Tuesday 11 September 2012

என் முதிர்தோழி

ஒரு பத்திரத்தை நிரப்பிக் கையெழுத்திடும்போது நினவு வந்தது, இன்று செப்டெம்பர் பதினொன்று; என் தோழியின் பிறந்தநாள்.

மூன்று வருடங்கள் முன்பாக, இதே நாளில் இதேபோல் நினைவுவர... வேலை முடிந்ததும் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே தொலைபேசியில் எண்களை அழுத்தினேன். சுலபமான எண் அவரது, அறுபத்து மூன்று... எழுபத்துமூன்று... அறுபத்துமூன்று... ஏழு... மறுமுனையில் அடித்துக் கொண்டே இருந்தது. துண்டித்துவிடலாமென எண்ணிய தருணம் "ஹலோ!" என்று மூச்சு வாங்கினார்.

"ஹாய் இட்ஸ் ரோஸி ஹியர்."

"நான் ஜேஜே" "எப்படி இருக்கிறீர்கள்?" எனவும், 'ஹூப்!' என்று பெருமூச்சு விட்டார்.

அவர் தனி ஆள்; தோட்டத்தில் வேலையாக இருந்திருக்கிறார்.  சட்டென்று எடுக்க வசதியாக தொலைபேசியை ஜன்னல் ஓரம் வைத்து விட்டு வெளியே போவார். அன்று மறந்திருக்கிறார். சுற்றி உள்ளே வர நேரமாகிவிட்டதாம். மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஸி." "ஓ!" அந்த 'ஓ' வெளிப்படுத்திய தொனி... புரிந்துகொள்ள இயலவில்லை.

"வேலை முடிந்து போகும் வழியில் வரட்டுமா? பார்க்கவேண்டும் உங்களை"
"சரி, எத்தனை மணிக்கு?"
"மூன்று நாப்பத்தைந்தளவில்!!"

வேலை முடிந்ததும் வழியில் நிறுத்தி ஒரு கார்ட் வாங்கி வாழ்த்தெழுதி உறையிலிட்டேன். அவருக்குப் பிடித்த 'மில்கஃபே' மற்றும் சாக்லேட்டுகள் வாங்கினேன். வாகனத்தில் எப்பொழுதும் தயாராக புதிய பைகள் ஒன்றிரண்டு இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக உள்ளே வைத்து மடித்துக் கொண்டேன்.

வாசல் மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். முடியெல்லாம் சுருட்டி க்ளிப் மாட்டிய தலையோடு வந்தார். சிரித்த முகமாக அழைத்துப் போனார். வழியில், "இது என் அறை," "இது விருந்தினர்க்கு," "இதுதான் ப்ரூஸ் இருந்த அறை," "இது குளியலறை," எல்லாமே எனக்கு முன்பு தெரியும். எத்தனை தடவை போயிருக்கிறேன். அவர் கணவர் ப்ரூஸ் காலமாகி 20 ஆண்டுகளாகின்றன. மகள், பேரக்குழந்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் சென்ற பிறந்தநாளன்று. ஏன் இப்போ மீண்டும்!

வரவேற்பறையில் சென்று அமர்ந்தோம். அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார். பேசினோம். குடும்பத்தார் பற்றி விசாரித்தார். முன்பு ஒன்றாக வேலை செய்த இடம் பற்றிய கதைகள் பரிமாறிக் கொண்டோம். ப்ரூஸ் தன்னைத் தனியே தவிக்க விட்டுப் போனாரே என்று புலம்பினார். பாவம்.

அன்பளிப்பைத் திறந்து பார்த்து தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினார். அறைகளுள் அழைத்துச் சென்று காட்டினார். புகைப்படங்கள், ப்ரூஸ் செய்த கைவேலை (ப்ரூஸ் ஒரு turner. lathe வைத்திருந்தார். அவரது கடைச்சல் வேலைகள் அழகாக இருக்கும்.) பிள்ளைகளது புகைப்படங்கள், தனது சிறு வயதுப் படம் என்று எல்லாம் காட்டினார். எதுவும் எனக்குப் புதிதல்ல.

கிளம்பினோம். வாசல்வரை வந்து வழி அனுப்பினார்.
இந்தப் 'பென் ஸ்டாண்ட்' (நியூஸிலாந்து செர்ரி மரத்தில் கடைந்தது. அடியில் விபரமும் ப்ரூஸ் பெயரின் முதலெழுத்தான Bயும் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.) பன்னிரண்டு வருடம் முன்பு ரோஸி எனக்குக் கொடுத்த நத்தார்ப் பரிசு. பச்சைக் கடதாசியில் அழகாக நத்தார் மரம் போல சுற்றிக் கொடுத்திருந்தார்.

என்னவோ சங்கடமாக உணர்ந்தேன். ரோஸியில் என்னவோ மாற்றம் தெரிகிறதே! அவர் சரியாக இல்லை.

வழக்கமாக நான் போனால் தேநீர் மேசையில் புது விரிப்பு விரித்து உள்ளே இருந்து அழகான கோப்பைகள், பொருத்தமான தட்டுகள் எடுத்து வந்து வைப்பார். தேநீர் தயாரிப்பது நான்தான். தானே பேக் செய்த பிஸ்கட்டுகள் கொடுத்து உபசரிப்பார். கிளம்புமுன் நானே எல்லாம் ஒதுங்க வைத்து சுத்தம் செய்து வைத்து விட்டுக் கிளம்புவேன்.

இன்று எதுவும் இல்லை. தேநீர் கொடுக்க முயற்சிக்கவில்லை. இயலாமை என்று நினைத்தேன். ஆனால்... இயலாது என்று உட்காராதவராயிற்றே என் தோழி!

வீடு வந்து சேர்ந்த மறு நிமிடம் தொலைபேசி அழைத்தது. ரோஸிதான் மறுமுனையில்.
"ஹாய்! இது ரோஸி. திருமதி க்றிஸ் வீடா அது?"
குழம்பினேன் நான். "ஆமாம்."
"நீங்கள் திருமதி க்றிஸ்தானா?"
மேலும் குழப்பம் எனக்கு. நிச்சயம் அது ரோஸியின் குரல்தான். 'ஜேஜே' என்னாமல் இது என்ன புதுவிதமாக!!
"ஆமாம், அது நான்தான்"
"நீங்கள் எனக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து தபாலில் வந்து சேர்ந்தது, நினைவு வைத்திருந்து அனுப்பியமைக்கு நன்றி,"

நான் !!!!!!!!! "You are welcome!"
வேறென்ன சொல்வது!! கையிலல்லவா கொடுத்தேன்!!!

"பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?" "வேலை எப்படிப் போகிறது?"

பத்து நிமிடம் முன்புதானே எல்லாம் பேசினோம்!!

மறந்துவிட்டார். எல்லாவற்றையும் மறந்து விட்டார். என்னையும் கூடத்தான். ;(

யாரென்று தெரியாமல், அதைக் காட்டிக் கொள்ளாமல் பொதுவாகப் பேசிச் சமாளித்திருக்கிறார். பிறகு கார்ட் கண்ணில் பட்டிருக்கிறது. மீண்டும் மறதி. அது தபாலில் வந்ததாகப் பாவித்து... தொலைபேசி எண்கள் எழுதி வைக்கும் குறிப்புப் புத்தகத்திலிருந்து இலக்கம் தேடிப் பேசி இருப்பார் போல.

பின்பும் பலமுறை அவரது எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறேன். இன்று வரை இயலவில்லை.

ஒரு நாள் அவர் வீட்டைக் கடந்து வாகனத்தை ஓட்டிச் சென்றோம். தோட்டம் மாறி இருக்கிறது. செடிகள் வேறு; திரைச்சீலை வேறு.

இரண்டு விடயங்கள் சாத்தியம். ஒன்று... என் எண்பத்தொன்பது வயதான தோழி எங்கோ வயோதிபர் இல்லத்தில் நல்ல கைகளின் பராமரிப்பில் இருக்கிறார். அல்லது... !! ;(

ஒவ்வொரு வருடம் கூகுள் நாட்காட்டி மட்டும் மறவாமல் ரோஸியின் பிறந்தநாளை எனக்கு நினைவு படுத்துகிறது. ;( மாற்ற விரும்பவில்லை நான்.
                                                                              - இமா
11/09/2012

25 comments:

  1. சிலர் மீதான நட்பை மாற்ற முடியாது இமா அக்காள் இன்றைய சிக்கல் உலகில் சிலர் நட்பையும் சந்தேகிக்கும் நிலை அல்லவா அதுவும் 11/9 எல்லாரையும் மூலச்சலவை செய்துவிட்டது!ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நேசன்... கர்ர்ர்ர்ர்... என்ன எழுதி இருக்கிறீங்கள்!! இதை பப்ளிஷ் பண்ணுறதோ வேணாமோ என்று யோசிச்சு யோசிச்சு... என் மூ'ளை' கலங்கிப் போச்சுது. கொஞ்சம் பார்த்து கவனமாக டைப் பண்ணுங்கோ. :-)

      Delete
    2. அந்த 11/09க்கும் இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, தேதியைத் தவிர.
      ம்... இங்கு வந்து எனக்குக் கிடைத்த முதல் தோழி இவர்தான். நட்பு என்பதை விட எங்களுக்குள் ஒரு விதமான பாசம் என்றுதான் சொல்ல வேண்டும். விடை தெரியாததால் ஒரு சின்ன ஏக்கம் இருக்கிறது அடிமனதில்.

      Delete
  2. நான் தான் முதல் ஆள் போல அப்ப பன் வேண்டாம் பால்க்கோப்பி தாங்கோ!ஹீ

    ReplyDelete
    Replies
    1. கொப்பி தருவன்... ;) இம்பொசிஷன் எழுத.

      Delete
  3. :( வயதானால் பலருக்கு இப்படி நடக்குது தான்... பார்க்கும் நமக்கு தான் மனம் வேதனையடையுது. என்ன செய்ய... நமக்கும் வயதாகத்தானே போகிறது. கவலைப்படாதீங்க.. உங்க தோழி நலமாக இருப்பார். - வனிதா

    ReplyDelete
    Replies
    1. நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனையும்.

      Delete
  4. இமா நலமா? நீண்ட நாட்கள் பின் இப்ப தான் ப்ளாக் பக்கம் வருகிறேன். புரிகிறது உங்கள் பாசமான ஏக்கம். உங்களுக்கும் அவங்களுக்கும் தெரிந்த பொதுவான சந்திப்புகள் (அதாவது தெரிந்த நபர்கள் இருந்தால்) ட்ரை செய்துபார்க்கவும். ஆல் இஸ் வெல்.

    ReplyDelete
    Replies
    1. //அதாவது தெரிந்த நபர்கள் இருந்தால்// இருந்தார்கள். இருவர் இவரை விட வயதானவர்கள். இதே போல் எல்லோரிடமிருந்தும் தொடர்பு விட்டுப் போய் இருக்கிறார்கள். இருவருக்கு என்னைப் போலவே விபரம் எதுவும் தெரியவில்லை. ஒருவரோடு இன்னமும் பேசுகிறேன். அவருக்கு என்னையே நினைப்பிலில்லை. ஆனால் கலகலவென்று பேசுவார். St John's Volunteer என்று என்னை நினைக்கிறார் என்று புரிகிறது. மூவர் மோட்சம் போயாகிவிட்டது. அவர்கள் அனைவருமே என் முதிர்தோழிகள்தான். செஞ்சிலுவைச் சங்கக் கடையில் தொண்டர்களாக வேலை பார்த்தோம்.

      Delete
  5. இரண்டு விடயங்கள் சாத்தியம். ஒன்று... என் எண்பத்தொன்பது வயதான தோழி எங்கோ வயோதிபர் இல்லத்தில் நல்ல கைகளின் பராமரிப்பில் இருக்கிறார். அல்லது... !! ;(

    நல்லதாகவே நினைப்போம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா. அதுதான் நான் விரும்புவதும்.

      இறுதி மரியாதை என்றொன்று செய்யும் சர்ந்தர்ப்பமும் ஒருமுறைதானே கிடைக்கும். அது எனக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது.

      Delete
  6. நான் பயந்து கொண்டே படிச்சு முடிச்சேன் இமா.. ஆளுக்கு ஏதும் ஆகியிருக்குமோ முடிவில் என.

    இங்கு வெளளையர்களுக்கு பொதுவான ஒரு வருத்தமாகத்தானே இது இருக்கு. என்ன செய்வது எத்தனை வயதிலும் வரலாமாம்... வயது வந்துதான் டிமென்ஷியா வருமென்றில்லையாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதீஸ். இவர் கனகாலம் தனியாக வேறு இருந்தார்.

      Delete
  7. எம் முன்வீட்டு வெள்ளை, பொலீஷாக இருந்தவர், நல்ல ஸ்மார்ட் அழகும்கூட, 74 வயது... கண்ணில் கண்டால் விடமாட்டார் ஓடிவந்து கதைப்பார், மனைவியும் அப்படியே தனியே இருக்கினம்.

    இப்போ அவருக்கும் இந்நோயாம், ஆனா என்னக் கண்டதும் ஒளிக்காமல் நேரடியாகச் சொல்லிச்சினம்.... தாம் இப்போ ரூர் போவதில்லையாம், கார் ஓடுவதில்லையாம்... அவருக்கு ஆரம்பமாகிட்டுது, ஆனா இன்னும் கடுமையாகவில்லை.. நினைக்கவே பயமா இருக்குது..

    சிலருக்கு மெல்ல மெல்ல ஆகுமாம்.. சிலருக்கு கடுகதி வேகமாம்.. என்னிடம் சொன்னார்.. நான் ஒருநாளைக்கு எத்தனை டப்லெட் போடுறேன் தெரியுமோ? வாங்கோ காட்டுறேன் என, மனைவி பேசினா.. பலபேர் அப்படித்தான் நீங்க ஏன் ஃபீல் பண்ணுறீங்கள் எண்டு.

    என்ன சொல்வது.. கடவுள் விட்ட வழி....

    ReplyDelete
    Replies
    1. உண்மை. ஆனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ;(

      Delete
  8. கனக்க வைத்துவிட்ட சம்பவம் இமா!

    உங்கள் அந்த முதிர் தோழி எங்கேயென்றாலும் நல்ல கைகளின் பராமரிப்பில் இருக்க நானும் வேண்டுகிறேன்...............

    அதிரா சொன்னது போல // இங்கு வெளளையர்களுக்கு பொதுவான ஒரு வருத்தமாகத்தானே இது இருக்கு.//

    அப்படீ என்றில்லாமல் எம் நாட்டு வயதான தாய் ஒருவர் இங்கு ஐரோப்பாவில் இந் நோய்க்கு ஆளாகி அவரின் குடும்பம் பட்ட துன்பம் நானறிவேன்.
    அதற்கு அவரும் இங்கு வந்து பிள்ளைகளுடன் பல வருடங்களாக வாழ்ந்தவர்தான்.

    நாளடைவில் அவருக்கே தெரியாமல் காஸ் அடுப்பை போட்டுவிட்டு அனர்த்தம் நிகழப் பார்த்தது. 8 மாத பேரக்குழந்தையை தண்ணீர் வாளிக்குள் இறக்கியது...இப்படி நிறைய....
    இப்பொழுது இல்லை.:(

    இன்னுமொரு இளம்தாய் கணவர் சரியில்லை. இந்நோய் ஏற்பட்டு செய்வது என்னவென தெரியாமல் பல வேலைகள் செய்திருந்தார்.....இவரும் எம் நாட்டவரே:(

    ReplyDelete
  9. இமா ..படித்து முடிக்கும்போது மனது மிக மிக கனமாகிப்போச்சு ..
    அவர் நல்லவர்களின் கையில்அவர்களின் பராமரிப்பில் இருக்கிறார் ..என்றே நினைப்போம்

    ReplyDelete
  10. ரோஸி சோ ஸ்வீட்...நலமாக நம் நினைவுகளில் இருப்பார்..பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  11. டீச்சர் ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கள் தோழி கண்டிப்பாக நல்லபடியாக இருப்பாங்க. நம்ம உணவில் சேர்த்து கொள்ளும் மஞ்சள் தூள் டிமென்ஷிய வராமல் தடுக்கும் அப்படீங்குறாங்க எவ்ளோ தூரம் உண்மைன்னு தெரியல

    ReplyDelete
  12. //பத்து நிமிடம் முன்புதானே எல்லாம் பேசினோம்!!

    மறந்துவிட்டார். எல்லாவற்றையும் மறந்து விட்டார். என்னையும் கூடத்தான். ;(//\

    படிக்கும் போதே மிகவும் வருத்தமாக உள்ளது.

    //இரண்டு விடயங்கள் சாத்தியம். ஒன்று... என் எண்பத்தொன்பது வயதான தோழி எங்கோ வயோதிபர் இல்லத்தில் நல்ல கைகளின் பராமரிப்பில் இருக்கிறார். அல்லது... !! ;( //

    நல்லதையே நாம் நினைப்போம் !

    ReplyDelete
  13. ஒவ்வொரு வருடமும் கூகுள் நாட்காட்டி ரோஸியின் பிறந்த நாளை காட்டட்டும் இமா.அவர் நலமுடன் இருப்பார் நம்புங்கள்.-நிகிலா

    ReplyDelete
  14. ஆறுதல் கூறிக் கருத்துப் பதிவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  15. This incident is so touching Imma.
    Hope your friend must be in safe hands

    ReplyDelete
  16. மறதி நோய் யாருக்கு எப்போது வரும் என்று தெரியாது.
    வந்தால் கஷ்டம் தான்.ஸாதிகா குறிப்பிட்டவருக்கு என்ன பிரச்சனையோ என்று நினைக்காத நேரம் இல்லை.
    என்ன செய்வது? ந்ம்மால் இறைவனிடன் அவர்கள் ந்லமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மட்டுமே முடியும்.

    உங்கள் பதிவு மனதை கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
  17. கண்களை கசிய வைத்து விட்டது இமா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா