Friday 18 October 2019

அம்மாவின் நினைவுநாள்

முக்கிய நிகழ்வு ஒன்றுக்காக, குடும்பத்தாருக்குக் கொடுப்பதற்காக சின்ன அன்பளிப்புகள் செய்ய விரும்பினேன். 

அம்மாவின் முகம் மட்டும் வரக் கூடியதாக 'ப்ரிஜ் மாக்னட்' செய்யலாம் என்று தோன்றிற்று.  வீட்டுக்கு ஒன்று என்கிற விதத்தில் எண்ணிக் கொண்டேன். படங்கள் (இறுதி அஞ்சலிக்காக அடித்த மடல்களில்) தேவைக்கு மேலேயே இருந்தன. லாமினேட் செய்து பின்பக்கம் காந்தம் ஒட்டலாமா! அம்மாவே நிறையப் பழைய காந்த அட்டைகளும் லாமினேட்டிங் உறைகளும்  சேகரித்து வைத்திருந்தார்கள். பாடசாலைத் தோழி ஒருவர் பாரமில்லாத லாமினேட்டர் ஒன்று வைத்திருக்கிறார். அவரிடம், ஒரு வார இறுதிக்காக இரவல் வாங்கலாம். 

அதற்குள்... செராமிக் பெய்ன்டிங் பெட்டியில் சின்னச் சின்ன டைல்கள் இருப்பது நினைவுக்கு வந்தது. எடுத்துப் பார்த்தேன். வெண்மையாக இருந்தவை கச்சிதமாக இருக்கும் என்று தோன்றிற்று.

இனி... செய்முறை சுருக்கமாக
1. ஒரு டைலை அட்டையொன்றின் மேல் வைத்து வெளிக் கோடு வரைந்து சுற்றிலும் வெட்டிச் சற்றுச் சிறிதாக்கிக் கொண்டேன். (டைலின் அளவுக்கோ அதை விடச் சிறிது பெரிதாகவோ படம் இருந்துவிட்டால் பிறகு படம் உரிந்து போகலாம்.)

2.  இந்த அட்டையை வைத்து படங்களை அளவாக வெட்டிக் கொண்டேன். (ஓரங்களில் சிலும்பல் இல்லாது இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த வேலைக்கு க்ராஃப்ட் நைஃப் நல்லது.)

3. அதே அளவில் காந்தத் தாள்களையும் வெட்டிக் கொண்டேன். (மூலை கூராக இருந்தால் காந்தம் பிரியக் கூடும்.) 
4. இரவு காந்தத்தை ஒட்டிக் காயவிட்டேன்.
5. மறுநாள் காலை டைலின் மேற்பக்கத்தை மெதைலேட்டட் ஸ்பிரிட் கொண்டு துடைத்துவிட்டு (சட்டென்று உலர்ந்துவிடும்.) படங்களை ஒட்டினேன்.
6. மாலை நன்றாக உலர்ந்து இருந்தது. மேலே ஒற்றைப் பூச்சாக வார்னிஷ் கொடுத்தேன். (வார்னிஷ் படத்திற்கு வெளியேயும் பட வேண்டும். அப்போதுதான் படத்துக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைக்கும்.) ஃப்ரிஜ்ஜில் ஒட்டிக் கொள்ளப் போவதால் ஒரு கோர்ட்டிங் போதும்.

மறு நாள் காலை உலர்ந்திருந்தது. பிறகு பபிள் ராப் தேடி, அளவுக்கு வெட்டிச்  சுற்றி ஒட்டி வைத்தேன். என்னுடையதை ஃப்ரிஜ்ஜில் ஒட்டிவிட்டேன்.

வருடாவருடம் நினைவுநாட்கள் வரத்தான் போகிறது. அந்தச் சந்தர்ப்பங்களை / சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4 comments:

 1. மாக்னட் மிக அழகா செய்திருக்கிறீங்க. எவ்வளவு மெனக்கெடல் இமா. க்ரேட் நீங்க. புதுசு புதுசா செய்றீங்க.ஆர்வமும் பொறுமையும் தேவை. செபாம்மாவின் அன்பும்,வாழ்த்தும் உங்களுக்கும் எப்பவும் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ப்ரியா. ஆர்வம் இருக்கு. நேரம்... அந்தந்த நேரம் இப்படி ஏதாவது ஒன்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. :-) செபாவின் நினைவு வரும்போது அவரது கடைசிச் சிரிப்பும் நினைவுக்கு வருகிறது. எப்பவும் என்னோடயே இருக்கிற மாதிரித்தான் இருக்கிறது.

   Delete
 2. ஓ இது 2 வது வருடமோ இமா?.. காலங்கள் எப்படி ஓடுகிறது..

  மிக அழகாக செய்திருக்கிறீங்க.. ஜெபா அன்ரி இதே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பா உங்களை.. நீங்கள் அதிராவைத் திட்டினால் ஜெபா அன்ரி உங்களோடு கோபிப்பா சொல்லிட்டேன்:))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா. இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. ;(

   அதிராவை ஒரு நாளும் திட்ட மாட்டேன். :-) மம்மி உங்களை அதிராத அதிரா என்று சொல்லுவா. :-)

   Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா