மு. கு
ஸாதிகாவின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்தப் பதிவு.
என் பெற்றோர் பொன்விழாவுக்காக (மணநாள்) நான் செய்த கேக் இது. ஸாதிகா பார்த்த படம் இதுவல்ல; இதனை விடத் தெளிவாக இருந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் அதனைத் தற்போது வெளியிட இயலாது உள்ளது . ;( இன்னொரு முறை பார்க்கலாம்.
இடது புறம் உள்ள சிறிய கேக் அவர்கள் விழாவின் போது வெட்டுவதற்காகச் செய்தது. 'ஸ்ட்ரக்க்ஷர்' மூன்று தட்டுகளால் அமைந்து இருந்தேன். அவற்றுள் முழுவதும் துண்டு போடப்பட்ட கேக்குகள், பொன்னிற ஆர்கன்சா துணிப்பைகளில். பைகள் தைத்து எடுத்துக் கொண்டேன்.
ஒரு மாதம் முன்பதாகவே கேக் செய்தாயிற்று. சுற்றி வைக்க.. பையில் போடவெல்லாம் ஏஞ்சல் வீட்டார் உதவினார்கள். (நண்பர்கள் பலரும் உதவ முன்வந்தனர் தான், எனக்கு என் கையால் செய்வதுபோல் வசதியாக இராது. ;) திடீர் திடீரென்று சிந்தனை மாறும். இவர்கள் அயலில் இருந்தார்கள்.. ரசனையும் எப்போதும் எங்களோடு ஒத்துப் போகும். என் எண்ணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்கள் இவர்கள்.
க்றிஸ் வழமைபோல் தனது ஆலோசனைகளோடு தேவையான உதவியும் செய்து கொடுத்தார். 'கேக் போர்ட்' அழகாக வெட்டித் தந்தார். (அறுகோணி வடிவம், மூத்த மகனது யோசனை.)
பெற்றோர் கேக் வெட்டியதும், மேலே உள்ள தட்டை எடுத்து வைத்து விட்டு (வெற்றுத் தட்டு இன்னமும் செபா வீட்டு மேஜை மேல் அலங்காரமாக இருக்கிறது,) அடுத்த இரண்டையும் அப்படியே 'ட்ரே' ஆகப் பாவித்துப் பரிமாறினோம். வெட்டுகிற வேலை & நேரம் மிச்சம் ஆகிற்று. ஒரே ஒரு சிரமம், வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு இவற்றை எடுத்துப் போவது - ஒரு வண்டியில் ஆளுக்கொரு தட்டாக எடுத்துக் கொண்டு போக்குவரத்துக் குறைவான சாலையாகப் பார்த்து மெதுவே பயணித்துப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துப் பொருத்தி விட்டேன்.
'பானர்' பெரிதாகச் செய்யும் நோக்கம் இருக்கவில்லை. எளிமையாக அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். கடையில் கிடைத்ததை எங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொண்டாயிற்று. யோசனை எனது, செயலாக்கியது க்றிஸ்.
மேசைச்சீலையிலிருந்து தேவைப்பட்ட அனைத்தையும் மஞ்சள் & பொன் வர்ணச் சாயல்களில் தெரிந்து கொண்டோம்.
நத்தார்க் காலம்... பொன்னிற 'மெர்குரிப்பந்துகள்' மலிவாகக் கிடைத்தன. சுவருக்கான அலங்காரம் அமைத்துக் கொண்டேன். (இனி வரும் வருடங்களில் அவை எங்கள் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும்.)
சுவரில் எங்கும் ஆணிகள் அடிக்கவில்லை, 'க்ளூடாக்' வசதியாக இருந்தது.
சாட்டின் துணியில் பெரிய 'போக்கள் ' வைத்து இரண்டு கதிரைகளுக்கு உறைகள் தைத்தேன். (நானே தைத்ததால் மீண்டும் தையல்களைக் கழற்றி விட்டு வேறு என்னவென்றாலும் தைத்துக் கொள்ள வசதியாகவே தையல் போட்டிருந்தேன்.)
ஒவ்வொரு மேசைக்கும் ஒற்றை மஞ்சள் மலர், 'டாலர் ஷாப்பில்' வாங்கிய மெழுகுவர்த்திக்கு மலரலங்காரம் என்று செய்து வைத்தேன்.
இந்தப் படத்தில் உள்ளவற்றை மட்டும் விபரித்திருக்கிறேன். விழா பற்றிய மீதி விபரம் பின்னர் எப்போதாவது வரக்கூடும்.
செபாம்மா திருமணத்தின் பொது அவரது பெற்றோர்கள் உயிரோடு இல்லை; ஒரு தம்பியார் மட்டும் இருந்தார்.
ஐம்பதாவது மணநாளை சிறிதாக இருந்தாலும் என்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். நினைத்தபடியே அனைத்தும் நன்றாகவே நடந்தது. அதற்கும் மேல் மறுநாள் அம்மா தொலைபேசியில் அழைத்து தன் திருமணத்தன்று இருந்ததை விடவும் முதல் நாள் தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகச் சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என் அன்புப் பெற்றோருக்கு என்னாலான ஒரு சிறு பரிசு. ;)