Monday 7 March 2011

என் மனதோடு ஓர் மழைக்காலம்

விடுமுறை முடிந்து வீடு வந்து மாதம் ஒன்றாகிவிட்டது. இனிமையான பலவிடயங்கள் ஓரளவுக்கு மேல் சுவைக்க இயலாது சுவை தெரியாத சுவடுகளாக மட்டும் தங்கிவிட்டன.

ஆனாலும் கிடைத்தற்கரிய பாக்கியம் இந்தப் பயணம்; கடல்கடந்து வந்தமையால் நாம் இழந்து போன பல தருணங்களுக்கும் ஈடுகட்டும் விதமான மனதோடு என்றும் தங்கிவிட்ட மழைக்காலம்.

விடுமுறை என்று கிளம்பியதே எதிர்பாராதது. இந்த இவ்வருட இறுதியில்தான் போவதாக இருந்தது. திடீரென்று ஒரு அதிகாலை வேலைக்குக் கிளம்புமுன் க்றிஸ் "அம்மாவைப் பார்க்க இப்போதே போய் வருவது நல்லது என்று தோன்றுகிறது.  ஒரு வருடம் வெகு தொலைவில் இருப்பது போல இருக்கிறது," என்றார்.

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நாங்கள் திடீரென்று நினைத்துக் கொண்டு செய்த காரியங்களில் இதுவும் ஒன்று.

அன்று மதியம் பாடசாலை முடிந்து வருகையில் பயணச் சீட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். அந்த 20 நிமிட இடவேளையில் தோன்றியது தான் இந்தியப் பயண யோசனையும்.பிற்பாடு சின்னமகனும் எங்களோடு இணைந்து கொண்டார். ஊருக்குப் போவதற்காக கிரிக்கட் கோச்சிங்கையும், விடுமுறை கிடைக்காத நிலையில் வேலையையும் விட்டுவிட்டுக் கிளம்பினார்.

பொன்விழா 26ம் தேதி, மறுநாள் எங்கள் மணநாள். பயண ஆயத்தவேலைகள் இருந்தமையால் இம்முறை பெரிதாக எதுவும் செய்யவில்லை.

ஊரில் இறங்கியதும் நேரே வீடு செல்லவில்லை. நீர்கொழும்பில் என் தந்தையின் சிறியதந்தையாரைப் போய்ப் பார்த்தோம். அப்படியே கொழும்பில் என் பிரியத்துக்குரிய ஆசிரியை, என்னைக் கற்பித்த பழைய அதிபர் எல்லோரையும் பார்த்துக் கொண்டு (இதன் நடுவே பாதிப்பில்லாமல் ஒரு சிறு வாகனவிபத்து.) கிட்டத்தட்ட 26 மணி நேரம் கழித்து வீடு போய்ச் சேர்ந்தோம்.

மழை.. விடாது மழை. சோவென்று இராவிடினும் விடாது பெய்துகொண்டே இருந்தது. எங்கும் வெள்ளம்.

அதுவும் நல்லதற்கே என்று இப்போது தோன்றுகிறது. வெளியே அதிகம் செல்லாமல் மாமியோடு அதிக நேரம் செலவளிக்கக் கிடைத்தது.

இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருந்தார்.

அழகான குழந்தைச் சிரிப்பு, குழந்தைபோல் பொக்கை வாயைத் திறந்து சொல்வதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

குளிக்க வைத்து, ஊட்டி விட்டு... எல்லோருக்கும் ஏவல் பார்த்தவர், மற்றவர் தயவில் தங்கி இருந்தார். ஆனாலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லை. அவர் இருக்கும் இடம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் எப்போதும். இயாலாமையைக் காட்டிக் கொள்ளமாட்டார். யாரிடமும் உதவி கேட்கப் பிடிக்காது. யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பார்.

முன்பே தொலைபேசியூடாகக் கேட்டிருக்கிறோம், எப்போதும் 'நாட்டுக்குச் சமாதானம் தாரும்' அல்லது 'எனக்குச் சமாதானத்தைத் தாரும்,' என்று சத்தமாகப் பிரார்த்தித்தபடியே இருப்பார். உணவு உண்கையில் கூட பிரார்த்திப்பது தெரியும். இதன் கருத்து... வாழ்ந்தது போதும் என்பதா? பழைய எண்ணங்களில் இருந்தாரா? எதுவாக இருப்பினும் ஒரு நிமிடம் விடாது உதடுகள் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே இருந்தன, ராத்திரிகளில் கூட.

விடுமுறையில் நிறைவேற்றவென்று சில காரியங்கள் எண்ணி இருந்தேன். அனைத்தும் நிறைவேறாவிடினும் முக்கியமானவை ஆயிற்று. தவிர்க்க இயலாது சிலது தவறிப் போயிற்று.

எனக்கும் மகனுக்கும் ஆளுக்கொரு விநோத ஆசை வந்தது. ;) நடக்காது என்று நினைத்திருக்க இறுதித் தருணத்தில் நிறைவேறின இரண்டும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் அவை பற்றி. ;)

க்றிஸ் மனதில் ஒரு எண்ணம் எப்போதும் இருந்தது. அது நிறைவேறிய விதம்தான் நம்ப இயலாததாக இருக்கிறது. இது ஒரு தாயும் மகனும் பற்றிய கதை.

என் மாமனார் எங்கள் திருமணத்துக்கு முன்பாகவே காலமாகிவிட்டார். க்றிஸ்ஸின் மூன்று சகோதரர்கள் இப்போ இல்லை. இவை எல்லாம் கடந்து வந்தும் எப்போதும் சொல்வார் "என் அம்மா என் நினைவில் எப்போதும் உயிரோடு சிரித்த முகமாக மட்டும் தங்கிவிட வேண்டும்,' என்று.

ஏழு வருடங்கள் முன்பாக ஊர் சென்றிருந்தோம். புறப்பட மூன்று நாட்கள் இருக்கையில் 'அதிக சுகவீனமாக இருக்கிறார். விரைவில் வர முடிந்தால் நல்லது,' என்றார்கள் வீட்டார். பயண சீட்டை முன் கொணர முயற்சித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் செய்தி, "இப்போ பரவாயில்லை, நீங்கள் முன்பு செய்த ஏற்பாட்டின் படி வந்தால் போதும்,' என்றார்கள்.

நாம் அங்கிருந்த ஆறு வாரங்களில் உடல்நிலையில் ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. மாமியின் எண்பதாவது பிறந்தாநாளுக்குக் கிளம்பலாம் என்றிருக்க, மூத்தவர் பாட்டியை இங்கு அழைக்கலாம் என்பதாக யோசனை சொன்னார். க்றிஸ் அரை மனதாக இருந்தார். வயதானவை அலைக்கழிக்க வேண்டுமா? இங்கு அவருக்குக் காலநிலை ஒத்து வருமா? அவருக்குத் தேவையான மருந்துகள் இராதே. மறுமுறை  தொலைபேசியில் அழைக்கையில் வீட்டார் சொன்னார்கள்.. எங்கெல்லாமோ தேடித் தன் கடவுச்சீட்டைக் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள்.

சக்கர நாற்காலியில் இங்கு வந்து ஆறு வாரங்கள் எங்களோடு தங்கினார். நண்பரொருவர் அவரது தாயார் பயன்படுத்திய நாற்காலியை இரவல் கொடுத்திருந்தார்.

அந்த ஆறு வாரங்களில் தாயும் மகனும் எத்தனையோ பேசினார்கள். சமயத்தில் தோழர்கள் போல் தெரிவார்கள். சில சமயம் ஒரு தந்தையும் மகளும் பேசிக் கொள்வது போல இருக்கும் பார்க்க. அப்போதான் க்றிஸ் தன் மனதிலிருப்பதைச் சொன்னார். ம்.. அம்மா தன் நினைவில் எப்போதும் சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்பதை. அவரது மரணச் சடங்கிற்காக மட்டும் வருவதாக இருந்தால் வர மாட்டார் என்பதையும் சொன்னார். மாமியும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகத் தான் தெரிந்தது. கிளம்பப் பிரியமில்லாது கிளம்பினார் இங்கிருந்து.

இதோ இம்முறை அவரோடு மூன்று வாரங்கள்... இனிமையாகக் கழித்துவிட்டு வந்தோம். மகனைக் கண்டதும் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சிப் புன்னகை பூத்தது. அதிகம் பேசாவிட்டாலும் எங்கள் அருகாமையை விரும்பினார். கிளம்ப இரண்டு நாட்கள் இருக்கையில் மனதைத் தயார் செய்ய எண்ணி, "அம்மா.. நான் இன்னும் ரெண்டு மூண்டு நாளில வெளிக்கிட்டுருவன். நியூசிலாந்து போறன் என்ன."என்றார். "ஆ!" என்று தலையை ஆட்டினார் தாயார். "போகத்தானே வேணும்," அப்போதும் சின்னச் சிரிப்பு.

கிளம்பிய அன்று காலை மீண்டும் "இன்னும் கொஞ்ச நேரத்தில வெளிக்கிட்டுருவன்," எனவும்.. "போய்ட்டு!!" என்று சந்தேகமாக வந்தது வார்த்தை. இனி எப்போ பார்ப்பது என்றா? அல்லது வருவாயா? என்று கேட்க நினைத்தாரா? அப்போதும் கூட அவரது அழகுச் சிரிப்போடுதான் இருந்தார்.

பத்து நாட்கள் இந்தியாவில் இருந்தோமே.. எல்லாமே ஒழுங்காகத் தான் இருந்தது. இங்கு வந்த மறுநாள் சொன்னார்கள் 'அம்மாவுக்கு கொஞ்சம் சுகமில்லை. தண்ணிச் சாப்பாடு மட்டும் தான் இறங்குது,' கொஞ்சமாக மனது கவலையானது. ஆனாலும் எதிர்பார்க்கவில்லை எதையும். கிளம்பும்போதும் நன்றாகத்தானே இருந்தார்கள்.

மறுநாள் பாடசாலையில் இருக்கையில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசாமலே புரிந்து விட்டது. ;(

மகன் விருப்பப்படி ஆகவேண்டும் என்று காத்திருந்தாரா? நாம் கிளம்பியதும் உணவை நிறுத்திவிட்டாராம். இந்தியப் பயணமும் முடித்து வரும்வரை குழப்ப வேண்டாம் என்று காத்திருந்ததுபோல் இருந்தது மாமியின் முடிவு.

எல்லாம் நல்லதற்கே என்று நினைக்க முயற்சித்தாலும் மனதில் ஒரு சிறு வலி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.

16 comments:

  1. So Sad ima :(

    i'm Participate on your sadness Feeling :((

    ReplyDelete
  2. நல்ல விடயமாகப் போயிற்று நீங்கள் இப்பவே சென்று வந்தது..

    ரொம்பவே நெகிழ்ச்சியான பதிவு இமா!

    // பழைய எண்ணங்களில் இருந்தாரா? //

    அப்படித் தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  3. //எல்லாம் நல்லதற்கே என்று நினைக்க முயற்சித்தாலும் மனதில் ஒரு சிறு வலி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.//

    ம்ம்.. மெல்லச் சரியாகும்..

    ReplyDelete
  4. என்ன சொல்வதென்று தெரியவில்லை,காலம்தான் காயங்களை ஆற்றவேண்டும். எல்லாருக்கும் இப்படி மாமி கிடைக்கமாட்டார்,நீங்க கொடுத்துவைத்தவர் இமா!

    ReplyDelete
  5. மாமியின் ஆத்மா சாந்தியடையட்டும் என பிரார்த்திப்பதைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை:(((((.

    ReplyDelete
  6. என் தாய் தந்தையரின் நினைவுகளை
    பதிவு நினைவுறுத்திப்போனது
    புகைப்படங்களும் நிறைய
    சொல்லிப் போயின
    காலம் அனைத்துக் கவலைகளையும்
    ஆற்றிப்போகும்

    ReplyDelete
  7. இந்தப் பகிர்வு ஓரளவு மனதின் வலியை போக்கியிருக்கும்.:(

    ReplyDelete
  8. காலம்தான் மனப்புண்களை ஆற்றும்.உங்கள் மாமியின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள் இமா.படங்கள் நெகிழவைத்தன.

    ReplyDelete
  9. என்ன சொல்வதென்று தெரியவில்லை.உங்கள் மாமி உங்களோடுதான் இருக்கிறார்.காலம்தான் எல்லாவற்றையும் ஆற்றும்.

    ReplyDelete
  10. நீங்கள் ஊருக்கு சென்று அவர்களை பார்த்து விட்டு வந்தது நல்லது .
    பிரார்த்தனைகள் வலியை ஆற்றும்.

    ReplyDelete
  11. இங்கு ஆறுதலாகப் பதிவிட்ட இரஷாத், சந்தனா, மகி, அதிரா, ஆஞ்சலீன், ரமணி,ஆசியா, ஸாதிகா, மேனகா அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் இமா

    ReplyDelete
  12. படுக்கையில் கூட அப்பம்மா நல்லா வடிவாக இருக்கிறா என்டு முதல் படத்தைப் பார்த்த போது எழுத வேண்டும் என்று நினைச்சுக்கொண்டு வர கடைசியில்........ :( என்ன சொல்வது என்று தெரியவில்லை இமாம்மா.

    ReplyDelete
  13. வணக்கம்...

    அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  14. இந்தப் பகிர்வை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.இமா.நேரம் கிடைக்கும் பொழுது வருகை தாருங்கள்.
    http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_21.html

    ReplyDelete
  15. வணக்கம் ஆசியா & தனபாலன்.

    இந்த இடுகையைத் திரும்பப் படிக்க வைத்தீர்கள். பழசெல்லாம் திரும்ப மனசில் ஓடுது. ரொம்ப மிஸ் பண்றேன் அத்தையை. ;(

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா