Sunday 25 August 2019

தமிழால் இணைந்தோர்

அம்மாவை நிரந்தர‌ வைத்திய‌ கண்காணிப்புப் பிரிவில் சேர்க்க‌ வேண்டியதாக‌ இருந்த சமயம் அது. அப்பா! தானே அம்மாவைப் பார்ப்பதாகச் சொன்னார். அடம் பிடித்தார் என்று கூடச் சொல்லலாம். :‍) இயலாது என்பது எமக்கு நன்கு தெரிந்திருந்திருந்தது. அம்மாவை அனுப்பியே ஆகவேண்டும் என்று மருத்துவமனை இறுக்கிய‌ பின், அம்மாவைப் பரிசோதிக்க‌ வந்த‌ அலுவலர் ஏதோ கேள்விக் கொத்தை வைத்துக் குடைந்து ;‍) அதில் அப்பா 30 புள்ளிகளுக்கு மேல் எடுக்காததால் அவரும் ஓய்வு இல்லத்திற்குப் போவதே நல்லது என்று தெரிவித்தார் அறிவித்தார் முடிவுசெய்தார்.

அரை மனதாய் - அடம் பிடித்து, என்னுடன் முகம் காட்டி ;) நான் என்ன‌ செய்வேன்! சின்னவர் திருமண வரெவேற்பு முடிந்த‌ இரண்டு நாட்களில் இல்லத்திற்கு அழைத்துச் சென்றாயிற்று. அப்போதும்... சுத்தியல் வேண்டும், ஸ்பானர் வேண்டும் என்றார். :‍)

ஒரு வாரம் கழித்துச் சொன்ன‌ விடயம்... "எனக்கு இந்த‌ இடம் மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல‌ வேலை செய்தீர்கள். நல்ல‌ இடத்தைத் தெரிந்து கொண்டுவந்து விட்டிருக்கிறீர்கள். அறை பிடித்திருக்கிறது. உணவு பிடித்திருக்கிறது. + + + +"

உணவு அறையில் ஒரு சதுர‌ மேசையில் அப்பாவுடன் ஒரு தமிழ் அன்ரி, இன்னொரு தமிழ் அங்கிள்; நாலாமவர் குஜராத்தி அங்கிள் அமர்ந்திருப்பார்கள்.

நாலாமவர் சிரிக்க‌ மட்டும் செய்வார். அவருக்கு எல்லாம் குழந்தை ஆகாரம் போல‌ அரைத்துக் கொடுப்பார்கள். தானே எடுத்துச் சாப்பிடுவார். நிறையக் கொட்டும். அதனால் அருகே இருப்போர் ஊட்டி விடுவார்கள். நான் உணவு வேளையில் இருந்தால் அப்பாவோடு பேசிக் கொண்டே ஊட்டிவிடுவேன். (அதிரா வந்தால் தானே 'தீத்தி' என்று திருத்தி வாசிக்கட்டும்.) அவரது மனைவி பெரும்பாலும் தினமும் ஒரு வேளை அங்கு வருவார். என் இரண்டாவது மருமகள் குஜராத்தி (தூரத்து உறவு - ‍ சிறிய‌ தாய் முறை) என்பதால் இவருடன் பேச‌ எனக்கு விடயங்கள் இருக்கும். நன்றாகப் பேசுவார்.

தமிழ் அங்கிளின் மகள் தினமும் இரவு உணவுக்கு (5 மணிக்கு) அங்கு இருப்பார். தன் தந்தைக்கு தோசை எடுத்துப் போகும் சமயம் என் அப்பாவுக்கும் எடுத்துப் போவார். அவரே சுட‌ வைத்துப் பரிமாறுவார். அப்பாவுக்கு இன்னொரு மகள் போல‌ ஆகிவிட்டார். பின்பு அவரது சகோதரரும் வந்து போனார். ஒரு சமயம் அப்பாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அப்பாவை மேசையில் காணாவிட்டால் அறைக்குப் போய் எழுப்பி அழைத்து வருவார்கள் இருவரும்.

அன்ரி பற்றி தனியே ஒரு பதிவு எழுத‌ வேண்டும். அத்தனை அற்புதமான‌ பெண்மணி. நான் போகாத‌ சமயம் அப்பாவைப் பற்றி ஏதாவது இடிபாடாக‌ தன் மனதுக்குத் தோன்றியிருந்தால் என்னிடம் சொல்லிக் கவனிக்கச் சொல்லுவார். தன்னால் தன் குடும்பத்தாருக்கு எந்த மனக்குறையும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியானவர்.

நான்! எனக்கு மற்றவர்களால் ஏற்படும் சிரமம், மற்றவர்களுக்கு என்னால் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். போவேன், பார்ப்பேன், பேசுவேன். ஏதாவது உதவி கேட்டால் கூட அவர்கள் வீட்டார் இடத்தில் என்னை இருத்திப் பார்த்து ஆராய்ந்து, சின்னதாகக் கூட ஒரு பிரச்சினையும் இல்லை என்று மனம் சொன்னால் மட்டும்தான் செய்கிறேன். இது ஆசிரியையாகப் பணியாற்றும் காரணத்தால் வந்த பக்குவம் மட்டுமல்ல, இமாவாக வாழ்க்கை கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் அடிகளும் காரணம்.

சில மாதங்கள் கழித்து இன்னொரு தமிழ் அங்கிளும் வந்து இணைந்திருந்தார். அவர் இருந்தது தொலைவில் வேறு பிரிவில்; சக்கர‌நாற்காலி பயன்படுத்தினார். அப்பா இடைக்கிடை போய்ச் சந்தித்ததாகத் தெரிந்தது. நான் போகும் போது கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து இவரைப் போய்ப் பார்த்து வருவேன். பெரிதாக எதுவும் விசாரிப்பது இல்லை.

இந்த‌ நான்கு தமிழருள் யாருக்கு விருந்தாளிகள் வந்தாலும் அவர்கள் மற்றவர்களைப் போய்ச் சந்தித்துப் போக‌ மறப்பதில்லை. அறியாதவர்களாக‌ இருந்தாலும் போய்ச் சந்திக்கிறார்கள். அங்கு இரு தமிழ்த் தாதியர்களும் உள்ளனர். 
                          
பல‌ தமிழ் பேசும் சிறுமிகள் தொண்டுவேலைக்காக‌ வருகிறார்கள். இதனையிட்டு இவர்களுக்கு புள்ளிகள் உண்டுதான். இருந்தாலும் இதற்கும் ஒரு தனித் தைரியம் வேண்டும். சில‌ நாட்களில் ஒரு சிறுமி அம்மாவுடன் ஸ்க்ரிபிள்ஸ் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டுக் குழப்ப‌ மனமில்லாமல் அப்பாவின் அறைக்குச் சென்றிருக்கிறேன். இன்னொரு சிறுமி அம்மாவுடன் சேர்ந்து ஒரிகாமி செய்வார். பிறகு செய்த பொம்மைகள் அங்கு வேலை செய்வோரது பிள்ளைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார்.
                          
இப்போது அப்பாவும் அன்ரியும் மட்டும்தான் அங்கு இருக்கிறார்கள்.

10 comments:

  1. ஓய்வு இல்லம் - சில இல்லங்கள் நன்றாகவே இருக்கின்றன. சென்னையில் சில ஓய்வு இல்லங்களில் முதியவர்கள் படும் பாடு பார்த்து கலங்கியது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. இங்கு முதியவர்களால் அங்கு வேலை செய்வோர் படும்பாடு... சிலசமயம் பாவமாக இருக்கும். எனக்கே என் அப்பா அவர்களை எத்தனை ட்ரில் வாங்குகிறார் என்பது தெரியும். ஒரு பொழுதும் குறை சொல்ல மாட்டார்கள். நான் அந்த இடத்தில் வேலையில் இருந்தால் நிச்சயம் மனம் நொந்து போவேன். ;(

      Delete
  2. //அதில் அப்பா 30 புள்ளிகளுக்கு மேல் எடுக்காததால்//

    றீச்சர் நீங்க ஒயுங்காச் சொல்லிக்குடுக்கேல்லை பாடம் ஹா ஹா ஹா:))

    ReplyDelete
  3. //(அதிரா வந்தால் தானே 'தீத்தி' என்று திருத்தி வாசிக்கட்டும்.) //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்கள் வீட்டில.. தீத்தி எனத்தானே சொல்லுவீங்க இமா.. ஊட்டி எனப் பாவிப்பதில்லையெல்லோ..

    இப்போ எனக்கு எல்லாச் சொற்களும் கலந்து விட்டது.. இந்திய இலங்கைப்பெண்போல பேசிக்கொண்டு திரிகிறேன் ஹா ஹா ஹா.

    படங்கள் எதுவும் தெரியேல்லை றீச்சர்ர்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதீஸ். ஏன் என்று தெரியேல்ல. இப்ப திரும்ப இணைச்சிருக்கிறன்.

      எனக்கும் எல்லாம் கலந்துதான் போச்சுது. உண்மையில கதைக்காமல் விட்டு நிறையச் சொற்கள் யோசிக்க வேண்டியதாயும் இருக்கு. இப்பிடி இணையத்திலயும் கதைக்காட்டி இன்னும் மோசமா இருப்பன்.

      Delete
  4. //இப்போது அப்பாவும் அன்ரியும் மட்டும்தான் அங்கு இருக்கிறார்கள்.//
    இதுதான் சீனிய ஹோமில் மனம் கனக்கும் ஒரு விஸயம்...:(.

    ReplyDelete
    Replies
    1. மனசு கனக்கிறது தாண்டி கடினப்பட்டும் போயிருதோ எண்டும் சில நேரம் யோசினை வரும். எல்லாமே இயல்புதானே எண்டுறமாதிரி, பழக்கப்பட்டுப் போயிருது. ;(

      Delete
  5. பலவற்றை நினைத்து மனம் வருந்துகிறது சகோதரி...

    ReplyDelete
  6. மனம் கனத்துதான் போகிறது இமா. ஆனா என்ன செய்வது..
    தீத்தி விடுங்கோ அம்மா.. எனதான் சொல்லுவோம். நீங்க நல்ல டீச்சர் இல்லையோ என சந்தேகமாகவே இருக்கு..
    ஆனா இங்கு வந்த புதிதில் பேசியதற்கும் இப்போ பேசுவதற்கும் நிறைய தமிழ் வித்தியாசம் என வீட்டில் கூறப்படுகிறது..ஆவ்வ்வ்..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா