Sunday, 18 December 2011

சின்னவர்கள் பெரியவர்களாகும்போது - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~   
சென்ற வருட இறுதிப் பகுதியில் 'மெரில்' இறந்துவிட்டது. 
 
அல்ஃபி, "நான் வளர்கிறேனே மம்மி"
(ஓட்டுத்துண்டங்கள் நடுவே வெளிர்மஞ்சட் கோடுகளை அவதானித்தீர்களா! வளர்கிறார்.)
மெரில் இல்லாதது ஆணிக்கு இழப்பாகத் தெரிந்தாலும் அல்ஃபி பொருட்படுத்தவில்லை. ஆணி இல்லாது போயிருந்தால் கூட சந்தோஷம்தான் என்பதுபோல் இருந்தார். இருவருக்கும் பெரிதாக ஒட்டவில்லை.
ஆணி
அல்ஃபி இது தன் வீடு என்கிற உரிமையை விட்டுக்கொடுப்பதாக இல்லை. பகிர்ந்துகொள்ளப் பிடிக்கவில்லை அவருக்கு. திடீர் திடீரென்று சண்டை நடக்கும்; இரண்டு கால்களில் நின்றுகொண்டு முன்னங்கால்களால் ஆளை ஆள் பிடித்துத் தள்ள முயற்சிப்பார்கள். கடிக்க முயல்வார்கள். ஒருநாள் ஆணி காலில் இருந்து ரத்தம். ;( 

அல்ஃபி நன்றாக வளர்ந்திருக்கிறார், கிட்டத்தட்ட ஆணி அளவுக்கு.

இருவரும் சென்ற வாரம் மகன் வீட்டுக்குக் கிளம்பிப் போயாயிற்று. ;)
 
தொட்டி மட்டும் இன்னமும் என்னோடு இருக்கிறது. அதனைச் சுத்தம் செய்து காய வைப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். மழைதான் விடுவதாக இல்லை.

தொட்டியை வீடுமாற்ற மகனோடு இன்னும் 4 பெரியவர்கள் வேண்டும், பெரீ..ய தொட்டி அது. என்னைப் போல எட்டுப் பேரை வளர்த்தலாம் என்பேன். ;))
சுத்தம் செய்யும் போது அந்தநீரை எங்கே ஊற்றுகிறேன் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் நான். தொட்டிச் செடிகளுக்கு விட்டால் தொடர்ந்து வரும் நாட்களில் நீர் விடாதிருந்தால் அமோனியா செறிவு அதிகரித்து செடிகள் கெட்டுவிடும். கீரைச்செடிகளின் மேல் விட்டால் உண்பதற்குப் பாதுகாப்பற்றதாகி விடும். பார்த்துச் செய்ய வேண்டிய வேலை.

எப்படியும் நத்தார் வருமுன்னால் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அசையாது இருக்கும் நீர் கெட்டு வாசனை வீச ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கும்.
 
என் மகனுக்கும் என்னைப் போன்றே ரசனைகள். ;)
ஒருநாள் ஒரு தோழரின் பாட்டி அழைத்தாராம். பேரனிடம் தொலைபேசி இலக்கம் விசாரித்து வாங்கியிருக்கிறார். அவர் வீட்டைத் தேடி அனாதையான ஓர் ஆமைக்குட்டி வந்திருக்கிறது. அதனைப் பாதுக்காப்பாக ஒரு வாளியில் எடுத்து வைத்துக் கொண்டு மகனை அழைத்திருக்கிறார்.

இவர் ஆமைக்குட்டியைப் போய் பார்த்துவிட்டு இங்கே வந்து நோயுற்ற மீன்களைப் பராமரிக்கவென்று வைத்திருந்த சிறிய தொட்டியையும் ஒரு சிறிய போத்தலில் ஆமை உணவு சிறிதும் எடுத்துப் போனார். மறுநாள் ஆமைக்குட்டியின் படத்தைக் காட்டினார், அழகாக இருந்தது குட்டி. எனக்குத் தந்துவிடுமாறு கேட்டேன். "வேலை அதிகமாகும், வேண்டாம்," என்றார், அது உண்மைதான்.

நேற்று மகன் வந்திருந்த போது விசாரித்தேன். பெரியவர்கள் இருவரும் நன்றாக இருக்கிறார்களாம். சின்னவர் இரவிலும் உறங்குவதில்லையாம்; எப்போதும் சாப்பிட்டுக்கொண்டும் நீந்திக்கொண்டும் இருக்கிறாராம். "பெரியவர்களை விட அதிகமாகச் சாப்பிடுகிறார், அத்தனையும் நீச்சலில் செலவளித்துவிடுகிறார்," என்றார் சிரித்துக் கொண்டு.