Friday 5 March 2010

எழுதுகிறேன் ஒரு கடிதம்...

என் செல்ல...


 நடுவில் தொடர  வேண்டாம் என்று தோன்றி நிறுத்தி விட்டேன். ;)

//கனபேர் எதிர்ப்புத் தெரிவிக்கினம். ஆனபடியால் எழுதப் போறது இல்லை. அந்த யோசினையைக் கைவிட்டாச்சுது. 'மேல' வெறுசாக் கிடக்கு. ;) யாரவது வந்து 'மேல வைங்கோ' எண்டு எதாவது எடுத்துத் தந்தால் நல்லது.// என்று நான் கொடுத்து இருந்த பின்னூட்டத்தைப்  பார்த்தும் யாரிடமிருந்தும் பதில்  இல்லாத காரணத்தால் நாமே வேறு விடயம் ஏதாவது போட்டு விடலாம் என்று களமிறங்கி விட்டேன். ;) கொடுமையாயின் பொறுத்தருள்க. ;)
 
இப்போ தொடர்கிறேன்  ...
வாழ்க்கையின் மறக்க முடியாத சில பல நினைவுகளை என் மனக் கண்முன் கொண்டுவரும் மாதம் இந்த மாதம். இப்போ தபசு காலமானாலும் 'ஈஸ்டர் ' வரப் போகிறது என்பது தான் எங்கு சென்றாலும் நினைவு வருகிறது. வர்ண வர்ணமாக முட்டை, முயல், வேறு என்ன என்ன முடியுமோ அதெல்லாவற்றையும் ஈஸ்டரோடு தொடர்பு படுத்தி விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள்.


உயிர்ப்பு... புதிய உயிர். புது வாழ்க்கை... வண்ணத்து பூச்சி... ஒன்றின் மடிதலில் இருந்து இன்னொரு உயிர்.. எப்பொழுதும் இப்படி ஓடுகிறது என் சிந்தனை. குறித்து வைத்த வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் எண்ணம் இன்று இல்லை. 
அர்த்தமில்லாமல்! இந்த வண்ணத்துப்பூச்சி என்னை நிறைய யோசிக்க வைக்கிறது. ;)
 
இமா என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியவில்லையா! எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்தால் கருத்தாகச் சொல்லி விட்டுப் போங்கள். ;)

என் சேகரிப்பில் இருந்து (எல்லாம் 'என் வீட்டுத் தோட்டத்தில்' இருந்து) சில படங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

இந்தக் வெற்றுக் கூட்டுக்குத் தெரியுமா தன் குழந்தை இன்று எங்கே, அதற்கு என்ன ஆயிற்று,  என்று! அதற்குப் பிரசவ வலியும் தெரிந்திராது, தன்னுள்ளே இருந்த குழந்தை இறந்திருந்தாலும் புரிந்திராது.


மயிர்கொட்டியாக இருக்கையில் போதுமான அளவு சத்துக் கிடைத்திராது போல இவருக்கு. 
கூட்டில் இருந்து முயற்சித்து வெளியே வந்து விழுந்தவர் இறக்கை விரிய மறுத்து விட்டது. எறும்புகளுக்குத் தீனியாகினார். அவற்றுக்கும் உணவு வேண்டுமே. அப்படித்தானே இயற்கை படைத்து இருக்கிறது.

காலையில் அழாகாக இலையை மென்று கொண்டு இருந்தவரை மதியம் காண்கையில் குற்றுயிருங் குலையுயிருமாக இப்படிக் கண்டேன். 
அப்பொழுதும் ஒரு குளவி அதன் பாகங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தது. துரத்த எழுந்த கையை நிறுத்திக் கொண்டேன். என்னால் குளவிக்கு வேறு பதிலுணவு கொடுத்தல் இயலுமா!! குளவியார் உண்ண ஆரம்பித்து வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும், இப்போது ஒரு சில எறும்புகளும் சேர்ந்து சுவைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுதும் மீதமிருந்த மயிர்கொட்டி உயிருடன் இருந்தது அசைவிலிருந்து தெரிந்தது. 'உயிரோடு ஒரு உணவு' புழுக்குட்டியர் பிறக்காமல் முட்டையிலே அழிந்து இருந்தால் அவருக்கு இந்த வேதனை இருந்திராது, அந்தக் கஷ்டமான காட்சியைப் பார்க்கும் மனக்கஷ்டமும் எனக்கு ஏற்பட்டு இராது. 
பூமி தன் பாட்டில் சுழலுகிறது. நடப்பது தன் பாட்டில் நடக்கிறது. இதுதான் 
இயல்பு. ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். நடப்பவை எல்லாமே நன்மைக்குத் தானோ!!


பலசமயம் கும்பிடு பூச்சிகள் வந்து புழுக்களை உண்பதைப் பார்த்திருக்கிறேன். அது பார்க்க இயலாத கொடுமை. கூட்டுப் புழுவாகியதன் பின் கூட ஒருவித குட்டிக் குளவிகள் வந்து கூட்டில் துவாரமிட்டுச் சாற்றினை உறிஞ்சி விட்டுச் செல்கின்றன. பிறகு... வெளி வரும் வண்ணத்துப் பூச்சி குறைபாட்டோடு பிறந்து வாழத் தகுதி அற்றதாய் வேறு ஜீவராசிகளுக்கு உணவாகி, அல்லது மண்ணோடு மண்ணாகி விடும். இதுவும் கூட இயல்பு தான்.


கூடு அடித்துப் புழுக்களைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தேன். பெரியதாகக் கூடு அடித்து வெளியே செடிகளில் வளரும் புழுக்களில் இருந்து ஆரோக்கியமாகத் தெரிவோரைத் தெரிந்து கூட்டினுள் விட்டு வளர்க்கிறேன். அவை தம்மைச் சுற்றிக் கூடு கட்டிப் பிறகு கூட்டைப் பிரித்து வெளியேறி இறக்கை உலர்ந்து பறக்கத் தயாரானதும் வெளி உலகைப் பார்க்க அனுப்பி வைக்கிறேன். ஏதோ இயற்கைக்கு என்னாலான உதவி. அதற்கு மேல் தப்பிப் பிழைப்பது அதன் சாமர்த்தியம். 

வண்ணத்துப் பூச்சி எனக்கு எதுவும் கற்றுத் தரவில்லை, நானும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர.

ஆயினும்... எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.

மனிதன் ஒரு சிறப்பான விலங்கு. சமூகப் பிராணி. ஆதரவுக் கரம் நீட்டத் தெரிந்தவன். புரிதல் நிறைந்தவன். பல சமயங்களில் புரிதல் இல்லாதவனும் கூட. ;)



நானும் ;)

இப்படிக்கு
இமா

12 comments:

  1. இம்ஸ்.. ஞாபகம் இருக்கோ? கனநாட்கள் முன்பு செல்லங்கள் இழையிலே நான் கேட்டிருந்தேன்.. மெலிந்தவன் வலிந்தவனுக்கு உணவாவது தான் இயற்கையோயென்று.. மறுபடியும் அதே கேள்வி இப்ப எழுப்பிவிட்டிருக்கீங்க.. டார்வின் இந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணி (உயிருள்ள புழுவை அசைய முடியாமல் பண்ணி குளவி தினம் கொத்தியுண்பதைக் கண்டு)இதையெல்லாங் கண்ட பின்பு கடவுள்ன்னு ஒருத்தர் இருப்பதை நம்ப முடியலன்னு சொன்னதா நண்பரொருத்தர் சொல்லியிருந்தார்.. ம்ம்.. சிலந்தி கூட இப்படித்தானே உண்ணுது.. வலியுணர்வு புரிந்துணர்வு இவையெல்லாம் இல்லாதிருந்தால் ஒன்றையொன்று உண்பது சிம்பிளான மேட்டர் தான்..

    இப்போதைக்கு இது தான் இமா இந்த விடயத்தில் என்னுடைய தெளிவு.. வலிந்தவன் மெலிந்தவனை உண்கிறான்.. அவனும் ஒருநா மெலியும் போது மெலிந்தவனாலேயே (பாக்டீரியா வைரஸ்) உண்ணப்படுகின்றான்.. எனினும் நம்மால் புரிந்து கொள்ளமுடியா பல விஷயங்களுள்ளன.. அதனால் இது மட்டுமே முடிவல்லவென்று தான் தோன்றுகிறது. தேடுதல் தொடரட்டும் இமா..

    மனிதன் ஒரு மாதிரி நல்லவந்தான்.. பரிமாண வளர்ச்சியில் அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பரிதாபவுணர்வைப் பெற்றுவிட்டான்.. உயிரைக் கொன்ற பின்பே அதற்கு வலியில்லாமல் புசிக்கிறான்.. ஆனால் உணவுக்காகவே ஒரு உயிரை பிறக்க வைத்து வளர்த்து புசிப்பதை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இமா.. செடியாயினும் கோழியாயினும் வேறெந்த உயிராயினும்.. :(

    ReplyDelete
  2. ம்.. நினைவு இருக்கு. ;)

    பேருக்கேற்ற மாதிரி சீரியஸாகப் பதில், அதுவும் முதல் பின்னூட்டம். ;) நல்வரவு சந்தனா. மற்றவங்க வந்து என்ன சொல்றாங்க என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    //உயிருள்ள புழுவை அசைய முடியாமல் பண்ணி குளவி தினம் கொத்தியுண்பதைக்..// ஆல்பத்துல ரெண்டு மூன்று படம் இருக்கும் பாருங்க. குட்டிப் புழு ஒன்று இரண்டு நாட்களாக மரத்துப் போய் அசையாமல் ஒரே இடத்தில் நின்று மரித்துப் போனது. கொட்டிய குளவி தானும் வந்து பிறகு சாப்பிடவில்லை. அதற்கு இதை விடவும் சுவையாக ஏதாவது கிடைத்திருக்கும் அல்லது அதுவே எதற்காகவாவது சுவையாகி இருக்கும். இல்லை குத்தப் போகிறதே என்ற பயத்தில் யாராவது அடித்துப் போட்டு இருப்பார்கள்.

    உயிர் வாழ உணவு வேண்டும். அப்படித்தான் ஜீவராசிகள் அனைத்துமே படைக்கப் பட்டிருக்கிறது. சிந்திக்கத் தெரியாவிட்டால் சுகமாக இருந்திருக்குமோ சந்தனா. ;)

    //புரிந்து கொள்ளமுடியா பல விஷயங்களுள்ளன..// உண்மைதான்.

    //மனிதன் ஒரு மாதிரி நல்லவந்தான்// ம்.. சொல்லுங்க. ;)

    கடைசிப் பந்திக்கு - காற்றும் நீரும் மட்டும் இருந்தால் போதாதே!!

    ReplyDelete
  3. இமா நிறைய யோசித்து நிறைய எழுதியிருக்கிறீங்கள். நீங்க இதில் எதை எதிர்பார்க்கிறீங்கள் எண்டே எனக்குத் தெரியவில்லை பின்னூட்டமாக. இருப்பினும் ஒரு உயிரை இன்னொரு உயிர் தின்பதென்பது கொடுமைதான், ஆனால் அது கடவுள் அப்படித்தானே படைத்திருக்கிறார். சிங்கம் மாமீசம் உண்ணாதுவிட்டால் உயிர் வாழாதெல்லோ அப்படித்தான்.

    அதுசரி எப்பூடி இவற்றை எல்லாம் உத்துப்பார்க்கிறீங்க அதிராவின் பதிவுகளை உத்துப்பார்ப்பதைப்போல:) குறுக்க பேசப்படாது..கர்ர்ர்ர்ர்..

    ஒரு சிறிய விண்ணப்பம்..கடைசிப் படத்துக்கு... நகத்தை கொஞ்சம் வெட்டுங்கோ இமா பிளீஸ்ஸ்ஸ் அழகான வ.பூ ச்சியின் இறக்கையில் ஓட்டை துளைத்திடப்போகுதென எனக்கு நெஞ்சு பக்...பக்...

    எல்போர்ட் சந்து... என்ன அடிக்கடி சீரியஷாகிவிடுறீங்க....

    பின் குறிப்பு:

    என் செல்ல...
    நடுவில் தொடர வேண்டாம் என்று தோன்றி நிறுத்தி விட்டேன். ;)//// என் செல்ல பூனைக்கு..... தொடருங்கோ இமா இதிலென்ன தயக்கம்... யாமிருக்கப்பயமேன்.... அதிரா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  4. இமா, நல்ல பதிவு. மனதை தொட்டு விட்டீர்கள். டிஸ்கவரி channel பார்த்த மாதிரி ஒரு உணர்வு.

    ReplyDelete
  5. இமா,
    நானும் இம்மாதிரியெல்லாம் யோசிப்பதுண்டு. ஆனால், ரொம்ப யோசித்தால் ஒரு வெற்றிடத்திற்குப் போனது போல் இருக்கும்.
    நான் அடிக்கடி இவரிடம் சொல்வேன், வயிறு, பசி என்று ஒன்று இல்லையாயின் நிறையப் பேர் சோம்பியே திரிவார். அதே போல் தான் இதுவும். பசியென்று ஒன்று இல்லைன்னா அவைகளும் ஒன்றையொன்று கட்டிப் பிடித்தது விளையாடும்.
    எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையான மரணம் மட்டும் தான்னா நாம் அவைகளுக்கிடையே புகுந்து போவது போல் அவைகளின் பெருக்கம் இருக்குமோ?
    ரொம்ப யோசிக்க வேண்டாம் இமா, அதன் போக்கில் விட்டு வாழ்வோம். அது தான் நம் போன்றவர்களுக்கு நல்லத:-)

    ReplyDelete
  6. சரிதான் இமா.. பேசாமல் கடவுள் எல்லா உயிரையுமே இப்படி படைத்திருக்க வேண்டும்.. காற்றையும் நீரையும் மண்ணின் தாதுக்களையுங் கொண்டு தன்னுணவை தானே உருவாக்கிக்கொள்ளும் செடிகளைப் போன்று..

    யோசித்தால் அதுவும் சரிப்பட்டு வராதே.. அதற்கப்புறம்.. காற்றுக்கும் நீருக்கும் பற்றாக்குறையல்லவோ வந்து விடும்.. போங்க இமா.. ரொம்ப யோசிக்க வைக்கறீங்க..

    ReplyDelete
  7. இமா அருமையான பகிர்வு.

    ReplyDelete
  8. //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

    சரிதான் இமா.. பேசாமல் கடவுள் எல்லா உயிரையுமே இப்படி படைத்திருக்க வேண்டும்.. //

    2012க்கு அப்புறம் செய்யப்போற உலகத்துக்கு டிஸைன் டிப்ஸ் கடவுள் கேட்கும்போது இதெல்லாம் சொல்லுங்க!! ;-))

    சில விஷயங்கள் யோசித்தால் பதில் கிடைக்கவே கிடைக்காது!! பூகம்பம், சுனாமி, H1N1, எய்ட்ஸ்.... இன்னபிற....

    ReplyDelete
  9. அருமையான பதிவு இமா!
    சீரியசா எல்லாரும் பின்னூட்டமிட்டா அங்க வந்து நெயில் பாலிஷ் போடுங்கோன்னு ஒரு ஆள்!!! கிக்...கிக்...கிக்...

    இமா பழைய பழமொழி ஒன்று " முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்"

    ReplyDelete
  10. என் செல்ல பூனைக்கு!

    வேற என்ன எதிர்பார்க்கிறது! யாம் பெற்ற குழப்பம், பெறுக இவ்வையகமும். ;)

    ~~~~~~~~~~

    இன்னும் வரும் வாணி. ;)

    ~~~~~~~~~~

    சரீ.. விட்டுரலாம் சந்தனா & செல்வி. ;) எனக்கும் அதுதான் நல்லது என்று படுகிறது.

    ~~~~~~~~~~

    நன்றி ஜலீலா.

    ~~~~~~~~~~

    ஹுசேன், //2012க்கு அப்புறம் செய்யப்போற உலகத்துக்கு டிஸைன் டிப்ஸ் கடவுள் கேட்கும்போது இதெல்லாம் சொல்லுங்க!!// ;)

    ~~~~~~~~~~

    இலாவும் பழமொழி சொல்ல ஆரம்பிச்சாச்சா? ;)

    ~~~~~~~~~~

    வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  11. Ungal veetu pattam poochiyai erukka venum
    endru thondrukirathu...
    algana pogaipadangal..
    i like it..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா