Tuesday 26 May 2020

அனைத்தும் சுழலும்


காலச்சக்கரம் சுழலும்; மாதங்கள் மீண்டும் மீண்டும் வரும். ஒவ்வொரு பிறந்தநாளும் மாறிய ரசனைகள் கொண்டனவாக வந்து போகும். வாழ்த்திதழ்கள் வரும். சேகரித்துப் பத்திரப்படுத்தி அடிக்கடி எடுத்துப் பார்த்து இரைமீட்கலாம். 

என்னிடம் உள்ள வாழ்த்திதழ் ஒன்றில் எழுதப் பயன்படுத்தப்பட்ட மை என்ன காரணத்தாலோ மெதுவே மங்கிக் கொண்டு வருகிறது. அந்த வாழ்த்திதழின் வயது - குறைந்தது முப்பதாக ஆவது இருக்க வேண்டும். ஒரு திருமண அழைப்பிதழ் வைத்திருக்கிறேன். அதன் வயது பத்துப் பண்ணிரண்டு இருக்கலாம். கையில் கிடைத்த சமயம் அதன் அமைப்பை அத்தனை வியந்திருக்கிறேன். அதனால்தான் பத்திரப்படுத்தினேன் என்று கூடச் சொல்லலாம். கையால் தயாரித்த காகிதத்தில் அழகுப் பொன் நிற மையில் அழைப்பு அச்சிடப்பட்டிருந்தது. சமீபத்தில் எடுத்துப் பார்க்க, பெரும்பாலான விபரங்கள் மறைந்துவிட்டிருக்கின்றன. தேதி, மணமக்கள் பெயர் எதுவும் தெரியவில்லை. 

ஔவை பணத்தைப் புதைத்து வைப்பது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. கூடுவிட்டு ஆவி போன பின் யாரே அனுபவிப்பார், பாவிகாள் என் சேகரிப்புகள்!! :-) 

இன்று பாடசாலையில் இருவருக்குப் பிறந்தநாள். அவர்கள் அனுபவிக்கட்டும் என்று உரு மாற்றினேன் இரண்டை. பெறுபவர்கள் மட்டுமல்லாமல், காண்பவர்களும் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறேன். 

பழைய வாழ்த்திதழின் முகப்பை வெட்டி: சட்டத்தோடு, சட்டத்தினுள் பூக்கள் இலைகள் இல்லாத இடங்களையும் வெட்டி நீக்கினேன். (இரவு நேரம் எடுத்த காரணத்தால் படத்தில் விபரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.) இந்த அமைப்பை 3D ஸ்டிக்கர்கள் கொண்டு புதிய அழைப்பிதழின் முகப்பில் ஒட்டினேன். மணிகளைச் சேர்ப்பதை, சமீப காலத்தில் என் அனைத்து வாழ்த்திதழிலும் செய்துவருகிறேன். விரைவில் வேறு முறைக்கு மாற வேண்டும். :-)
இது மம்மிக்கு அவரது தோழி இலங்கையிலிருந்து அனுப்பிய வாழ்த்திதழிலிருந்து வெட்டி எடுத்தது. பூக்களின் நடுவில் வழமை போல், மணிகள். பூச்சாடியும் பூக்களும் 3D ஸ்டிக்கர்கள் உதவியோடு உயர்த்தி ஒட்டப்பட்டிருக்கின்றன.

2 comments:

  1. இரண்டு கார்ட் ம் அழகா இருக்கு.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா