Showing posts with label மனதோடு.... Show all posts
Showing posts with label மனதோடு.... Show all posts

Tuesday, 26 December 2017

செரிப்பழங்கள்

இந்த நொடி... என் சிந்தனையில் ஒலிக்கிறது சித்ராவின் இனிய‌ குரலில், "ஐஸ் க்ரீம் கடையில் செரிப்பழம் இருப்பது அரை நொடி வாழ்க்கையடா!" என்கிற‌ வரிகள்.

வாழ்க்கை கூட‌ அப்படித்தான். ஒரு நொடி அழகு; மறு நொடி அழுகை.

இந்த‌ வருடம் ஆரம்பம் முதல் இதுவரை, இந்தத் தத்துவம் சுத்தியலால் ஒவ்வொரு அடி வாங்கும் போதும் ஆணி சற்று ஆளமாக‌ உள்ளே இறங்குமே, அப்படி இறங்கிக் கொண்டே இருக்கிறது.

செபா மருத்துவமனையிலிருந்த‌ சமயம், காலை வரை பிரயாசையுடன் என்றாலும் நடந்து குளியலறை வரை சென்ற‌ வயதான‌ பெண்மணி பதினொரு மணியளவில் வந்து குழுமிய‌ உறவினர் கூட்டத்துடன் பேசியபடி அமைதியாகக் கண் மூடினார். எதிர்க் கட்டிலிலிருந்து மெதுவே நிகழ்வுகளைக் கவனித்தபடி இருந்தோம் நாம். மெதுவே உறவுகள் கலைந்து போய் அனுமதிக்க‌, வைத்தியசாலை ஊழியர்கள் அவரை அறையிலிருந்து வெளியே எடுத்துப் போனார்கள். படுக்கை சுத்தம் செய்யப்பட்டு அடுத்த‌ நோயாளியை ஏற்கத் தயாராகிற்று.

என் பெற்றோர்களுக்காக‌ ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கான‌ பத்திரங்களை நிரப்பிய‌ வண்ணம் இருந்த‌ சமயம், அந்த‌ அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நீங்கள் உள்ளேயே இருங்கள். ஒருவரை வெளியே எடுத்துப் போகப் போவதாகத் தெரிகிறது," என்றார் அலுவலர். இம்முறை அவரது அறை - ஓரிரண்டு நாட்களில் இன்னொருவரை அனுமதிக்கத் தயாராகி இருக்கும் என்னும் நினைப்பு வந்தது.

ஐப்பசி 18ம் தேதி - அம்மா பிரிந்ததும் அவரை பார்லருக்கு எடுத்துப் போயாயிற்று. குளிர் அறையில் அவர் அமைதியாகத் துயில் கொள்ள‌, நாம் பிரிவுபசார‌ வேலைகளில் மும்முரமானோம். பத்தொன்பது... இருபது... கிட்டத்தட்ட‌ இருபது பேர், அந்த இல்லத்தில் இணைய அறைகளுக்காகக் காத்திருப்பது நினைவை உறுத்தியது. அட்டைப் பெட்டிகள் எடுத்துப் போய் உடமைகள் எல்லாவற்றையும் அடுக்கி, அறையைக் காலி செய்து கொடுத்தோம். மருத்துவமனையால் இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்த‌ குளியல் நாற்காலி, நடை வண்டி, ஒட்சிசன் இயந்திரம் எல்லாவற்றையும் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு திருப்பியாயிற்று. (இவை இன்னொருவர் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுவிடும்.) ஒரு வாரம் கழித்து இறுதிச் சடங்குகள் முடிந்து போய்ப் பார்க்க‌, அந்த‌ அறை அடுத்தவரை வரவேற்கத் தயாராக‌ இருந்தது. இபோது இன்னொரு பெண்மணி அங்கு குடியிருக்கிறார். இந்த‌ அறைக்கு வரும் எவரும் குணமாகி வீடு திரும்புவது  கிடையாது என்பது கசப்பான‌ உண்மை.

முப்பத்தோராம் நாள் காரியம் ஆகி மெதுவே மனது வேலைகளில் ஈடுபட‌ முனைகையில் ஊரில் குடும்பத்தினர் இல்லத்தில் சடுதியாக‌ ஒன்றன்பின் ஒன்றாக‌ இரு இழப்புகள்.

விடுமுறையைத் தனியாக‌ வீட்டில் கழிக்க‌ இயலுமென்கிற‌ தைரியம் இருக்கவில்லை. ஒரு சிறு பயணம் கிளம்பினோம்.  தோட்டமொன்றில் பழம் பிடுங்கப் போனோம்.  அங்கும் செரிப்பழங்கள் -
கொத்துக் கொத்தாக சிவப்பும் கருஞ்சிவப்புமாக செரிப்பழங்கள் - நாம் பறித்தவற்றுக்கு அரை நாள் தான் வாழ்க்கை. :-) இந்தப் படத்திற்கு இங்கு சில நாட்கள் தான் வாழ்க்கை. பிறகு காணாமல் போய் விடும். :-)

மார்கழி 26 வந்தால் சுனாமி எண்ணங்கள் வராது இராது. எம் உறவுகள் எழுவரை இழந்த தினம்.

பூவுலகை  விட்டுப்  பிரிந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும் என் பிரார்த்தனைகள்.

Wednesday, 12 October 2016

இடம் வலம்

ஊரில், எங்கள் வீட்டின் பின்பக்கம் ஒரு கலியாண மண்டபம் இருந்தது. அதை எதற்காகக் கலியாண மண்டபம் என்றார்கள் என்பது எனக்குத் தெரியாது. எந்தக் கலியாணமும் அங்கு நடந்ததாக நினைவில்லை. ஒரு சில பொது நிகழ்ச்சிகள், சில பொருட்காட்சிகள் நடந்திருக்கின்றன.

முன்பு பனங்காடாக அழகாக இருந்த பூமி அது. நிறைய வாகை மரங்கள், அவை நிறைய பொன்வண்டுகள், விதம் விதமான மரங்கள், ஒரு கிணறு... அதன் விசேஷம்... அந்த நீரில் சமைத்தால் சாதம் சிவப்பாக வேகுமாம். அயலில் மீதிக் கிணறுகள் வற்றிப் போக, இது மட்டும் வற்றாது இருக்கும்.

ஒரு பெரிய கால்வாய் ஓடும். அதில் மீன்கள்... அருகே ஒரு இலவமரம். நான் கண்ட முதல் இலவ மரம் அது. காயைக் கொண்டுவந்து வீட்டில் காட்ட, அம்மா 'இலவு காத்த கிளி' பற்றிச் சொல்லிக் கொடுத்தார்.

அந்த இலவமரத்திற்குச் சொந்தக்காரர் ஒரு சிங்களக் குடும்பத்தினர். அவர்களைப் பற்றித் தனியாக எழுதவேண்டும். அருமையான மனிதர்கள். எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

கலியாண மண்டபம்... இன்னும் பூரணப்படுத்தப்படாமல் தான் நிற்கிறது என்று நினைக்கிறேன்.

முன்பு அங்கு பசுக்கள் உறங்கும். சனி ஞாயிறு - கையில் ஒரு வாளியும் இரண்டு தகரங்களும் எடுத்துப் போய் என் தோட்டத்திற்கு எரு சேகரித்து வருவேன்.

பல தடவை இங்கே round up (என் பையன், 'சுற்று மேலே' என்பார்.) நடந்திருக்கிறது. பல முகமூடிகள், தலையாட்டிகள், பிடிபட்ட அப்பாவிகள் அவர்கள் குடும்பத்தார் கண்ணீரையெல்லாம் கண்ட இடம்.

ஒரு சமயம்.... ஒரு தொகுதி நரிக்குறவர் வந்து தங்கியிருந்தார்கள். எல்லாம் இருந்தும், இல்லாததை எண்ணுவோம் நாம். அவர்கள் இருப்பதோடு சந்தோஷமாக வாழத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். தேங்கியிருக்கும் மழைநீரில் குழந்தைகளைக் குளிப்பாட்டி, தூண்களிடையே தூளியமைத்துத் தூங்க வைத்து, அருகேயே அடுப்பெரித்து... அவர்கள் வாழ்க்கையை அவதானிக்கக் கிடைத்தது... ஒரு வித்தியாசமான சினிமா பார்த்த அனுபவம்.

சில காலம் அங்கு IPKF முகாமும் இருந்தது. அப்போதான் முதல் முதலாக சப்பாத்தியை நேரில் கண்டேன். அது மட்டுமல்ல - டால்ட்டா டப்பா, மொச்சைக் கடலை, அமுல் டப்பா எல்லாம் எங்கள் வீட்டிலும் புழக்கத்திற்கு வந்தது. பண்டமாற்றாக... மின்சாரம், இஸ்திரிப் பெட்டி அங்கு போயிற்று.

நான் கற்பித்த பாடசாலை சற்றுத் தள்ளி இருந்தது. இல்ல விளையாட்டுப் போட்டிக்குத் தயார் செய்யும் சமயம் எங்கள் இல்லத்தோர் (காவேரி - இலங்கைக்கே வந்துவிட்டது.) இங்கு வந்து பயிற்சி எடுப்போம்.

ஒரு சனிக்கிழமை காலை - பெரிதாக left, right, left, right, about turn என்று சத்தம் கேட்க, வேலியின் மேலாக எட்டிப் பார்த்தோம். தனியாக ஒரு சிறுமி நடை பழகிக் கொண்டிருந்தார். ;) எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். பிறகு இது பல வாரவிடுமுறைகள் தொடர்ந்தது. சிறுமி தனக்குத் தானே ஆணை பிறப்பிக்கும் சத்தம் கேட்டதும் என் அம்மா, " ம்... தனிநபர் மாச்பாஸ்ட் ஆரம்பம்," என்பார். :-)


இது... இங்கு நான் கற்பிக்கும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஒரு மாக்பையின் தனிநபர் மாச்பாஸ்ட். :-) எங்களூர்க் காக்கை இவர்.