நான் நடக்கத் தொடங்கின நாள் நல்லா நினைவு இருக்கு. முதலாவது பிறந்தநாள் அண்டைக்கு என்னைக் கீழ விட்டுப் போட்டு மிச்ச எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டும், வந்த கூட்டாளிமாரில ஒருவர் அழுது கொண்டு நிண்டவர்.. அவரைச் சுற்றி முழுசிக் கொண்டும் நிண்டவங்கள்.
பேர்தான் எனக்கு பிறந்தநாள் எண்டு. என்னை உடுத்தி வச்சுப் போட்டு மற்ற எல்லாரும் முஸ்பாத்தியா இருந்தவங்கள். சும்மா வந்த ஆக்கள் எல்லாம் ஆளாளுக்கு ஒரு பாசலைக் கையில தந்து 'எங்க, ஆ..யம்மா சொல்லுங்கோ பாப்பம்.' எண்டு (சின்னனில நான் அப்பிடிச் சொல்லுவன், ஒண்டுமில்ல. கிஸ் தான்.) தங்கட பௌடர், சென்ட் போட்ட முகங்களை அமர்த்தி அமர்த்திக் கொஞ்சினதில, எனக்கு சொக்கு பேய் நோ நொந்து போச்சு. வெள்ளையா இருந்த முகம் ரூஜ் பூசின மாதிரி ஆகிப் போச்சுது.
இவங்களுக்குத் தேவை இல்லாத வேலை. இப்பிடிப் 'பாட்டி' எண்டால், பிள்ளைகள் இருக்க வேணும் எண்டு, தனியப் பிள்ளைட பேரைப் போட்டு இன்விடேஷன் அனுப்பி விட அவங்களும் யோசிக்காமல் கொண்டு வந்து இறக்கிப் போட்டுப் போய்ட்டாங்கள் இந்த அண்ணாவ. அவர் தொப்பியப் பிடுங்கி வீசிப் போட்டு 'அம்மாஆ... ஆ... அ... ஆ...ஆ... ஆ... அ... ஆ... எண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு நிண்டதைப் பாக்க எனக்கு பிறந்த நாளே இனிக் கொண்டாடக் கூடாது எண்டு ஒரு வைராக்கியம் வந்துது. நான் சொல்லி யார் கேப்பினம். அம்மாக்கும் அப்பாக்கும் ஷோ காட்ட வேணும். நான் ஒரு சாட்டு. என்னவோ செய்யட்டும்.
எனக்கு போரடிச்சுது. பசிக்க இல்ல, ஆனால் அந்த கேக் நல்ல வடிவாக் கிடக்கு; வச்சு சும்மா பார்த்துக் கொண்டு இருக்கினம்; ஒருக்கா தொட்டுப் பாப்பம் எண்டு நினைச்சு எழும்பிப் போனன். எழும்பேக்க ஒரு ஆட்டம் ஒண்டு வந்துது. சமாளிச்சிட்டன். விழுந்தால் சிரிச்சுப் போடுவாங்கள். காட்டிக் கொள்ளக் கூடாது. அதுக்குள்ள மாமியும் அம்மாவும் கண்டு ஏங்கிப் போனாங்கள் போல. விழப் போற பிள்ளையப் பிடிச்சு உதவுவம் எண்டு இல்லாம வாயில கைய வச்சுக் கொண்டு அங்கேயே நிக்கினம். நான் தனியவே சமாளிச்சிட்டன். பின்ன, நான் யார்? அரண். அரண் சாம்பக்ரிஷ். பெலமான பிள்ளை.
பிறகு என்ன! நடக்கிறது ஒண்டும் கஷ்டமே இல்ல. எதுக்கு இவ்வளவு நாளும் என்ன அந்த 'வோக்கரில' போட்டுப் போட்டு வைச்சாங்களோ! எண்டு நினைச்சன். தவழுறத விட இது லேசு. ரெண்டு பக்கமும் செட்டை மாதிரி கையை நீட்டிப் பிடிச்சுக் கொண்டு... நல்ல பலன்ஸ் வந்திட்டு, ஒர்ரேஏ.... ஓட்டம். நேர போய் கேக்கடியில ப்ரேக் பிடிச்சன். அப்பிடியே நட்ட நடு கேக்கில சுட்டுவிரல விட்டுத் தோண்டி எடுத்து வாயில வைச்சு... சூ..ப்பர். உங்கட வீட்ட 'பாட்டி' நடக்கேக்க ஒருக்கா ட்ரை பண்ணிப் பாருங்கோ.
அண்டைக்கு எனக்கு உதவிக்கு வந்தவ என்ட மச்சாள்.
அவவும் ஒரு விரலில தொட்டு... வாய்க்குள்ள வைக்க, எல்லாரும் சிரிச்சு, சந்தோஷமா அதையும் வீடியோ எடுத்து, போட்டோ எடுத்து வைக்க.. எல்லாம் சுபமாக முடிஞ்சுது. அண்டைல இருந்து இண்டைக்கு மட்டும் ஓடிக் கொண்டு தானே நிக்கிறன்.
எப்பவும் மச்சாள் எண்டால் எனக்கு உயிர். எல்லாத்திலையும் எனக்கு உதவுறவ. கனவிலையும் வருவா. எல்லாத்திலையும் எக்ஸ்பேட் அவ. நல்லா மாமரம் ஏறுவா. தானே நல்லா டீ போடுவா.
உங்கள் எல்லாருக்கும் சமையல் குறிப்பு எழுத, வாசிக்கப் பிடிக்குமெல்லோ! நல்ல நல்ல பின்னூட்டமும் போடுறனீங்கள். அவட ரெசிபியும் சொல்றன், குறிச்சு வையுங்கோ. குடிச்சுப் பாத்திட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கோ, என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குட்டீ (ப.கு - good tea)
~~~~
தேவையான பொருட்கள்
ஒரு கரண்டி தேயிலை
ஒரு கரண்டி பால்மா
அரைப்போத்தல் சீனி
ஒரு கோப்பை ஐஸ் தண்ணி
செய்முறை
- எல்லாம் ஒண்டா வாய்க்குள்ள போடவும்.
- நல்லாச் சப்பித் தின்னவும்.
- ஃபிரிஜ்ஜத் திறந்து தண்ணிப் போத்தலைத் தொண்டைக்குள்ள கவிழ்க்கவும்.
அவ்வளவுதான். வயிற்றுக்குள்ள டீத்திருவிழா.
~~~~~~~~~~~~~~~~~~
பிறகு என்ன நடக்கும் எண்டால், அடுத்த நாளைக்கு மாமி வந்து 'நேற்று என்ன சாப்பிடக் குடுத்தனீங்கள் இங்க? இரவிரவாப் பிள்ளைக்கு கறுப்பா வயிற்றால போச்சுது' எண்டு கேப்பா.
அவவ விடுங்க. எங்கட வீட்டில நான் உதவித்தான் சமையல் நடக்கிறது எப்பவும். நல்...லா 'வெங்காய்' உரிப்பன். ஆனால் ஒண்டும் மிஞ்சுறதுதான் இல்ல. ;( அம்மா 'கடல்' அவிச்சுத் தருவா. அத முழுசு முழுசா விழுங்கினால் நல்லா இருக்கும். அவிக்காட்டியும் ஊறி இருந்தா நல்லா இருக்கும்.
மச்சாளும் நானும் சேர்த்து ஒரு நாள் ஷோகேஸத் திறக்கப் பார்த்தோம். நாங்களே திறப்பு செய்தோம். ரெண்டு ஈக்கில் துண்டு மடிச்சு மடிச்சு ரபர்பான்ட் போட்டு எடுத்தால் வடிவான திறப்பு வந்துது. திறக்கிறதுக்கிடையில மாமா வந்து டீவீயில 'உச்சந்தல உச்சியில' பாட்டுப் போட்டு விட நாங்க எல்லாத்தையும் மறந்து போனம். கதிரைல ஏறி நிண்டு அவர்ட தலையில தப்பினம். அவரும் நித்திரையாப் போனார்.
என்ட அடுத்த பேத்டேக்கு கேக் வெட்ட மெழுகுதிரி எடுக்கிறதுக்கு அப்பா கடைசி நேரம் 'ஸ்குடைவர்' கொண்டு வந்து ஷோகேஸ் திறந்து விட்டவர். இப்பவும் நினைவு இருக்கு. 'யார்ட வேலை இது?' எண்டு கேக்க, நான் மச்சாளையும் அவ என்னையும் கைகாட்டிவிட்டோம். "நல்ல நாளில பிள்ளைகள ஏசப்படாது," எண்டு பாட்டி சொல்லிக் காப்பாற்றி விட்டா. இவ மட்டும் இல்லாட்டி அண்டைக்கு அவ்வளவுதான் நாங்க.
அப்பப்ப பாட்டி சொல்லுவா. 'நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ பிள்ளையள். சின்னனில அம்மாவும் மாமியும் இப்பிடித்தான். உங்களை மாதிரியே! ஒருவரில ஒருவர் உயிரா இருப்பினம்.' எண்டு.
செய்யிறது எல்லாம் செய்து போட்டு இன்னமும் உயிரோடதான் இருக்கினம் எண்டு சொல்ல நினைச்சுத்தான் சொன்னாவோ தெரியா.
உங்கட வீட்டில பரண், அரண் எல்லாம் இல்லையோ!!