Wednesday 30 May 2012

பப்பியும் திராட்சைக் குலையும்!!!

ஒரே ஒரு ஊரில் ஒரு பூனை இருந்ததாம். அதற்கு ஜீனோ குலைக்குமா, குரைக்குமா என்பதில் சந்தேகம் வந்ததாம்... ;)
ம்... இங்கே இருக்கும் ஜீனோ - பொம்மை ஜீனோ; குரைக்காது.

எப்பொழுதும் இந்த மேசைக்கு....
 'ஐவி' இலைகளையும் சில திராட்சைக் குலைகளையும் வைத்துத்தான் அலங்கரிப்பேன்.  

'ஈரலிப்பு உறிஞ்சி' இயற்கை இலைகளை விரைவில் உலரவைத்துவிடுவதால் அடிக்கடி மாற்றும் வேலை இருந்தது.

சிரமத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை $ கடைப்பக்கம் போகும் போதும் எட்டிப் பார்ப்பேன், செயற்கை திராட்சைக் கொடி கிடைக்கிறதா என்று. ஒருமுறை 'ஐவி' கிடைத்தது. வாங்கி வந்தேன். குலைகுலையாக முந்திரிக்காய் காண, வாங்கிக் கொள்ளும் ஆசை வந்தது.

சமீபத்தில் திராட்சைக் கிளை கொண்டு ஒரு தூணை அலங்கரித்திருத்திருந்தார்கள்; விசாரிக்க, உள்ளே இருந்து ஐந்து துண்டுகள், 10 $ என்று எடுத்து தந்தார்கள். அவற்றில் மூன்று மட்டும் போதுமாக இருந்தது எங்கள் மேசைக்கு.
 இவற்றுக்கு மேலதிகமாக... பச்சைக் கம்பியும் பயன்படுத்தியிருக்கிறேன்.
கிடைத்த தொட்டியில் அளவுக்கு 'ஈரலிப்பான பாலைவனப்பசுஞ்சோலை' ஹி ஹி இனியும் யாராவது தமிழ் கேட்பீங்களோ!! வெட்டி வைத்து நிரப்பி... செடியை!! நட்டு!!... ;)

பச்சைக் கம்பியை எழுதுகோலில் சுற்றி...
கொடிச்சுருள் (இணையத்தில் தேடிப் பிடித்த சொல் இது.) செய்து...
கம்பியும் பசைநாடாக்களும் அங்கங்கே கட்டுவேலைக்குப் பயன்பட்டன. உண்மையில் இவற்றை கொடிச்சுருள் செய்யவே எடுத்து வைத்திருந்தேன். பிற்பாடு வெளிர்பச்சைக் கம்பி கண்ணில் படவும் மனது மாறிவிட்டது. ம்!
உள்வீட்டில் செயற்கையான இயற்கை!! இந்த மேசையில் ஒரு கோப்பை தேனீரோடு அமர்ந்தால் எந்த வேலையானாலும் ரசனையாக முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிணைப்பு
'எட்டுமா இது!'
'செல் --- போதவில்லை. நாளைக்காலை முதல் வேலையாக நிலாவைக் கொண்டு அதிக வலு செல் ஒன்று பெற்றுக்கொள்ள வேண்டும்.'
' அட! அது என்ன!! குருவித் தம்பதி குடியிருக்கிறதா அங்கே!!'

"சிப் சிப்!"
"ஹாய் ஜீனோ!"
"ஹாய் ஜீனோ!"
"ஹாய்! இது என்ன வார்த்தை! என் மெமரியில் இல்லையே!!"

"அது.. ஒரு வகை விசாரிப்பு."
"பழம் வேணுமா உனக்கு? பிடுங்கிப் போடட்டுமா?"

"ம்! நிறையப் போடு."
'இதிலிருந்து வீட்டிலேயே ஜேவ் தயாரிக்கலாமா என்று நினைவாக நிலாவை விசாரிக்க வேண்டும்... நாளை.'

"ஜீனோ! தயவு செய்து போகிறபோது நாற்காலி எல்லாம் சரியாக்கிவிட்டுப் போகிறாயா? இமாவுக்கு ஒழுங்கில்லாமலிருந்தால் பிடிக்காது."
"ஒரு அற்ப சிட்டுக்கு அடிபணியவேண்டிய தேவை எனக்கில்லை. அன்பாகக் கேள் செய்கிறேன்."

"சரி, அன்பாக"
 
'சர்... சர்ர்.... டமார்... டர்ர்ர்ர்ர்ர்'

"போதுமா!"
 
விசுக் விசுக் என்று நடந்து போகிறது ஜீனோ
வவ்
வ்
.
.
.

Monday 28 May 2012

ஹையா! எமர்ஜன்ஸி கடந்தாச்சு ;)

கொஞ்ச காலமாக அடிக்கடி வந்து பார்த்துப் போகிறேன், புதிதாக யாராவது பின்தொடர இணைந்திருக்கிறார்களா என்று. இன்று பார்க்கையில் நிம்மதிப் பெருமூச்சொன்று வந்தது. ;D

வேறொன்றுமில்லை எங்கள் அவசர அழைப்பு இலக்கம் 111. அதுதான் இதுவரை பின்தொடர்வோர் எண்ணிக்கையாக இருந்தது. இன்று 112 ஆகி இருக்கிறது. ;))

பின்தொடரும் அனைவருக்காகவும் அன்போடு....
 மு.கு
இதனை நான் அலங்கரிக்கவில்லை. ;D

Saturday 26 May 2012

Linen Shelf

நாட் குறிப்பிலிருந்து - 07/01/2012

வீடும் வாகனம் நிறுத்தும் அறையும் இணையும் இடத்தில் இருக்கிறது எங்கள் சலவைக்கான இடம்.
சலவை இயந்திரமும் கழுவும் தொட்டியும் அதற்கான சிறிய அலமாரியும் சின்னதாக ஒரு முதலுதவிப் பெட்டியும் மட்டும் அங்கே இடம் பிடித்திருந்தது. அங்கே இடம் வீணாகிக் கொண்டிருப்பதாக வீடு வாங்கிய காலத்திலிருந்தே எங்கள் அனைவருக்கும் ஒரு எண்ணம்.

அப்போது மலிவாக சிறிய ராக்கைகள் விற்பனைக்கு வந்திருந்தது; ஒன்றாக ஆறு வெள்ளைநிற ராக்கைகள் வாங்கி வந்தோம். காலை ஆரம்பித்த வேலை... சற்று நேரத்தில் மூத்தவரும் வந்து இணைந்து கொள்ள, இரண்டு மணி நேரத்தில் முடிந்தது.

தேவையான பலகைகள், இணைப்புகள் அனைத்துமே தனித்தனியாகப் பெட்டிகளில் இருந்தன. ஒவ்வொன்றாக அவற்றில் மூன்றைப் பொருத்தி வைத்துவிட்டு...
ஒன்றைச் சுவரில் இணைத்து அளவு பார்த்து...
மீதியையும் இணைத்து முடித்ததும்...
என் வேலையை ஆரம்பித்தேன்.
இடது புறம் இருக்கும் இடைவெளியில் பின்பு எப்போதாவது சின்னதாக தட்டுகள் அடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

Wednesday 23 May 2012

மை தீர்ந்த பேனைகள்

வீட்டில் குப்பைக் குறைப்பு தொடர்கிறது. ;) சென்ற வாரம் மாற்றுருக் கொண்டு மெத்தென்று மலர்ந்திருக்கும் பேனைப்பூக்களில் இரண்டு இங்கே.

மீதி விபரம்... அங்கே  -> http://www.arusuvai.com/tamil/node/22760

Sunday 20 May 2012

1.. 2... 3.... வட்டிலப்பம்

கிரி கொடுத்த விருதுக்கு நன்றியாகவும்....
நான் தொலைத்த பின்னூட்டம் இதுதான் கிரி, மன்னிக்க வேண்டும். ;((
எப்போதோ ஹுஸைனம்மா கேட்டிருந்தார்கள், இப்போதாவது கொடுக்கலாம் என்கிற எண்ணத்திலும் இந்த இடுகை.
 
ஆனால்... இது நளபாகம். உண்மையில் சரியான குறிப்பு அல்ல. 

மரத்திலிருந்து பழுத்து விழுந்த காய்களை இதற்கென்றே சேகரித்து வைத்து... அதெல்லாம் இங்கு நடக்கிற காரியமா! 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை,' என்று எப்படியோ நடத்திக் கொண்டு இருக்கிறோம். இங்கு கிடைக்கும் கித்துள்... வாசனையே வரவில்லை. ;( பசுப்பால் ஊரில் சேர்த்ததாகவே நினைவில்லை. வனிலா சேர்ப்பதில்லை. சாதிக்காய் தூளாக்கிச் சேர்ப்போம். ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவை சற்று வித்தியாசம்தான்.

குறிப்பு எழுதி உதவிய முக்கிய பிரமுகருக்கு ;) என் அன்பார்ந்த நன்றிகள்.
~~~~~~~~~~~
இனி... இனிப்பு.
தேவையான பொருட்கள்
முட்டை - 10
கித்துள் பனங்கட்டி - 450 gm
brown sugar - 2 Ts
தேங்காய்ப்பால் - 1 டின்
பசுப்பால் - 1/2 கப்
butter - 25 gm
vanilla -1 ts
முந்திரி, திராட்சை -தேவைக்கு

செய்முறை
 
கருப்பட்டியை துருவி பசும்பாலில் கரைத்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், brown sugar சேர்த்து கலக்கவும்.
முட்டைகளை ஒரு கிண்ணத்தில்  உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
பால் +கருப்பட்டி கலவையுடன் கலக்கிய முட்டை, உருக்கிய வெண்ணை,வெனிலா எஸ்ஸன்ஸ் இவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும்.
முந்திரி,திராட்சையை சேர்த்து கலக்கவும்.
அவன்-ஐ  180° C-க்கு முற்சூடு செய்யவும்.
பேக்கிங் பானை தண்ணீரில் கழுவி நீரை வடித்துவிட்டு, வட்டிலாப்ப கலவையை அதில் முக்கால் பாகம் வருமளவு ஊற்றவும்.
ஏறத்தாழ 30 நிமிடங்கள் bake செய்து எடுக்கவும்.
டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும், அதுதான் சரியான பதம்.
சுவையான வட்டிலாப்பம் ரெடி. சூடாகவோ, குளிரவைத்தோ ருசிக்கலாம்.

------

வட்டிலாப்பம் தெரியாத ஆட்களுக்கு ஒரு குறிப்பு: இது கேக் போல இராது. கஸ்டர்ட் / புடிங் போல இருக்கும். கரண்டியால் எடுத்து கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.

Monday 14 May 2012

இதன் பெயர் பின்னூட்டமா!

இமா தன் பாட்டிற்கு ஏதோ தான் செய்கிறவற்றை புகைப்படமாக்கிப் பகிர்ந்து கொண்டால்....
:))))) - என்றொரு சிரிப்பு!

//சின்னப்புள்ளைகளுக்குப் பாடம் நடத்தி நடத்தி நடத்தி நடத்தி...நீங்களும் சின்னப்புள்ளையாவே ஆகிட்டீங்கனு நினைக்கிறேன் இமா!// திரும்பவும் நீளமாக ஒரு கண்ணடிப்பு. ;)))))))

//நாய்க்குட்டி,காரு,இனி அடுத்து என்னது?!! டெடி பேர்...//

இதன் பெயர் பின்னூட்டமா!!
~~~~~~~~~~~~~~~~~~
இதோ... அந்தப் பின்னூட்டத்திற்கு ஓர் பின்னூட்டம் -

கடந்த சில வருடங்களாகப் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தோழி ஒருவர், பாதியில் நிறுத்தி வைத்திருந்த கரடிப்பொம்மை ஒன்றை என்னையே தைத்து முடித்து எடுத்துக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார்.

அவர் வாங்கியபோதே கரடி முகம் தயாராக இருந்திருக்க வேண்டும் என்று பெட்டியிலிருந்த செய்முறைகளிலிருந்து தெரியவந்தது.  தேவையான மீதித் துண்டுகள் வெட்டித் தயாராக இருந்தன. தேவையான அளவு பஞ்சும் ஒரு தையலூசியும் பொருத்தமான நிற நூலும் தேவையானபடி வைத்திருந்தார்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தைத்து வந்தேன். அது எப்படி மகிக்குத் தெரியும்!!

வேலை சுலபம்போல் தெரிந்தாலும் சுலபமாக இருக்கவில்லை. நாமே ஆரம்பம் முதல் செய்வதாக இருந்தால் சிந்தித்துச் செயற்படலாம். ஒருவர் ஆரம்பித்ததை இன்னொருவர் முடித்து வைப்பது சிரமம். ;(

இதன் நடுவே நண்பர் ஒருவர் பேச்சுவாக்கில் பூசை நேரம் இமா கரடியை நினைக்கப் போகிறேன் என்பது போல் ஏதோ சொல்லி வைக்க, ஞாயிறு பூசைக்குப் போகுமுன் முடித்துவிடலாம் என்று முழுமூச்சாய் முடித்துவிட்டேன்.

வேலையை முடித்துவிட்டுப் பார்த்தால் ஆரம்பம் முதல் படிப்படியாக எடுத்து வைத்திருந்த படங்கள் காணாதுபோயிருந்தன. ;(

முழுமையான Teddy உங்கள் பார்வைக்கு.

Wednesday 9 May 2012

மோட்டார் இல்லாத மோட்டார் வண்டி

Spring cleaning (தமிழாக்கம் !!) ;) தொடர்கிறது.

2008 ல் க்ரைஸ்ட்சர்ச் சென்றிருந்த சமயம் இந்த விமானச்சஞ்சிகை என்னோடு வந்திருக்க வேண்டும்.

குப்பையில் போடுமுன் உள்ளே எதாவது முக்கியமான கடதாசித் துண்டுகள் இருக்கிறதாவெனப் பார்க்க வேகமாக ஒரு முறை பக்கங்களை விசிறி, எறியப் போக... எதுவோ ஒன்று தடுக்க - மீண்டும் விசிறினேன். இந்தப் பக்கம் கண்ணில் பட்டது.

அதில் குறிப்பிட்டிருந்தபடி மடித்துச் சொருக இந்தக் குட்டி மோட்டார் வண்டி கிடைத்தது.

காலப்போக்கில் பிரிந்துவிடக் கூடும் என்று தோன்றியதால் முக்கியமான ஆறு இடங்களில் சின்னதாக 'செலோடேப்' போட்டுவைத்திருக்கிறேன்.

Monday 7 May 2012

மீண்டும் ஜீனோ!

தொண்ணூறுகளின் நடுப்பகுதி என்பதாக ஞாபகம், மாணவிகளோடு சேர்ந்து வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்காக பாட்ஜ்ஜுகள் (badges) செய்து கொண்டு இருந்தேன். அதற்காக இரண்டு வித்தியாசமான நீலச்சாயல்களில் கம்பளி நூல்கள் தேவைப்பட்டன. கூடவே இருந்த அழகிய ரோஜா வர்ண நூல்கண்டு, 'வாங்கு' என்றது.

சில காலம் பெட்டியில் கிடந்தது. பிறகு என் குட்டி மருமகளுக்காக...

இந்த நாய்க்குட்டியைச் செய்தேன். பென்சிலில் சுற்றுவேன் என்பதைத் தவிர எத்தனை சுற்றுக்கள், என்ன அளவு என்பதெல்லாம் இப்போ நினைவுக்கு வரவில்லை. மீண்டும் ஒரு தடவை முயன்று பார்க்கவேண்டும்.

அப்போது எப்படியோ ஒரு ஜோடிப் பொம்மைக் கண்கள் கிடைத்திருக்கின்றன. மூக்கு... அது வானொலிப் பெட்டியோ தொலைக்காட்சிப் பெட்டியோ எதனோடோ கூட வந்த தட்டையான கருப்புக் கம்பி; நாய்மூக்கு வடிவத்தில் முறுக்கி வைத்தேன்.

மருமகள் விளையாடி முடித்த போது....
...இந்த நிலையில் ஒரு பெட்டியில் கிடந்தவர், அவர்கள் தேசம் விட்டுப் புறப்பட்டதும் மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்தார்.

நானும் ஒரு நாள் புறப்பட்டு வந்துவிட்டேன்.

மூன்று வருடங்கள் கழித்து ஊருக்குப் போயிருந்த போது பழைய பொருட்களுடன் ஒரு கொட்டிலில் கிடந்தார். குளியலொன்று கொடுத்து மீட்டு வந்தேன்.

இங்கு வந்தும் நேற்று வரை என் புதையல்கள் நடுவே இப்படியேதான் இருந்தார்.

மீண்டும் முழுமைபெற்று இதோ உங்கள் முன் – ஜீனோ தி க்யூட், ஸ்வீட் & க்ரேட். ;)

எங்காவது ஒழிந்திருந்து ஜீனோ பார்க்கும் என்கிற நம்பிக்கையுடன்....
- ஆன்டி 
ஹை!!!!!!
ஜீனோ அரைக்கண்ணால பார்க்குதே! ஆன்டி கண்டுட்டேனே!
ஹி! ஹி!
பௌ! பௌ! ;)))