இன்று இரண்டாம் முறையாக இந்த வருடம் குட்டித் தேவதை தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இம்முறை 'குட்டீஸ் ஒன்லி'. அவர்களில் ஒருவருக்கு நேற்று ஆறாவது பிறந்தநாளாம். இன்றுதான் கொண்டாட்டம். அதை முடித்துக் கொண்டு தனது இன்னும் குட்டியான சகோதரியுடனும் தாயாருடனும் வந்திருந்தார்.
குட்டீஸ் பார்ட்டியில் இமாவுக்கு என்ன வேலை என்கிறீர்களா! 'Fas paint'ing - ஃபேஸ் பெய்ன்ட் தான், இது பிராண்ட் பெயர்.
முதலாவதாக வந்த விழாநாயகி உயரமாக ஒரு 'பார் சேரில்' ஏறி அமர்ந்து கொண்டார். எனக்கு இந்தத் தொழிலில் முன் அனுபவம் பெரிதாகக் கிடையாது. ஒரே ஒரு முறை, என் குட்டியர் (கோகுவோ கொஹானோ என்று நினைவு,) போட்டு விடக் கேட்டார் என்று போட்டு விட்டிருக்கிறேன். எங்கோ படம் இருக்க வேண்டும். பிற்பாடு எப்போதாவது ஸ்கான் செய்து இணைக்கிறேன்.
மற்றப்படி பாடசாலையில் மாணவிகள் 'ஸ்கூல் காலா' வின் போது போட்டுவிடுவதை மேற்பார்வை செய்திருக்கிறேன். அப்போ ஆலோசனைகள் சொல்லுவேன், அவ்வளவே.
இது என்ன பிரமாதம் என்று நினைத்துக் கொண்டுதான் ஆரம்பித்தேன். ஆனால் ஆளாளுக்கு ரசனையாய் வாய்க்குள் 'லாலிபாப்' சுவைத்துக் கொண்டு இருக்கையில் வரைவது அத்தனை சுலபம் இல்லை என்பது பிற்பாடு புரிந்தது. நடுவே, மீதிப் பேர் என்ன செய்கிறார்கள் என்பதையும் முன்னறிவித்தல் எதுவும் கொடுக்காமல் தலையைத் திருப்பிப் பார்த்து விடுவார்கள், வைக்க நினைத்த குட்டிப் புள்ளி நீண்டு கோடாகி விடும். ;)
விழா நாயகி விரும்பியது, சிவப்பு வண்ணத்துப் பூச்சி. இன்ன நிறப் பொட்டுகள், உடல் இன்ன நிறம் என்பது போன்ற விபரங்கள் எல்லாம் தந்தார்கள். முடிந்து கண்ணாடியில் பார்த்ததும் ஒரு சின்னச் சிரிப்பு. (இது எல்லோர் முகத்திலும் தெரிந்தது.)
அடுத்து அவரது நெருங்கிய தோழி, (சென்ற வருடம் இவரை முதலில் சந்தித்தேன்) விரும்பியது ஒரு 'பூனை'. படத்தைக் காட்டினார். ஆரம்பித்தேன் வரைய. இவர்தான் அதிகம் தலையை ஆட்டியவர். (வாயை அசைத்தவரும் கூட) நிறையப் பேசினார். வேலை முடியும் வரை பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் ரசித்தார்.
மூன்றாம் ஆள், இருவர் முகங்களையும் பார்த்தபின் தீர்மானித்திருக்க வேண்டும், தனக்கும் வண்ணத்துப் பூச்சி வேண்டும் என்றார். ஆனால் சிவப்புப் புள்ளிகளுடன் கூடிய கருப்பு இறக்கைகள் வேண்டும் என்றார். உடல் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும் என்றார்.
இவர் கேட்டது சிலந்தி. பேச்சுவாக்கில் சிலந்திப் பூச்சிக்கு எத்தனை கால்கள் என்று கேட்டு விட்டேன். 'ஆறு' என்று சட்டென்று பதில் வந்தது. பிறகு எவ்வளவோ சொல்லியும் 'முயலுக்கு மூன்று கால்' போல 'சிலந்திக்கு ஆறு கால்' ;) தூர இருந்து பார்க்க சிலந்தி முகத்தில் அமர்ந்திருந்தது போலவே இருந்தது.
இவர்தான் இன்று பிறந்தநாள் கொண்டாடிய மற்றவர். இவர் விரும்பியபடி ஒரு 'வானவில் வண்ணத்துப் பூச்சி.'
வலது கன்னத்தில் ஒரு ரோஜா வர்ண இதயம் வரையக் கேட்டார். உடலுக்குள் இதயம் இல்லையாம், வயிறு மட்டும்தான் இருக்கும் என்றார். நான் தன் தோழிக்கு என்ன உறவு, அவர் தாயாருக்கு என்ன உறவு என்பதெல்லாம் விசாரித்தார்.
பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தங்கை என் பெயரைக் கேட்டார். அவர் கேட்டது இடது கன்னத்தில் கருப்பு நட்சத்திரம் இரண்டு பொட்டுகளுடன், வலது புறம் ரோஜா வர்ண நட்சத்திரம் ஒன்று பெரிதாக வரையுமாறு கேட்டுக் கொண்டார். புகைப்படம் நன்றாக வந்திருக்கவில்லை.
எல்லாக் குழந்தைகளையும் முழுவதாகக் காட்டவே விரும்பினேன். இருப்பினும் ஒரு தயக்கம். ;)
குட்டித் தேவதையின் தாயார் (என் முன்னாள் மாணவி) குழந்தைகளுக்காக விளையாட்டு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்.
எல்லாம் முடிந்து இரண்டு மணி நேரம் கழித்து மூட்டை கட்டிக் கொண்டு புறப்படுகையில் மூன்று பேர் போட்டி போட்டுக் கொண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டார்கள். இதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றிற்று. ;)