Wednesday 14 September 2016

எதுவும் கடந்து போகும்!

இது.... ஊரிலிருந்த காலத்தில்... கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முன்பு, நான் தைத்த தலையணை உறையில் இருக்கும் பூவேலைப்பாடு. அப்பா ஸிக்ஸாக் மெஷின் வாங்கிக் கொடுத்ததும், முதல் முதலில் தைத்துப் பார்த்த ஆப்ளிக் வேலை இது. ஊரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அம்மா இங்கு வரும் போது கூட எடுத்து வந்திருந்தார். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த படத்தை இந்த இடுகைக்காக தேடிப் பிடித்தேன்.
           
காலையில், வழக்கமாகப் பாடசாலையில் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டுத் திரும்பினேன். அருகே தரித்திருந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் பெண் ஒருவர்... ஏதோ தைப்பது போல் தெரிந்தது.

இறங்கி நான்கைந்து அடி தாண்டி நடந்திருப்பேன். மனம் திரும்பிப் பார்க்கச் சொன்னது. அந்தப் பெண் மும்முரமாகத் தைத்துக் கொண்டிருந்தார். என்னவோ தோன்றிற்று... அருகே சென்றேன்.

"Hi! good morning"

சத்தம் கேட்டு நிஷ்டை கலைந்தது போல் நிமிர்ந்தார். சின்னதாக ஓர் புன்னகை. ஆனால்... ஏதோ ஒன்று குறைந்தது போல் தெரிந்தது.
ஆளமான அமைதிப் புன்னகை!
ஓர் தீவிரம் இருந்தது அவர் முகத்திலும் வேலையிலும்.

"என்ன தைக்கிறீர்கள்? அழகாக இருக்கிறது."

காற்றும் அதிராமல் நிமிர்ந்து துணியைக் காட்டினார். ஓர் நீள்சதுர வெள்ளைத் துணியில், மாட்டியிருந்த தையல் வளையத்தின் நடுவே ஓர் சிவப்பு நிறப் பூவை உருவாக்கிக்கொண்டிருந்தார். சுற்றிலும் பரவலாக, பெரிய பெரிய செவ்வரத்தம்பூக்களும் இலைகளும் தெரிந்தன. சாமோவன் பெண் என்னும் என் ஊகம் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

முப்பது வயது இருப்பார் என்று நினைக்கிறேன். பிள்ளைகளோ மருமக்களோ அல்லது சகோதரர்களோ எங்கள் பாடசாலையில் கற்க வேண்டும். அவர்களை இறக்கிவிட்டு தையலில் ஈடுபட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட பாதி தையல் வேலை முடிந்திருந்தது. மீதி, பென்சில் கோடுகளாகத் தெரிந்தது.

"வேலைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு முப்பது நிமிடங்கள் தைத்துவிட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும்." என்றார் மென்மையாக.

"கடந்த வாரம் என் கணவரை இழந்துவிட்டேன். அந்தத் துயரிலிருந்து வெளியே வரும் முயற்சி இது." என்றார் அதை விட மென்மையாக.  ஒரு நொடி பேச்சிழந்து நின்றேன்.

அவர் கண்கள் கலங்கவில்லை; ஆனால் வெறுமை மட்டும் அழுத்தமாகத் தெரிந்தது. அவர் முகத்தில், வெளியே வந்துவிடவேண்டும் என்கிற உறுதியும் அதற்கு மேல் ஓர் தெளிவும்  தெரிந்தது.

ஒரேயடியாக உடைந்து போகாமல் மீள நினைக்கும் அவர் போக்கு... மனதைத் தொட்டது. இழப்புகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை நீரோட்டத்தோடு இயல்பாகப் பயணப்பட நினைக்கும் அவர் முயற்சி  வெற்றியளிக்க வேண்டும். சின்னதாக ஓர் பிரார்த்தனை மனதினுள் ஓடியது.

என் பேச்சு அவர் துயரத்தைக் குறைக்க உதவாவிட்டாலும் பரவாயில்லை;  அதிகரிக்க வைத்து விடக் கூடாது. நானும் அவர் போக்கிலேயே, மென்மையாக தையலைப் பாராட்டிவிட்டு, இன்றைய நாள் நன்றாக அமையட்டும் என்று வாழ்த்திவிட்டுக் கிளம்பினேன்.

Thursday 1 September 2016

வாழ்த்துகளும் வாழ்க்கையும்

திடீரென்று ஒரு ஞானோதயம்,
ஒரு நாள் பிறந்த நாட்டிலிருந்து எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிளம்பி இங்கு வந்து சேர்ந்த மாதிரி, இந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்தால்! :-)

இப்போது... பெட்டி பெட்டியாகச் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் தரம்பிரிக்கப் படுகின்றன. அனேகமாக இம்முறை, நினைவுகளை இரைமீட்டுப் பார்த்து ரசித்துவிட்டு வீசிவிடுவதாக ;( இருக்கிறேன்.

வீசப் போவது.... நினைவுகளை அல்ல. அவை என்றும் என்னுடன் இருக்கும். :-)
சின்னக் கைகள் அன்பாக அனுப்பிய ரோஜாக்கள்
ஃபெல்ட் பென், ஸ்டாம்ப் பென் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அட்டை மட்டும் ரோஜா வர்ணம்;
ரோஜாவோ வர்ணம் இல்லாத வண்ணம்! :-)
 குமிழ்முனைப் பேனைகள் + ஒட்டும் கற்கள்
பொதியுள் பொதிந்து வைத்த அன்பு
சின்னக் கைகள், விட்ட பிழை எதையோ மறைக்க முயன்றிருக்கின்றன. :-)
 பழைய வாழ்த்திதழ் எதிலிருந்தோ பூக்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.
 :-) சிரமப்பட்டிருக்க வேண்டும். வளைவுகள் வெட்டும் கத்தரிக்கோலினால் ஓரங்கள் வெட்டப்பட்ட அட்டையில், காய்ந்த இலைகள். 
நிறம் நிரப்பி, அது நிரந்தரமாக இருக்கவென்று clear seal ஒட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கிளைகள் தான் இங்கு குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரோஜா - ஒரு திருமண அழைப்பில் இருந்து வந்திருக்க வேண்டும்.
 உலர்ந்த இலைகள் உதிர ஆரம்பித்துவிட்டன. 
வயது போகிறது! :-)
சற்றுப் பெரிதான அட்டை!
சின்னவர்கள் வளர ஆரம்பித்ததற்குச் சாட்சியாக, வாழ்த்திதழிலும் மெருகு கூடியிருக்கிறது.

இன்னும் சில இருக்கின்றன. அவை பிறிதொரு சமயம் பார்வைக்கு வரும்.

சின்னவர்கள் நால்வர் சேர்ந்து அனுப்புவார்கள். அவர்களுள் வரைபவர் ஒருவர் இருந்தார்.

இப்போது எல்லோரும் வளர்ந்துவிட்டார்கள். வேலை, திருமண வாழ்க்கை, படிப்பு, திரவியம் தேடித் திரை கடல் ஓடுதல் என்று ஆளுக்கு ஒரு திக்காகப் பிரிந்து போனார்கள். 

இதுதான்... வாழ்க்கை.
சின்னவர்கள் நால்வரும் எல்லாச் சிறப்புகளுடனும் சந்தோஷமாக வாழ... என்றும் என் பிரார்த்தனைகள்.
Love you kutties. :-)