'Halloween' - நான் கொண்டாடுவது கிடையாதுதான் ஆனாலும் தெருவில் நடப்போருக்காக ஏதாவது செய்யலாம் என்று தோன்றிற்று.
நாம் இப்போது வசிக்கும் வீடு தெருவையொட்டி மேட்டுப்பாங்கான இடத்தில் இருக்கிறது. சற்றுப் பிரதானமான தெருவென்பதால் வாகனப் போக்குவரத்தும் நடைபயில்வோர் போக்குவரத்தும் அதிகம். வீட்டை வாங்கும்போது, தோட்டத்தில் புதினமான தாவரமொன்று பூத்திருந்தது. போவோர் வருவோர்க்கெல்ல்ம் அது பேசுபொருளாக இருப்பதை அவதானித்திருந்தோம்; வீட்டின் முன் சற்றுத் தரித்து, பூவைப் பார்த்து வியந்துவிட்டுச் செல்வார்கள். க்றிஸ் வேலிபோட்டதும், அதையும் நின்று பாராட்டிப் பேசினார்கள். இவற்றின் வழியாகவே எங்களுக்கு நட்பு அதிகரிக்க ஆரம்பித்தது.
நடைபாதை நட்புகளுக்காக இருக்கட்டும் என்று இன்று வௌவால்களை மாட்டிவைத்தேன். ஒருவர் தன் வேலைத்தலத்தை ஒழுங்குபடுத்தும் சமயம் என் கைவேலைக்கு உதவக்கூடும் என்று பலவர்ண அட்டைகளைக் கொடுத்திருந்தார். கறுப்பு நிற அட்டைகள், பெரிதாகப் பயன்படுத்தப்படாமல் சேர்ந்து கிடந்தன. ஹலோவீனுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவை நினைவுக்கு வந்தன. பெரிய வௌவால்களுக்கு ஒரு முழு A4 அளவான அட்டையைப் பயன்படுத்தினேன். கதவிலும் சுவரிலும் ஒட்டப்பட்டிருப்பவற்றுக்கு A6 அளவு போதுமானதாக இருந்தது. மரத்தில் தொங்கும் நடு அளவிலானவை ஒவ்வொன்றுக்கும் A5 அளவு அட்டையைப் பயன்படுத்தினேன். கண்கள் - ஏற்கனவே சேமிப்பில் இருந்தவைதான். இவற்றை தேவைப்படும் சமயம் உடனுக்குடன் வாங்குவதுதான் நல்லது. அதிக காலம் வைத்திருந்தால் பிளாத்திக்கு விழி, வெண்மை மாறி பழுப்படைந்துவிடுகிறது.
எல்லா வௌவால்களும் ஒரே மாதிரி இராது அல்லவா! இதற்கென்று அளவு எதுவும் வெட்டி வைக்கவில்லை. ஒவ்வொன்றையும் தனிித்தனியே பாதியாக மடித்து வைத்து தனித்தனியாகவே வரைந்து வெட்டிக்கொண்டேன். பிறகு வெள்ளைநிறப் பென்சிலைக் கொண்டு செட்டைகளில் நரம்புகளை வரைந்தேன். கண்களை ஒட்டிவிட்டேன். முகமும் செவிகளும் திருப்தியாக வரவில்லை. நரம்புகள் கூட இன்னம் நன்றாக வந்திருக்கலாம்.
அடுத்த வருடம் பார்க்கலாம்.