"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை".... என்று இல்லாவிட்டாலும் சுடியாகவாவது இருப்போமே. ;)
'ஆசிரியையாய் என் அனுபவங்கள்' என்று நானும் எழுதுவதாகத் தீர்மானித்தாயிற்று.
இன்று... சிரித்த அனுபவம்.
'அறை எண் 15' மாணவர்கள் இன்னமும் செபங்கள் மனனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏனைய அறை மாணவர்கள் எல்லோரும் பாடம் சொல்லி முடித்தாயிற்று. இவர்களைச் செவிமடுக்க சமய ஆசிரியருக்கு வேளை போதவில்லை என்று என்னிடம் உதவி கேட்டார் நேற்று. சம்மதித்தேன். என்கையில் மாணவர்கள் பெயர் அடங்கிய தாளைத் திணித்துவிட்டு விலகினார். செம்மஞ்சள் நிறத்தில் (வகுப்பிற்குரிய நிறம் அது) அட்டவணை போட்டு, பாடம் கேட்க வேண்டிய செபங்களின் பட்டியலும் இருந்தது.
நேற்று பாடசாலை முடிந்ததும் மாணவி ஒருவர் என்னைத் தேடி வந்தார். "அம்மா வர அரை மணி இருக்கிறது. செபம் சொல்லட்டுமா?" என்றார். எனக்கும் 'அப்பா' வர அரை மணி இருந்தது. செம்மஞ்சள் வர்ணத் தாளோடும் பேனாவோடும் அமர்ந்தேன். செபங்கள் அனைத்தும் சரியாக ஒப்பித்தார்.
இன்று காலை சிலர் வந்தார்கள். சரியாக ஒப்பித்தவற்றைக் கணக்கு வைத்துக் கொண்டு மீதியைக் கற்றுக் கொண்டு வருமாறு திருப்பி விட்டேன்.
தேநீர் இடைவேளையில் சிலர் வந்தார்கள். குண்டுக் கன்னத்தோடு கொழுக்மொழுக்கென்று ஒரு பிலிப்பீனோக் குட்டியர் இருக்கிறார். அவர் பெயர் சட்டென்று நினைவு வராது. சில சமயங்களில் 'எரிக்'என்று வாய் தவறி அழைத்து மாட்டி இருக்கிறேன். ;) இந்த எரிக் வந்து என்னருகே அமர்ந்தார். அனைத்துச் செபங்களும் மனப்பாடம் என்றார். சொன்னார். சில சொற்கள் நடு நடுவே காணாது போய் இருந்தன.
கடைசியாகக் கேட்டேன் "Do you know 'Eternal Rest'?" "Yes, Miss," என்று ஆரம்பித்தார். உதடுகள் அதிகம் அசையாது வேக வேகமாகச் சொன்னார். வாய் நிறையச் சாக்லட் குதப்புவது போல கன்னம் அசைந்தது அழகாக இருந்தது. அவர் கையில் ஒரு ஐஸ் ப்ளாக் (blog இல்லை), பாதி உறிஞ்சிய நிலையில். என் கையில் லிசா போட்டுத் தந்த 'பால்க்'கோப்பி!! அதுவும் பாதி உறிஞ்சிய நிலையில்.
"Eternal rest grant to him O! Lord. May pe.t..l light shine upon him. May he.." என்ன சொல்கிறார்! நடுவில் தடுத்து மீண்டும் சொல்லக் கோரினேன். "Eternal rest grant to him O! Lord. May pe..t..l light shine..." காது சரியாகக் கேட்கவில்லை. "Hold on Eric. Can I have that line again please!!!" இப்போது நானே எடுத்துக் கொடுத்தேன். "Eternal rest grant to him O! Lord. May..." தொடர்ந்தார் "May... May.. um. May petrol light shine upon him. May he rest in peace. Amen."
perpetual என்பது தான் மருவி, பெட்ரோல் ஆகி இருந்தது. ;)
பிறந்ததும் இறந்துபோனவர் இவர். வயிற்றுப்புறம் வற்றி இருந்தது. ஆகாரம் போதாது இருந்திருக்கும் போல.