Friday 1 November 2019

நத்தார் வருகிறது

நான் முன்பு கற்பித்த பாடசாலையிலிருந்து விலகிய சில நட்புகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தோழி ஒருவர் வீட்டில் சந்திப்போம். ஆளுக்கொரு உணவுப் பண்டம் எடுத்துப் போவோம். பெரும்பாலும் என்னிடம் விரும்பிக் கேட்பது என் 'கட்லட்'. ஒருவர் பப்படம் கூடக் கேட்பார். :-) அதை எப்படிச் சமைப்பது, சமைக்கும் முன் பார்க்க எப்படி இருக்கும் என்பதெல்லாம் அறியாதவர் அவர். 

இதைத் தட்டும் சமயம் அம்மா சொன்ன அவரது தோழியின் கதை நினைவுக்கு வருகிறது. பப்படம் பொரிக்கச் சொல்ல, அதைக் கழுவி வடியவிட்டுப் பொரித்தாராம். ;D 

இப்போது படம் சொல்லும் கதைக்கு வருவோம். 2016 ஆரம்பத்தில் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலைக்கான பொருட்கள் எல்லாம் மலிவு விலையில் விற்பனைக்கிருக்கும் சமயம் குட்டிக் குட்டி 'நோட் புக்' ஆறு சதம் விலை போட்டிருந்தார்கள். பாடசாலைக் கைவேலைக்கு உதவும் என்று கொஞ்சம் வாங்கியிருந்தேன். பயன்படுத்தியது போக நான்கைந்து மீதி இருந்திருக்கும். அம்மாவின் மரணத்தின் பின் அவரது பொருட்கள் மத்தியில் நிறையக் கிடைத்தன. 

என்ன செய்வது? எந்த வழியும் புலப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் என் பயன்பாட்டுக்கு ஒன்று மட்டும் எடுத்துக் கொள்வேன். அந்த ரீதியில் போனால் எனக்கு 80 வயதாகும் வரை பயன்படுத்தலாம். ;) அத்தனை இருந்தன. 

கார்த்திகை வர, மின்னஞ்சல் வந்தது எங்கள் ஆசிரியர் சந்திப்புப் பற்றி. ஆளுக்கு ஒரு சின்ன அன்பளிப்பு கொடுப்பதானால் என்ன கொடுக்கலாம்! பெற்றுக் கொள்பவருக்கு, எனக்கு எதையும் எடுத்து வரவில்லை என்கிற சங்கடம் வரக் கூடாது. அதனால் அன்பளிப்பு சின்னதாக இருக்க வேண்டும். அதே சமயம் பயனுள்ளதாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தபடியே அதையும் இதையும் கிளற... கண்ணில் பட்டது என் பழைய வாழ்த்திதழ் சேகரிப்பு.

செயலில் இறங்கினேன்.

ஒரு பக்கம் எழுதிய வெள்ளை அட்டைகளை நடுவில் (இரும்பு அடிமட்டம் & ஸ்கோரர் பயன்படுத்தி) அழுத்தி மடித்துக் கொண்டேன்.
அவற்றைக் கொப்பிகளின் அட்டைகள் மேல் ஒட்டினேன். 
காய்ந்த பின் மேலதிகமான அட்டைகளை வெட்டி நீக்கினேன்.
வாழ்த்திதழ்களிலிருந்து அளவான படங்களையும் வாழ்த்து வாசகங்களையும் வெட்டிக் கொண்டேன்.
படங்களை முன் அட்டையின் வெளிப் பக்கமும் வாசங்களை அதன் உட்பக்கமும் ஒட்டிவிட்டேன்.
வாழ்த்திதழ்களில் எழுதுவது போல கையொப்பமிட்டேன்.
சின்னதாக ஒரு ரிபன் 
கட்டியதும் அன்பளிப்புகள் தயாராகிவிட்டன.
அனைத்தையும் ஒரு பையில் (நினைவாக தேவைக்கு மேல் சிலது எடுத்துக் கொண்டேன். எதிர்பாராது யாராவது வந்திருந்தால் சிக்கலாகிப் போகுமல்லவா?) போட்டு எடுத்துச் சென்றேன். விருந்து முடிந்து பிரியும் சமயம், 'லக்கி டிப்' போல ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ளக் கொடுத்தேன். நத்தார் காலத்திற்கான குறிப்புகளைக் குறித்து வைத்தால் மறு வருடம் கூட தேவைக்கு எடுத்துப் பார்க்கலாம். 

எல்லோருக்கும் அன்பளிப்பு பிடித்திருந்தது. இம்முறை தற்போதையை பாடசாலை நட்புகளுக்காகச் செய்ய இருக்கிறேன். 

என் சேகரிப்பும் மெதுவே பயனுள்ள விதத்தில் குறைந்து வருவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது.

Friday 18 October 2019

அம்மாவின் நினைவுநாள்

முக்கிய நிகழ்வு ஒன்றுக்காக, குடும்பத்தாருக்குக் கொடுப்பதற்காக சின்ன அன்பளிப்புகள் செய்ய விரும்பினேன். 

அம்மாவின் முகம் மட்டும் வரக் கூடியதாக 'ப்ரிஜ் மாக்னட்' செய்யலாம் என்று தோன்றிற்று.  வீட்டுக்கு ஒன்று என்கிற விதத்தில் எண்ணிக் கொண்டேன். படங்கள் (இறுதி அஞ்சலிக்காக அடித்த மடல்களில்) தேவைக்கு மேலேயே இருந்தன. லாமினேட் செய்து பின்பக்கம் காந்தம் ஒட்டலாமா! அம்மாவே நிறையப் பழைய காந்த அட்டைகளும் லாமினேட்டிங் உறைகளும்  சேகரித்து வைத்திருந்தார்கள். பாடசாலைத் தோழி ஒருவர் பாரமில்லாத லாமினேட்டர் ஒன்று வைத்திருக்கிறார். அவரிடம், ஒரு வார இறுதிக்காக இரவல் வாங்கலாம். 

அதற்குள்... செராமிக் பெய்ன்டிங் பெட்டியில் சின்னச் சின்ன டைல்கள் இருப்பது நினைவுக்கு வந்தது. எடுத்துப் பார்த்தேன். வெண்மையாக இருந்தவை கச்சிதமாக இருக்கும் என்று தோன்றிற்று.

இனி... செய்முறை சுருக்கமாக
1. ஒரு டைலை அட்டையொன்றின் மேல் வைத்து வெளிக் கோடு வரைந்து சுற்றிலும் வெட்டிச் சற்றுச் சிறிதாக்கிக் கொண்டேன். (டைலின் அளவுக்கோ அதை விடச் சிறிது பெரிதாகவோ படம் இருந்துவிட்டால் பிறகு படம் உரிந்து போகலாம்.)

2.  இந்த அட்டையை வைத்து படங்களை அளவாக வெட்டிக் கொண்டேன். (ஓரங்களில் சிலும்பல் இல்லாது இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த வேலைக்கு க்ராஃப்ட் நைஃப் நல்லது.)

3. அதே அளவில் காந்தத் தாள்களையும் வெட்டிக் கொண்டேன். (மூலை கூராக இருந்தால் காந்தம் பிரியக் கூடும்.) 
4. இரவு காந்தத்தை ஒட்டிக் காயவிட்டேன்.
5. மறுநாள் காலை டைலின் மேற்பக்கத்தை மெதைலேட்டட் ஸ்பிரிட் கொண்டு துடைத்துவிட்டு (சட்டென்று உலர்ந்துவிடும்.) படங்களை ஒட்டினேன்.
6. மாலை நன்றாக உலர்ந்து இருந்தது. மேலே ஒற்றைப் பூச்சாக வார்னிஷ் கொடுத்தேன். (வார்னிஷ் படத்திற்கு வெளியேயும் பட வேண்டும். அப்போதுதான் படத்துக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைக்கும்.) ஃப்ரிஜ்ஜில் ஒட்டிக் கொள்ளப் போவதால் ஒரு கோர்ட்டிங் போதும்.

மறு நாள் காலை உலர்ந்திருந்தது. பிறகு பபிள் ராப் தேடி, அளவுக்கு வெட்டிச்  சுற்றி ஒட்டி வைத்தேன். என்னுடையதை ஃப்ரிஜ்ஜில் ஒட்டிவிட்டேன்.

வருடாவருடம் நினைவுநாட்கள் வரத்தான் போகிறது. அந்தச் சந்தர்ப்பங்களை / சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday 12 September 2019

சட்டத்துள் பூக்கூடை

முக்கியமான ஒரு உறவினருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு என் அன்பு வாழ்த்துக்கள். காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது! சின்னக் குழந்தையாகப் பார்த்தவருக்கு இன்று __ வயது! :-)

வாழ்த்திதழுக்கான உத்திகள் ஏற்கனவே பயன்படுத்தியவை தான். புதிதான விடயம் - புகைப்படத்தில் தெரியாது - முப்பரிமாணத் தோற்றம் ஒன்று கொடுத்திருக்கிறேன். பூக்களையும் இலைகளையும் தட்டையாக ஒட்டாமல் தூக்கலாகத் தெரியும்படி ஒட்டினேன். அவை தபாலில் பயணப்படும் போது அமர்ந்து போகாமல் இருக்க வேண்டுமே! 
ரோஜா நிற அட்டையின் உட்புறம் OHP தாள் ஒன்றை வெட்டி ஒட்டிவிட்டு 0.3 சென்டிமீட்டர் உயரத்திலான ஃபோம் துண்டுகளை ஒட்டி வாழ்த்திதழில் இணைத்திருக்கிறேன்.
புகைப்படத்தில் 
வெளியே சிவப்பாகத் தெரிவது கடிதஉறை மட்டுமே. :-) 

Monday 26 August 2019

பாடசாலைக்காக

முதல் முறை என் பகுதியைச் சேர்ந்த நட்பு ஒருவரது பிரிவுபசாரத்திற்காக ஓர் வாழ்த்திதழ் செய்து கொடுத்திருந்தேன். அது நானாகவே விரும்பிச் செய்தது. அதைப் பார்த்து விட்டு பாடசாலை சார்பாக அனுப்பப்படும் வாழ்த்துச் செய்திகள், நன்றிச் செய்திகள், துயர் பகிர்வு என்று எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியதாக பன்னிரண்டு செய்து கொடுக்கக் கேட்டார்கள்.

முன்பே சொல்லிவிட்டேன், என்னால் ஒரே விதமாகச் செய்து கொடுக்க இயலாது, அப்படிச் செய்தால் சலிப்பு வரும்; கவனம் எடுத்து வேலை செய்ய இயலாது என்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரிச் செய்தால் பரவாயில்லை என்று சொன்னார்கள்.

அட்டை வாங்குவதிலும் பிரச்சினை இருந்தது. முன்பு 'லெதர் க்ரெய்ன்' அட்டைகள் (அனைத்தும் ஓர் அலுவலகத்திலிருந்து மீள்சுழற்சிக்காக என்னிடம் கொடுக்கப்பட்டவை.) பயன்படுத்தினேன். அவை வெகு அழகாக இருக்கும். பிற்பாடு எத்தனையோ கடைகள் ஏறி இறங்கியும் அவை கிடைக்கவில்லை. 'லெதர் க்ரெய்ன்' கடதாசிகள் இருக்கின்றன, அட்டைகள் எங்கும் இல்லை. அமேசனில் கிடைக்கும். குறைந்தது ஆயிரம் வாங்க வேண்டும். ஏற்கனவே உள்ள குப்பையைக் குறைக்க நினைத்துத்தான் இப்போ களம் இறங்கி இருக்கிறேன். மீண்டும் குப்பை சேர்த்தால் எப்படி! :-)

இங்கு பயன்படுத்தி இருப்பவை....
வெள்ளை - லெதர் க்ரெய்ன்
மீதி மூன்று நிறங்களும் 'லினன் க்ரெய்ன்' அட்டைகள்
பாடசாலை இலச்சினை - புத்தக அடையாள அட்டை ஒன்றிலிருந்து வெட்டியது.

Sunday 25 August 2019

தமிழால் இணைந்தோர்

அம்மாவை நிரந்தர‌ வைத்திய‌ கண்காணிப்புப் பிரிவில் சேர்க்க‌ வேண்டியதாக‌ இருந்த சமயம் அது. அப்பா! தானே அம்மாவைப் பார்ப்பதாகச் சொன்னார். அடம் பிடித்தார் என்று கூடச் சொல்லலாம். :‍) இயலாது என்பது எமக்கு நன்கு தெரிந்திருந்திருந்தது. அம்மாவை அனுப்பியே ஆகவேண்டும் என்று மருத்துவமனை இறுக்கிய‌ பின், அம்மாவைப் பரிசோதிக்க‌ வந்த‌ அலுவலர் ஏதோ கேள்விக் கொத்தை வைத்துக் குடைந்து ;‍) அதில் அப்பா 30 புள்ளிகளுக்கு மேல் எடுக்காததால் அவரும் ஓய்வு இல்லத்திற்குப் போவதே நல்லது என்று தெரிவித்தார் அறிவித்தார் முடிவுசெய்தார்.

அரை மனதாய் - அடம் பிடித்து, என்னுடன் முகம் காட்டி ;) நான் என்ன‌ செய்வேன்! சின்னவர் திருமண வரெவேற்பு முடிந்த‌ இரண்டு நாட்களில் இல்லத்திற்கு அழைத்துச் சென்றாயிற்று. அப்போதும்... சுத்தியல் வேண்டும், ஸ்பானர் வேண்டும் என்றார். :‍)

ஒரு வாரம் கழித்துச் சொன்ன‌ விடயம்... "எனக்கு இந்த‌ இடம் மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல‌ வேலை செய்தீர்கள். நல்ல‌ இடத்தைத் தெரிந்து கொண்டுவந்து விட்டிருக்கிறீர்கள். அறை பிடித்திருக்கிறது. உணவு பிடித்திருக்கிறது. + + + +"

உணவு அறையில் ஒரு சதுர‌ மேசையில் அப்பாவுடன் ஒரு தமிழ் அன்ரி, இன்னொரு தமிழ் அங்கிள்; நாலாமவர் குஜராத்தி அங்கிள் அமர்ந்திருப்பார்கள்.

நாலாமவர் சிரிக்க‌ மட்டும் செய்வார். அவருக்கு எல்லாம் குழந்தை ஆகாரம் போல‌ அரைத்துக் கொடுப்பார்கள். தானே எடுத்துச் சாப்பிடுவார். நிறையக் கொட்டும். அதனால் அருகே இருப்போர் ஊட்டி விடுவார்கள். நான் உணவு வேளையில் இருந்தால் அப்பாவோடு பேசிக் கொண்டே ஊட்டிவிடுவேன். (அதிரா வந்தால் தானே 'தீத்தி' என்று திருத்தி வாசிக்கட்டும்.) அவரது மனைவி பெரும்பாலும் தினமும் ஒரு வேளை அங்கு வருவார். என் இரண்டாவது மருமகள் குஜராத்தி (தூரத்து உறவு - ‍ சிறிய‌ தாய் முறை) என்பதால் இவருடன் பேச‌ எனக்கு விடயங்கள் இருக்கும். நன்றாகப் பேசுவார்.

தமிழ் அங்கிளின் மகள் தினமும் இரவு உணவுக்கு (5 மணிக்கு) அங்கு இருப்பார். தன் தந்தைக்கு தோசை எடுத்துப் போகும் சமயம் என் அப்பாவுக்கும் எடுத்துப் போவார். அவரே சுட‌ வைத்துப் பரிமாறுவார். அப்பாவுக்கு இன்னொரு மகள் போல‌ ஆகிவிட்டார். பின்பு அவரது சகோதரரும் வந்து போனார். ஒரு சமயம் அப்பாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அப்பாவை மேசையில் காணாவிட்டால் அறைக்குப் போய் எழுப்பி அழைத்து வருவார்கள் இருவரும்.

அன்ரி பற்றி தனியே ஒரு பதிவு எழுத‌ வேண்டும். அத்தனை அற்புதமான‌ பெண்மணி. நான் போகாத‌ சமயம் அப்பாவைப் பற்றி ஏதாவது இடிபாடாக‌ தன் மனதுக்குத் தோன்றியிருந்தால் என்னிடம் சொல்லிக் கவனிக்கச் சொல்லுவார். தன்னால் தன் குடும்பத்தாருக்கு எந்த மனக்குறையும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியானவர்.

நான்! எனக்கு மற்றவர்களால் ஏற்படும் சிரமம், மற்றவர்களுக்கு என்னால் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். போவேன், பார்ப்பேன், பேசுவேன். ஏதாவது உதவி கேட்டால் கூட அவர்கள் வீட்டார் இடத்தில் என்னை இருத்திப் பார்த்து ஆராய்ந்து, சின்னதாகக் கூட ஒரு பிரச்சினையும் இல்லை என்று மனம் சொன்னால் மட்டும்தான் செய்கிறேன். இது ஆசிரியையாகப் பணியாற்றும் காரணத்தால் வந்த பக்குவம் மட்டுமல்ல, இமாவாக வாழ்க்கை கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் அடிகளும் காரணம்.

சில மாதங்கள் கழித்து இன்னொரு தமிழ் அங்கிளும் வந்து இணைந்திருந்தார். அவர் இருந்தது தொலைவில் வேறு பிரிவில்; சக்கர‌நாற்காலி பயன்படுத்தினார். அப்பா இடைக்கிடை போய்ச் சந்தித்ததாகத் தெரிந்தது. நான் போகும் போது கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து இவரைப் போய்ப் பார்த்து வருவேன். பெரிதாக எதுவும் விசாரிப்பது இல்லை.

இந்த‌ நான்கு தமிழருள் யாருக்கு விருந்தாளிகள் வந்தாலும் அவர்கள் மற்றவர்களைப் போய்ச் சந்தித்துப் போக‌ மறப்பதில்லை. அறியாதவர்களாக‌ இருந்தாலும் போய்ச் சந்திக்கிறார்கள். அங்கு இரு தமிழ்த் தாதியர்களும் உள்ளனர். 
                          
பல‌ தமிழ் பேசும் சிறுமிகள் தொண்டுவேலைக்காக‌ வருகிறார்கள். இதனையிட்டு இவர்களுக்கு புள்ளிகள் உண்டுதான். இருந்தாலும் இதற்கும் ஒரு தனித் தைரியம் வேண்டும். சில‌ நாட்களில் ஒரு சிறுமி அம்மாவுடன் ஸ்க்ரிபிள்ஸ் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டுக் குழப்ப‌ மனமில்லாமல் அப்பாவின் அறைக்குச் சென்றிருக்கிறேன். இன்னொரு சிறுமி அம்மாவுடன் சேர்ந்து ஒரிகாமி செய்வார். பிறகு செய்த பொம்மைகள் அங்கு வேலை செய்வோரது பிள்ளைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார்.
                          
இப்போது அப்பாவும் அன்ரியும் மட்டும்தான் அங்கு இருக்கிறார்கள்.

Friday 23 August 2019

மூன்று மெழுகுவர்த்திகள்


இன்று எங்கிருந்தோ கண்முன்னே வந்து குதித்தது இந்தப் படம். செய்தது எப்போது என்பது நினைவில் இல்லை ஆனால் யாருக்காகச் செய்தேன் என்பது நினைவிருக்கிறது. பல வருடங்களின் முன்பு செபாவின் பக்கத்து வீட்டுச் சிறுமிகளில் ஒருவர் - அனிக்கா அல்லது அனன்யாவின் மூன்றாவது பிறந்தநாளுக்காகச் செய்து கொடுத்தேன்.

கரை - எனக்கு மிகவும் பிடித்த செப்பு வர்ணத்திலான ஸ்டிக்கர்.
கேக் - corrugated அட்டை
மெழுகுவர்த்திகள் - கையில் அகப்பட்டகடதாசி எதுவோ

சுடர் - உண்மையில் புகைப்படத்தில் இருக்கவில்லை. வேலை முடியும் முன்பே புகைப்படம் எடுத்திருப்பேன். பெரும்பாலும் வேலை முடிந்த சந்தோஷத்தில் அனுப்பும் முன் புகைப்படம் எடுப்பது மறந்து போகும். பிறகு வரைந்திருக்கிறேன்.

மூத்த பெண்ணின் முதலாவது பிறந்தநாளுக்கும் ஒன்று செய்திருந்தேன். அது சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்கள் அமைப்பில் ஆன பொத்தான்களை ஒட்டிச் செய்தது. பின்பக்கம் இருக்கும் வளையங்களை குறட்டினால் வெட்டி நீக்கி இருந்தேன். அப்போது என் கையில் இருந்தது ஃபில்ம் ரோல் போடும் கமரா. முக்கியமான நிகழ்வுகளைத் தவிர வேறு எதையும் படம் எடுத்து வைக்க நினைத்திராத காலம் அது.Wednesday 21 August 2019

தொட்டிச் செடிகள்

ஒரே நாளில் இருவருக்குப் பிறந்தநாள் வருடத்தில் மூன்று முறை எங்கள் பகுதியில் (வேலையில்) வரும். என்னோடு பிறந்தநாள் கொண்டாடுபவர் ஒருவரும் இருக்கிறார்.

சற்று நேரம் குறைவாக இருந்த சமயம் இருவருக்காகச் செய்தவை இங்குள்ளவை இரண்டும்.

கூடைகள் - http://imaasworld.blogspot.com/2019/08/blog-post_13.html ல் பயன்படுத்திய மிட்டாய்ப் பெட்டியின் மீதியை ஒரு அட்டையின் மேல் ஒட்டியிருக்கிறேன். 3D ஸ்டிக்கர் வைத்து உயர்த்தினேன்.
இலைகள் - கடதாசி
பூக்கள் - குட்டி பஞ்ச் பயன்படுத்தி வெட்டி எடுத்து, நடுவே மை இல்லாத பேனையால் அழுத்திவிட்டு கொத்தாக வரும் விதமாக ஒட்டியிருக்கிறேன்.
கரை & எழுத்துகள் - ஸ்டிக்கர்

Tuesday 20 August 2019

வெள்ளை மலர்கள்

மீண்டும் ட்ரலிஸ் வேலை ஒன்று செய்தேன். இம்முறை மெல்லிய தீரைகளாக வெட்டியிருக்கிறேன்.

A4 அட்டை ஒன்றை மூன்றாக மடித்து, நடுப் பகுதியின் உட்புறம் தீரைகளை ஒட்டி, அதன் மேல் ஒரு வெள்ளை நிற அட்டையை ஒட்டி, முன் பக்கம் இருந்த அட்டையை மடித்து வெள்ளை அட்டையை மறத்து ஒட்டினேன். பூக்கள் - ஒரு திருமண அழைப்பிதழை பஞ்ச் செய்து எடுத்தது. இலைகள் சாதாரண நிறக் கடதாசியில் பஞ்ச் செய்தேன்.

இந்த வேலி வேலை, பிடித்திருக்கிறது. அடிக்கடி செய்வேன் என்று நினைக்கிறேன். அடுத்த முறை பூக்களை மாற்றலாம் என்று இருக்கிறேன்.

Sunday 18 August 2019

எண்பதாவது பிறந்தநாளுக்கு


100% என் வேலை என்று உரிமை கொண்டாட முடியாத வேலை இது. ஆனால் ரசித்துச் செய்த வாழ்த்திதழ்.

அப்பாவின் எண்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு விசேடமான நண்பரிடமிருந்து கிடைத்த வாழ்த்து மடல் (Hallmark card)  ஒன்று இருந்தது. எப்போது பயன்படுத்தக் கிடைக்கும் என்று காத்திருந்தேன். காலம் வந்தது. அப்பாவின் சகோதரியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. இவரை விட இந்த வாழ்த்திதழைப் பெற்றுக் கொள்ள உரித்தானவர் வேறு யாரும் இருக்க முடியாது.பிரதான பாகத்தை அலங்காரக் கத்தரிக்கோலினால் வெட்டி எடுத்து புதிய அட்டையில் 3D ஸ்டிக்கர்கள் கொண்டு உயர்த்தி ஒட்டிக்கொண்டேன். இலக்கத்தின் நடுவில் இருந்த பொன் நிறக் கடதாசி ஏற்கனவே இருந்தது தான். நான் மேலதிகமாகச் செய்த வேலை - இலக்கங்களின் நடுவே உள்ள பூக்கள், வெளியே உள்ள பூக்கள் & இலைகளுடன் இருபக்கமும் தெரியும் நெளிந்த கோடுகள். 

தொலையாமல் போய்ச் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

பூ வேலி


அட்டையில் கூடை பின்னி வாழ்த்திதழ் செய்திருக்கிறேன். ஒரு மாற்றத்திற்கு இம்முறை வேலி. 'ட்ரெலிஸ்' எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் கொடிகள் பற்றி, பூக்கும் போது அழகாக இருக்கும் அதுவும் 'ஸ்வீட் பீஸ்' பூத்திருந்தால் கொள்ளை அழகு.  

இம்முறை ஓர் மூலையில் பூக்கள் ஒட்டியிருக்கிறேன். எப்பொழுதாவது கொடி படர்ந்திருப்பது போல் ஒன்று செய்யவேண்டும்.

  • அட்டையை தேவையான அளவுக்கு இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும்.
  • அட்டையின் நடுவே ஒரு செவ்வகம் வெட்டி நீக்க வேண்டும்.
  • அதை மெல்லிய தீரையாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • முன் அட்டையின் உட்புறம் அளவாக இடைவெளி விட்டு தீரைகளை ஒரே விதமாகச் சரித்து ஒட்ட வேண்டும். ஒட்டொய பின் மேலதிகமானதை வெட்டி விடலாம். முன்பே அளந்து வெட்டுவது சிரமம்; கால விரயமும் கூட.
  • ஒட்டியவற்றுக் குறுக்காக அதே அளவு இடைவெளியில், இம்முறை குறுக்குத் தீரைகளிலும் புள்ளிகளாக 'க்ளூ' வைத்து ஒட்டிவிட வேண்டும்.
  • வாழ்த்திதழின் அளவிலான ஓர் அட்டையை (நிறம் உங்கள் இஷ்டம்.) மேலே ஒட்டிவிட்டால் வெட்டியவை ஒட்டியவை அனைத்தும் மறைந்து போகும்.
  • பின் பக்க அட்டையில் வாழ்த்து அச்சடித்த கடதாசியை ஒட்டிக்கொள்ளலாம்.
  • இப்போது மூடிப் பிடித்து ஓரங்களை ஒன்றாக வெட்டி சீர் செய்ய வேண்டும்.
  • பூக்களை உங்களுக்குப் பிடித்தபடி ஒட்டிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்த்திதழை எந்த நிகழ்வுக்காகவும் பயன்படுத்தலாம். பூக்கள் - வேறு வாழ்த்திதழ்களில் காணும் பூக்களை வெட்டிக் கூட ஒட்டிக் கொள்ளலாம். செய்வதற்கு வெகு சுலபம்; அழகுக்கும் அழகு.

இந்து யாருக்கு! என் மூத்த சம்பந்திக்கு. இன்னும் காலம் இருக்கிறது. அவர் தமிழரல்ல என்பதால் இங்கு வந்து பார்க்கமாட்டார் எனும் தைரியத்தில் இப்போதே பதிவிடுகிறேன். :-)

Saturday 17 August 2019

சிவப்பு மலர்கள்

இன்னொரு வாழ்த்திதழ்.

இது சென்ற வாரம் என் மூத்த மருமகளுக்காகச் செய்தது.


பயன்படுத்தியவை

leather grain board
ஓரம் வெட்டுவதற்கு அலங்காரக் கத்தரிக்கோல்

கூடை - பாய் + ரிபன்
பூக்கள் - கோல்கேட் பற்பசைப் பெட்டி + பூ பஞ்ச் + நக அலங்காரத்தில் பயன்படும் கற்கள்.
இலைகள் - ஃபோம் ஷீட்

கரை & happy birthday - ஸ்டிக்கர்கள்


பல வருடங்கள் முன்பு வாசலில் வைத்திருந்த சப்பாத்து ராக்கையை மூடி வைக்க ஒரு தட்டி செய்வதற்காக பாய் ஒன்றைப் பயன்படுத்தினேன். மீதியாக இருந்த பாய்த்துண்டு என் சேமிப்பில் இருந்தது. இப்போது அதற்கு ஒரு பயன்பாடு வந்திருக்கிறது. அதன்
பின் பக்கம் கடதாசியை ஒட்டி, காய விட்டு கூடை வடிவில் வெட்டினேன். ஓரத்தில் இருந்த சின்னத் தீரைகள் விலகிப் போயின. அது தெரியாத வகையில் அலங்கரித்திருக்கிறேன். கூடையையும் சில பூக்களையும் பின்புறம் 3D ஸ்டிக்கர்கள் வைத்து ஒட்டியிருக்கிறேன்.

Friday 16 August 2019

தாய்மை அடைய இருக்கும் தோழிக்கு

க்றிஸ்ஸின் மேலதிகாரிக்கு குழந்தை கிடைக்க இருக்கிறது. விடுமுறையில் செல்லும் முன் கொடுக்க ஒரு காட் வேண்டும் என்றார். அவருக்காகச் செய்தது இது.

வாழ்த்திதழ் செய்ய ஆரம்பித்த சமயம் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்திருக்கவில்லை. அதனால் இரண்டு நிறங்களையும் சேர்த்துச் செய்திருக்கிறேன். இரண்டு நிறங்களிலும் ஒவ்வொரு முழு A4 அட்டைகள் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு விதமாக மேலும் கீழுமாக ஒட்டி சில இஅடங்களை வெட்டி, மீதியான அட்டைத் துண்டுகளைத் தீரையாக வெட்டி, பின்னினாற்போல் வைத்து ஒட்டினேன். விளக்கப்படங்கள் இல்லாமல் விளக்குவது சிரமம் என்பதால் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

அடி மரம் - பொதி சுற்றி வந்த சணல்
பூக்கள் & இலைகள் -  அட்டையில் பஞ்ச் செய்து நடுவில் அழுத்தி எடுத்தது
கூடு - மூத்தவர் திருமணத்தின் போது கொடுத்த இனிப்புப் பெட்டி ஒன்றில் இருந்த ஒரு பக்கம் - உண்மையில் இரண்டு பக்கங்கள். ஒவோரு பக்கதிலும் ஒரு பெரிய குருவியும் ஒரு சிறிய குருவியும் இருந்தன. ஒன்றிலிருந்து சிறிய குருவியை வெட்டி நீக்கினேன். மறு பக்கம் திருப்பி வைத்து மற்றதன் மேல் கவனமாக ஒட்டிவிட இரண்டு பெரிய குருவிகளோடு ஒரு குஞ்சு இருப்பது போல் தெரிந்தது.
ரிப்பன் - ஏற்கனவே இனிப்புப் பெட்டியில் கட்டி இருந்த ரிபனிலிருந்து ஒரு துண்டு

Wednesday 14 August 2019

நன்றி மறவாமல்...

திருமண அழைப்பிதழ் ஒன்றைச் சுற்றி ஒரு பாச்மண்ட் பேப்பர் வந்திருந்தது. அதில் பொன் நிறத்தில் குறுக்கும் நெடுக்குமாக நெளிந்த கோடுகள் அச்சிடப்பட்டிருந்தன. கடதாசியில் இருந்த இரு மடிப்புகள் வழியே வெட்டிப் பிரித்தேன்.

(படத்தில் பெயரை மறைக்க முயற்சி செய்தேன். முடியவில்லை.
அலுவலகம் ஒன்றிலிருந்து வீச இருந்த குப்பைகளிடையே அட்டைகள் சி(ப)லதை நண்பர் ஒருவர் என்னிஅம் அனுப்பி வைத்தார். அந்த அட்டையின் கீழ் ஓரத்தில் அகலமாக கருநீல நிறத்தில் ஒரு பட்டை இருந்தது.

பாச்மண்ட் கடதாசியில் அகலத்தைக் குறித்துக் கொண்டு அந்த இடத்தை மை தீர்ந்த குமிழ்முனைப் பேனா ஒன்றினால் அழுத்திக் கோடிட்டேன். (இப்படிச் செய்தால் அட்டை அழகாக மடிந்துகொள்ளும்.) மீதி சற்று நீளமாக இருந்தது. அதை வெட்டி நீக்குவதற்குப் பதில் பஞ்ச் கொண்டு பூக்கள் & இலைகள் வெட்டிவிட்டேன்.

பாச்மண்ட் கடதாசியை double sided tape வைத்து முன்புற அட்டையில் ஒட்டினேன். என் கணிப்பு தவறாகிப் போயிற்று. கருநீலப் பகுதியில் பாச்மண்ட் கடதாசியின் கீழ் டேப் தெரிந்து அழகைக் கெடுத்தது.

உள்ளே அளவிற்கு மடித்த வெள்ளைக் கடதாசியை வைத்து ஒட்டி, உலர்ந்த பின் ஓரங்களை வெட்டிக் கொண்டேன்.

டேப் அடையாளம் அழகைக் கெடுப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதை மறைக்க மெல்லிய ரிப்பன் (பெண்களின் மேற்சட்டைகளில் தோட்பட்டையின் உட்புறமாக மெல்லிய ரிப்பன் - கோட் ஹாங்கரில் மாட்ட வசதியாக என்று நினைக்கிறேன் - வைத்துத் தைத்திருப்பார்கள். எனக்கு அது இடைஞ்சலாகத் தெரிவதால் வாங்கியதுமே அவற்றை வெட்டி எடுத்து விடுவேன். அந்த வகையில் கிடைத்ததே இந்த வெள்ளை சாட்டின் பேபி ரிப்பன்.) இரண்டு வரிகள் ஒட்டினேன். அடையாளம் காணாமற்போயிற்று. ஒட்டும் போது அட்டையின் இருவக்கமும் நீண்டு இருக்கும்படி வைத்தே ஒட்டினேன். ஈரமாக இருக்கும் போது ரிப்பன் சீராக வெட்டுப்படாது என்பதால் காய விட்டு மறுநாள் காலை வெட்டிவிட்டேன்.
அடுத்து Thank You ஸ்டிக்கரை கோடுகளின் சரிவை ஒத்துப் போகும் விதமாக வைத்து ஒட்டினேன். எழுத்து அச்சடித்த (எழுத்துகளை மறைத்திருக்கிறேன்.) முத்துகளைச் சேகரித்து, மெல்லிய தீரையாக வெட்டிய கடதாசியில் கோர்த்து, கடதாசியைப் பின்பக்கமாக மடித்து, அதையும் double sided tape உதவியால் ஒட்டிக்கொண்டேன்.

அட்டை வெண்மையாகவும் ஓரம் கருநீலமாகவும் இருந்ததால், அந்த நிறங்களில் சின்னச் சின்னப் பூக்களைப் பஞ்ச் செய்து எடுத்தேன். ஒரு மௌஸ் பாடின் பின்பக்கம் வைத்து நடுவில் மை இல்லாத பேனாவை வைத்து அழுத்த, பூக்கள் குவிந்தாற்போல் வந்தன. நீலநிறப் பகுதியில் வெள்ளைப் பூக்களையும் வெண்மை நிறப் பகுதியில் நீலப் பூக்களையும், ஒன்றுவிட்டு ஒரு சதுரத்தில் வரும் விதமாக ஒட்டிக் கொண்டேன். ஓரங்களுக்கு அரைப் பூக்கள் தேவைப்பட்டன. ஒரு மூலைக்கு ஒரு காற்பகுதி வேண்டி இருந்தது. எழுத்துகளை ஒட்டி வரும் இடங்களில் ஒரு முக்கால்வாசிப் பூவும் கூடத் தேவையாக இருந்தது. வெட்டி ஒட்டினேன்.

உள்ளே நான் நன்றி சொல்வதற்கான காரணங்கள் அனைத்தையும் என் கைப்பட எழுதி (என் கையெழுத்தின் மேல் ஈர்ப்புக் கொண்டவர்களில் இந்தத் தோழியும் ஒருவர்.) கொடுத்துவிட்டேன். அவரைப் பொறுத்த வரை அவர் எனக்கு எதுவும் விசேடமாகச் செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவர் லீவு கொடுக்க முடியாது என்று மறுத்திருந்தால் என் நிலை சிக்கலாகி உடைந்து போயிருப்பேன் என்பது நிச்சயம். ஒரு சமயம் பரீட்சை நாள் அன்று மருத்துவமனைக் கட்டிலிலிருந்து இருந்து செய்தி அனுப்பினேன். ஒரு நாள் அப்பா மருத்துவமனையில் என்று லீவு கேட்டேன். சென்ற வாரம் ட்ரிக்ஸிக்கு முடியவில்லை என்று லீவு. இங்கு பகிர்ந்து கொள்ள இயலாத சில நிகழ்வுகள் இவ்வருடம் நிகழ்ந்திருக்கின்றன. சிலவற்றை என் லீவுக் கணக்கில் சேர்க்கக் கேட்டேன்; மீதியை என் வேலை நாளாக இல்லாத நாட்களில் வேலை செய்து கழித்துக் கொள்வேன். நான் போகாத சமயம் எனக்குப் பிரதியாக வேறு யாரையாவது அனுப்பியே ஆக வேண்டிய கட்டாயம். என் வேலை அப்படி. லீவு சொல்லிவிடுவேன். மீதெல்லாம் தன் வேலைப் பளுவுக்கு நடுவே எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்பாடு செய்திருப்பார். நன்றி சொல்வதுதானே முறை!

Monday 12 August 2019

Get Well Card

பாடசாலைத் தோழி ஒருவர் சிகிச்சைக்குப் போக இருக்கிறார். தொடர்ந்து இரண்டு வாரங்கள் படுக்கையில் இருக்க நேரும். அவர் கணவருக்கு சமைக்கத் தெரியாது. மூன்று குழந்தைகள் - இருவர் எம் பாடசாலையில் கற்கிறார்கள். இந்த இரு வாரங்களும் தினம் ஒருவர் என்னும் விதத்தில் எம் பகுதி ஆசிரியர்கள் இரவு உணவு சமைத்து எடுத்துப் போவதாக இருக்கிறோம். ஒரு திங்கட்கிழமையைச் சமையலுக்காகத் தெரிந்திருக்கிறேன். எம் குழு சார்பாக அனுப்புவதற்காக இந்த வாழ்த்திதழைச் செய்திருக்கிறேன்.

எழுத்து - பழைய வாழ்த்திதழ் ஒன்றிலிருந்து கிடைத்தது.
கரை - சிவப்பு நிற அட்டை ஒன்றை தீரையாக வெட்டி எடுத்தேன்.
பூ இருக்கும் சிவப்பு அட்டை - திருமண அழைப்பு ஒன்றின் எழுத்து இல்லாத பக்கத்திலிருந்து ஓர் துண்டு
பெரிய பூ - பழைய நகை ஒன்றிலிருந்து
சிறிய பூக்கள் - திருமண அழைப்பு, பற்பசைப் பெட்டி & நகங்களுக்கு ஒட்டும் நட்சந்திரங்கள்.
காம்பு - 'ஃபோம் ஷீட்'
இலைகள் - நெஸ்ப்ரஸோ கிண்ணங்கள்
இரண்டு அட்டைகளையும் பெரிய பூவையும் 3D 'ஸ்டிக்கர்கள்' கொண்டு ஒட்டியிருக்கிறேன்.

Saturday 10 August 2019

கட்டிப் போட முடியாதது எது?
கட்டிப் போட முடியாதது எது? 

எது!
உயிர்!
எங்கள் உயிருக்கு உயிரான குட்டிப்பெண் - ட்ரிக்ஸி - கடந்த செவ்வாய் (06/08/2019) அன்று எம்மை விட்டுப் பிரிய அனுமதி கொடுத்தோம். எடுப்பதற்கு வெகு சிரமமான முடிவு. ட்ரிக்ஸியின் நலன் கருதி சம்மதித்தோம்.

வெகு தைரியமான... குழந்தை. கடந்த எட்டு மாதங்களாக எப்போது வேண்டுமானால் இழப்பு நேரலாம் என்று உணர்ந்தே இருந்தோம். திடீரென்று பின்னங்கால் இழுத்துக்கொள்ளும். நான் தூக்கி விட்டு காலை உருவி, மடித்து விரித்துப் பயிற்சி கொடுத்து நிறுத்தி விட்டால், பிறகு குதித்து ஓடித் திரியும். கடந்த பாடசாலை விடுமுறையில் தினமும் குட்டிக் குளியலும் காலுக்கு அப்பியாசமும் கொடுக்க, மாடி ஏறி இறங்கித் திரிய ஆரம்பித்திருந்தார். வீட்டினுள் என்றும் அழுக்காக்கியது கிடையாது. தானாகவே இன்ன விதத்தில் காலை வைத்தால் விழாமல் நடக்கலாம் என்று புரிந்து கவனமாக இருந்தார். கால்களை நீட்டி சோம்பல் முறித்தால் திரும்ப கால் பழைய நிலைக்குப் போகச் சிரமப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு சோம்பல் முறிப்பதைத் தவிர்த்தார்.

செவ்வாய் காலை பாடசாலைக்குக் கிளம்பும் முன் வழக்கமாகச் செய்வது போல் கடைசியாக ட்ரிக்ஸியைக் கவனிக்கலாம் என்று கூட்டைத் திறந்தேன். பின்னங்கால்கள் இரண்டும் வலது பக்கமும் முன்னங்கால்கள் இடப்பக்கமுமாக நீட்டியபடி சரிந்து கிடந்தார். இடது பக்க உடல் நனைந்திருந்தது. ட்ரிக்ஸிக்கு அழுக்காக இருப்பது பிடிக்காது. சட்டென்று விடயத்தைத் தெரிவித்து, தாமதமாக வருவதாக பாடசாலைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நான் உடை மாற்றிக் கொண்டு ட்ரிக்ஸியைக் குளிக்க வைத்தேன். பின்னங்கால்கள் முற்றாகப் பலமிழந்துவிட்டன. பிரச்சினை சற்றுப் பெரிது என்று புரிந்தது. ஒவ்வொரு ஐந்து பத்து நிமிட இடைவெளியில் ட்ரிக்ஸியை இடம் மாற்றவேண்டி இருந்தது. சில சமயம் தானாகவே சிரமத்துடன் நகர்ந்து வேறு இடம் போயிருப்பார். அப்போதெல்லாம் உணவு இருக்கும் இடத்திலிருந்து தூரமாக நகர்ந்திருப்பார். அருகே எடுத்துக் கொடுத்தால் மட்டும் உண்ண முடிந்தது. வேறு வழி தெரியாமல் வேலைக்கு லீவு அறிவித்தேன்.

இங்கு பூனை, நாய்களுக்கானால் எந்த மிருக வைத்தியரையும் அணுகலாம்; முயல், எலி, கினிப்பன்றி, பறவைக்களுக்கு குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு அழைத்துப் போக வேண்டி இருந்தது. அதற்காக மதியம் வரை காத்திருந்து அழைத்துப் போனோம். கால்களைத் தவிர மீதி எல்லா விதத்திலும் ஆரோக்கியமாகவே இருந்தார். அங்கும் மடியில் அமர்ந்து சாப்பிட்டபடிதான் இருந்தார். மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை செய்தாலும் 20%ற்குக் குறைவான அளவே குணமாவது சாத்தியம் என்றவர்கள், 'நிலமை மோசமாகினால் வாழ்க்கைத் தரம் குறைந்து போகும்; வேதனை அனுபவிப்பார்; விடை கொடுக்க இது நல்ல நேரம்,' எனவும் உடைந்து போனேன். 

அரை மணி நேரம் மடியில் வைத்துக் கொஞ்சி விட்டு, கால் மனதாக விடை கொடுத்தோம். ரிப்பன் கட்டியபடி கொடுத்த வெள்ளை நிறப் பொதியை கனத்த மனதோடு சுமந்து வந்தேன்.

ஒரு தொட்டியுள் உறங்குகிறார் ட்ரிக்ஸி. இந்த வீட்டை விட்டு விலகும் காலம் வரும் போது, போகும் புதிய இடத்திற்கு எம்மோடு எடுத்துச் செல்வோம்.

மறுநாட் காலை வழக்கமாக கூட்டைத் திறக்கும் நேரத்திற்கு ட்ரிக்ஸியின் மிச்சம் மீத உணவை உண்பதற்காக ஒரு கூட்டம் சிட்டுக்கள் வேலியில் காத்திருந்தன. பிறகு காணவே இல்லை. ட்ரிக்ஸி இனி வரமாட்டார் என்று புரிந்திருக்க வேண்டும். 

சின்ன உயிரே என்றாலும் பெரிதாக ஒரு வெறுமை -என் தாயை இழந்த சமயம் உணர்ந்தது போன்ற வெறுமை - மீண்டும் என் வீட்டைத் தாக்கி இருக்கிறது. 

Wednesday 7 August 2019

பூக்கூடை வாழ்த்திதழ்

என் மேலதிகாரிக்கு விடுமுறையின் நடுவில் பிறந்தநாள் வந்துபோயிருந்தது. அவருக்காகச் செய்த வாழ்த்துமடல் இது.

கூடை - ரப்பர் முத்திரை + எம்போஸிங் இங்க் & பௌடர்
கரை & Happy Birthday - silver stickers
பூக்கள் - உலரவைத்த (செய்முறைக்கான சுட்டி) வயலட் பூக்கள்
இலைகள் - பன்னத் தாவரத்திலிருந்து எடுத்து உலரவைத்தவை

கூடை தாயாரானதும் போ ஒட்டி முடித்தேன். பூக்கள் கைபட்டால் கெட்டுப் போகும் என்பதால் மேலே ஒரு OHP பேப்பர் மடித்து ஒட்டினேன். பிறகு! அது திறக்கும் சமயம் இதழ்களைப் பாழாக்குவதாகத் தோன்றியதால் முன் அட்டையோடு சேர்த்து ஒரு செலோஃபேன் வளையம் ஒட்டிவிட்டேன்.

இயற்கை மலர்களும் இலைகளும் கொண்டு தயார் செய்யும் வாழ்த்திதழ்களில் உள்ள விசேடம், ஒரே மாதிரி இன்னொன்றைத் தயார் செய்ய முடியாது. நிச்சயம் வித்தியாசம் தெரியும்.


Tuesday 30 July 2019

சேலைக்கரை அன்பளிப்புப் பை

மூத்த மருமகளின் வளைகாப்பினை அவரது குடும்பமும் எம் குடும்பமும் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக வைத்துக் கொள்வது என்று தீர்மானித்திருந்தோம். உண்மையில் அதற்கே வீடு போதாது.

கடைசிக்கு முதல் நாள் - பெண்களின் எண்ணிக்கை இரண்டால் கூடிற்று. சம்பந்தி வீட்டில் கற்பதற்காக கொரியப் பெண் இருவர் தங்கி இருந்தார்; அவர் தங்கை வீட்டில் நெருங்கிய தோழி ஒருவர் தங்குவதற்காக வந்திருந்தார். ஐரோப்பியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு எம் கலாச்சாரத்தை ஒட்டிய நிகழ்வுகளைப் பார்க்கக் கிடைப்பது வெகு அபூர்வமல்லவா! சந்தோஷமாக அவர்களுக்கும் அழைப்பு வைத்தேன்.

எண்ணிக்கை இரண்டு கூடுதலானது பிரச்சினையாக இருக்கவில்லை. அன்பளிப்புப் பைகள் தான் குறைந்தன.

அணிய இயலாதபடி இருந்த பழைய புடவை ஒன்றிலிருந்து ஏற்கனவே கரையைத் தனியாக வெட்டி சுற்றி வைத்திருந்தேன். இரண்டு துண்டுக் கரைகளை ஒன்றாகப் பொருத்தி, தலைப்பிலிருந்து நீளத் துண்டுகள் வெட்டி கைபிடியாக அடித்துப் பொருத்தினேன். கடைசியாக, பையில் அளவுக்கு 'லைனிங்' வெட்டி பொருத்திவிட்டேன். ஒரு தடவைப் பயன்பாட்டிற்காகச் செய்ததால் 'ஸிப்' வைக்காமல், 'வெல்க்ரோ' வைத்துத் தைத்தேன்.

சேலையிலிருந்து தைத்த இரண்டு பைகளையும் என் மருமக்களுக்காக வைத்துக் கொண்டு, முன்பு அவர்களுக்கு எனத் தயார் செய்திருந்த பைகளை விருந்தினர்க்குக் கொடுக்கவென்று எடுத்து வைத்தேன்.


சில மாதங்கள் கழிந்ததும் சின்ன மருமகள் வீட்டார் வழியாக ஒரு திருமண அழைப்பு வந்தது. மணநாள் அன்று ஓர் நாற்காலியில் சேலைக் கரையில் தைத்த பை உட்கார்ந்திருந்தது. பேத்தி பிறந்த பின் அவரது விளையாட்டுப் பொருட்களோடு இரண்டாவது பை இடம்பெற்றிருக்கிறது. அதைக் கண்ட போது தான் என்னிடம் இருந்த புகைப்படங்கள் தொலைந்து போனது நினைவுக்கு வந்தது. 

ஒரு 'க்ளிக்'

Thursday 11 July 2019

கல் கால் கை

சேலையிலிருந்து உதிரும் கற்கள் - தரையைச் சுத்தம் செய்கையில் கண்ணில் பட்டால், கைவேலை செய்யலாம் பொறுக்கி வைப்பது உண்டு.

விளையாட்டாக, என்  காலில் ஓர் வேலை செய்தேன்.
அப்படியே கையிலும் ஒரு வேலை.
;)) கற்கள் பெரியவை. கொஞ்சம் இடைஞ்சலாக உணர்ந்ததால் மறுநாட்காலையே கையைச் சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. ;(

Tuesday 9 July 2019

பிரியாவிடை வாழ்த்து


பாடசாலையில் தோழி ஒருவர் நாடு மாறிப் போக இருக்கிறார். 4ம் திகதி பிரியாவிடை இடம்பெற்றது.

என்னிடம், ஒரு பூக்கூடை வாழ்த்து இதழ்தான் கேட்டார்கள். 

பிரியாவிடைக்குப் பொருத்தமாக வேறு யோசனை தோன்றிற்று. புத்தக அடையாளம் ஒன்றிலிருந்து இலச்சினையை வெட்டி எடுத்தேன். பாடசாலையின் நிறம் - நீலம், நீலம், சிவப்பு. அட்டைகள் தேடி, கிடைத்ததும் அலங்காரக் கத்தரிக்கோலினால் ஒரே சரிவு வர வெட்டினேன். ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டியபின் ஓரங்களை வீட்டில் சீர் செய்தேன். (வெள்ளை அட்டையும் நிற அட்டைகள் போலவே கோடுகள் அமையப் பெற்றிருக்கிறது. படத்தில் தெரியவில்லை.) கரைகளை ஒட்டியானதும் இலச்சினைக்கு முப்பரிமானத் தோற்றம் கொடுக்க ஸ்டிக்கர்கள் கொண்டு ஒட்டினேன். 

மீதியாகிப் போன நிற அட்டைகளிலிருந்து பூக்கள் வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

உள்ளே 4 பக்கங்கள் கிடைக்கும் விதமாக வெள்ளைத் தாள்கள் - ஓரங்களை அதே அலங்காரக் கத்தரிக்கோலினால் வெட்டிச் சேர்த்தேன்.

பாடசாலையில், இதே விதமாக இன்னும் சிலது செய்து கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

Sunday 7 July 2019

நெல்மணி தூவாது ஓர் வாழ்த்து

என் மச்சாள் வீட்டிலிருந்து பல வருடங்கள்  முன் வந்த வாழ்த்து இதழ் இது. பதினாறு, பதினேழு வருடங்களாக என் சேமிப்பில் இருக்கிறது. இடைக்கிடையே எடுத்து ரசிப்பேன். எப்போ அந்த விபத்து நேர்ந்தது என்பது நினைவில் இல்லை. ;( ஒரு துளி நீர் சிந்தி நிறம் கலந்திருக்கிறது. ஆயினும்… அழகு குறையவில்லை. 

இலங்கையில் இந்த வகை அட்டையை 'பிரிசில் போட்' என்போம். காவி நிற அட்டையில் எல் மணிகளால் பூக்கள் ஒட்டி, அதன் மீள் சிவப்பு நிறம் தீட்டி சிரிதே சிறிது மினுக்கம் கொடுத்திருந்தார். கோடுகள், இலைகள், எழுத்தெல்லாமே கையால் வரையப்பட்டிருந்தன.

சமீபத்தில் எடுத்துக் பார்த்த போது சில நெல்மணிகளைக் காணோம். உதிர்ந்திருக்க வேண்டும். பேட்டியின் அடியிலும்  கிடைக்கவில்லை. முழுவதாகக் காணாது போகும் முன்… இங்கே. 

Friday 5 July 2019

பாம்பு பொம்மை


பழைய காலுறை ஒன்றைப் பாம்பாக மாற்றியிருக்கிறேன். விரல்கள் வரும் இடம் தலையாக வர வைத்து நீளத் தீரையாக வெட்டித்த தைத்தேன். நாவுக்கு ஒரு சிறிய சிவப்பு நிறுத்த துணி, கண்களுக்கு சின்னதாக இரண்டு கருப்பு மணிகள், வாலுக்கு நூலைச் சுற்றிக் கட்டினேன். பல காலமாக மழையிலும் வெயிலிலும் இருந்ததில் தைத்த நூல் இற்றுப் போயிற்று போல; ஓரிடத்தில் பிரிந்து போய் பஞ்சு எட்டிப் பார்க்கிறது. 

இன்று குப்பைக்குப் போகப் போகிறார் பாம்பார்.  

Wednesday 3 July 2019

அன்பளிப்புப் பொதி ஒன்று!

இந்த அன்பளிப்புப் பொதியைத் திறப்பதற்கு, கடதாசியைக் கிழிக்க வேண்டியதில்லை. பார்க்க முழுமையாகத் தெரிந்தாலும் உண்மையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விதமாக அமைத்திருக்கிறேன்.

படத்தைப் பார்த்தால் புரியும். நான்கு பக்கங்களிலும் நாடாக்கள் மேல் மூடியில் உள்ள நாடாக்களோடு பொருந்துவதாகத் தெரியும் விதமாக வைத்து செலோடேப் போட்டிருக்கிறேன். பரிசைப் பெறுபவர்கள் பொதியை மீண்டும் பயன்படுத்தலாம்.

விளம்பரத்திற்காக காப்பிப் பொதியோடு இலவசமாகக் கிடைத்த சிவப்பு நிறக் கிண்ணங்கள் வந்த பெட்டிகளை வீசாமல் வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் மேலே பொதியாகக் காட்சி தருவது.
ஒன்றின் மேல் மூடியில் சின்னதாக ஒரு துளை செய்து உள்ளே சணல் உருண்டையைப் போட்டு வைத்திருக்கிறேன். தேவையான போது சணலை சிக்காமல் எடுக்கலாம்.

Monday 1 July 2019

தச்சுவேலை விரும்பிக்கு ஓர் வாழ்த்து!

தச்சுவேலை விரும்பிக்கு ஓர்  வாழ்த்து!
கைவேலைக்கான பொருட்களை வைத்திருந்த பெட்டியைத் துளாவும் போது கண்ணில் பட்டன ஒரு பையிலிருந்த சின்னச் சின்ன தச்சு வேலைக்கான பொருட்கள். திறந்து பார்த்தேன்… ஒரு ஏணி, இரண்டு ஆணிகள், சுத்தியல், வாள், பலகை துளையிடும் கருவி, ஒரு தூரிகை. இவற்றில் சில பித்தான்கள் - பின்பக்கம் வளையங்களோடு இருந்தன.  

எப்படி இவற்றைக் கொண்டு வாழ்த்திதழ் செய்வது!

ஸ்டிக்கர் பெட்டியிலிருந்து இரண்டு ஸ்டிக்கர் ஷீட்களோடு ஒரு துண்டு பலகை வடிவக் கோடுகள் போட்ட ஒட்டும் தாள் எடுத்துக் கொண்டேன். 
ஒட்டும் தாளை, அலங்கார விளிம்பு கொண்ட கத்தரிக்கோலால் வெட்டி எடுத்தாயிற்று. பித்தான் கொக்கிகளை குறட்டால் நறுக்கி நீக்கியாயிற்று. ஒரு கடையிலிருந்து கிடைத்த சாம்பிள் மரத்துண்டு ஒன்றில் 'happy birthday' ஸ்டிக்கரை ஒட்டி எடுத்தேன்.

இஷ்டத்துக்கு ஒழுங்கு செய்து பார்த்து, பிடித்த விதத்தில் ஒட்டிய பின்…. 
விளைவு இது.

இன்று பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு, என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

Saturday 29 June 2019

ரீல் ஸ்டான்ட்

என் தந்தைக்கு மரவேலை என்றால் உயிர். இது அவருக்கு வெகு சிறிய வேலை. இங்கு பெரிதாக எதுவும் செய்யக் கிடைப்பதில்லை. வசித்தது தொடர்குடியிருப்பு ஒன்றில். சப்தமாக வேலை செய்ய முடியாதே! சின்னதாக ஏதாவது செய்வார். 

இப்படி நான்கைந்து செய்துவைத்திருந்தார். என்னிடம் இவ்விரண்டும் வந்து சேர்ந்தன. 

பொதி சுற்றும் போது அலங்கரிக்கும் நாடா ரீல்களை (ரீலுக்கு தமிழ்ச்சொல் என்ன! நூல் - கண்டு. இங்கு படத்தில் உள்ளவற்றை எப்படி அழைப்பது!)  மாட்டிவைக்கலாம்.
அல்லது....

தையல் வேலை செய்யும் போது பயஸ் பைண்டிங் ரீல்களை மாட்டிவைக்கலாம். உருளாமல், நாடாக்கள் சிக்காமல் வேலை செய்யலாம். 

Thursday 27 June 2019

மாலை வேலை!

காதணிகள் - முடியிலோ அல்லது என் துப்பட்டாவிலோ மாட்டி, கழன்று காணாமல் போனதால் துணை இழந்த ஒற்றைக் காதான்கள் சில என் சேமிப்பில் உள்ளன. 

அவற்றுள் ஒன்று நெஸ்ப்ரஸோ கிண்ணம் ஒன்றின் நிறத்தில் இருக்கவே, மாலையாக்கலாம் என்னும் எண்ணம் வந்தது.  
ஒரே நிறத்தில் இரண்டு கிண்ணங்கள் கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். (கிடைக்கும் வரை காத்திருந்தால் யோசனையை மறந்துபோவேன்.) சற்று அடர்த்தியான நிறத்தில் ஒன்று கிடைத்தது. பின்பக்கம் வைக்க அது போதும். பொருந்தி வரும் நிறத்தில் button ஒன்றைத் தேடிப் பிடித்தேன். கட்டுவதற்கு கயிறு ஒன்றும் தேவைப்பட்டது.
 குறடுகள், கத்தரிக்கோல், 'ஹாட் க்ளூ' - மேலதிகமாக இரண்டு தட்டைப் பலகைகளும் வேண்டியிருந்தன. கண்ணில் பட்டது சின்னவர் ஒரு கைவேலையின் பின் மீதியாகிப் போனதென்று கொடுத்திருந்த டொட்டாரா மரத்தின்  குறுக்குவெட்டுத் துண்டுகள்.
(எப்பொழுதும் கிண்ணங்களை ஒரு தொகுதியாகச் சேர்த்து, சுத்தம் செய்து காய வைத்து வைத்திருப்பேன். நேரமும் மிச்சம்; நீரும் மிச்சம்.) 
சுத்தமான கிண்ணம் ஒன்றை கட்டையில் கவிழ்த்து வைத்து மேலே இன்னொரு கட்டையை வைத்து நடுவில்  உள்ளங்கையை வைத்து அழுத்தினால்...
தட்டையாகி இப்படித் தெரியும்.
தோட்டின் கம்பியைச் சற்று நறுக்கி வைத்தேன். நாடாவைக் கழுத்து அளவிற்கு நறுக்கி எடுத்தேன்.
பின்பக்கம் வரவேண்டிய வட்டத்தட்டைக் குப்புறப் போட்டு, அதன் மேல் 'க்ளூ' வைத்து நாடா முனைகளை சேர்த்து வைத்து, மேலே சரியான நிறத்தட்டை வைத்து ஓட்டினேன். அதன் மேல் மீண்டும் க்ளூ வைத்து பித்தானை ஒட்டிக் கொண்டேன். 

கூரான குறட்டினால் நாடா இருந்த இடத்திற்கு நேர் கீழே இரண்டு தட்டுகளின் ஊடாகவும் சேர்த்து ஒரு துளை செய்தேன்.
துளையில் தோட்டை மாட்டி கம்பியை வளைத்ததும்... 

அழகான மாலை தயார். 

பொருத்தமான நிறத்தில் ஆடை இல்லாததால் இன்னும் எங்கும் அணியக் கிடைக்கவில்லை. விடுமுறையில் தையல் வேலையில் மும்முரமாக இறங்கியாக வேண்டும்.

Tuesday 25 June 2019

மணநாள் வாழ்த்து!

நட்பு ஒருவருக்கு இன்று மணநாள். முதலில் அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு. ;-)
↔↔↔↔↔↔↔↔↔↔

அம்மாவின் சேகரிப்பில் அவருக்கு வந்த வெகு அழகான நத்தார் வாழ்த்துமடல் ஓன்று இருந்தது. அவற்றிலிருந்த இரண்டு பறவைகள் மணநாள் வாழ்த்து மடல் அமைக்கப் பொருத்தமாகத் தோன்றின. வெட்டி எடுத்தேன். மீதி அட்டையில் சில அலங்காரப் பந்துகள் தெரிந்தன. அவற்றைப் பூக்களாக வெட்டிக்கொண்டேன். சேலையிலிருந்து உதிர்ந்த கற்கள் தரையில் தென்படும் போது பொறுக்கி அருகில் உள்ள ஜன்னல்கட்டில் வைப்பதுண்டு. ஒரு ஜன்னலில் மூன்று கற்கள் இருந்தன. 3 D இதய வடிவ ஸ்டிக்கர்களில் மீதி வடிவங்களோடு இயைந்துபோகக் கூடிய நிறங்களில் இருந்த இரண்டைத் தெரிந்துகொண்டேன். 

அட்டையை மடித்துச் சீராக வெட்டி, உள்ளே வாழ்த்து எழுத வாகாக ஒரு கடதாசி ஒட்டியபின் ஓரங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி முடித்தேன். வடிவங்களைப் பரவலாக வைத்துப் பார்த்து, திருப்தியானதும் ஒட்ட ஆரம்பித்தேன். பறவைகளுக்கு முப்பரிமாணம் கொடுக்க வேண்டி, 'ஸ்டிக்கி டொட்ஸ்' வைத்து ஒட்டியிருக்கிறேன். கால்கள் பேனையால் வரைந்தவை. 
தோழிக்குக் கிடைத்திருக்கும்; பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ;-)

பிறந்தநாள் வாழ்த்து

இந்த மாதம் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு நட்புக்காகச் செய்த வாழ்த்துமடல். நட்புக்கு என் மாங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிரிந்துபோக ஆரம்பித்த விசிறியொன்றில்... வெட்டிய பின் பிரிந்துவிடாமல் இருப்பதற்காக தாராளமாகப் பசை பூசி, காகிதத்தை ஒட்டிக் காய விட்டேன்.
கூடை வடிவை வெட்டி...
மினுக்கத்துக்காக,'nail polish top coat' கொடுத்தேன்.
'3 D sticky dots' கொண்டு ஒட்டினேன்.

சிவப்பு அட்டை - ஒரு திருமண அழைப்பிலிருந்து கிடைத்தது.

பூக்கள் - சேலையொன்றிலிருந்த லேபிள் - நிறம் பிடித்திருந்தது. பஞ்ச் கொண்டு பூக்களை வெட்டிவிட்டு நடுவில் அழுத்தி குவிந்த வடிவம் கொடுத்தேன்.

இலைகள் பச்சை நிறக் கடதாசி + பஞ்ச் + கொஞ்சம் மடிப்பு. 
ஒரேயொரு கவலை, மடியாமல் உதிராமல் போய்க் கிடைக்கவேண்டும் என்பது.