Saturday, 25 September 2010

இமாவும் தமிழ்த் தட்டச்சும்

நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(

இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்பது எனக்கு ஒரு கனவு.

பல வருடங்கள் முன்பு, ஊருக்கு வந்திருந்த என் சகோதரர் ஒரு கணனி வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தார். அப்போ அது ஏதோ பெரிய என்னவோ போல, தனி அறை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தது. (இந்த ஊரில் எனக்கே ஒரு அறை கிடையாது. ஹும்! )

ஸ்கூல் விட்டு வந்து வேலை எல்லாம் முடித்து விட்டு ஆட்டோ பிடித்துப் போய் கணனிக்கல்வி கற்றுவந்தேன். (இந்தக் காலகட்டத்தில் என் 'மேட் 50' க்கு    என்ன ஆயிற்று என்பது இப்போ நினைவுக்கு வரவில்லை.) எல்லோரும் சின்னச் சின்ன மனிதர்களாக இருக்க, நான் மட்டும் பொருந்தாமல் இருந்தேன். தட்டச்சு வேறு தெரியாது.

இரண்டு சிறு பெண்கள் மனமிரங்கி என்னைத் தோழியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை பார்த்தார். நாட்டைவிட்டு நிரந்தரமாகப் பயணப்படவிருப்பதை அவருக்கு மட்டும் சொல்லி இருந்தேன். "டீச்சர், என்னையும் உங்கட ப்ரீஃப் கேசில வச்சுக் கூட்டிக் கொண்டு போங்கோ," என்பார்.

பரீட்சையில் எனக்குத்தான் எல்லாவற்றிலும் அதிக புள்ளிகள் கிடைத்திருந்தது.  காரணம் என்று எனக்குத் தோன்றியது 1. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்தமை. 2. தட்டச்சு செய்வதில் என் வேகம் போதாவிட்டாலும் தட்டியவரை தவறு இல்லாமல் தட்டி இருந்தமை.

அங்கு கற்றது கைமண்ணளவுதான் என்பது பின்னால் புரிந்தது.

பிற்பாடு க்றிஸ் அலுவலகத்தில் ஒருவர் உதவியால் தமிழ் தட்டச்சு என்று ஆரம்பித்து, தேவை எதுவும் இல்லாத காரணத்தால் அப்படியே நின்று விட்டது. என் பெயருக்கான குறியீடுகளை மட்டும் மனனம் செய்து வைத்திருந்தேன்.

இங்கு வந்து வெகு காலம் கழித்து மீண்டும் அந்த ஆவல்.. எப்படியாவது தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். இங்குள்ளவர்களிடம் விபரம் எதுவும் பெயரவில்லை. ஊரில் இருந்து குறுந்தட்டு வரவழைக்கலாம் என்றார்கள். 

இலங்கையரிடமும் கேட்டு அலுத்து விட்டது. ஒரு குட்டி சிங்கள மாணவரைப் பிடித்தேன். அவர் சொன்னார், "மிஸ், ஜெனி மிஸ்ஸைக் கேளுங்கள். அவர் ஏதோ வலைத்தள உதவியோடு ஜேர்மன் மொழி தட்டுகிறார்," ஜெனியிடமும் கேட்டேன், முன்னேற்றம் எதுவும் இல்லை.

அலன் தன் வேற்று மொழித் தோழர்கள் ஆங்கில மூலம் தட்டச்சு செய்வதைச் சொன்னார். எல்லாம் அரைகுறைத் தகவல்களாக இருந்தன. ஒரு ரஷ்யத் தோழி ஒலிமாற்ற முறைத் தட்டச்சு பற்றிக் குறிப்பிட்டு விபரம் சொன்னார். அங்கிருந்து அவரது உதவியால் 'கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்' முறையில் தட்ட ஆரம்பித்தேன். என் சிந்தனை முறைக்கும் அதற்கும் ஒத்துப் போகவில்லை. தவறுகள் சரளமாக வந்தன. திருத்தத்தில் நேரம் அதிகம் செலவாயிற்று.

இதற்குள் தூயாவின் சமையல் கட்டு வழியாக அறுசுவைக்குள் நுழைந்திருந்தேன். எழுத்துதவி பிடித்திருந்தது. அதுவே என் நிரந்தர தட்டச்சு இயந்திரமாயிற்று. அங்கு தட்டி எங்காவது கொண்டு போய் வைப்பது நேரம் எடுத்தாலும் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டேன் என்பதில் பெருமையாக இருந்தது.

ஆனாலும் தமிழரல்லாத தமிழர் பலர் அங்கு உலவியது புரியாமல் குழம்பிய நாட்கள் அதிகம். ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி இருக்கிறேன். எப்போவாவது என் உலகுக்கு வருகை தருவார். இப்படி ஒன்று நிகழ்ந்ததே அவருக்கு நினைவில் இல்லை. ;)

அறுசுவையில் என் கைவினைகள் வெளியாக ஆரம்பித்தன. உண்மையில் புகைப்படக் கருவியோடு சுற்ற ஆரம்பித்தது அதன் பின்தான். படங்கள் திருப்தி தரவில்லை என்று சந்தேகம் கேட்டேன். தீர்வும் கிடைத்தது. அதிகம் உதவியவர் அறுசுவை நிர்வாகி சகோதரர் பாபு அவர்கள்தான். (இங்கு ஜெய்லானி)

அதற்கு முன்பு வீடியோக் கருவியோடு மட்டும் அலைவேன்.
அறுசுவை சிறிது சிறிதாக என் கூட்டை விட்டு என்னை வெளியே கொண்டு வந்து விட்டிருக்கிறது. நட்பு வட்டம் பெருகி இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

~~~~~~~~~~~~~

ம்.... நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(


இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.....

சேமித்து வைத்து பிற்பாடு வலைப்பூவுக்குக் கடத்தலாம் என்பதாக எண்ணம். எகலப்பை நிறுவ வைத்த சகோதரருக்கு நன்றி. ;)

அது ஒரு சுவாரசியமான கதை. ஒரு நாட்காலை.. தினமும் இப்படிக் காலையில் ஒரு முறை மின்னஞ்சல் இருக்கின்றதா என்று பார்த்து விட்டுப் போக வருவேன். அப்படி வந்தேன். என் அன்புக்குரிய சகோதரரும் அரட்டைக்கு வந்தார். எப்போதாவது தான் அரட்டை என்பதால் நான்கு வரி பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்துத் தொடர்ந்தால் அப்படி இப்படி அன்றே 'ஆன்லைன் வகுப்பு' எடுத்து எகலப்பை நிறுவ வைத்து விட்டார்.

எனக்குப் பாடசாலைக்கு நேரமாகிவிடுமோ என்கிற தவிப்பு. இதையும் விட முடியவில்லை. விடாது தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த அறிவுறுத்தல்களைப் பின்தொடர்வது சிரமமாக இருந்தது. எனக்குக் கணனி மொழி தெரியவில்லை. ;( சகோதரரோ விடுவதாக இல்லை. ;) எனக்குப் புரியக் கூடிய எளிமையான மொழிநடையில் அறிவுறுத்தல்கள் வர ஆரம்பித்தன.

"அதெல்லாம் இருக்கிற ஐந்து நிமிடநேரம் போதும்," என்று ஆரம்பித்து... ;) என் தடுமாற்றத்தால் நேரம் கடந்து கொண்டே இருந்தது. நடு நடுவே "சீக்கிரம், பாடசாலைக்கு நேரமாகிறது," என்று வேறு மிரட்டி வயிற்றில் புளியைக் கரைத்தார். ;)) இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. ;) மறக்க முடியாத அனுபவம். ;)

பிறகு... வெற்றிகரமாக வேலை முடிந்ததும் ஒரு சரிபார்ப்பு. ;) "தமிழில் தட்டு," "இப்போ ஆங்கிலத்தில் தட்டு," ஒருவாறாகத் திருப்தியாகி "சரி, இப்போ க்ளாஸ் எடுத்து முடிஞ்சுது. இனி நீங்க போய் உங்க க்ளாசை எடுக்கலாம்," என்று விடுவித்தார். ;)) 'அப்பாடா!' என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிப் பாடசாலைக்கு ஓடினேன்.

என் 28 வருட அனுபவத்தில்... எத்தனை பேரோடு கற்பித்திருப்பேன்! இப்படி ஒரு ஆசிரியரைக் கண்டதே... இல்லை. பிரமிப்பாக இருந்தது. ;) எடுத்த நோக்கத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்கிற வைராக்கியம்... நான் நிச்சயம் இப்படி இல்லை. ;)

ஒரு விடயம் உண்மை. என்னை வேறு யாரும் இதுபோல் 'ட்ரில்' வாங்கியது இல்லை. ;))

அன்று எடுக்கப்பட்ட வகுப்பின்போது சொல்லப்பட்ட முக்கியமான கருத்து ஒன்று, "இந்த மாதிரி டவுன்லோட் பண்ணி வச்சா எங்க வேணுமானாலும் தமிழில் தட்டலாம்."

'நான் என்ன தட்டப் போகிறேன்,' என்று அப்போ நினைத்தேன். இப்போ புரிகிறது, உண்மைதான். நிறையத் தடவைகள் நன்றி சொல்லியாயிற்று என்பதாலும் சகோதரர் இதைப் படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்று கருதியும் இங்கு நன்றி நவிலவில்லை. ;))

(இந்த நிகழ்வு பற்றி எனக்கொரு சந்தேகமும் இருக்கிறது, சரியோ தெரியவில்லை. ஒரு வேளை... அரட்டையில் என் இலங்கைத் தமிழைத் தமிங்கிலத்தில் படிக்கச் சிரமப்பட்டு அதைச் சொல்லாமல், என்னை இப்படித் தமிழில் தட்டவைக்க மேற்கொண்ட முயற்சியாக  இருக்கக் கூடுமோ!!!... ;))

Friday, 17 September 2010

!!!

இது என் கைவண்ணம், கருப்பு வண்ணம். ;)



 தலைப்பிட்டு உதவுங்களேன்.
~~~~~
இன்று முதல் இமாவின் உலகில் கைவினைப் பகுதி 'craft' என்று ஆங்கிலத் தலைப்பின் கீழ் தென்படும். தமிழ் தெரியாத என் மாணவி ஒருவர் கைவினைக்காகப் பின்தொடர்கிறார்.

Monday, 13 September 2010

உன்னைப் போல் உன் அயலானையும் நேசி!

எங்கள் வீட்டுக் குட்டித் தேவதையைத் தெரியுமில்லையா!
அவர் எனக்காக ஒரு 'தாங்க் யூ கார்ட்' தயார் செய்து வைத்திருந்தார். உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

தேவதையின் ஆன்ட்டியும் தேவதையாகத் தானே இருக்க வேண்டும். ;)

இந்தப் படத்தைப் பாருங்களேன். ஆன்டிக்கும் அதே போல் சீருடை. ;)))

கவிஞர்கள் மீன்விழியாள் என்று வர்ணிப்பார்களே, அது இது தானோ!! 

தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)

Saturday, 4 September 2010

அன்பெனப்படுவது!!!!!

மிஷேல் வேலை தேடினார். தேடிக் கொண்டே இருந்தார். அதே சமயம் அவரது முன்னாள் காதலர், ஜெனியின் பெறாமகன், என் மூத்தவர் அனைவரும் ஒன்றாக வேலை தேடிக் கொண்டிருந்தனர்.

ஒத்த வயதினராயினும் தகைமைகள் திறமைகள் வேறு தானே. ஆளாளுக்கு ஒரு நோக்கம் வைத்துக் கொண்டு வேலை தேடினர்.

ஜெனியின் புதல்வருக்கு இரண்டாவது முயற்சியில் ஓர் வேலை கிடைத்தாலும் பிடிக்கவில்லை என்று தொலைத்து விட்டு வந்து நின்றார். மூன்றாவது நேர்முகத் தேர்வில் பிடித்த வேலை கிடைத்தது. பெறாமகனுக்கு ஐந்தாவது முயற்சியில் வேலை கிடைத்தது.

மீதி இருவரும் தேடினர் தொடர்ந்து. ஜெனி என்னிடம் விசாரிப்பார். எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார், "நிறம் பார்க்கிறார்கள்." என்பார். நான் மறுப்பேன். அவர் அதையே பிடித்துக் கொண்டு இருந்தார். மிஷேலை விடத் தன் பிள்ளைகள் எந்த விதத்திலும் உயர்வு இல்லை, என்றார். கிட்டத்தட்ட முப்பது நேர்முகத் தேர்வுகளின் பின்னர் ஜெனிக்கு ஓர் வேலை கிடைத்தது, நல்ல சம்பளத்தில்.

அதுவரை இலவசத் தங்குமிடம், சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் ஜெனி தயவில். இப்பொது கூட சொற்பமாக அதுவும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் மிஷேலிடம் வாங்கிக் கொள்கிறார். இல்லாவிட்டால் வேறு அறை பார்த்துப் போய் விடுவாரே.

சிறிது காலம் கழித்து பிரிந்தவர் இருவரும் வேறு இணைகள் தேடிக் கொண்டார்கள்.

ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. புதிய மருமகளைப் பற்றிப் பெரிதாய்ப் பேசுவது இல்லை, இவர் ஐரோப்பியரே ஆயினும். எங்களுக்கு அவர் பெயர் கூடத் தெரியாது.

மிஷேலின் காதலர் தன் முன்னாள் காதலியிடமிருந்து பிரிந்து தான் இருக்கிறாராம். அதில் ஏதோ சட்டச் சிக்கல்கள். அவற்றில் சின்னப் பெண் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று இப்போ பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறார் ஜெனி. முன்பு மிஷேலுக்கு ஓர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வாராவாரம் பிரார்த்தித்தார். இப்போ இப்படி. மிஷேல் நேரம் கெட்ட நேரத்தில் வேலை முடித்தால் உறக்கம் விழித்திருந்து போய் அழைத்து வருகிறார். துணி வாங்கிக் கொடுக்கிறார். விதம் விதமாகக் காதணிகள் வாங்கிப் பரிசளிக்கிறார்.

மிஷேல் எங்கள் பாடசாலைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து உதவுகிறார். ஒரு நாள் மிஷேலும் ஜெனியும் 2:30க்கே பாடசாலையை விட்டு வெளியேறத் தயாரானார்கள். அன்று ஜெனியின் பையனுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக நட்புகள் சிலருக்கு இராவுணவாம். ஜெனி எதுவும் செய்யவில்லை. ஏற்பாடு எல்லாம் மிஷேல்தான். அதனால்தான் நேரத்துக்குக் கிளம்பி இருந்தார்கள்.

ஒரே வீட்டில் இப்படி ஓர் கூட்டுக் குடும்பம். இராவுணவுக்கு வந்த முக்கிய பிரமுகர் யார் தெரியுமா! ஜெனியின் மகனால் புது மருமகளாகத் தெரிவாகி உள்ளவர்தான். மிஷேல் சமோசா, சப்பாத்தி, குர்மா என்று பெரிதாக லிஸ்ட் போட்டார். இவர் சாக்லட் மட் கேக் பிரசித்தம். அதுவும் பேக் செய்தார். எல்லாம் சிரித்துக் கொண்டே செய்வார்.

சென்ற திங்கள் காலை பொது அறை மேசையில் ஒரு சொக் மட் கேக் எங்களுக்காகக் காத்திருந்தது. மிஷேல் தயாரிப்பு. ஐசிங் மட்டும் ஜெனி செய்திருந்தார். 

நாங்கள் இப்போதும் கண்டால் கேட்போம், ஏனிப்படி என்று. எங்களுக்கு ஜெனியையும் புரியவில்லை, மிஷேலையும் புரியவில்லை.

எல்லாவற்றுக்கும் ஒரு பளீர் சிரிப்புத் தான் பதில். சுலபமாகச் சொல்லுவார் மிஷேல் "இனி எங்களுக்குள் ஒட்டாது," என்று. அதை ஜெனி முன்பாகவே இயல்பாகச் சொல்லுவார். ஜெனியும் ஏற்றுக் கொள்கிறார்.

மிஷேல் திருமணம் என்று வரும்வரை எல்லாம் சரியாக இருக்கும். பிறகு ஜெனி பிரிவை எப்படி ஏற்றுக்கொள்வார்!!

வரும் டிசெம்பர் மாதம் இரண்டு காதல் ஜோடிகளும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒன்றாய்ச் சுற்றுப் பயணம் கிளம்பிப் போகிறார்கள். நால்வரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஜெனி அடிமனதில் இன்னமும் துளி நம்பிக்கை இருக்கிறது. எப்போவாவது இவர் நிரந்தரமாகத் தன் மருமகள் ஆவார் என்று.

ஜெனிக்கு எப்படி மிஷேலை விட ஓர் நல்ல மருமகள் கிடைக்க முடியாதோ அப்படியே மிஷேலுக்கும் ஜெனியை விட நல்ல மாமியார் கிடைக்க முடியாது.

இன்னும் காலமிருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம். அதனால் முற்றும் போட இயலவில்லை. ;) 
எப்போதாவது...                
தொடரும்.

Friday, 3 September 2010

நட்பெனப்படுவது!!!!

இந்த வருட ஆரம்பத்தில் எனக்கு அதிபரிடமிருந்து ஒரு மின்னஞ்சல், 'இமா, புதிதாக ஒரு துணை ஆசிரியர் இணைந்து கொள்கிறார். ஜெனியின் 'ஹோம்ஸ்டே' இவர். பயிற்றுவிக்க முடியுமா?' என்று.

ஹோம்ஸ்டே யார் என்கிறீர்கள்! மிஷேல்தான்.

என்னவாயிற்று!!

இருவரும் பிரிந்த பின்னும் ஜெனி இவரோடு தொடர்பு வைத்திருந்தார். எங்கோ தோழிகள், தோழர்களோடு 'ஃப்லாட்டிங்' செய்து கொண்டு இருந்தவரைத் தாய் போல் தினமும் 'தூங்கினாயா? சாப்பிட்டாயா? படித்தாயா?' என்று கனிவாக விசாரித்திருக்கிறார். தேவையான உதவிகள் செய்திருக்கிறார்.

மிஷேலும் அப்படித்தானாம். இருவர் நடுவேயும் அழகாக நட்பு வளர்ந்து விட்டது. மகனை விடவும் தாயார் நெருக்கமாகி விட்டார்.

பல்கலைக்கழகக் கல்வி முடிந்ததும் விடுமுறைக்காக வெளிநாடு சென்று இருக்கிறார் மிஷேல். என்னதான் இங்கு வந்து ஆண்டுகள் 25 ஆனாலும் மிஷேல் பெற்றோரால் மாற இயலவில்லை. ஃப்லாட்டிங், டேட்டிங், இது எதனையும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை அவர்கள். அதனால் காதலர்கள் பிரிவைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்கினார்கள். தங்கள் உறவில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.

இவர் வருவதற்கு முதல் நாள் செய்தி சொல்லி இருக்கிறார்கள். மிஷேல் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.

பிறந்தது முதல் இங்கேயே வளர்ந்த பிள்ளைக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து இருக்கிறது. தன் துணையைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என விரும்பினார். வீட்டிற்குத் திரும்பினால் நிர்ப்பந்திப்பார்கள் என்று புரிய ஜெனியின் உதவியை நாடி இருக்கிறார். தனக்கு ஒரு வேலையும் ப்ளாட்டும் கிடைக்கும் வரை தங்க இடம் கிடைக்குமா? என்று தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கிறார்.

இவருக்கு சந்தோஷம் கேட்கவே வேண்டாம். அழைத்து வந்து விட்டார். அன்று முதல் இன்றுவரை ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்.

பகலில் வீட்டில் தனித்து இருப்பார் பாவம் என்று அதிபர் அனுமதியோடு பாடசாலைக்கு அழைத்து வந்தார். வேலை கிடைக்கும் வரை பொழுதை வீணடிக்காமல் மாணவர்களுக்குக் கல்வியில் உதவட்டும் என்றார்.

சும்மா சொல்லக் கூடாது, மிஷேல் எந்த வேலையானாலும் கற்பூரம் தான். மாணவர்களோடு மிகவும் கடுமையாக இருப்பார். இவர் வந்ததில் எங்கள் காரியதரிசிக்கு வேலை போதவில்லை. நிறைய ஓய்வு கிடைத்தது. ஜெனிக்குக் காலை உணவு தயாரிக்க, பயிற்சிப் புத்தகங்கள் திருத்தவென்று கூட வேலை இருக்கவில்லை. பாடசாலைக்குள்ளும் எதுவெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய்தார்.

வீட்டில், ஜெனியும் மிஷேலும் ஒன்றாக நடை போனார்கள். சினிமா பார்த்தார்கள். சண்டை போட்டார்கள். அதட்டினார்கள். அவர்கள் பழகுவது பார்க்க அழகாக இருக்கும்.

"அதிகம் பாஸ்தா சாப்பிடாதே, நிறை கூடும்," என்று இளையவர் ஜெனியைத் திட்டுவார். "கீரை சாப்பிடாமல் ஒதுக்காதே," என்று ஜெனி இவரைத் திட்டுவார். போன பிறவி என்று ஒன்று இருந்திருந்தால் இருவரும் தாயும் மகளுமாக இருந்திருப்பார்களோ என்னவோ!

ஒரு நாள் மிஷேல் வேண்டாம் என்று ஸ்பினாச் ஒதுக்கி வைத்திருந்தார். அந்த வழியால் போன ஜெனி பார்த்து விட்டுத் திட்டினார். திரும்ப வரும் போது இன்னும் அதிகமாக ஒதுங்கி இருக்கவும் நிஜக் கோபத்துடன் இழுப்பறையைத் திறந்து ஒரு முட்கரண்டியை எடுத்து வந்தார்.

"எத்தனை பேர் சாப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். நீ வீணாக்குகிறாயா?" பக்கத்தில் அமர்ந்து அந்த மீதத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.

ஒரே நேரம் ஒரே தட்டில், வெள்ளை வெளேர் என்று ஒரு கை.  கன்னங்கரேல் என்று ஒரு கை. ஒன்றாய் உணவருந்தும் காட்சி மனதை நெகிழ வைத்தது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள். இவர்கள் நட்பு ஆயுளுக்கும் தொடரவேண்டும்....

தொடரும் நாளை பி.ப

நாம் நலம்

அனைத்து வலையுலக உறவுகளுக்கும்,

நாம் நலம். இருப்பது Auckland - North Island.
நிகழ்வு நடந்தது Christchurch - South Island இல்.

அனைவரது அன்புக்கும் நன்றி.

Thursday, 2 September 2010

இப்படித்தான் இருக்கும் சந்தனா

செபா ப்ளாட்டில் உள்ள பன்னிரு இருப்புகளுக்கும் பொதுவாக ஓர் கூடம் இல்லாததால் வேலியைப் பிரித்து அங்கு அருகே இருக்கும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அனைவரும் கூ..டு/வு கின்றனர்.

ஜெய்லானி:- ஆ..வடை எனக்குதான்..!!
இமா:- இன்னும் சுட ஆரம்பிக்க இல்லை மருமகனே. எல்லாம் ரெடியா இருக்கு. பொறுங்க. தண்ணி கொதிக்கட்டும் பொரிச்சுத் தாறன்.
ஜெய்லானி:- ஆ ,,பீட்சாவும் எனக்குதான்...!!
இமா:- அதுக்கென்ன, நல்லா வயிறாரச் சாப்பிடுங்கோ. ஆனால்ல்... ஆ காட்டிற வேலை எல்லாம் இங்க சரி வராது. அவரவர் தான் எடுத்து வாயில போட்டுக் கொள்ள வேணும். எனக்குக் கனக்க வேலை இருக்கு. 
ம். ஏன், என்ன நடந்தது ஜெய்லானி? மகள் பூரிக்கட்டையைத் தவறிக் கையில போட்டுட்டாவோ! பரவாயில்ல. இந்தாங்க முள்ளுக் கரண்டியும் கத்தியும். எடுத்து வாயில போடுங்க.

(ஜெய்லானி முள்ளுக் கரண்டியையும் கத்தியையும் வாயில் போடப் போகிறார்.)

இமா:- (தலையில் அடித்துக் கொண்டு.. தனக்குள் "ஐயோ! ஐயோ! எதுல தான் சந்தேகம் வாறது எண்டு இல்லையோ! சரியான மக்குப் பூசணிக்காய்.")
(சத்தமாக) டைகர்! டை..கர்! டை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
 மீதி அனைவரும்:- ....கர்ர்ர்ர்ர்ர்

ஜெய்லானி:- ஆஆஅ....
இமா:- சொன்னேனே, ஆ காட்டக் கூடாது என்று.
(ஒரு வேளை... அங்கயும் ஒரு உலகம் இருக்கோ!! எட்டிப் பாப்பமோ!! ச்ச! இருக்காது. வேணாம். அது க்ருஷ்ணா ஆ காட்டினால் தான் தெரியும். இங்க வடையும் பீட்ஸாவும் தான் இருக்கும்.)

ஜெய்லானி:- மாமீ சட்னியும் எனக்குதான்.
இமா:- என்னது! பீட்சாவுக்கு சட்னி தொட்டுக் கொள்ளுறதுக்கோ! எந்த உலக வழக்கம் இது!!
(சந்தேகம் எதுக்கெல்லாம் வரப் படாதோ... அதுக்கெல்லாம் வரும். எதுக்கெல்லாம் வர வேணுமோ... அதுக்கெல்லாம் வராது.' மீண்டும் தலையில் அடித்துக் கொள்கிறார். ஒரு செக்கன் வலியில் முகம் சுருங்குகிறது. ஏற்கனவே அடித்ததில் அந்த இடம் வீங்கிப் போய் இருக்கிறது புரிகிறது.) 

இமா:- டைகர்.. இங்க கொஞ்சம் வாங்கோ.. இதில.. இங்க... இந்தப் பக்கத்துக் கதிரையில இருங்கோ குட்டி.

ஜெய்லானி:- சமையலுக்கு வான்ஸ் கூப்பிட்டதால
இமா:- நான் சாப்பிடத் தான் கூப்பிட்டனான். நீங்கள் சமைச்சால் எனக்குப் பச்சத் தண்ணியும் கிடைக்காது.
ஜெய்லானி:- என்னது!! தலையும் புரியலா வால்ல்ல்ல்ல்ல்லும்...
இமா:- சொல்லுறன், சொல்லுறன். அவசரப்படாதைங்கோ. ஒண்டில் பச்சை...ரோஸ் தருவீங்கள். இல்லாட்டில்... சுடு தண்ணி தருவீங்கள் எண்டு சொல்ல வந்தன்.
ஜெய்லானி:- ஆஆ....இப்ப புரியுது.
இமா:- நல்ல்..லா ஆ காட்டுறார். (ஒரு வேளை.... வீட்டில தீத்தி விட்டுப் பழக்கமோ!!)

ஜெய்லானி:-இமா மாமி... பூஸு உங்களை பார்க்கும் பார்வை சரியில்ல
இமா:- அது பூஸு இல்ல. டை கர். பப்பி.

ஜெய்லானி:- ஐயோ!!!
இமா:- இப்ப என்ன?
ஜெய்லானி:- போட்ட 5 க்மெண்டையும் கானோமே..!!
இமா:- டைப் பண்ணேக்க தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக். பரவாயில்ல, கதைக்கேக்கயாவது ஒழுங்காக் கதையுங்கோவன்.
ஜெய்லானி:- அவ்வ்வ்வ்வ்வ்வ்
*
*
*
ஜெ:- ஆங் ..இப்ப இருக்கு..இருக்கு..
இ:- என்ன இருக்கு?
ஜெ:-விருதுக்கு வாழ்த்துக்கள்..
இ:- ;)
ஜெ:- இன்னும் நிறைய கிடைக்க... (இப்ப வாயில சட்னியைத் தனியே அடைகிறார்.)
இ:- (பொறுமை இல்லாமல்) கமண்ட்ஸ் தானே!!
ஜெ:- @ வாண்ஸ் வாழ்த்துக்கள்...
இ:- !!! (இங்க வந்து எதுக்கு வான்ஸுக்கு வாழ்த்து சொல்லுறார்!!! அது மூன்று சுழியா! ஓகே. )

(இந்த ஸ்டேஜில... [மேடையைச் சொல்லவில்லை] வடை, பீட்சா, சட்னி எல்லாம் காலியாகித் தட்டுப் பளபளா என்று இருக்கிறது.)

இமா:- என் உலகில் ஒரு இடுகைக்கே வடை பீட்ஸாவோடு ஒரு டசின் பின்னூட்டம் கொடுத்த மாவீரர் ஜெய்லானி!
(என்ன சும்மா இருக்கிறீங்கள். கை உயர்த்திக் கத்துங்கோ.) 
மீதி அனைவரும்:-வாழ்க!

'கவி'சிவா அந்த'ப் பக்கம்' வருகிறார்.
(வெறும் தட்டைப் பார்த்து.. வியந்து...) என்ன இது??? ஜெய்லானி வந்து வடை பிஸ்ஸா சட்னி எல்லாத்தையும் ஆட்டைய போட்டாச்சா?! இதுல மட்டும்... அவருக்கு சந்தேகமே வராதே.
(இமா பக்கம் திரும்பிப் பார்த்து வாயை ஆமை மாதிரிப் பிடிக்கிறார், '(' இப்படி ) 
இமா... எனக்கு கொஞ்சம் புரியுது நிறைய புரியல

இ:- ? பப்பிக்கும் அப்பிடித் தானாம். நிறைய புரியேல்லயாம். இதுக்கெல்லாம் ம.பொ.ர தெரியவேணும்.

(சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... திடீரென்று ஒரு பிரகாசம். கம்போடு ஒளி வெள்ளமாக ஒருவர் ஆகாயத்தில் இருந்து வந்து இறங்குகிறார்.

ஹைஷ்:- வாழ்த்துகள் :) வாழ்க வளமுடன் 

(இமாவுக்கு விளங்கீட்டுது.. சகோதரர் வடை, சட்னி கிடைக்காத வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் வாழ்த்துறார் எண்டு.)  
இ:- இந்தாங்கோ. உங்களுக்காவே எடுத்து ஒளிச்சு வச்சனான். சாப்பிடுங்கோ. ஆனால்... எனக்கு ஆவாரம் பூவில எல்லாம் வடை சுடத் தெரியாது. இது சும்மா.. ஆமை வடைதான். எடுங்கோ. 

(அதுக்குள்ள கட்டிலுக்குக் கீழ இருந்த பூஸுக்கு வாசம் பிடிச்சு வந்துட்டிது. ஆனாலும்...) 
பூ:- அவசரமாக எனக்கொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்..... நான் இன்னும் அழுது முடியேல்லை. காரணம்.... ஜெய்லானி said... ஆ..வடை எனக்குதான்..!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். 
இ:- நீங்கள் பூனை தானே!! எதுக்குப் பப்பி பாஷையில அழுறீங்க? 
பூ:- இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ். 
சிலருக்கு, தன்னை ஆரும் அழைக்கமாட்டாங்களோ அன்பாக என்றிருக்கும்... (சிரிச்சுக் கொண்டே இமா நீட்டின பெட்டியில இருந்து ஒண்டை உருவுகிறார்.) 
ச். ச்.. இது அன்பாக அழைத்து இனிமேல் என்னிடம் டிஷ்யூக் கேட்டிடாதையுங்கோ என்று சொல்லிப்போட்டினம் :((((

(அவாட வாயைப் பாருங்கோ! 4 ஆமை மாதிரி இருக்கெல்லோ!) 

பூ:- ஓ.. இதுதான் ஒன்று சிங்கத்தம்பி, இன்னொன்று சிங்கமில்லாத தம்பியோ?? இரு பப்பீஸ் :) 
இ:- இருங்கோ என்று மரியாதையாகச் சொல்லவேணும் பூஸ். அதில ஒன்று ஜீனோ.. மற்றது டைகர். 

(அதுக்குள்ள யாரோ ஒரு கொப்பியைக் கொண்டு வந்து குடுக்கினம். பூஸ் வாலில மையைத் தொட்டு என்னவோ எழுதுறார்.) 

இ:- என்ன செய்றீங்கள் அவசரமா? 
பூ:- இது கின்னஸ் பூஸ்தகம். கவியின்ர பேரை எழுதுறன். 

(இப்ப வான்ஸ் வாறா.)

வா:- இம்ஸ், எனக்கும் கவிசிவா போல ஒன்றுமே விளங்கவில்லை. டிஸ்ஷூ பெட்டி நல்லா இருக்கு. பூஸார் எங்கிருந்தாலும் அழகு தான். அதீஸூக்கு 2 தம்பிகளா? அல்லது ஒன்று அண்ணாவா? குழப்பமா இருக்கே. 

(இ:- போச்சுடா! இவாவுக்கும் சந்தேகம் வந்தாச்சுதோ!) 

(திரும்பிப் பார்த்து.... கண்டு விட்டா, நல்லாச் சாப்பிட்டு அசைய முடியாமல் வயிறு வீங்கி இருக்கிற ஆளை.) 

வா:- ஜெய், என்ன ஆச்சு? (ஒரு பதிலும் வரேல்ல. டீவீயோட இருக்கிறார்.) நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள். 

(இவாவும் பாவம். தானே கேள்வி கேட்டுத் தானே பதில் சொல்லுறா எண்டு இமாவுக்கு நினைக்க வருது.) 

(இப்பதான் பூசும் கவனிச்சுது.) 
பூ:- ஜெய், என்ன ஆச்சு?
(கஷ்டப்பட்டு பதில் வருது.) 
ஜெய்:- அது... ஒன்னுமில்ல வரிசையா கமெண்ட் போட்டுட்டு பார்த்தா ஒன்னுமே கானோம் 0 கமெண்டுன்னு கமிக்குது அதான் அழுதுகிட்டே இன்னொன்னு போட்டேன் .கடைசில எல்லாமே இருக்கு ஹி..ஹி.. 
வா:- பரவாயில்ல. எப்பிடியோ ப்ளேட்டோட கடத்தீட்டீங்கள். 
ஜெ:- இங்க பாருங்க வான்ஸ் நீங்க குடுத்த அதிர்ச்சியில இமா மாமி வெரும் படத்த போட்டுட்டு போயிட்டாங்க.   இ:- !!!!!! 
(அவசரமாக எல் போர்ட்டைக் கழற்றி சீட்டுக்குக் கீழ ஒழிச்சு வச்சிட்டு சந்தனா கார்ல இருந்து இறங்கி வாறா இப்ப.) L:- இமா... புரியுது.. விருதுக்காக கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர்.. பிரிக்கச் செய்த சதியால் வந்த சோகக் கண்ணீர் கொஞ்சம்.. மிளகாய்ப்பொடியால் எரிச்சல் ஏற்பட்டு வந்த கண்ணீர் கொஞ்சம்.. பூஸ் பப்பி படத்தப் பாத்து வந்த கண்ணீர் கொஞ்சம்.. அதுக்காக ஒரு டிஷ்யூ பாக்ஸ் முழுசா வேஸ்ட் பண்ணக்கூடாது.. ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்து துடைச்சிட்டு தூக்கிப் போட்டறனும் :))) வேனும்னா மூக்குக்கு ஒன்னு எடுத்துக்கோங்கோ.. மீதியெல்லாம் எனக்கு கொடுத்துறனும்.. :)))))
(திடீரென்று டீவீயைப் பார்த்து L's கத்துறா.) இமா.. காட் இட்.. வாவ்!! அங்கங்க மட்டும் கலர்ல கொடுத்துட்டு மீதி எல்லா எழுத்துக்களையும் பேக் க்ரவுண்ட் கலரோட merge பண்ணியிருக்கீங்க.. வழக்கம் போல, இமாஸ் டச் ரசிக்க வைக்குது..   இமா:- :) L:- ஆனாலும், இதை முதல்ல கண்டுபிடித்தது பூஸ் கிட்னி தான் எண்டு மறக்கமாட்டேன் :) இ:- ;(   (கண்டு பிடிச்ச சந்தோஷத்தில இன்னும் சத்தமாக் கத்துறா.) மக்கள்ஸ்.. முழு போஸ்டையும் காப்பி பேஸ்ட் பண்ணுவதற்காக செலக்ட் செய்வது போல் செய்து படிச்சுப் பாருங்க..(யுரேக்கா சொல்லலயா சந்தூஸ்!!)
ஆ.க, சோ.க, ர.க.. இந்தக் குறும்பையும் ரசிச்சேன் இமா.. (ஆக... மொத்தமும் புரிஞ்சது இப்பிடி ஒன்று ரெண்டு பேருக்குத் தானா! எ.கொ.இ?)
கவி:- சந்தூ.... சொன்னப்புறம் புரிஞ்சுடுச்சு :-) நாங்கள்லாம் ட்யூப்லைட் இமா. சூப்பர் இமா. இனிமே யாரையாச்சும் திட்டணும்னா கூட இப்படி பதிவு போட்டுடலாம். ஐடியாக்கு நன்றி :-) (இப்பதான் இவங்க உண்மையா ட்யூப்லைட்டோ என்று இமாவுக்குச் சந்தேகம் வருது. இதுகுள்ள டைகர் போரடிச்சு எஸ்ஸ்ஸ்ஸ்.)
இப்ப ப்ரியமாக ஒருத்தர் வருகிறார். BBQ மேசையில இருந்த க்ளாஸை எடுத்துக் கரண்டியால் 'டிங் டிங்' என்று தட்டி அனைவர் கவனத்தையும் கவருகிறார்.) வ:- டோட்டல் டேமேஜ்... நான் குதிரைய விக்கப்போறேன்...! கூட்டத்தில் யாரோ:- டேமேஜான குதிரையை யார் வாங்குவாங்க? மற்றொருவர்:- நான் அந்தப் பூனையை வாங்கினா குதிரையை இலவசமாத் தரீங்களா? (பூஸ் கட்டிலுக்குக் கீழ நைசா எஸ்ஸ்ஸ்.) (குழம்பிப் போய் தனக்குத் தெரிந்த ஒரே நபரான சந்தனாவிடம் திரும்பி...) சந்தனா இவங்க என்னா பேசிக்கிறாங்கன்னே புரியல! சத்தியமா இது ஏதோ பெரிய ரவுடி குரூப்புன்னு மட்டும் தெரியுது ஆழம் தெரியாம கால விட்டுட்டேனோ?     (சந்தனா காதில் விழவில்லை. மனதில் அடுத்த கவிதைக்கான வித்து விழுந்து கிளை விட்டு... மொட்...)
கா.சி:- விருதுக்கு வாழ்த்துகள். இ:- நம்பவே.... முடியேல்ல மக்கள்ஸ்!!! ஓவர் நைட்ல 21 கொமண்ட்டாஆஆ..!!!!! இது 'உலக' சாதனை. டிஷ்ஷ்..யூஊ... ப்ளீஸ்.. (கண்ணைத் துடைத்துக் கொண்டு அவசரமாக ஏதோ சொல்லிக் கொண்டு பாக்கைத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.)     காட்சி 2   இ:- (இன்னும் புது மோடம் குரியர்ல வரேல்ல. காத்திருக்கப் பொறுமை இல்லாமல் எப்பிடியோ வந்து இருக்கிறன். ரெண்டு பின்னேரம் ஆச்சுது. ஹூம்.)
ப:- ஆன்ரீ..அயகான டிஷூ பொக்ஸ். ஜீனோ, ஜீனொவின் பிம்பம், அக்கா இருவரும் என்னே அயகா போஸ் கொடுக்கினம்!! இதைப் பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வருமோஓஓ? இ:-சந்தோஷத்தில வராதோ பப்பி!! ப:-ஹேப்பி ஸ்கூலிங். இ:- :) (டெய்லி இப்பிடியே சொல்லுங்கோ.)
இலா:- (முழுசாப் பேர் போட வேண்டி வந்துட்டுது. ;)  ) இமா! என்னைப்போல கொஞ்சம் லேட்டா வர்ரவங்க...வடை/பிட்சாக்கு அடிதடிபோடாம... பின்னூட்டமும் படிச்சு.. அப்புறம் தான் பதிவே வெளங்குது.. நல்ல வேளைநான் பிழைத்துக்கொண்டேன்... (என்னவோ பழங்காலத்துப் பாட்டெல்லாம் எடுத்து விடுறாங்க. ;)  )
(கவிதை எண்ணத்தில் இருந்து வெளி வந்த எல்ஸ் இமாவை அணுகி) - இமா.. உங்க ஆதாரம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. முன்னாடி சொன்னத வாபஸ் வாங்கிட்டு, உங்க உலகத்துக்கே அந்தச் சாதனைய உரித்தாக்கி, கொப்பி ரைட் வழங்குறம் :) இ:- கொப்பி... பூஸ் வச்சு இருந்துது. கட்டிலுக்குக் கீழ இருக்கும். அதுக்குத் தான் எழுதவும் ஏலும். வாலில பெய்ன்ட் இருக்கு. ச:- அப்போஓஓஓ.. படிக்கயிலே, நான் நினைச்சனான் - இமாக்கு இடுகை பதிப்பதிலே ஏதோ பிரச்சனை போலன்னு :))) இதயும் முதல்ல பாத்தப்போ அப்பிடித் தான் நினைச்சன் :) கவி... குறும்பு பண்றதுல இமாவும் சளைச்சவங்க இல்ல :) ஆமா.. நல்ல ஐடியா.. திட்றதுக்கு யூஸ் பண்ணிக்கலாம் :)   (பிறகு என்னவோ சொல்லீட்டு.... வாபஸ் வாங்கிட்டாங்க. ஆதாரம் இதோ. - 


எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This post has been removed by the author.)
(இப்ப கேட்காமலே வசந்த் உதவிக்குப் போறாங்க.) வசந்த்.... நீங்க, ப்ளஸ் இன்னும் கொஞ்சம் பேர் புதுசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சதுக்கு, இமா நன்றி சொல்லியிருக்காங்க.. அப்புறம், வானதி ஒரு கற்பனை பதிவு போட்டாங்க (சமையல் போட்டி)... அதுக்காகவும் எழுதியிருக்காங்க.. இந்த போஸ்ட செலெக்ட் பண்ணி படிச்சுப் பாருங்க.. எழுத்துகள் தெரிய வரும்.. (ஜெய்லானியிடம் இருந்து டீவீயைப் பிடுங்கிக் காட்டுகிறார்.) இங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாரும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் அறிஞ்சவங்க.. நிக் நேம்ஸ் வச்சிருக்காங்க.. தொடர்ந்து படிச்சா புரியும்.. கண்டிப்பா ரவுடி கும்பல்லாம் இல்ல.. ஆனா சரியான கேலி-கிண்டல்-வம்பு-விளையாட்டு கும்பல் :)))))) இ:- விளக்கத்துக்கு நன்றி சந்தனா. இப்ப சொல்றேன். நீங்க என் சமையலறையில் 'உப்பு' தான். ;)
வ:- ஓஹ்...! இந்த ஐடியா கூட நல்லாருக்கே வ:- நட்சத்திரம் :))) ம்ஹ்ஹும் ச:- இமாவோட உலகத்தச் சுத்த புதியதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள் - புது ஃபாலோயர்கள்.. நீங்களெல்லாம் தான்.. (கிரகம் என்று சொன்னா நல்லாவா இருக்கும்!! அதான் நட்சத்திரம்.) இன்னொருத்தர் முகிலன்.. மத்தவங்களெல்லாம் தெரியல.. வ:- ஆ.க.,சோ.க,ர.க, புடிபடல ச:- ஆ.க.,சோ.க,ர.க, புடிபடல!!! ஆனந்தக் கண்ணீர், சோகக் கண்ணீர், ரத்தக் கண்ணீர் :) வ:- இயலாமை-நேரமின்மை??? ச:- அப்படின்னு தான் நானும் நினைக்கறேன்.. நீங்களெல்லாம் குதிரை மேல ஏறிப் பயணிக்கற மாதிரி வேகமா இருக்கறவங்க. உங்க படத்தைப் பார்த்து சொல்லியிருக்காங்க. அவங்க மெதுவாத் தான் பதிவு போடுவாங்களாம்.. வ:- அப்ப... சாகோதரி - டைமிங் சென்ஸ் :))))) ச:- அது தவறுதலா டைப் பண்ணினதுன்னு நினைக்கறேன்.. (என்னவொரு கற்பூரத்தனம். ட்யூப்லைட்டுக்கு எதிர்ப் பதம் இதானோ!!) வ:- சீக்கிரம் என்னை கத்தார் அஹமத் ஹாஸ்பிட்டல்ல மெண்டல் செக்சன்ல சேர்த்துடுவாங்க போல.. முடியல தாயி முடியல.. (நீங்கள் மட்டும் இல்ல, முழுக் கூட்டமும் அங்கங்க சேர்ந்துருவீங்க. இமா மட்டும், அனைவருக்கும் கிணறு எடுக்க அட்டைகள் தயாரித்துக் கொண்டு இருப்பா. சந்தூஸ் பூக்கட்டுவா. யாராவது ஜூஸுக்கு லெமன் தேடுவினம்.)   இ:- என்னாலயும் முடியல... அதீஸ்... அந்தப் பெட்டியை இங்கால நகர்த்துங்கோ. இண்டைக்கு ஒரு பெட்டி போதாது போல இருக்கே! ;)   ச:- சரி, நான் உங்களுக்கு ஒரு கெட் வெல் கார்டும், பூச்செண்டும் அனுப்பி வைக்கறேன் :)))))))))))     ஜெ:- சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி..  
ஜெ:- வசந்த் சார்! இது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு? வண்டி எந்த மாடல்? சேசிஸ் நெம்பர், ஆர் சி புக் இருக்கா? இன்ஸுரன்ஸ் இருக்கா? லாஸ்ட் பிரஸ் !! எவ்வளவு..   வ:- !!! டைகர்.....
ஜெ:- (வேற யாரையாவது பிடிக்கலாம்.) உங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க இலா மேடம்.. (டைகர் முணுமுணுக்கிறது: - மயில் முட்டை தான் போடும். இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியல. கர்ர்ர்) 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது முன்னொரு காலந்தன்னில் ஒரு குறிப்பிட்ட இடுகைக்கான கருத்துகளுக்குப் பதில் கூற இயலாது போகவும் சேர்த்து வைத்துத் தட்டிய பதில். பின்னும் கூட எதுவோ தொழினுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டுத் தடங்கலாகி விட... அப்படியே பாதியில் நிறுத்தி விட்டேன். இதன் பின்னர் அமைச்சர் முதலானோர் கூட வந்து யாருக்கோ (எனக்கல்ல) கருத்துக் கூறி இருந்தனர். அனைவருக்கும் என் நன்றிகள். இப்போ மேற்கொண்டு எதுவும் எழுதாமல் இருந்ததை இருந்தபடியே வெளியிடுகிறேன். ;)
- இமா
என்ன! ஒன்றும் விளங்கவில்லையா!! ஹும்! இப்படித்தான் அல்லோலகல்லோலமாக இருக்கும் சந்தனா, செபா ப்ளாட். ;)))) ஒருவருக்கும் ஒன்றும் விளங்காது. அவங்க மட்டும் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருப்பாங்க.

நட்பெனப்படுவது!!!

"மீண்டும் 'வெறும்' நண்பர்களாகி விட்டார்கள்," 

சொன்னவர் முகத்திலிருந்த சோகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. ;(

ஜெனிக்குப் பொறுக்கவில்லை. மருமகளாகவே நினைத்துச் சந்தோஷமாகப் பலதும் மனதில் தயார் செய்து விட்டார். இழப்பை நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவரது இழப்பு எங்களையும் சிறிதளவாவது பாதித்தது.

எங்கள் கூட்டம் ஒரு கூட்டுக் குடும்பம் போல. இங்கு நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக இல்லையா? ஒருவர் சோர்ந்தால் மற்றவர் ஆறுதற்படுத்தி, மகிழ்ந்தால் சேர்ந்து மகிழ்ந்து, அப்படி.

அவர் சேர்த்து வைக்கப் போராடினார். பக்கபலமாக நாங்கள் அவ்வப்போது கருத்துகள் எடுத்துக் கொடுப்போம்.

எவ்வளவோ முயன்றும் பலனில்லை. அவர்கள் தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள், தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று. 

ஜெனி நொந்து போனார். அவர் கணவர் இதனால் பாதிக்கப் படவில்லை. அப்படிப் பாதிக்கப் பட்டிருந்தாலும் அது ஜெனி சோர்ந்து எரிந்து விழுந்ததால் மட்டுமே இருக்கும்.

அவரது மனதை மாற்ற முடியாது என்று புரிந்து நாம் அமைதி காத்தோம். எப்போதாவது தானாகவே இந்தத் தலைப்பு வருகையில் முகம் கோணிப் போகும். பரிதாபமாக இருக்கும். "திரும்ப முயற்சித்துப் பார்க்கலாமே!" என்போம். "பேசுவது எல்லாம் பேசியாயிற்று. இனி ஆகப் போவது ஒன்றும் இல்லை," என்பார்.

ஆனால் அடிக்கடி முணுமுணுப்பார், "இவன் ஒரு காலம் உணர்வான். அருமையானதொரு பெண்ணை இழந்து விட்டோம் என்று வருந்துவான். அப்போ காலம் தாழ்ந்து போய் இருக்கும், ;("

உடனே கையைத் தட்டிக் கொண்டு "வெல், அவன் பிரச்சினை. அனுபவிக்கட்டும்," என்று தன் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார். 

ஒரு நாளாவது மிஷேலைத் தப்பாகச் சொன்னதில்லை. "இந்த முட்டாளோடு வாழ யாரால் முடியும். பிரிவது தான் மிஷேலுக்கு நன்மை," என்பார். 

ஆனால் மகனிடமும் பாசம் இல்லாமல் இல்லை. கண்டது ஓடிப் போய் அணைத்து முத்தமிடுவதைக் காண்கையில் எங்களுக்குக் கண் பனித்து விடும். அவரது ஒரே செல்லப் பையன் அல்லவா!

மிஷேலுக்கும் ஜெனிக்கும் இடையே இப்போதுள்ள உறவு பற்றி....
....நாளை பி.ப

Wednesday, 1 September 2010

நட்பெனப்படுவது!!

உபகதை 1

ஜெனி குழந்தை மாதிரி. சாக்லேட் பிடிக்கும்.

முக்கியமாக சிக்கோ பேபீஸ் (குழந்தையை எதிர்பார்த்திருந்த போது இது மட்டும் தான் சாப்பிட்டாராம். குழந்தைகள் போல இருக்கும் இந்த இனிப்புகள்), ட்விஸ்டீஸ் (ஆஸ்திரேலியத் தயாரிப்பு மட்டும்) & 'செர்ரி ரைப்ஸ்'. நான் எங்கு 'செர்ரி ரைப்ஸ்' கண்டாலும் வாங்கி வைத்து விடுவேன், இவருக்காக. அதை ஒழித்துக் கொடுத்து எதிர்பாராமல் அந்தக் கண்களில் மலரும் சந்தோஷத்தைப் பார்க்கப் பிடிக்கும்.

எங்கள் இருவருக்கும் கோடை விடுமுறையின் போதுதான் பிறந்தநாள் வரும். அதனால் பாடசாலையில் எதிர்பாராத விழா எடுக்க முடிவதில்லை.

10/01/2008
விடுமுறை நடுவே மற்றொரு தோழியின் 50 வது பிறந்த நாள். அங்கே சந்தித்தோம். என் ஆஸ்துமா மருந்துப் பெட்டிகளை ஒரு மருந்தகக் கடதாசிப் பையில் வைத்து இவரிடம் கொடுத்தேன்.
 "எதற்கு?" என்றார். 
"நான் இப்படியே வேறு ஒரு இடம் போகிறேன். இதைக் கொண்டு அலைய முடியாது தொலைத்து விடுவேன்,"
"சரி, நான் நாளை வீட்டில் கொண்டு வந்து தருகிறேன்." என்றார். குட்டியாக ஒரு பை, அதைக் கொண்டு அலைய முடியாது என்கிறேன். ;)
"வேண்டாம். விடுமுறைக்குப் போதுமான மருந்து வீட்டில் இருக்கிறது. இது உங்களிடம் இருக்கட்டும்,"
"என்ன!! இதை வைத்து விடுமுறையில் நான் என்ன செய்யப் போகிறேன்?" நொடி சந்தேகம் பூத்து மறைந்தது கண்ணில்.
"ஓகே! வட் எவர், நீங்கள் சொன்னால் செய்கிறேன்," வாங்கிப் பத்திரமாகப் பையில் வைத்தார்.
நான் பாடசாலை ஆரம்பித்ததும் பெற்றுக் கொள்வதாகச் சொன்னேன்.
"ஹும்" என்று தலையை நொடித்து விட்டு குளிர் பானம் பரிமாறப் போனார்.

22/01/2008
தொலைபேசியில் அழைத்தேன். பத்திரமாகப் பேச வேண்டும். போன வருடம் இது போல் வாழ்த்த அழைத்த போது...
"ஜெனியோடு பேச முடியுமா?"
"நோப், ஜெனி வீட்டில் இல்லை," சந்தேகம் இல்லாமல் இது அவர் குரலே தான். ;) இருந்தாலும் மன்னிப்புக் கோரி, தொடர்பைத் துண்டித்து இலக்கத்தைச் சரி பார்த்து விட்டு மீண்டும் முயன்றேன்.

"ஜென்னியோடு பேச முடியுமா?"
"அவர் வீட்டில் இல்லை."
"                    "
"ஹலோ!! இருக்கிறீர்களா?"
"யப்"
"தகவல் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?"
குழப்பமாகி "ம்.. நான் பிற்பாடு பேசிக் கொள்கிறேன். நன்றி," என்று துண்டித்து விட்டேன்.
மீண்டும் அழைத்தேன்.

அதே பதில். ;) நானும் விடவில்லை. "ஜெனி, அது நீங்கள் தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் இமா."
'கிக்' என்று சிரித்தார். என்ன ஆகி இருக்கிறது என்றால், முதல் நாள் எதோ 'சர்வே' என்று யாரோ விடாமல் அழைத்திருக்கிறார்கள். இவர் யோசிக்காமல் 'நாளை' என்று பிறந்த நாளை மறந்து சொல்லி இருக்கிறார். அதைத் தவிர்க்க இப்படி. அழைத்த பெண் குரலில் இந்திய வாசனை வீசியதாம். ;)

இம்முறை எச்சரிக்கையாக "நான் இமா," என்று ஆரம்பிக்கலாம்.

"வட்'ஸ் அப்?" என்றார்.
"நான் ஒரு மருந்துப் பொட்டலம் தந்தேனே.."
"அது இருக்கிறது கைப்பையில் பத்திரமாக. கொண்டு வந்து தரட்டுமா?"
"வேண்டாம் அது உங்களுக்குத் தான்,"
"எனக்கு!! எதற்கு!!"
"பரவாயில்ல சாப்பிடுங்கள்,"
"இது சரியாகத் தெரியவில்லையே!!" என்றார்.
"சரியோ தவறோ, நீங்கள் தான் அந்த மருந்தைச் சாப்பிட வேண்டும். அதுவும் இன்றே, இப்போதே," வைத்து விட்டேன். ;)

திரும்ப எடுத்தார். அப்போது என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அந்தப் பெட்டியில் செர்ரி ரைப்ஸ் வைத்திருந்தேன். ;) அவர் சந்தோஷத்திற்கு அளவில்லை.

!!!!!!!!!!!! ;)
தொடருகிறேன்...


இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. நாங்களும் அடிக்கடி விசாரிப்போம். விசாரிக்காமலும் தகவல் பெறுவோம். அவருக்கும் இந்த நாட்டில் இருந்த நெருங்கிய உறவுகள் நாங்கள் தானே, சொல்வார்.

பின் ஒரு நாள் சோகமானதோர் செய்தி கொண்டுவந்தார்.
மகனும் மருமகளும் மனமொத்துப் பிரிந்து விட்டார்களாம். ;( மீண்டும் 'வெறும்' நண்பர்களாகி விட்டார்கள்.
மீண்டும் நாளை இம் மலர் மலரும் வேளை 
தொடரும்..

நட்பெனப்படுவது!

இங்கே என்னோடு வேலை பார்க்கும் ஆசிரியை இவர். பெயர்... ஜெனிஃப்ர். ;)

ஜெனிக்கு வயது 55. கணவருக்கு வயது 76. இருவரும் அன்னியோன்னியமாக இருப்பார்கள். ஆனால் பேச்சு வந்தால் சொல்வார்.. 'இன்னொரு முறை மணம் செய்யக் கிடைத்தால் இப்படி ஓர் வயது வித்தியாசத்தில் பண்ணிக் கொள்ள மாட்டேன்,' என்று. ;)

காரணம், வயதான ஓர் குழந்தையைப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறதாம். ஜெனிதான் வீட்டில் எல்லாம்; பில் கட்டுவது, மளிகைப் பொருட்கள் வாங்குவது எதுவானாலும். 


ஜெனிக்கு இது முதல் திருமணம். கணவருக்கு இரண்டாவது. இவர்கள் இருவருக்கும் ஓர் பையன் மட்டுமே. அவருக்கு வயது 24. என் மூத்தவர் வயது என்பதால் பலதும் பகிர்ந்து கொள்வோம். தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லை என்று வருத்தப்படுவார். இவரைப் பற்றிய சுவாரசியமான விடயம்... கருப்புத்தான் இவருக்குப் பிடிச்ச கலர். ;)


இப்படி இருக்கையில் மகனுக்கோர் பெண்தோழி அமைந்தார். ஒத்த வயதினர். ஆரம்பத்தில் 'ஹும்,' 'வட் எவர்', 'ஓகே' என்பதாக இருந்த கருத்து மாறி ஜெனிக்குப் மிஷேலை மிகவும் பிடித்துப் போயிற்று.

இதை வைத்து நாங்கள் இவரைக் கண்டபடி கலாட்டா செய்வோம். 'இந்தியருக்கு மாமியாரானால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும்' என்று. நாங்கள் சொல்லும் பொய்கள் எல்லாம் அப்பாவியாக உடனே நம்பிவைப்பார். பிறகு யாராவது விளக்கம் கொடுப்பார்கள். (நாங்கள் = இமா + விநயன் (ஒரு சௌத் ஆபிரிக்க இந்தியர்) + ஒரு பாம்பே பெண். )


ஜெனி குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம் விபரமாகச் சொல்ல விரும்புகிறேன். இவர்கள் அவுஸ்திரேலியர்கள். ஜெனி அவுஸ்த்ரேலியாவில் பிறந்த ஜெர்மானியர் (இப்போ தெரிந்ததா, இமா ஜெர்மன் கற்றுக் கொண்டது எப்படி என்று.) -  உயரமாக இருப்பார். குட்டை பழுப்பு முடி. கணவர் பொலிஷ். புது உறவோ ஃபிஜி இந்தியர்  - ஸ்டைலான அழகுப் பெண். எல்லோரோடும் இனிமையாகப் பழகுவார்.


மெதுவே எதிர்கால மருமகளைப் பிடித்துப் போயிற்று ஜெனிக்கு. இருவருக்கும் நன்றாக ஒத்துப் போயிற்று.
தொடர்ச்சி நாளை இம்மலர் மலரும் வேளை