குட்டியருக்காகச் செய்த கேக்
இன்னும் கொஞ்சம் மினக்கெட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.

Friday 13 August 2010

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்

மு.கு:-
எந்தக் காலத்துக் கதையோ (Friday, 13 August 2010)
இப்ப கை வலியில வெளியில வருது. ;)

அந்தக் காலத்தில சூரிய சந்திரனை, நட்சத்திரங்களை வச்சுத்தான் திசை கண்டறிஞ்சு பயணம் செய்தவையாம். எனக்குப் பூசைக்குப் போக வேணும். நிலாப் பெண் வழிகாட்டுவாரா!!

கொஞ்சம் வெளிச்சமும் வரப் பார்க்குது.

கார் ஒரு ஆட்டம் ஆடீட்டுது. எந்த இடம் என்று தெரியேல்ல. ;( 

எனக்கு இந்த வீடு விருப்பம். வடிவா மினக்கெட்டு ஐசிங் செய்த கேக் மாதிரி இருக்கும். பழைய வீடு. இப்ப திருத்துகினம். 

Stop! says the red light,
Click! says the white.
சிக்னல் கம்பத்துக்கும் வீட்டுக்கும் நடுவில பாருங்கோ, வடிவான ஒரு புறாக்கூடு தெரியும். தெரியுதா!!

Change! says the green,
Click! says the white.
டொடாரா மரத்தின் பின்னே ஒளிந்து விட்டார்.

முகம் காட்ட மறுக்கிறார் இன்னமும். 'ஹலோ!! நிலா! நாங்கள் போய்ச் சேருறது இல்லையோ! வெளிய வாங்க!!!!'

மெல்ல எட்டிப் பார்க்கிறார் நிலாப் பெண்.

கம்பிக்கு மேலே...
செடிக்குப் பின்னால்...

 
வந்தாச்சுது இடம், இறங்குங்கோ எல்லாரும்.
~~~~~~~~~~~~
பி.கு:-
'Outstanding Blogger' என்று விருது வாங்கிப் போட்டு வெளியில நின்று நிலவு பார்க்கிற படம் ஒன்றும் போடாட்டில் எப்படி? ஆதலால்... ஆசியாவுக்காக 'பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்'.

நானும் சும்மா!! சும்மா!! :))

சமைத்து அசத்தலாம் என்கிற ஆட்கள் விருது கொடுத்தும் அசத்துகிறார்கள். ;) நன்றி ஆசியா.


அதிரா! இது என்ன பழம்!! 'Huka Falls' போன பொழுது காட்டுக்குள் கண்டவை இவை.
 இலை இப்படி இருந்தது.

அப்படியே இது என்ன பழம் என்றும் சொல்லுங்கள்.

Wednesday 11 August 2010

பூவுலகில் பூ(னை)வை வேண்டிக் கொண்டமைக்கு இணங்க...

பூவுலகில் பூ(னை)வை வேண்டிக்கொண்டமைக்கிணங்க தொடரும் இது, இமாவின் உலகம்.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
இமா

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? 
ஆம் (மாதிரி) ;)
இல்லை எனில் (ஏன், ஆம் மாதிரி எனில்) பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? (என்று நான் சொல்லக் கூடாதா!! எ.கொ.வ.இ!! நான் சொல்லுவேன்.)


அறுசுவையில் இணைய நினைத்த போது அங்கு ஏற்கனவே என் நடுப்பெயரில் யாரோ இருந்தார்கள் போல. பெயர்ப்பதிவு மறுக்கப்பட்டு விட்டது.
 
ப்ளான் B - என் கிறிஸ்தவப் பெயர் - தமிங்கிலத்தில் கொடுத்தால் 'வெற்றிலை' 'புகையிலை' நிலைதான். ;) எனவே, ஏறக்குறையத் தமிழாக்கமாக ஒரு புனிதமான பெயரைத் தெரிந்து இணைந்தேன். காவற்தெய்வம் கைவிட்டார். (நன்றி சந்தனா.) ஏற்கனவே இந்தப் பெயரில் தூயாவின்ட சமையல் கட்டுக்குப் போயிருக்கிறேன்.

ப்ளான்  C - மறக்காமல் இருக்க வேண்டி இமா.
திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொன்னால் போரடிக்கும் முன்னாலயே வாசிச்சு இருக்கிற ஆக்களுக்கு. எனவே தங்கள் பார்வைக்கு - பார்க்க பின்னூட்டம். ;)

பிறகு அறுசுவையில் பிரபலமாகிவிட ;) இமாவே இன்றுவரை நிலைக்கிறது. 
  
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

இப்படி எல்லாம் கேள்வி வரும் என்று தெரிந்திருந்தால் முன்பே குறித்து வைத்திருந்திருப்பேன். ;) 

பலரது இடுகைகளை ரசித்துப் படித்திருக்கிறேன். நான் வலைப்பூ ஒன்றுக்குச் சொந்தக்காரியாவேன் என்று நினைத்ததில்லை.
வலைப்பூவுக்கு இணையாகத்தான் 'எங்கள்' வட்டத்தில் பிகாசா ஆல்பங்கள் இருந்தனவே. ;)

பிறகு... அறுசுவை சகோதரிகள் நர்மதா, அம்முலு கொடுத்த ஊக்கம் & வாணியின் உதவி. (இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் நினைத்தது நான் கைவினைக் குறிப்புகளாகப் போட்டுத் தள்ளுவேன் என்று. நான் இடுவதோ!!! ;) அடுத்து - வாணியம்மா சொன்னாங்க, இது ஆரம்பிப்பது சுலபம். பராமரிப்பது சிரமம் என்று. 100% உண்மை. )

இங்கு எனக்குத் தெரிந்த 'தமிழர்' மத்தியில் வலைப்பூ பற்றி எனக்குத் தான் அதிகம்! தெரிந்திருந்தது. ;) இருப்பினும் பலமுறை முயன்று தோற்றேன். ;) ட்யூடோரியல் போட்டு இரண்டு நிமிடத்திற்கு மேல் கேட்க நேரம் கிடைக்காது. எதையோ தட்டுவேன். தடையாகத் தொலைபேசி கிணுகிணுக்கும் அல்லது வாயில் மணி ஒலிக்கும்.

புலம்பல் எல்லாம் வேண்டாம், ஒரு கோடை விடுமுறையில் ஓர் நாள் பார்க்கிறேன் இடுகைகள் இல்லாமல் கண்ணில் படுகிறது... 'இது,இமாவின் உலகம்'. புத்துணர்வு பிறந்தது. மெதுவே வேலைகள் நடந்தது. புத்தாண்டு அன்று விருந்தோடு திறப்புவிழா நிகழ்த்திவிட்டேன்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலம் ஆக வேண்டி ஆரம்பிக்காததால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. யாரும் வருவார்கள் என்றும் எண்ணியது இல்லை. அம்மா செபாவிடம் கூடத் தெரிவிக்கவில்லை. என் உறவுகள் நட்புக்களுக்கு விடயத்தைச் சொல்லாமல் தொடர்பு அனுப்பி வைத்தேன். மின்னஞ்சல் முகவரியோடு இணைத்தேன். அறுசுவையில் என் ப்ரொஃபைலில் இணைத்தேன். அது சரியில்லை என்று தோன்றவும் பின்பு நீக்கிவிட்டேன். என் பின்னூட்டங்களைப் பிடித்துக் கொண்டு அறுசுவை உறவுகள் தன்னாலேயே வந்தார்கள். 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? 
ம்ம்ம்... ;)

ஆம். - என்றால் ஏன்?
வேறு எதற்கு! என் நட்புகள் பார்ப்பார்கள் என்றுதான். ;))
அதன் விளைவு என்ன? 
பார்த்தார்கள். அறிந்து கொண்டார்கள்.கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இல்லை. - என்றால் ஏன்?
பார்க்க வேண்டாம் என்றுதான். ;))

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா 
இல்லை, உண்மையில் பொழுது போதவில்லை. ;( உலகம் சுற்ற வேண்டுமே. (வேகம் குறைகையில் யாராவது வந்து உருட்டி உதவுகிறார்கள்.) ;)
அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதுவும் இல்லை. ஆரம்பித்தமைக்கான சில காரணங்கள் 

1.வலைப்பூ என்றால் என்ன, எப்படி உருவாக்குவது, நிர்வகிப்பதெப்படி என்பது போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பினேன். (குட்டி மாணவர்கள் கூட வலைப்பூ வைத்து இருக்கிறாங்க. நாம் அறிந்து வைத்திருக்காவிட்டால் எப்படி?? )

2. தமிழில் உரையாட உறவாட எனக்கொரு தளம் கிடைக்கும் என்னும் எண்ணம் பிடித்திருந்தது.

3. எல்லாவற்றையும் மறந்து தொலைக்கிறேன். என் எண்ணங்களைப் படங்களோடு பதிவு செய்து வைக்கலாம் என்பது.

4. ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா! ஒருவருக்கு விபத்தாயிற்றாம். வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாராம். பார்க்கப் போன உற்றார், உறவினர், இனபந்துக்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் கதை சொல்லி நொந்து போனாராம். பிறகு... தான் விபத்துக்குள்ளான கதையை ஒலிப்பதிவு செய்து கேட்பவர்களுக்கெல்லாம் போட்டுக்  காட்டினாராம். அது போல் தேவைப்படும் போது உற்றார், உறவினர், இனபந்துக்கள் &  நட்பு வட்டாரத்துக்கு 'லிங்க்' கொடுத்து விடலாம் என்பது.


7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
வலைப்'பூ' ஒன்று, அரும்பு ஒன்று. அனைத்தும் தமிழில்!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்...
இல்லை. ஒரு குட்டி வட்டத்தில் சுற்றத்தான் நேரம் கிடைக்கிறது. அது பாதுகாப்பான வட்டமாக இருக்கிறது. எனவே இன்னமும் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகவில்லை.
அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 
இல்லை. (ஆமை வளர்த்தால் ஆளுக்கு ஆகாது என்பார்களே, அது இந்த இன ஆமையைத்தான். ;) ) 
நான் என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை. நான் நான்தான். மற்றவர்கள் மற்றவர்கள்தான். சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும். ;) என் +, - எவையென்பது எனக்கு நன்றாகத் தெரியும். 

பலர் திறமை கண்டு வியந்திருக்கிறேன். 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? 
மனிதரா!! இது பெரிய இடக்குப் பிடித்த வினாவாக இருக்கிறதே!!!!!!

முதலில் பாராட்டியது.... ஒரு ரோபோ / நாய்க்குட்டி / நாய்க்குட்டி வடிவிலான ஒரு ரோபோ. (அப்படித்தான் எல்லோரையும் நம்ப வைத்துக் கொண்டு இருக்கிறார். இப்போ அடிக்கடி சார்ஜ் இறங்கி விடுகிறது என்பது சோகமான விடயம்.) 
பெயர் ஜீனோ - 'ஜீனோ தி க்ரேட்'. திரு. சுஜாதா அவர்க.... வேண்டாம் சந்தனாவுக்கு போரடிக்கும்.
அவரைப் பற்றி,  
என்னை 'ஆன்டி' என்பதாலும் செபாவை 'க்ரான்ட்மா' என்பதாலும் என் செல்ல மருமகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அதிராவின் செல்லச் சகோதரர். வாழ்க்கைத் துணை அழகு 'டோரா தி எக்ஸ்ப்ளோரர்'. 
அந்த பாராட்டைப் பற்றி..
பாராட்டு அல்ல அது, வாழ்த்து. நீங்களே பாருங்க. ஏதோ இங்லிஷ்ல விளாசி இருக்குது. ;) 

geno said...
Aunty,Wish you a very Happy New Year..Have a great 2010!! Geno wishes you all the very best for your blogging world..I am going to be one of the frequent visitors for sure! :)

இரண்டாவது பாராட்டும்... ஒரு மனிதர் அல்ல மனுஷி - வாணி.

மூன்றாவது...... என் பெறாமகன் என்று வையுங்களேன் - அருண்ப்ரகாஷ் , என் பதிவைப் பாராட்டவில்லை. சாப்பாட்டைத் தான் பாராட்டியதாகத் தெரிகிறது. ;) 

நான்காவது கூட மனிதர் அல்ல. ஒரு அட்டை - 'L'

எ.கொ.வ.இ!

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
விருப்பம் இருக்கிறது. தயக்கமும் இருக்கிறது. ஆயினும் தேடி வந்து படிப்போரை ஏமாற்றாமல் ஏதாவது சொல்லி வைப்போமே. ;) 
 நான் -  இமா - திருமதி. க்றிஸ்  & செபாவின் மகள்.
ராசி - தெரியாது ஆனால் நிச்சயம் 'மேடம்' இல்லை. ;)
பிறந்து வளர்ந்தது இலங்கை - திருகோணமலையில்.
கற்றது - தி/ புனித மரியாள் கல்லூரியில்
கற்பித்தது - தி / வெள்ளைமணல் அல் அஸ்ஹார் ம.வி
                      தி / உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி
                      தி / புனித சூசையப்பர் கல்லூரி
கற்பிப்பது - மார்சலீன் கல்லூரி (விசேட தேவைகள் பிரிவில்)
பிள்ளைகள் - 1. 2. அலன் 3. அருண் (& மற்றும் பலர்)
பிடித்தது - மனிதர்கள், இயற்கை, அழகு, செல்லங்கள், கைவினை, தங்கமல்லாத நகைகள் - விசேடமாகக் காதணிகள், தோட்டம், முத்திரைகள், நாணயங்கள், நாணயமாக இருப்பது, குட்டி வீடு, குழந்தையின் குறுநகை, ----, ----, ---- & ----------
பிடிக்காதது - ;) தட்டில் பறவை
வியப்பது - மனிதரில் இத்தனை நிறங்களா!!! 
மீதி - இமாவின் உலகை ஒரு முறை வலம் வந்தால் புரியும். தற்போதைக்கு இவை போதும். 

முடிவுரை
வலையுலகில் நான் - தனி ஆள் அல்ல. என்னைப் புரிந்து கொண்ட ஒரு பாசக்காரக் கூட்டம் சுற்றி இருக்கிறது என்பது பெருமையான, சந்தோஷமான விடயம். உலகம், சுற்றினால்தான் உலகம். அதைச் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் சுற்றி இருந்தால்தான் உயிர்ப்புள்ள உலகம். இயங்கவைக்கும் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் உரித்தாகுக. ;)
 ~~~~~~~~~~~~

20/12/2010  
பின்னிணைப்பு

இங்கிருந்து தொடர நான் அன்புடன் அழைப்பது  அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை - சிவா  அவர்களை. 

Thursday 5 August 2010

இலவச இணைப்புகள்

புதிய இணைப்புகள் பற்றிச் சொன்னேனே. இவர்கள் தான் அவர்கள்.

என்ன! படத்தைப் பார்த்ததும் Ahhh!! my!! என்று வாயில் விரல் வைக்கத் தோன்றுகிறதா!! ;)

முன்னால் முகத்தைக் காட்டுபவர் எங்கள் பழைய குட்டியர் தான். இப்போ அடையாளம் தெரிந்து கொள்வதற்காக Alfie (Alfred Pennyworth) எனப் பெயரிடப் பட்டிருக்கிறார். இவர் 2 வருடங்களும் 8 மாதங்களும் வயதானவர். இவர்தான் இருக்கும் எல்லோரிலும் அழகானவர்.

பக்கத்தில் வாலைக் காட்டி இருப்பவர் 8 வயது Meryl.

இவர்களோடு கோபித்துக் கொண்டு தனியே இருப்பவர் 6 வயது Arney (Arnold Schwarzenegger)

அல்ஃபிக்கு புது வரவுகள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. முதல் நாளே மெரில் வலது பின்னங் காலில் ஒரு கவ்வு. சவ்வு கிழிந்து ரத்தம் வந்தது. இத்தனை நாள் அனுபவித்த சுகத்தில் பங்கு போட ஆட்கள் வந்தால் சும்மா விடலாகுமா! 

பழைய ஃபில்டர் மரித்துப் போயிற்று. புதிது தேடுகையில் ஒன்று வாங்கினால் இரண்டு ஆமை இலவசம் ;) என்று விளம்பரம் கண்டதில் இவர்கள் வந்து இணைந்து இருக்கிறார்கள்.

Sunday 1 August 2010

டிஷூ ப்ளீஸ்!!

தொழிற்சாலை திறப்புவிழா என்று நினைக்காதைங்க.
சில பல காரணங்களுக்காக தேவைப்பட்டது. 

காரணம் 1. சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். சிரித்தாலும் டிஷ்யூ கேட்பார். அழுதாலும் டிஷ்யூ கேட்பார். இன்று முதல் இமாவைக் கூவாமல் இந்தப் பப்பீஸ் & பூஸ் பெட்டியிலிருந்து தேவையானவர்கள் தேவைக்கு ஏற்ப எடுத்து தமக்கு உதவிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் 2. முன்னால இங்க சுற்றிக் கொண்டு இருந்த ஆக்களுக்கு எல்லாம் அப்பப்ப எதாவது ட்ரீட் கொடுத்து இருக்கிறன். நடுவில கொஞ்சம் மிஸ் பண்ணீட்டன். (ஆனால் மிஸ் பண்ண இல்ல.)  இமாவின் உலகைத் திடீரென்று சில பல  நட்சத்திரங்கள் சுற்ற ஆரம்பிச்சு இருக்கினம். 39, 40, 41 எண்டு டக் டக்கெண்டு நம்பர் கூடிக் கொண்டு போய் 42ல நிற்குது. கவனிச்சதும் கண் கலங்கிப் போச்சு... சந்தோஷத்தில தான். பெட்டியை வெளியில எடுத்திட்டன். விருந்தானாலும் மருந்தானாலும் பகிர்ந்து கொள்ள வேணும் எல்லோ! வாங்கோ, எடுத்துக் கொள்ளுங்கோ.

காரணம் 3. பிறகு... யார், எந்த நெப்போலியன்ட குதிரையை வாங்கி வந்து ஸ்பீ...டாகத் துரத்தினாலும் இமா உலகம் ஆமை வேகத்திலதான் சுற்றும். ஏனெண்டால்... அது அப்பிடித்தான். முயலாமை காரணம் அல்ல. இயல் ஆமை காரணம். இயலாமை காரணம்.  இந்த சோகத்தில / சந்தோஷத்தில கண்ணில இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது.

காரணம் 4. நிலமை இப்படி இருக்க.. 'நியூ' ஆடிஷன்ஸ் சிலர் உலகில் இணைந்து இருக்கிறார்கள். (இங்க ஆ.க) 

காரணம் 5. அவர்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகைகளில் தெரியவரும். தெரிய வரும்போது 'ah! my!' என்று நிச்சயம் வாயில் கை வைக்கப் போறீங்க. அப்ப... இமாவின் நிலமையை நினைச்சு உங்கட கண்ணில ரெண்டு சொட்டு வந்துது எண்டால்... அப்ப கேட்காமல் எடுத்துக் கொள்ளுங்கோ.

காரணம் 6. அறுசுவைல...... அழ வைத்துவிட்டேன். (சோ.க) ;) (தொடர்பு கண்டு பிடிக்க முடியவில்லை.)

காரணம் 7. வானதி என்னும் வாணி செய்த சதி பதி விரோத சதி. (சோ.க) ;)

காரணம் எட்டு. இது தான் உயரமான வெளிச்சம் - பாயிஜா ஒன்றுக்கு இரண்டாக விருது கொடுத்து இருக்கிறாங்க. (ஆ.க) மிக்க நன்றி சகோதரி.

இன்னும் இருக்கு. ஆனால் இப்போதைக்கு இது போதும். இல்லாட்டால் வாசிக்கிறவங்கள் ர.க விடுற மாதிரி ஆகீரும். ;)