Kia ora! அனைவருக்கும் நல் ஆரோக்கியம் மிக்க ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும் என்கிற வாழ்த்துகளுடன்... இடையில் ஒரு வருடத்திற்கு மேல் அஞ்ஞாதவாசம் இருந்து எட்டிப் பார்க்கிறேன்.
வாழிடம் மாறிவிட்டது; வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இங்கு வராதிருந்த காரணம், நேரமின்மை என்பதில்லை. சந்தோஷமான வாழ்க்கை, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுக்கும் சமயம் வேறு விடயங்கள் பிந்தங்கிப் போகும். அப்படித்தான் இமாவின் உலகமும் சுழலாமல் நின்றது. அது இங்கு மட்டும்தான். உண்மையில், என் உலகம் எப்பொழுதும் போல் அழகாக ரசனைகள் நிறைந்ததாகச் சுழன்றுகொண்டேதான் இருக்கிறது. பல சமயம் இடுகைகள் தட்ட ஆரம்பித்து அரைகுறையாக விட்டிருக்கிறேன் என்பது இன்று வந்து பார்க்கும் போது தெரிகிறது. இதையிட்டு மனவருத்தம் எதுவும் இல்லை. பதிவுலகில் பதிவிடாவிட்டாலும் என் அன்புக்குரியவர்கள் மனதில் அழகான அனுபவங்களைப் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறேன்.
சில பழைய இடுகைகளைப் படித்துப் பார்க்கும் போது - முக்கியமாக என் தாயாரது வலைப்பக்கத்திலுள்ள இடுகைகளைப் படிக்கும் போது - ஒரு பெரிய உண்மை மனதில் உறைத்தது. மூளை ஒரு அளவுக்கு மேல் விடயங்களைச் சேமிப்பதில்லை. புதிய எண்ணங்கள் / நிகழ்வுகள் பதிவாகும் போது பழையன கழிந்து அல்லது மங்கிப் போய் விடுகிறது. மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும் அவை மேலே வர. அப்படி மங்கிப் போயிருந்த பல நிகழ்வுகளை பழைய இடுகைகள் மீட்டுக் கொடுத்தன.
மீண்டும் பதிவிட ஆரம்பிக்கப் போகிறேன் - பிரபலத்திற்காகவோ புகழுக்காகவோ அல்ல. என் நினைவுகளை இரைமீட்டுப் பார்க்க விரைவில் உதவும் என்பதால் மட்டுமே ஒரு தினக்குறிப்புப் போல - ஆனால் தினமும் என்று அல்லாமல் எழுதப் போகிறேன். முடிந்தால் தினமும் எழுதுவேன். :-) இப்போது விட்டுவிட்டால் இனி எப்போதும் எழுதாமல் விட்டுவிடுவேன் என்கிற பயம் ஒன்று இருக்கிறது. :-)
என் பிறந்தநாள் அருகில் வரும் சமயம் மூத்த மருமகள், 'உங்களைப் போல் கேக் செய்துதர என்னால் முடியாமலிருப்பதற்காக வருந்துகிறேன்,' என்றார். ஏற்கனவே ஒரு மாதம் முன்பாக உலர்பழக் கலவை அதற்காக மதுசாரக் கலவையில் ஊற ஆரம்பித்துவிட்டதைச் சொன்னேன். இம்முறை என் தேவைக்கு ஏற்ப பழங்கள் பல கிடைக்கவில்லை. கொரோராவினால் இலங்கையிலிருந்து இறக்குமதி குறைந்திருந்தது ஒரு காரணம் என்றால், நான் இருக்கும் கிராமத்திலோ அண்டைய ஊரிலோ ஓர் இலங்கைக் கடை இல்லை என்பதும் நான் முன்பிருந்த ஊருக்குச் செல்ல ஒரு மாதம் முன்புதான் அனுமதி கிடைத்தது என்பதும் கடைக்கு அடிக்கடி செல்லப் பயமாக இருப்பதுவும் முக்கிய காரணங்கள் தான். கிடைத்தவற்றைக் கொண்டு கேக் தயாராகிற்று. புதிய வீடு - oven இன்னும் பழகவில்லை. ஆனால் திருப்தியாக வந்திருந்தது. தட்டு - என் பெற்றோரின் பொன்விழா மணநாள் கேக்கிற்காகச் செய்தது. அதை மீண்டும் என் ஐம்பதாவது பிறநாளுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன் என்பது இன்று இங்கு வந்து பார்த்த பின்பு தான் நினைவுக்கு வருகிறது. 'ஐசிங் எம்ப்ராய்டரி' செய்து பார்க்க வெகு காலமாக ஆசை இருந்தது. பேத்தியின் பிறந்தநாள் கேக்கிற்குச் செய்ததில் கொஞ்சம் 'பட்டர் க்ரீம் ஐசிங்' மீந்திருந்தது. ஒரு பீங்கான் தட்டில் முயற்சி செய்தேன். அன்று வெப்பம் அதிகம் இங்கு. மறுமுறை செய்யும் போது வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு இறுக்கமாகவோ இளக்கமாகவோ ஐசிங் தயார் செய்ய வேண்டும்.
முதல்நாளே கேக்கை அறுகோணி வடிவில் அமைத்து, 'ஆமண்ட் ஐசிங்' பூசி மினுக்கி வத்திருந்தேன். விழாவுக்கான தினத்தன்று காலை 'royal icing' கொண்டு பூக்களையும் இலைகளையும் ஒரு பறவையையும் வரைந்தேன். தட்டிலும் சின்னதாக வளைவுகள் வரைந்தேன். இறுதியாக, 'Gold mist spray' அடித்துவிட்டேன்.
சின்னதாக ஆளுக்கொரு துண்டு வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
குறையப் போவதில்லை என்பதால் பெரிதாகவே எடுத்துக் கொண்டேன்..வாழ்த்துகள்..
ReplyDelete:-) நன்றி.
Deleteநல்வரவு இமா! நலமாக இருக்கிறீர்களா?
ReplyDeleteரொம்ப நாளாயிற்று உங்கள் எழுத்துக்களைப்பார்த்து!
தொடர்ந்து எழுதுங்கள்!
கேக் வடிவமைப்பு ரொம்பவும் அழகு!
மிக்க நன்றி அக்கா. நலமாக இருக்கிறேன். நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.
Deleteஇம்முறை நிச்சயம் விடாமல் தொடர்ந்து எழுதுவதாக இருக்கிறேன்.
சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. கேக் பார்க்கவே அழகாக இருக்கிறது. நானும் ஒரு துண்டு எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteபெரிய இடைவெளிதான். காலம் போனது தெரியவே இல்லை. உங்கள் வருகைக்கு என் அன்பு நன்றிகள்.
Deleteகேக் சுவை
ReplyDeleteவாழ்த்துகள்
நன்றி சகோதரரே! நலம்தானே!
ReplyDelete