வரப்போகும் சனிக்கிழமை (16/10/2010) எங்கள் பாடசாலை வருடாந்தச் சந்தை - School Fair நடைபெற இருக்கிறது.
கடந்த ஒன்பது வருடங்களில் ஒரு முறை வீட்டுத்துணிகள் (லினன்) விற்பனைப் பிரிவிலும், மீதி எட்டு வருடங்களும் விளையாட்டுப் பொருள் விற்பனைச்சாலையில் வேறு இரு ஆசிரியர்களுடனும் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். முதல் வருடம் பழக்கமில்லாததால் சங்கடமாக இருந்தது. இப்போ ரசிக்கிறேன். பிடித்திருக்கிறது.
இம்முறை 'ஃபேஸ் பெய்ன்டிங்' பொறுப்புக் கிடைத்திருக்கிறது, தயாராகிறோம்.
முன்பு ஒரு முறையும் இதற்காகப் பாதி வேளையில் என்னை இழுத்துப் போய் விட்டார்கள். இன்னொரு முறை பலூன் விற்றேன். ;) ஒரு முறை பணப்பெட்டிக்குக் காவல் வைத்தார்கள். திடீர் திடீரென்று வேறு வேலைக்கு இழுத்துப் போய் விடுவார்கள். எது செய்தாலும்.... ஜிலுஜிலு என்று ஒரு தொப்பி, முகத்தில் ஒரு படம்... வந்தீர்களானால் என்னை அடையாளம் காண மாட்டீர்கள்.
இது எங்கள் நாள். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சந்தோஷமாக ஒன்று கூடும் நாள்.
என்னிடம் கைவினை கற்கும் மாணவிகள் இருவர் கூட்டாக வாழ்த்திதழ்கள் தயாரித்து விற்று அந்தப் பணத்தைப் பாடசாலைக்குக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் வயதுக்குச் சுலபமல்ல இந்த வேலை. பாருங்களேன்...
இந்தத் தொகுதியிலுள்ளவை எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. வெகு நேர்த்தியாக இருந்தது வேலை.
சூரியகாந்தி - நாட்காட்டியிலிருந்து
ஸ்டிக்கர் & ரிப்பன்
ஸ்டொகிநெட் வண்ணத்துப் பூச்சி & கிஃப்ட்ராப்
விடுமுறைக்காலம் கூட இருவருக்கும் இந்த வேலையில் தான் போயிருக்கிறது. அனுபவித்துச் செய்திருக்கிறார்கள்.
அழகான ஆந்தை
தையல் வேலை
ஒரு விடயத்தை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இதில் என் பங்கு அதிகம் இல்லை. யோசனை சொன்னேன். எப்போவாவது மேற்பார்வை செய்தேன். ஊக்கம் கொடுத்தேன். மீதி எல்லாம் அவர்கள் வேலைதான். தாங்களாகவே விலையும் நிர்ணயம் செய்தார்கள். 50 சதம் முதல் $3.50 வரை ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயித்திருந்தார்கள். ஆசிரியர்களிடம் விற்பனையை ஆரம்பித்தார்கள். தபாலுறைகள் இல்லாதது யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.நன்றாக விற்பனையாகின்றன.
முதல் நாள் விற்பனை $11.50. இன்று $13.00
சந்தைக்கு நடுவே 2 நாட்கள் மீதமுள்ளன.
வெள்ளிக்கிழைமை மதிய இடைவேளையின் பின் மீந்திருப்பவற்றுக்கு தபாலுறைகள் தயாரித்து இணைக்க இருக்கிறார்கள். தேவைப்பட்டால் விலைக்குறைப்பும் பரிசீலிக்கப்படுமாம். முழுவைதையும் விற்று முடிப்பதுதான் அவர்கள் நோக்கம்.
கீழே உள்ளவை நிறைவுறாதவை.
பதினொரு வயதான இவர்கள் திறமையையும், பாடசாலைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி சான்றிதழுக்கு சிபாரிசு செய்யலாம் என்று இருக்கிறேன்.
என்ன சொல்கிறீர்கள்!!