Monday 1 September 2014

அச்சுக் கலை

பாடசாலைச் சின்னவர்களை அழைத்துக் கொண்டு கல்விச் சுற்றுலாவென்று எங்கெல்லாமோ போவோம். சென்ற தவணை மோடாட் ( MOTAT) சென்றிருந்தோம். போக்குவரத்து & தொழில்நுட்பம் தொடர்பான அருங்காட்சியகம் இது. தனியாகப் பதிவு இடும் அளவு ஏராளமான தகவல்கள் உள்ளன. 

இன்று... அச்சடித்தல் பற்றிச் சின்னதாக ஒரு கிறுக்கல்.

நான் படித்த காலத்தில்... பரீட்சை வினாத்தாள்கள் எல்லாம் ஆசிரியைகள் ரோனியோ மெஷினில் போட்டு கை வலிக்கச் சுற்றுவார்கள். நான் கற்பிக்க ஆரம்பித்த காலத்தில் ஸ்டென்சில் வெட்டும் அனுபவம் கிட்டியது. ஸ்டென்சிலை எக்ஸ்ட்ரே ஷீட் ஒன்றின் மேல் வைத்து மை தீர்ந்த  பேனா ரீஃபில்களால் சற்று அழுத்தி எழுத வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்தாலும் ஸ்டென்சில் கிழிந்து போகும். அந்த இடங்களில் மசி அதிகம் படிந்து எழுத்துகள் படிக்க முடியாததாகி விடும். என் வினாத்தாள்கள் மாணவர்கள் பரீட்சையைச் சுமையாக நினைக்காமல் ரசித்து எழுத வேண்டும் என்னும் எண்ணத்தில் கொஞ்சம் கலை நயத்தோடு அமைக்கப்பட்டிருக்கும். முடிந்த அளவு படங்களைச் சேர்ப்பேன். சில சமயம் ஸ்டென்சிலில் நாணயங்களை வைத்துத் தேய்த்து அச்சடிப்பேன்.

ஒரு சமயம் தோழியொருவருடன் அவரது பெரியப்பா வீட்டிற்குப் போயிருந்தேன். புகழ் பெற்ற ஈழத்து  சிறுகதை, நாவல் எழுத்தாளர் திரு. வ. அ. இராசரத்தினம் அவர்கள்தான் அந்தப் பெரியப்பா. அவரது வீட்டிலேயே அச்சுக் கூடம் ஒன்று இருந்தது. குட்டிக் குட்டியாக இரும்பில் வார்த்த தமிழ் எழுத்துக்கள் சின்னப் பெட்டிகளில், விதம் விதமாக அரிசியைத் தரம் பிரித்துக் கொட்டி வைத்தது போல வைத்திருந்தார். ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்தேன். 'உ' - கண்ணாடிப் பிம்பம் போல் தெரிந்தது. ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோர்த்து அடித்து, பிறகு சரிபார்த்து... அச்சடிப்பது கடினமான வேலை அப்போது. ஆட்டோகிராஃப் படம் பார்த்தால் கொஞ்சம் புரியும். 

இப்போது... காலம் மாறிவிட்டது. நினைத்ததை நினைத்தவுடன் வீட்டிருந்தபடி அச்சடித்து எடுக்கலாம். எங்கள் பாடசாலைச் சின்னவர்கள் சிலர் வாராந்தர வீட்டுப் பாடத்தை 'மெமரி ஸ்டிக்' ஒன்றில் போட்டு வந்து பாடசாலை வாசிகசாலையில் அச்சடித்து வகுப்பாசிரியடம் சமர்ப்பிக்கிறார்கள். 

இந்தக் கல்விச் சுற்றுலாவில் நான் கண்டது வேறு வகையான அச்சியந்திரம். முடிந்தால் ஒன்று வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ;) இது முப்பரிமாண வடிவங்களை அச்சடிக்கும். சாதாரண அச்சியந்திரத்திற்கு மை போல இதற்கு...தோட்டத்தில் புல்லு வெட்டும் edge trimmer இற்கு மாட்டும் ப்ளாஸ்டிக் நூலைப் போல ஒன்று இருந்தது. ஆனால் அதுவல்ல இது. பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது இந்த நூல். வெப்பநிலையோடு நிறம் மாறும் நூல் கூட கிடைக்கிறது. எபொக்ஸ்சி, நைலோன் தவிர வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம் என்றார்கள்.
ஒரு பெட்டியில் ஏற்கனவே அச்சடித்து வைத்திருந்த முப்பரிமாண வடிவங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று... அழகான குட்டி முயல். சலவைக்கல்லில் செதுக்கியது போல அத்தனை அழகு. வீட்டிற்கு வந்து இணையத்தில் கொஞ்சம் ஆராய்ந்தேன். இனி.... வீட்டிற்குத் தேவையான ப்ளாஸ்டிக் பொருட்களை நாமே அச்சடிக்கலாம். நீங்கள் பார்த்து ரசிக்க - இங்கே யூ ட்யூப் காணொளி ஒன்றிற்கான சுட்டியை இணைத்திருக்கிறேன். 

பி. கு

சின்னவர்களோடு போகும் போது எனக்காகப் படங்கள் எடுக்க நினைப்பதில்லை. அவர்களைக் கவனிப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதனால் முப்பரிமாண குட்டி முயலுக்குப் பதிலாக என் குட்டிப் பெண் ட்ரிக்ஸி. :-)

4 comments:

  1. சிறியவர்களோடு செல்லும்போது,
    சிறியவர்களாகவே மாறிவிட வேண்டும்
    உண்மைதான் சகோதரியாரே

    ReplyDelete
  2. நல்ல பதிவு இமா!

    நானும் சிறு வயதில் நீங்கள் கூறுவது போல எழுத்துக்களைக் கோர்த்து அச்சடிக்கும் அச்சகம் ஒன்றிற்குச் சென்று பார்த்திருக்கின்றேன்...:)

    உங்கள் முயற்சி கைகூடட்டும்!.
    ட்ரிக்ஸி அழ...கு!..:)
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வணக்கம் இமா!

    எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!

    இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

    வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. இமா,

    வாங்க, 'மெரீனா'வைப் பாத்துட்டு வரலாம்.

    பள்ளியில் டைப்ரைட்டிங் மெஷினில் 'க்ளர்க்'கிடம் கொஞ்சம் கேட்டு வாங்கித் தட்டிப் பார்த்ததுண்டு. அவ்வளவே. ட்ரிக்ஸி அழகாகிக்கொண்டே வருகிறார்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா