கடந்த சில வருடங்களாகத் தோட்டம் துரவு! எல்லாம் க்றிஸ்தான் பார்க்கிறார். எனக்கு வெய்யில் ஒத்துவரவில்லை. (வேலையில் இருந்து தப்பிக்க ஒரு காரணம் வேண்டாமா! ;) ) இவருக்குச் செடிகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அதுவும் இங்குள்ள வகைகள் பற்றி அறிவு பூச்சியம்தான். நான் நட்டு வைப்பவற்றை களை என்று பிடுங்கி வைக்கிறார்.
ஒரு (அறு)சுவையான கதை சொல்கிறேன், கேளுங்கள்.முன்னொரு காலம் செந்தமிழ்ச்செல்வி மணத்தக்காளி என்கிறாரே என்று 'அறுசுவை' உதவியோடு ஆராய்ந்து.. கண்டுபிடித்து.. ஆசையாய் நானும் வளர்த்தேன் மணத்தக்காளி. எனது ஊர்ப் பக்கம் இவை களையாகவும் கண்டதில்லை.
இங்கு வந்த ஆரம்பத்தில் ஒரு நாள் என் இரண்டு புத்திரர்களையும் நடை கூட்டிப் போகையில் ஒரு கேரளத்துப் பெண் தோழியாகக் கிடைத்தார். அவ்வப்போது தெருவில் சந்தித்துக் கொள்வோம். தமிழ் பேசுவார். ஒரு மகள் இருந்தார். பேசிக் கொண்டே நடப்போம். பிள்ளைகள் சைக்கிளில் அல்லது 'ஸ்கேட் போர்டில்' முன்னால் போவார்கள். இவர் ஒரு 'மந்தகாளி' பற்றிச் சொன்னார். எனக்கு மனசிலாகவில்லை.
ஆனாலும் நடைபாதை ஓரம் ஒரு செடியில் காய்களை யாரோ கொத்தாக நறுக்கிய அடையாளம் தெரிவதைப் பார்த்து யோசித்திருக்கிறேன், சமைக்க எடுத்துப் போய் இருப்பார்களோ அல்லது மருந்து மூலிகையா என்று. செடிகள்... கத்தரி, மிளகாயை எல்லாம் நினைவு வர வைக்கும். பழங்களோடு உள்ள செடிகளில் சிட்டுக்கள் வேட்டையாடுவதையும் அவதானித்திருக்கிறேன்.
செல்வியம்மா எல்லாவற்றையும் மீண்டும் மனக் கண்முன் நினைவு வர வைத்தார். எங்கள் வீட்டிலும் சில நாட்கள் கவனியாது விட்டால் இவை வளர்ந்திருக்கும். நான் சிட்டுக்கள் சாப்பிடுமே என்று விட்டுவைப்பேன். கிறிஸ் பிடுங்கி வைப்பார்.
மணத்தக்காளிக் கீரையில் என் முகம் தெரிகிறது என்று ஒருமுறை செல்வி சொன்னார். ;) எனக்கு இங்கு அவர் முகம் தெரிந்தது; கண்டு பிடித்துவிட்டேன். ;) கூடவே என்ன சமைக்கலாம் எப்படிச் சமைக்கலாம் என்பதெல்லாம் அறிந்து... செடி சடைத்து வளர ஆரம்பித்தது. (இப்போ க்றிஸ் சொல்லிவிட்டுப் பிடுங்குகிறார்.)
தக்காளி & கத்தரி வகை என்பதால் ஒவ்வாமை ஏற்படுமோ என்று முதலில் பயந்து பின்னர் ஒரு விடுமுறையில் கீரை, பருப்புப் போட்டு சமைத்தாயிற்று. பிறகு அடிக்கடி தொடர்ந்தது என் சமையல். என்னவென்றே தெரியாமல் வீட்டார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். (முன்பே சொல்லி இருந்தால் நஞ்சோ என்று சந்தேகித்திருப்பார்கள்.)
தோட்டத்தில் உலாவுகையில் பழத்தைப் பிடுங்கிச் சாப்பிடுவேன். ஒரு நாள் அறுசுவையில் கொடுத்து இருந்த முறையைப் பார்த்து வற்றல் போடலாம் என்று எண்ணி... ஒரு கூடையும் கத்தரியும் எடுத்துக் கொண்டு வேலையில் இறங்கினேன். ஒரு கூடை நிரம்பிற்று. தலைக்கு மேல் இருந்த கிளையில் சிட்டொன்று நான் எப்போ விலகுவேன் என்று பார்த்திருந்தது. சிறிது தள்ளி கிறிஸ் எதையோ மீள்நடுகை செய்து கொண்டிருந்தார்.
கூடைக் காயை மேசையில் கொட்டி விட்டு ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து விட்டு திரும்ப வந்தேன் வேலையைத் தொடர. என்ன மாயம்! செடிகளைக் காணோம். ;(
சிட்டு இப்போ வேறிடத்தில் நின்று சப்தித்தது. மணலில் செடிகளைப் பிடுங்கியமைக்கான அடையாளம்... தோட்டக்காரரிடம் கேட்டால் மீள் நடுகையாம், மிளகாய் நடப் போகிறாராம். ;( பாவம் சிட்டு.
நல்ல வேளையாக பிடுங்கிய செடி குப்பைத் தொட்டிக்குப் போகாமல் குவியலாய்க் கிடந்தது. மீதிக் காய்களையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பிறகு வெயிற்காலம் போய் விட்டதால் டீஹைட்ரேட்டரில் காய வைக்கவேண்டியதாகிற்று.
அது... பழைய அறுவடை.
இவ்வருட அறுவடை...
ஒருமுறை "கிண்ணத்தில் மணத்தக்காளி பிடுங்கி வைத்துச் சாப்பிடுகிறேன்," என்றேன் தோழியிடம்ம். ;) "அவ்வளவு பழம் இருக்கிறதா?" என்றார்.
இனிய உளவாக இன்னாத கூறல்...